Wednesday, September 24, 2008

ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" - கலைக்க முடியாத ஒப்பனைகளின் பதிவு!!

ஆதவனின் எழுத்துக்களோடு அவ்வளவு பரிட்சயம் இல்லாதிருந்தேன்.நண்பர்கள் வாயிலாக அவரின் "காகித மலர்கள்" மற்றும் "என் பெயர் ராமசேஷன்" நாவல்கள் குறித்து அறிந்து, நீண்ட தேடலுக்கு பிறகு லாண்ட்மார்க்கில் ஒரு வழியாய் இந்நாவல் வாங்க முடிந்தது.பல ஆண்டுகளுக்கு முன் வந்த இந்நாவலை உயிர்மை பதிப்பகம் மறு பிரசுரம் செய்துள்ளது.

கதை நாயகன் ராமசேஷன்.இளைஞன்.சராசரிக்கும் மேலான சிந்தனை கொண்டவன்.அவன் வாயிலாக அவன் சந்தித்த மனிதர்கள் அவர்களோடான உரையாடல்,விவாதங்கள்,அவர்களின் போலியான பேச்சு,காதல்,நட்பு என சகலத்தையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறான்.போலியான முகங்களினூடே நிஜ முகம் முகம் தேடி அலையும் ராம் சந்தித்த மனிதர்களை விவரிக்க சுலுவாக பெண்கள்,பெரியவர்கள்,நண்பர்கள் என பிரிக்கலாம் .




பெண்கள் - வீட்டினுள் அடைந்து கிடக்கும் பெண்களின் கவனமும்,சிரத்தையும்யார் மீது தன் ஆளுமையை செலுத்தலாம் என்பதிலேயே இருக்கும்,மாமியார்கள் மருமகள்கள் மீதும்,அவர்கள் தம் பிள்ளைகள் மீதும் தொடர் சங்கிலி என கட்டவிழ்க்கும் ஆளுமை - பரிவு,பாசம்,கடமை,கண்டிப்பு என பெயர் மாறி தொடர்வதை சொல்லி இருப்பது சற்று மிகை என தோன்றலாம்,அதனூடாக ஆழ்ந்து நோக்கினால் அது எவ்வளவு உண்மை என புலப்படும்.தனது பாட்டி,தாய்,அதை ஆகியோரே குறித்த ராமின் கருதும் இதை வலியுறுத்துவதே.

காதலா நட்பா என குழப்பி கொள்ளும் வயதில் ராம் சந்திக்கும் இரு பெண்கள் மாலா மற்றும் பிரேமா.வளர்ப்பில் செழுமை,நுனி நாக்கு ஆங்கிலம்,நாகரீக உடையலங்காரம் என தோன்றும் மாலாவின் மாய தோற்றம் குறித்தும்,அவளின் செய்கைகளை வர்ணிக்கும் இடங்கள் நகைப்பை உண்டு பண்ணினாலும்,முகத்தோடு சேர்த்து நடை,உடை,பாவனை,பேச்சிலும் ஒப்பனை ஏற்றி வலம் வரும் இக்கால பெண்கள் பலருக்கும் பொருந்தும் வேதனைக்குரிய நிகழ்வே.கவர்ச்சி தோற்றம் அற்று அதீத சிந்தனை கொண்டு எளிமையாய் தோன்றும் பிரேமா கல்லூரி சுற்றதால் "ஏஞ்சல்" ஆக்கபடுகிறாள்.இவ்விரு பெண்களின் மேம்போக்கான மாயைகளை விளக்கி நிஜம் அறிய முயன்று தோல்வியுறுகிறான் ராம்.



பெரியவர்கள் - ராமின் தந்தை,தாயை பேணி,மனைவிக்கு அடங்கி,குழந்தைகளின் விருப்பத்தை நிறைவு செய்து,இயற்கையோடு பேரன்பு கொண்டு,சக மனிதர்களின் போலி வேஷங்களை அமைதியாய் வேடிக்கை பார்த்து,பிறிதொரு நாள் யாரும் அறியாது வீட்டை விட்டு வெளியேறுகிறார்.ராமின் வெறுப்பிற்குரிய நபராய் முதலில் சித்தரிக்கபடுபவர்,இறுதியில் அவன் தேடிய நிஜ முக மனிதராய் தோன்றுகிறார்.சமூகத்திற்கென சந்தோஷ நிலை முகமூடி அணித்து திரியும் ராமின் பெரியப்பா,எதிலும் எப்பொழுதும் மாற்று கருத்து கொண்டு வாதம் புரியும் ராமாமிர்தம்,மாணவர்களை பகடையாக்கி மகிழ்வுறும் பேராசிரியர் என ஒவ்வொருவரும் தன் இயல்பை மறைத்து பொருந்தா வேடம் தரித்து மற்றவர்களை ஈர்க்க படும்பாடு ஹாசியம் கலந்து சொல்ல படுகின்றது ராமின் வாயிலாக.

நண்பர்கள் - ராமின் அறை தோழன் ராவ்,பணம் படைத்த ராவின் நடப்பை தக்க வைத்து கொள்ள எப்பொழுதும் அவனுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் இருக்கும் மூர்த்தி.ராவின் பலவீனங்கள் மூர்த்திக்கு பலம்,மூர்த்தியின் பலவீனங்கள் ராமிற்கு பலம்.உன்னை விட நான் உசத்தி என காட்டி கொள்ள பிறரின் பலவீனங்களை ஆராயும் நண்பர்கள்.

மனிதர்களுக்கு ஏற்ப,இடத்திற்கு ஏற்ப,சந்தர்பங்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றி முகமூடி அணிந்து ஆடும் நாடகம் சோர்வின்றி தொடர்கின்றது நம்மிடையே.இந்நாவலின் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை இனம் கண்டு கொள்ளலாம்.அதை நம்ப மறுக்கும் முகமூடியும் நம்மிடம் உண்டு.நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை எளிமையான நடை,நாயகனோடு நேரடி உரையாடல் கொள்வது போன்ற உணர்வு, மிகுந்து நிற்கும் பகடி,சிறப்பான ஒப்புமைகள்.ஒரு மோசமான திரைப்படம் குறித்த ராமின் ஒப்புமை 'பைத்தியகாரனின் கனவு போல" ,எந்த காலத்திற்கும் பொருந்தி போகும் கதையாடல்.நாவலில் அதிகம் காணப்படும் வார்த்தை "இண்டலச்சுவல்" - ஒப்பனைகள் கலைக்க படாமல் தொடர்வது இதன் பொருட்டே!!

ஆதவனின் மற்றும் ஒரு நாவலான "காகித மலர்கள்" படிக்க பெரும் தூண்டுதளாய் இந்நாவல் அமைந்துவிட்டது.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை : 120 ரூபாய்

16 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கு மிகப் பிடித்த நாவலிது!

லேகா said...

வருகைக்கு நன்றி சுந்தர்.
முற்றிலும் புதிய வாசிப்பு அனுபவமாக இருந்தது எனக்கும்.

Krishnan said...

I bought this novel too at Landmark after reading Sujatha's praise. Aadavan was a great writer in the making whose life was cut short, he drowned in Sringeri. His book En Per Ramaseshan reminds one of cult novel The Catcher in the Rye by Salinger. I have not read Kakitha Malargal. Is this book also in the same vein ?

KARTHIK said...

// இந்நாவலின் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை இனம் கண்டு கொள்ளலாம்.அதை நம்ப மறுக்கும் முகமூடியும் நம்மிடம் உண்டு.//

உண்மைதான்.

Jags said...

//இந்நாவலின் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை இனம் கண்டு கொள்ளலாம்.அதை நம்ப மறுக்கும் முகமூடியும் நம்மிடம் உண்டு.//

நல்ல பதிவு...
வாழ்த்துக்கள்

லேகா said...

@ Krishnan
tnx for ur Comments :-)

I too didnt find "Kaakitha Malargal" @ Landmark.But i am sure tat it is available @ Uyirmei Office,Mandaveli. since they have published this one too.Chk out in Uyirmmei's website.

லேகா said...

@ Karthick

//// இந்நாவலின் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை இனம் கண்டு கொள்ளலாம்.அதை நம்ப மறுக்கும் முகமூடியும் நம்மிடம் உண்டு.//
உண்மைதான்.//

நாவலை வாசித்து முடித்த பின்பு தோன்றியது நமக்கான முகமூடிகள் என்னென்ன என்று..யோசிக்காமல் பரிந்துரைக்கலாம் இந்நாவலை!!

லேகா said...

நன்றி Jags :-)

வால்பையன் said...

இந்த பதிவை அந்த புத்தகத்தின் விமர்சனமாக முன் பக்கத்துக்கு பரிந்துரைக்கிறேன்

லேகா said...

//இந்த பதிவை அந்த புத்தகத்தின் விமர்சனமாக முன் பக்கத்துக்கு பரிந்துரைக்கிறேன்//

அருண் இந்த புத்தகம் படிச்சு முடிச்சதும் எனக்கும் அதே தான் தோணினது..பொருத்தமான அட்டைப்படம்..

narsim said...

மிக நல்ல நாவல்.. வாசிக்கும் பொழுது தோன்றியதை உங்கள் வார்த்தைகளில் படிக்கும்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது..
நர்சிம்

லேகா said...

நன்றி நர்சிம் :))

குப்பன்.யாஹூ said...

நல்ல பதிவு , வழக்கம் போல.

நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

தங்கள் பட்டியலில் உள்ள எழுத்தாளர்கள் எல்லாரும் அருமையான எழுத்தாளர்கள்.

நீங்கள் முடிந்தால், தமிழாச்சி தங்கபாண்டியன், மாலன் எழுத்துக்களையும் படிக்கலாம்.
இந்த தமிழ் விரிவுரையாளரின் வலை பதிவையும் படிக்கலாம்.

http://gayatri8782.blogspot.com/

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன்

குப்பன்_யாஹூ

.

லேகா said...

நன்றி குப்பன்.
நிச்சயமாய் பரிந்துரைத்துள்ள காயத்ரியின் வலைத்தளத்தை வாசிக்கிறேன்..

பரத் said...

//இந்நாவலின் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை இனம் கண்டு கொள்ளலாம்.அதை நம்ப மறுக்கும் முகமூடியும் நம்மிடம் உண்டு//

சரியான மதிப்பீடு சரியான வார்த்தைகளில் வந்திருக்கிறது.வாழ்த்துக்கள்

லேகா said...

நன்றி பரத்!!