Monday, September 8, 2008

ஜெயகாந்தனின் "உன்னை போல் ஒருவன்" - விளிம்பு நிலை வாழ்கையின் பதிவு

ஒருபுறம் அறிவியல்,விஞ்ஞான வளர்ச்சி,கேளிக்கை விடுதிகள்,நவநாகரிக ஷாப்பிங் மால்கள் என பட்டணங்கள் பல்லிளித்தாலும் விளும்பு நிலை மக்களின் வாழ்கை தரமும் நிலையும் மாறாது நீடிப்பவை.அடித்தட்டு மக்களின் வாழ்வை கதையாக கையாண்டவர்கள் மிகச்சிலரே.அவர்களுள் மறுக்க முடியாத எழுத்தாளர் ஜெயகாந்தன்.அவரின் பல்வேறு சிறுகதைகளும்,நாவல்களும் சென்னையின் மாய முகமூடியை விலக்கி பாசாங்கு அற்ற பகட்டில்லாத நிஜ மனிதர்களை சுற்றி சுழல்பவை.

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய நூல்களுள் முக்கியமானது என கருதுவது ஜெயகாந்தனின் "உன்னை போல் ஒருவன்" நாவல்.இதை சிறுவர்களுக்கான நாவல் எனவும் வகைபடுத்தலாம்.குணத்தால்,அனுபவத்தால், செய்கைகளால் முதிர்ச்சி பெற்ற சிறுவர்கள் அவர்கள். ஊட்டசத்து உணவு,ஆங்கில பள்ளி கல்வி,விடுமுறை நாட்களின் கேளிக்கை கொண்டாட்டம்,கணினி,வீடியோ கேம் என வளரும் நடுத்தர/மேல்தட்டு குழந்தைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இச்சிறுவர்கள் வாழ்கையின் கரடு முரடான பாதைகளில் தொடர்ந்து பயணிப்பவர்கள்..அப்படி பட்ட சிறுவன் ஒருவனை பற்றியது இக்கதை.தந்தை முகம் அறியாத பத்து வயது சிட்டி சித்தாள் வேலைக்கு செல்லும் தாய் தங்கத்திற்கு உதவியாய் பகலில் ஐஸ் விற்றும் இரவில் பாலகர் பள்ளி சென்று படித்தும் அவள் மனம் குளிர செய்கிறான்.இந்நிலையில் தங்கத்திற்கு கிளி ஜோசியம் பார்க்கும் மாணிக்கம் மீது பிரியம் வந்து அவனோடு தன் மீதி நாட்களை கழிக்க எண்ணுகிறாள்.சிறுவனான சிட்டியிடம் இது குறித்து கூறி அவன் சம்மதம் பெற காத்திருக்கும் தங்கத்திற்கு சிட்டியின் எதிர்ப்பும்,அவள் சற்றும் எதிர்பாராத அவன் கூறிய தடித்த வார்த்தைகளும் நிலை குலைய செய்கின்றன.சதேன புது உறவுகளை நம்மால் ஏற்று கொள்ள இயலாது அதிலும் தாய்க்கும்,தந்தைக்கும் மாற்று என்பது கனவிலும் நினைக்க முடியாத ஒன்று.தன் வெறுப்பை மௌனமாக காட்டி வெளியேறும் சிட்டியின் செய்கை சிறுவனுக்கானது அல்ல,அதற்கு ஜெயகாந்தன் கூறும் விளக்கம் மெய்யானது சிட்டி சுக வாழ்வு வாழும் மேல்தட்டு வர்க்கமோ,பணக்காரர்களாக துடிக்கும் நடுத்தர வர்க்கமோ அல்ல ஏழ்மையின் பிடியில் உள்ள இச்சிறுவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவர் கூறுவது முற்றிலும் சரியே.

ஒருவகையில் இந்நாவலும் "ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்" போல எல்லா கதைமாந்தர்களும் அவர் அவர் போக்கில் நல்லவர்களாய்,பிறர் மீது பிரியம் கொண்டவர்களாக உள்ளனர்.தங்கத்தின் இரண்டாவது கணவன் மாணிக்கம் மிக சாதுவாய்,அவள் மீதும்,சிட்டி மீது அன்பு கொண்டவனாய் இருக்கின்றான். தன்னால் சிட்டி தாயை பிரிய வேண்டாம் என எண்ணி தங்கத்திடம் சொல்லாது வீட்டை விட்டு வெளியேறுகிறான்.கர்பிணியான தங்கம் சித்தியையும்,கணவனையும் பிரிந்து அல்லல் கொண்டு பிரசவத்தின் பொழுது உயிர் நீக்கிறாள்.தாயின் அருமையை தன் முதலாளியின் மூலம் அறிந்து சிட்டி தன் தங்கையுடன் புதுவாழ்வை தொடங்குவதை கதை முடிகிறது.

கனத்த சோகத்தை தந்து முடியும் இந்நாவல் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு செய்தியை சொல்லுகிறது.என் வரையிலும் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவல்களில் இது ஒன்று .

வெளியீடு : மீனாட்சி பதிபகத்தார்
விலை : 60 ரூபாய்

4 comments:

வால்பையன் said...

உண்மைதான் விளிம்பு நிலை மனிதர்களை பற்றி எழுத நிறைய எழுத்தாளர்களுக்கு அனுபவம் போதாது.

எப்படி இப்படி?
எந்நேரமும் புத்தகமும் கையுமாக இருப்பீர்களோ

Venky said...

very touching story lekha. we can say many stories after seeing our neighbours and own family... good naration once again!

லேகா said...

//உண்மைதான் விளிம்பு நிலை மனிதர்களை பற்றி எழுத நிறைய எழுத்தாளர்களுக்கு அனுபவம் போதாது//

வண்ணதாசன்,வண்ணநிலவன்,தி.ஜானகிராமன் கதைகள் நடுத்தர மக்களை கொண்டே இருந்க்கும்,கி.ரா கரிசல் இலக்கியம் கூறுபவர்,அதில் விவசாயிகளுக்கே பெரும்பங்கு.ஜெயகாந்தன்,புதுமைப்பித்தனின் கதைகளில் தான் நான் அதிகம் விளிம்பு நிலை மக்கள் குறித்த பதிவுகளை வாசித்துள்ளேன்.

லேகா said...

Tnx Venky :-)