Wednesday, November 4, 2015

வானெங்கும் உனது பின்பம்..


"ஹாலிவுட் திரைப்படங்கள் பார்வையாளனை உணர்ச்சிவசப்பட வைப்பதை தவிர்த்து வேறொன்றும் செய்வதில்லை.என் திரைப்படங்களின் மூலம் நான் சாதிக்க விரும்புவதெல்லாம் அவ்வுணர்ச்சிகளை நிஜத்தில் பிரதிபலிக்கவும்,அதைக் குறித்து ஆராயவும் என் பார்வையாளனை தூண்டுவதே.."

- வெர்னர் பாஸ்பிண்டர்





ஜெர்மானிய சினிமாவில் புதிய அலை உருவாக காரணமானவர்களில் மிக முக்கியமானவர் வெர்னர் பாஸ்பிண்டர்.பத்தாண்டு கால திரைவாழ்வில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ள வெர்னர், அவற்றின் தனித்த அடையாளத்திற்காய் உலகின் கவனத்தை பெற்றவர். நடிகர், கதாசிரியர்,ஒளிப்பதிவாளர், எடிட்டர் என பல்வேறு முகங்களைக் கொண்ட வெர்னர்,மிக குறுகிய காலத்திற்குள் சினிமாவில் சாதித்தது அத்துறை மீதான அவரது பேரன்பைச் சொல்லுவது.சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் வெர்னரின் படங்கள்,எதார்த்த விவரிப்புகளால் நம்மை அதிர்விற்குள்ளாக்குவதோடு தீவிர சிந்தனைக்கும் உட்படுத்துகின்றன.The Marriage of Maria Braun,Veronika Voss,Berlin Alexanderplatz முதலான வெர்னரின் குறிப்பிட தகுந்த படைப்புகளுள் பரந்த கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்ற திரைப்படம் Ali:Fear Eats The Soul.

சமூகம் ஏற்றுக் கொள்ள மறுக்கும் காதல்,உலகப்போரின் விளைவாக குணம் மாறிப்போன மனிதர்கள்,சமூகத்தை எதிர்கொள்ள முடியாத முதியவளின் உளவியல் என இத்திரைப்படம் தொட்டுச் செல்லும் விஷயங்கள் ஏராளம்.ஒரு மழை இரவில் மதுவிடுதியொன்றில் நுழையும் முதியவள் எம்மி அங்கு ஒலிக்கும் அரேபிய இசையை கேட்கவே தான் வந்ததாக கூறுகிறாள். கவித்துவ பயணமொன்றிற்கு தயார் செய்து கொள்ள தூண்டும் அந்த முதல் காட்சியே நம்மை படத்தோடு ஒன்றிட செய்கிறது.60 வயதான எம்மி அங்கு மொரோக்கோ தேசத்து இளைஞனான அலியை சந்திக்கிறாள்.நண்பர்களின் கிண்டல்களுக்கு மத்தியில் எம்மியோடு நடனமாடிடும் அலி அம்முதியவளோடு சிநேகம் கொள்கிறான்.


ஒரு தாயின் அரவணைப்போடு அவனை அணுகிடும் எம்மி அவனது காதலை ஏற்றுக்கொள்ள தடுமாறுகிறாள்.தன் வயதை அவன் ஒரு பொருட்டாக கருதாதது அவளுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆச்சர்யமே.அவனோ அவள் மீது கொண்ட காதலில் உறுதியாய் இருக்கிறான்.ஒரு அரபு தேசத்து இளைஞனை தான் மணமுடிக்கப் போவதாய் மகளிடமும் மருமகனிடமும் எம்மி கூறிட,அவர்கள் அவளை நம்பாமல் சிரித்து கேலி செய்கின்றனர்.அவ்விருவரின் ஏளன பார்வை ஒட்டு மொத்த சமூகத்தின் பார்வையை குறிப்பது.மழை ஓய்ந்த ஒரு பகல் பொழுதில்,தங்களின் திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் அலியும் எம்மியும் தாங்கள் நினைத்ததை விட மிக மோசமான எதிர்வினையை சந்திக்க நேரிடுகிறது. எம்மியாக நடித்துள்ள மிரா,தன் இயல்பான நடிப்பால் நம்மை வசீகரிக்கிறார்.

அவர்களுக்கிடையேயான வயது வித்தியாசம் ஒரு பேசுபொருள் எனில் மற்றொன்று அலி, அரபு தேசத்தைச் சேர்ந்தவன் என்பது.அரேபியர்கள் சுத்தமற்றவர்கள்,தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள்,பெண்களை ஏமாற்றுபவர்கள் என உலவும் வதந்திகளை நம்புகிற சமூகம் அவர்களுடையது. அக்கம்பக்கத்து வீட்டு பெண்கள்,உடன் பணிபுரியும் தோழிகள்,வருட கணக்காக நட்போடு இருந்த மருந்துக்கடைகாரர் என எம்மிக்கு வேண்டியவர்கள் அனைவரும் அலியை வெறுக்கின்றனர்.அதனால் எம்மியோடான தங்களின் நட்பை முறித்துக் கொள்கின்றனர்.அவளது பிள்ளைகளோ பெரும் கூச்சலிட்டு அவளோடு சண்டையிட்டு பிரிகின்றனர்.அலியை அவ்விடம் இருந்து வெளியேற்ற குடியிருப்புவாசிகள் நாடகங்கள் நிகழ்ந்துகின்றனர்.எம்மி ஒரு இளைஞனை மணந்துள்ளால் என்பதைக் காட்டிலும் ஒரு அரேபியனை மணந்துள்ளால் என்பதே அவர்களின் வன்மத்திற்கு காரணமாக இருக்கிறது.ஜெர்மானிய சமூகம் கொண்டிருந்த நிறவெறியின் தாக்கத்தை அலியின் நிலை கொண்டு நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.




காதலின் மேன்மையை உணர்ந்த அவ்விருவரும் செய்வதறியாது சிக்கித் தவிக்கும் பொழுதொன்றில்,யாருமற்ற பூங்காவில் எம்மி அலியின் கைப்பற்றி அழுதிடும் காட்சி உருக்கமானது.அவனை புறக்கணிக்கும் சமூகத்தின் மீதான தன் கோவத்தை சொல்லி வீரிட்டு அழுதிடும் எம்மியை தேற்றுகிறான் அலி.அவளைப் போல எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவனில்லை அவன். அலியின் தீர்க்கமான குணாதிசியங்கள் அபூர்வமாய் காணக்கிடைப்பவை.தன்னை வெறுத்து ஒதுக்கும் மனிதர்களிடம் குறை காணாத அவன் முன்னே அச்சமுகமே சிறுமைப்பட்டு போவதாய் தோன்றுகிறது.அந்த அசாதாரண சூனியத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்கள் சிறிது நாட்கள் வேறு ஊருக்கு பயணப்படுகின்றனர்.

ஊர் திரும்பும் அவர்களுக்கு இம்முறை பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.எம்மியை விட்டு விலகியவர்கள் அனைவரும் இப்பொழுது அவளிடம் வலிய வந்து நட்பு பாராட்டுகின்றனர். அவளிடம் உதவி கேட்கின்றனர். பிள்ளைகள் தேடி வருகின்றனர்.பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் கைகூடிய மகிழ்ச்சியில் எம்மி, அலியிடம் சற்று கடினமாக நடந்து கொள்கிறாள். ஜெர்மானியர்களின் பழக்கவழக்கங்களை அவன் கற்றுக் கொள்ள வலியுறுத்துகிறாள்.முதல் முறை அவன் தான் தனித்து விடப்பட்டதை உணர்கிறான்.எம்மியிடம் சொல்லாமல் அவன் தன் தோழியோடு சென்று தங்குகிறான்.அவர்கள் மீண்டும் இணைந்தார்களா, எம்மியினால் அவன் அன்பை மீண்டும் பெற முடிந்ததா என்பது தீராக் காதலின் அழகினையொத்த இறுதிக் காட்சிகள்.

சமூகம் ஏற்றுக் கொள்ளாத அல்லது ஏற்றுக் கொள்ள தயங்கும் காரியங்களை எதார்த்தத்தை விட்டு கொஞ்சமும் விலகிடாமல் அழுத்தமாக பதிவு செய்துள்ள இத்திரைப்படம் ஒரு இனிய காதல் கதை என்பதைத் தாண்டி நமக்கு கடத்திடும் விஷயங்கள் உணர்வுப்பூர்வமானவை.Ali:Fear Eats The Soul பாஸ்பிண்டரின் உலகை அறிந்து கொள்ள உதவிடும் நிகரற்ற படைப்பு.இளவயதில் மரணித்து விட்ட வார்னர் தன் நிகரற்ற படைப்புகளின் வழி தொடர்ந்து பார்வையாளோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.போதைப் பொருளுக்கு அடிமை, ஓரின சேர்க்கையாளர் என தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கலகக்காரன் என பெயரெடுத்த வெர்னர் பாஸ்பிண்டர்,தன் திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யங்களின் முரண்.

Thursday, May 14, 2015

என் பெயர் சிகப்பு - ஓரான் பாமுக்




"நிறம் என்பது கண்ணின் தொடுகை,செவிடனுக்கு இசை,இருட்டிலிருந்து வெளிப்படும் ஒரு வார்த்தை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளால ஒவ்வொரு புத்தகத்திலும்,ஒவ்வொரு பொருளிலும் ஆன்மாக்கள் - காற்றின் முணுமுணுப்பை போல - கிசுகிசுப்பதை நான் கேட்டிருப்பதால், என் தொடுகை தேவதைகளின் தீண்டலை ஒத்திருக்கிறது என்று சொல்லுவேன். சிவப்பாக இருப்பது என் அதிர்ஷ்டம். நான் மூர்க்கமானவன். நான் வலிமையானவன். எவ்விடத்திலும் மனிதர்கள் என்னை கவனிப்பார்கள் எனத் தெரியும்.நான் கட்டுப்படுத்த முடியாதவன்.."

ஒரு மாபெரும் கலாச்சாரத்தை,அதன் தொன்மச் சுவடுகளின் வழி ஊடுருவிச் சென்று காணும் வாய்ப்பை தன வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் ஓரான் பாமுக்.16ம் நூற்றாண்டு துருக்கியின் ஓட்டான் சாம்ராஜ்யத்தில் நடைபெறும் கதை.ஓவியக் கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த மூன்றாம் சுல்தான் மூராத்தின் ஆணையின் கீழ் சித்திர சுவடிகளை வரைய முற்பட்ட நுண்ணோவியர்களின் வாழ்வரசியல் குறித்து விரிவாய் பேசுகிறது. நாவலின் கதாபாத்திரங்கள் வாசகனுடன் நேரடியாக பேசி கதையை விளக்குகின்றன.இங்கு கதாபாத்திரங்கள் என்பது மனிதர்கள் மட்டும் அல்ல..ஓவியங்களும் பிரேதமும் கூட.

எனிஷ்டே,ஓஸ்மான் ஆகிய ஓவியக் ஆசான்கள்,அவர்களின் சீடர்களான (புனைபெயர்களால் அழைக்கப்படும்)வசீகரன்,ஆலிவ்,நாரை, வண்ணத்துப்பூச்சி..மற்றும் எனிஷ்டேவின் மருமகன் கருப்பு,மகள் ஷெஹூரெ அவளது குழந்தைகள் ஓரான்,ஷெவ்கத்,ஷெஹூரெவின் கொழுந்தன் ஹசன் ஆகியோரைச் சுற்றி நகரும் கதையில் சுவாரஸ்யங்களுக்கு குறையில்லை. இவர்களுக்கு தொடர்பில்லாத யூதப் பெண்ணான வாயடி எஸ்தரின் மீது நம்மையும் அறியாமல் ஒரு நெருக்கம் பற்றிக் கொள்கிறது.அவள் கூவி விற்கும் பட்டாடைகள்,கைக்குட்டைகளின் வண்ணங்களைப் போல கலவையான குணம் கொண்ட பெண்ணவள்.பேரழகி என யாவராலும் வர்ணிக்கப்படும் ஷெஹூரெ காதலின் நிமித்தம் ஆண்களிடம் பகடையாட்டம் ஆடும் பெண்களின் குறியீடு.நிலையற்ற மனம் கொண்டு பேதலிக்கும் அவள்,நம்மை வசீகரிப்பது தம் பிள்ளைகள் இருவரோடு கொண்டிருக்கும் தூய அன்பினால் மட்டுமே.

ஓவிய மெருகாளன் வசீகரன், கொலையாகும் காட்சியோடு துவங்கும் நாவல் அவனது கொலையாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்போடு 100 ஆண்டுகால பாரசீக ஓவியக் கலையின் வரலாறையும் பேசிச் செல்கிறது. நுண்ணோவியர்கள் மத்தியில் காலங் காலமாக புகைந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு,பொறாமை குணத்திற்கு,ஓவியனின் தனித்த பாணியின் மீதான விமர்சனங்களுக்கு,மதச் சம்பிரதாயங்களுக்கு விடை தேடும் எண்ணற்ற உரையாடல்கள். விவாதங்களுகிடையே மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் நூல்கள் (பேரரசர்களின் நிகண்டு,ஹூஸ்ராவ் -ஷிரின் ..) மற்றும் ஓவியங்கள் வாசகனுக்கு சாவாலாக அமைபவை.குறிப்பாக காதலர்கள் ஹூஸ்ராவ் - ஷிரின் இருவரின் சந்திப்புக்கள் ஓவியமாக காட்சிப்படுத்தபட்டதை குறித்த விவரணைகள் அவ்வோவியங்களை தேடிப் பார்த்திடும் ஆவலை தூண்டுவது.

ஓட்டோமான் சுல்தானின் கருவூலத்தில் ஓவியர் ஒஸ்மானும் கருப்பும் செலவழிக்கும் அவ்விரு நாட்களில் - உலகின் நான்கு புறங்களில் இருந்தும் வந்து சேர்ந்த மாபெரும் ஓவியங்களை அவர்கள் கண்டு வியந்து விவாதிக்கும் பொழுதுகள் அற்புதமானவை.அவ்வோயியங்களுக்கு மத்தியில் நாமே நடப்பதாய்,மிதப்பதாய் ஒரு மாயை.வசீகரனின் கொலையாளி- நாரை, ஆலிவ்,வண்ணத்துப்பூச்சி இவர்களுள் ஒருவன் தான் என தெளிவாகி தேடல் பயணம் தொடரும் வேளையிலும் கொலைகாரன் தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு நம்மோடு உரையாடுகிறான்.நாவலோடு நாம் இணக்கம் கொள்வதற்கு இவ்வகை கதை சொல்லலும் ஒரு காரணி.

பிற தேச ஓவியங்களை நகல் எடுத்தல்,மததுவேஷ் ஓவியங்களை வரைதல் உள்ளிட்ட விஷயங்களே திரும்ப திரும்ப விவாதிக்கப்படுவது சிறிது அயர்ச்சியே.சாத்தானின் வாயிலாக மதவெறியர்களின் மற்றொரு பக்கத்தை சுட்டிக் காட்டுவது ஆசிரியரின் சார்பின்மையின் அடையாளம்.நூற்றாண்டுகள் கடந்து வந்த ஓவியக்கலையின் மகத்துவத்தை,ஓவியங்களை குறித்த விரிவான பார்வையை முன்வைக்கும் அதே வேளையில் ஒரு இலக்கிய வாசகனாய் இந்நாவல் குறித்து யோசித்தால்..ஜெமோவின் இவ்வரிகளே நினைவுக்கு வருகின்றன.

"என் பெயர் சிவப்பு’-ஐ நாம் துருக்கியை அறிந்துகொள்ள, ஐரோப்பியப் பண்பாடு கீழைப்பண்பாட்டுடன் கலந்த ஒரு தருணத்தை அறிந்துகொள்ள, கீழைக்கலைமனம் மேலைக்கலையை சந்திக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள வாசிக்கலாம்.ஆனால் பேரிலக்கியங்களை நாம் நம்மைப்பற்றி அறிந்துகொள்ளவே வாசிக்கிறோம்.."
- ஜெயமோகன்

சில எதிர்பார்ப்புகள் பொய்த்திருந்தாலும் நோபல் பரிசு வென்ற இம்மாபெரும் எழுத்தாளனின் பிற படைப்புகளை தேடி வாசிக்கும் ஆவலை தந்து விடுகின்றது 'என் பெயர் சிகப்பு'.ஓரான் பாமுக்கின் வர்ணனனையில் இஸ்தான்புல் நகரின் அழகை வாசிக்கும் விருப்பத்தை வித்திட்டுள்ளது இந்நாவல்.

வெளியீடு - காலச்சுவடு
தமிழில் - ஜி.குப்புசாமி

Friday, November 14, 2014

சுமித்ரா குறித்து..

என் சேமிப்பிற்காக ஜெமோவின்  தளத்தில் யாழிசையில் வெளியான பதிவைக் குறித்த இக்கட்டுரையை  இங்கு பதிவு செய்கிறேன்..

http://www.jeyamohan.in/?p=54108

Thursday, November 6, 2014

Fandry - யுகமாற்றதிற்கான கதை (மராத்தி)


கீழ்க்கண்ட சுகிர்தராணியின் கவிதையை முதல் முறை வாசித்த பொழுது எனக்கு கன்னட எழுத்தாளர் மொகள்ளி கணேஷின் 'காளி' சிறுகதையின் ஞாபகம் வந்தது.சுகிர்தாவின் கவிதை, இளவயதில் தலித் அடையாளத்தினால் அனுபவித்த மன வேதனையை உள்ளபடியே நமக்குச் சொல்வது.

கிட்டத்தட்ட இதே போன்றதொரு தலித் சிறுவனின் மனநிலையை படம் பிடித்து காட்டும் கதை கணேஷனுடையது.இவ்விரு இலக்கியங்களும் பகிரும் யுகம் யுகமாக தீராத ரணத்தை நாகராஜ் மஞ்சுளேவின் FANDRY திரைப்படமும் பேசுகிறது.

"செத்துப்போன மாட்டை
தோலுரிக்கும் போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர் சோற்றைத்தின்று விட்டு
சுடு சோறென பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் முறைத்து கடந்து விடுவேன்
அப்பாவின் தொழிலில்ஆண்டு வருமானம்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசயிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்றுசொல்லி விடுகிறேன்
பறச்சி என்று"
-சுகிர்தராணி


விடலை பருவத்திற்கே உரிய ஆசைகளும்,கனவுகளும் கொண்ட தலித் இளைஞன், தீண்டாமைக் கொடுமையால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் மனவேதனை அடைவதை முடிந்த வரை எதார்த்த மொழியில் பேசுகிறது இப்படம்.நாயகன் ஜாப்யா பன்றி மேய்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன்.பள்ளி மாணவன்,பகுதி நேரமாக சைக்கிளில் சென்று ஐஸ் விற்கிறான்.ஏழ்மையின் கோர முகம் ஒரு புறமென்றால் அதை விழுங்கிடும் தாழ்ந்த ஜாதி என்கிற வேற்றுமை மறுபுறம்.அவ்வூரின் பிற இளைஞர்களைப் போல அவனால் இயல்பாக நடமாட முடியவில்லை.ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஜாதி குறுக்கே புகுந்து அவனை கூனி குறுகிப் போகச் செய்கிறது.







ஆதிக்க ஜாதி இளைஞர்களின் கேலி,கிண்டல்,மிரட்டல்களுக்கு மத்தியில் பயந்தே அவன் தன காரியங்களை தொடர வேண்டியிருக்கு.பள்ளியில் மட்டுமே அவன் சற்று ஆசுவாசம் கொள்கிறான்.தீண்டாமை வேர் விடாத இடம் அது மட்டுமே.சாணக்யாவாக நடித்துள்ள இயக்குனர் நாக்ராஜின் கதாபாத்திரம் முக்கியமானது.சாணக்யாவின் சைக்கிள் கடையில் ஜாதி வேற்றுமைகளுக்கு இடமில்லை.மேலும் அவன் ஜாப்யாவிடம் மிகுந்த அன்போடு பழகுகிறான்.தயக்கங்கள் ஏதுமில்லாமல ஜாப்யா கால் வைக்கும் இடம் சாணக்யாவின் கடை மட்டுமே.

ஜாப்யாவிற்கு உடன் படிக்கும் ஷாலுவின் மீதொரு காதல் அல்லது அந்த வயதிற்கே உரிய ஈர்ப்பு.முடிந்தவரை தன அடையாளங்களை அவள் முன்னே மறைத்துக் கொள்ளவே விரும்புகிறான்.அவ்வூரின் திருவிழா கொண்டாட்ட காட்சிகள்,நிதர்சனத்தை விளக்கிட போதுமானவை.புது ஆடை அணிந்து நண்பனோடு உற்சாகமாக வளம் வரும் ஜாப்யா,சாமி ஊர்வலத்தில் மேள தாளத்திற்கு சாணக்யாவோடு சேர்ந்து துள்ளாட்டம் போடுகிறான். சாணக்யாவின் தோள் மீதமர்ந்து உற்சாக கொண்டாட்டத்தோடு தூரத்தில் நிற்கும் ஷாலுவை இவன் பெருமிதத்தோடு பார்க்கும் நிமிடங்கள் மிகச் சில நொடிகளில் கரைந்து போவது ..வேதனை.படத்தில் வரும் அக்காட்சியை நேரில் கண்ட வகையில் சகித்துக் கொள்ள இயலாதஅவ்வலியின் தீவிரம் புரிந்தது.


திருவிழா காட்சியைப் போலவே இறுதிக் காட்சியும் நீளமானது,மேலும் அர்த்தம் மிகுந்தது. இதுவரையிலான அவனது வேதனைகள் அத்தனைக்கும் சிகரம் வைத்தது போலொரு நிகழ்வு.உண்மையில் ஜாப்யாவும்,அவன் குடும்பமும் அக்காட்சியில் துரத்துவது பன்றிகளை அல்ல,தலைமுறை தலைமுறையாய் அவர்களை அடக்கி வைத்திருக்கும் ஆதிக்க ஜாதியின் அசிங்கங்களை.இறுதிக் காட்சியில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த அம்பேத்கர் உட்பட பல தலைவர்களின் புகைப்படங்களை கடந்து ஜாப்யாவின் குடும்பம் செல்கிறது.பேருண்மையை உரத்துச் சொல்லும் காட்சியது.

ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் நமக்கொரு விஷயம் சொல்லுகிறார்.அது ஏழை குடும்பத்தின் கல்யாண ஏற்பாடுகள்,வசதியற்ற சிறுவர்களின் பொழுதுபோக்குகள்,சின்ன சின்ன காரியங்களின் மீதான அவர்களின் ஆச்சர்யங்கள் என நீள்கிறது.இந்தத் திரைப்படம் குறியீடுகள் அதிகமின்றி பட்டவர்த்தனமாக ஜாதிய ஒடுக்குமுறையை பேசுகிறது.

சிறுவர் துவங்கி பெரியவர் வரை அவர்கள் அனுபவிக்கும் அவமானம் எவருக்கும் நிகழக் கூடாதது.ஒடுக்கப்படும் சமூகத்திற்கான எழுச்சிக் குரல் இத்திரைக்காவியம். உண்மையில் இப்படம் அடுத்த தலைமுறையினருக்கானது.இந்த அசாதாரணமான திரைப்படத்தை சாத்தியமாக்கிய இயக்குனர் நாக்ராஜின் கரங்களை பற்றி வாழ்த்து சொல்லிட விருப்பம்...!

சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்ல,அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள, நம்மை பக்குவபடுத்திக் கொள்ள எத்தனையோ விஷயங்கள் உண்டு என்பதற்கு Fandry ஆகச் சிறந்த உதாரணம்.முடிந்தவரை நண்பர்களுக்கு இந்தப் படத்தை பரிந்துரையுங்கள்.இப்படத்தை புரிந்து கொள்ள மொழி ஒரு தடையில்லை.

{மொகள்ளி கணேஷின் சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு : பாறைகள் -இந்தியச் சிறுகதைகள் (சந்தியா வெளியீடு) }

Monday, August 11, 2014

மிலேச்சன்களின் உலகம்...Uzak (துருக்கி)


எதார்த்தத்தை மீறிய ஆச்சர்யங்கள் துருக்கி இயக்குனர் சிலானின் (Nuril Bilge Ceylan) படைப்புகள். அதிகமாக இவர் படங்களை பார்க்கப் பார்க்க இன்னும் அதிகமாக சினிமாவை நேசிக்கத் துவங்குகிறேன்.ஆண் மன சலனங்களை இவரைப் போல வேர் வரை ஊடுருவிச் சென்று கதை சொன்னவர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை.சிலானின் கதையுலகத்தில் பெண்களும் உண்டு. ஆனால் பிரதானமாக முன்னிறுத்தப்படுவதோ ஆண்களே. துரோகம் என்ற ஒற்றைச் சொல்லை சுற்றி கட்டமைக்கப்படுகின்றன சிலானின் கதையுலகம். அதன் நீட்சியாய் தொடரும் தடுமாற்றங்கள்,குற்ற உணர்வுகள், மன்னிப்புகள் இவற்றையும் காண்பிக்க தவறுவதில்லை இவர்.

Climates,Once Up On A Time In Anatolia வை தொடர்ந்து பார்த்த இவரின் Distant(Uza) மற்றுமொரு காவியம்.

மஹ்மத் - நடுத்தர வயதினன், படித்தவன்,ரசனைக்காரன், விவாகரத்து பெற்றவன்,புகைப்பட கலைஞன்,தனிமை விரும்பி,நாகரீகம் பேணுபவன்,பணக்காரன்,ஸ்த்ரி லோலன்,பந்த பாசங்கள் அற்றவன்;யூசூப் - இளைஞன்,ஏழை,கிராமத்தான்,வேலை தேடுபவன், பொறுமைசாலி, உறவுகளை நேசிப்பவன். இவ்விருவரும் ஒரே வீட்டில் தங்க நேரிடும் நாட்களின் விவரிப்புகள் தான் Distant(Uzak).

இணக்கமாய் தொடரும் நாட்கள்..மெல்ல மெல்ல மஹமெத்தின் அழுக்குக்கான மனநிலையையும்,பாவப்பட்ட யூசுப்பின் பரிதாப நிலையையும் நமக்கு விளக்கிச் செல்பவை.படித்த படிப்பும்,கொண்ட ரசனையும் மெஹ்மத் அந்த ஏழை இளைஞன் மீது காட்டும் வன்மத்தில் அர்த்தமற்று போகின்றன. பெருவாழ்விற்கு சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் குறைந்த பட்ச சிநேகம் போதும் என்பதை உரத்துச் சொல்லும் கதை.இவ்விருவரும் தனிமையை செலவிடும் காட்சிகள் முக்கியமானவை.வேலை ஏதும் கிடைக்காத சூழலில்,பனி போர்த்திய சாலையில் மகிழ்ச்சியாய் சுற்றித் திரியும் ஜோடிகளை யூசூப் பார்த்துக் கொண்டு நிற்பதும்,செய்வதறியாமல் எதிர்படும் பெண்ணொருத்தியை காரணமேயில்லாமல் துரத்துவதும்..பரிதாபம்!





மஹ்மூதும்,யூசுப்பும் அனடோலியா பகுதிக்கு புகைப்படம் எடுக்க செல்லும் காட்சிகள் அவர்கள் இருவரும் பயணிக்கும் திசைகளை நமக்கு அறிவிப்பவை.குறைந்த பட்சம் யூசுபிற்கு அவன் தாய் குறித்த அக்கறை உண்டு.அவளுக்காக அவன் சிரமங்கள் ஏற்க துணிகிறான்.உறவுகளின் பிடிமானம் ஏதுமில்லாமல் ரசனை சார்த்து இயங்கும் மஹ்மத்,யூசுப்பின் முன் தாழ்ந்து போகிறான்.பனிக்காலத்தில் தொடங்கும் கதை வசந்த காலத்தில் முடிவுறுகிறது.பனி உருகி ஆவியாகிப் போனது போல மஹ்மூத்தின் சுற்றி இருந்தவர்கள் விலகிப் போகிறார்கள்.அவன் அது குறித்து அலட்டிக் கொள்பவனும் இல்லை.அவன் அப்படித்தான்.

சிலான் மாபெரும் புகைப்படக்காரர் என்பது காட்சிக்கு காட்சி வெளிப்படும் அழகில் தெரிகிறது.இஸ்தான்புல் நகரை நேரில் சென்று பார்த்துவிட ஆசையை தூண்டும் ஒளிப்பதிவு.ரசனைகளில் மூழ்கித் திளைக்கும் மனிதர்கள் உண்மையில் மனிதர்களை விட்டு விலகியே இருக்கிறார்கள். அவர்களின் உலகத்தில் புதியவர்களின் வரவும்,கடந்த காலத்தின் நினைவுகளும் தொந்தரவிற்குரியவை.மஹ்மூத்தின் உலகத்தைப் போல...

Sunday, August 3, 2014

ரேமண்ட் கார்வர் சிறுகதைகள்...

அமெரிக்க சிறுகதையாசிரியர் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், உறவுகளுக்குள் நிகழும் அன்றாட காட்சிகளின் எதார்த்த விவரிப்புகள். பெரும்பாலான கதைகள் கணவன் - மனைவிக்கிடையேயான நிகழ்வுகளின் பதிவு.தினசரி வாழ்வில் சிறியதும் பெரியதுமாய் எத்தனை விதமான சிக்கல்கள்.நாம் நினைத்தே பாராத விஷயங்களை எடுத்தாளுகின்றன ரேமன்ட்டின் கதைகள்.இவர் கதையுலகத்து பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள்,பதற்றம் நிறைந்தவர்கள்,நினைத்தால் உருகி அழுதிட கூடியவர்கள்.ஆண்களோ பொழுதுபோக்குகளில் விருப்பம் உள்ளவர்கள், குடிகாரர்கள்,குழப்பம் நிறைந்தவர்கள்.இருவேறு திசையில் பயணிக்கும் இவர்கள் இணைந்த வாழ்வு உண்மையில் சுவாரஸ்யமானதே. காதலிப்பவர்கள்,திருமணம் ஆனவர்கள்,விவாகரத்து பெற்றவர்கள்,பெறப் போகிறவர்கள் என....

"ஒரு சிறிய நல்ல காரியம்" - இத்தொகுப்பில் மிகப் பிடித்த கதை.ஒரு எதிர்பாராத விபத்தும் அதன் தொடர்ச்சியான மருத்துவமனை நாட்களும் கணவன் மனைவியிடையே உண்டு பண்ணும் உணர்வுகளைத் தாண்டிய நெருக்கம் குறித்தது.நோயுற்றவர் குணமாகும் வரையிலான மருத்துவமனை தங்கலும்,அங்கு செலவிடப்படும் இரவுகளும் அமானுஷ்யம் நிறைந்தவை. தேறி வருவது மகனாக இருக்கும் பட்சத்தில்,அந்த நிலை இன்னும் கொடுமை. நம்பிக்கை வேர் விட்டு படர்ந்திருக்கும் இடம் மருத்துவமனைகள். அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களில் வெளிப்படும் உண்மை இது.காட்சிகளின் விவரிப்பில் அவர்களின் முக பாவங்களை கூட கற்பனை செய்யமுடிகிறது.மகனை குறித்த சோகத்தில் உள்ள இவர்களுக்கும் ஒரு பேக்கரி கடைக்காரனுக்குமான உரையாடல் சொல்லும்..வாழ்க்கை தத்துவத்தை.


"எங்கிருந்து அழைக்கிறேன் நான்" - குடிமறதி விடுதியில் சந்தித்துக்கொள்ளும் இரு மனிதர்களின் கதை.அவர்களின் உரையாடல் வழி நமக்கு அறிமுகமாகும் பெண்கள்,இவர்களை சகித்துக் கொண்ட காதலிகள்.புகைபோக்கி சுத்தம் செய்யும் பெண்ணை காதலித்து மணந்து கொண்ட கதையொன்று அழகானது. பெரும் சண்டையோடு மோசமாக முடிவுறும் காதலும்,ஒரு சமயம் கவித்துவமாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கோர் உதாரணம் இச்சிறுகதை.


'ஜூரம்' - விட்டோரியோ டிசிகாவின் 'Children are watching Us' திரைப்படத்தை ஒரு நிமிடம் நினைவூட்டிய சிறுகதை.பிள்ளைகளை விட்டுவிட்டு வேறொருவனுடன் செல்லும் தாய்.அவர்களை பராமரிக்க ஆள் கிடைக்காமல் கஷ்டப்படும் தந்தை.அவர்களுக்கு உதவ வரும் மூதாட்டி எனத் தொடரும் கதையில் படித்த நாயகனும் நாயகியும் ஓவிய கலையின் நுட்பத்தை அறிந்த அளவிற்கு வாழ்வின் நுணுக்கங்களை அறியாமல் உள்ளனர்.வீட்டுக்கு வேலைக்கு வரும் மூதாட்டியும் அவள் கணவனும் வாழ்வை திட்டமிட்டு வெகு அழகாக எடுத்துச் செல்கின்றனர். கல்வியறிவு, ரசனை,இவற்றைத் தாண்டி வேறு பல விஷயங்கள் இல்லற வாழ்விற்கு தேவை என்பது எவ்வளவு உண்மை.

கதீட்ரல் - கண் பார்வையற்ற மனைவியின் தோழனோடு ஒருவன் கொள்ளும் நட்பின் தொடக்க பொழுதுகள்.கண்பார்வையற்றவனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதறியாமல் சலித்துக் கொள்ளும் இவன், அவன் வருகைக்கு பிறகு மெல்ல மெல்ல அவன் உலகிற்குள் நுழைகிறான்.அவர்கள் இருவரும் சேர்ந்து வரையும் தேவாலைய படத்தின் நெளிவுசுளிவுகளை போன்றதே அவர்கள் கொள்ளும் நட்பும்.

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு - ஒரு கொடூர கொலை. கொலையான பெண்ணின் பிணத்தை முதலில் கண்டெடுக்கும் மனிதனின் மனநிலை தொடரும் நாட்களில் எவ்வாறிருக்கும்? அவனைக் காட்டிலும் அவன் மனைவி அதிக குற்ற உணர்ச்சி கொள்கிறாள்.பல நேரம் பயணப்பட்டு அந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கு கொள்கிறாள். இறந்தவள் குறித்த சின்ன சின்ன விஷயங்களையும் கேட்டறிகிறாள். இவளுக்கும் அவளுக்குமான பிணைப்பு பெண் என்பதைத் தாண்டி வேறொரு புள்ளியில் இணைகிறது..

சின்னஞ்சிறு வேலை - ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் மருத்துவமனை நாட்களோடு,அவரின் இறுதி நிமிடங்களையும் கோர்வையாக நம் முன் வைக்கிறது இக்கதை.நாம் இன்றும் போற்றிக் கொண்டாடும் ஒரு மாபெரும் இலக்கிய ஆளுமையின் மரணத்தை அருகில் இருந்து பார்த்தது போலொரு உணர்வு.செகாவை குறித்த இந்தக் கதையில் டால்ஸ்டாயும்,கார்க்கியும் வருகிறார்கள்.செகாவின் கதைகள் உங்கள் மனதிற்கு நெருக்கமானவை என்றால் இக்கதை நிச்சயம் கண்ணீர் வர வழைக்கும்.

அடுத்த வீட்டுக்காரர்கள்,பெட்டிகள்,அவர்கள் யாரும்உன்னுடைய கணவன் இல்லை என நீளும் பட்டியலில் ஒரு கதையைக் கூட வேண்டாம் என ஒதுக்க முடியாதபடி அத்தனையும் பொக்கிஷங்கள்.மனித மன சலனங்களை ஊடுருவிச் செல்லும் கதைகள் இவை.ஒரு சில கதைகளை தவிர்த்து மொழிபெயர்ப்பும் சரியாகவே அமைந்துள்ளது.

மகத்தான வாசிப்பனுபவம்!


-வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு-
வெளியீடு - காலச்சுவடு

Wednesday, July 2, 2014

கமலாதாசின் "சந்தன மரங்கள்"

கமலாதாஸ் கதைகளோ,கவிதைகளோ இதற்கு முன் அறிமுகமில்லை. பாலச்சந்திரன் சுள்ளிகாடு தனது சுயசரிதை நூலான சிதம்பர ரகசியத்தில் கமலாதாஸ் உடனான சந்திப்பை குறித்து எழுதி இருப்பார்.அந்தக் கட்டுரை இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் குறித்து இல்லாது கமலாதாசின் பிரியமும்,அக்கறையும் கொண்ட தயாள குணத்தை குறித்து பேசுவது. அதிலிருந்து அவரின் எழுத்துக்களை தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும்.மிகச்சமீபத்தில் எதிர்பாராத காரணங்களினால் நான் வேண்டிய புத்தகத்திற்கு பதில் "சந்தன மரங்கள்" கை வந்து சேர்ந்தது.மகிழ்ச்சியான ஏமாற்றம்!

முன்னுரையில் ஜெமோ குறிப்பிட்டுள்ளதைப் போல கமலாதாசின் உலகத்திற்குள் நுழைய இந்தப் புத்தகம் சிறுவாசல்.நாம் கண் பொத்தி,வாய் மூடி பகிர்ந்து கொள்ளும் ரகசிய மனிதர்கள் அவர் கதை மாந்தர்கள்.முழுக்க முழுக்க பெண் மன உளைச்சல்களை அணுகிப் பேசும் கதைகள்.கமலாதாசின் பெண்கள் சபிக்கப்பட்டவர்கள்,பிரியமானவர்களால் துரத்தியடிக்கப்பட்டவர்கள்,அன்பிற்கு ஏங்குபவர்கள்,மனதளவில் வலிமையற்றவர்கள்,வீட்டை மறந்து வேலையில் மூழ்கி கிடப்பவர்கள் இன்னும் இன்னும்..இதில் ஏதோ ஒன்றில் எந்தப் பெண்ணும் தன்னை சுலபமாக பொருத்திக் கொள்ள இயலும்.



ஒரு நாவலின் நேர்த்தி கொண்டது 'ருக்மணிக்கு ஒரு பொம்மை குழந்தை' கதை."Arappatta kettiya gramathil" என்றொரு பத்மராஜனின் படம்.பரத்தையர் கூடத்தில் மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடும் பெண்ணிற்கு உதவும் நண்பர்களின் கதை.ஏனோ இந்தக் கதை வாசிக்கையில் அப்படத்தின் ஞாபகம்.அங்கு நிகழும் காதலும்,வன்முறையும்,மரணமும் - மாற்றங்கள் இன்றி தொடர்பவை.ஒரு சிறுமியின் வருகையும், கருகலைப்பினால் நிகழும் மரணமும்,அங்கிருந்து தப்பிப்பிழைத்து பின் மீண்டும் வந்து சேரும் ஒருத்தியின் காதல் கதையும் பதரவைப்பவை.இளையவள்,மூத்தவள் என்கிற பாகுபாடின்றி அங்குள்ள பெண்கள்களின் மனவோட்டத்தை, கனவுகளை, நிராசைகளை நுட்பமாய் விவரிக்கும் கதையிது.அழுதாலும், புரண்டாலும் வாழ்க்கையை அங்கு தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும்.பத்மராஜனின் படத்தில் வருவது போல காப்பாற்றிச் செல்ல தேவகுமாரன்கள் கிட்டாத புறக்கணிக்கப்பட்ட தேவதைகள் இவர்கள்.

'சந்தன மரங்கள்', இருளும் - வெளிச்சமுமான இரண்டு தோழிகளின் கதை.பெண்ணிய கதைகள் எப்போதும் பெண்களின் சிறப்பை மட்டும் பேசுபவை அல்ல என்பதற்கோர் உதாரணம் இக்கதை.எண்ணங்களில் வன்மமும்,குரோதமும் மிகுந்து வார்த்தைகளில் கத்தியின் கூர்மையை கொண்டவள் கல்யாணிகுட்டி.தாழ்வுமனப்பான்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டவள்.பழிவாங்க காதலை ஆயுதமாக பயன்படுத்தவும் துணிபவள். கல்யாணி குட்டி காதல் கொள்வது தனது தோழி ஷீலாவோடு.ஆம் அவர்கள் காதலர்கள்.லெஸ்பியன் உறவு சார்ந்த கதையொன்றை வாசிப்பது இதுவே முதல் முறை.கதை முழுக்க ஷீலா நமக்கு சொல்வது போல வருகிறது.கல்யாணிகுட்டி மீதான சிநேகமும்,நெருக்கடியான திருமண வாழ்வும்,விலகிய பொழுதும் மீண்டும் மீண்டும் வாட்டும் நினைவுகளும்....
இரண்டு பெண்களுக்கிடையேயான அற்புதமான காதல் கதை.

இவை தவிர்த்து, கூடா காதல் என உலகம் வரையறுக்கும் ஒரு பெண்ணின் நேசத்தை பேசும் 'மாஹிம் வீடு',இரவு பகல் பாராது உழைத்து, தன் தொழிலை நேசிக்கும் பெண் மருத்துவருக்கு நேரும் 'துரோகம்' குறித்தான கதையும் குறிப்பிடத்தக்கவை.தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கொண்டு கமலாதாஸ் புனைந்துள்ள 'பறவையின் வாசனையும்' சிறப்பான கதையே.கண்ணுக்கு புலப்படாத சங்கிலியால் பிணைக்கப்பட்டு உறவுகளை விட்டு வெளியேற முடியாத எல்லாப் பெண்களுக்குமான கதைகள் இவை.கமலாதாசின் படைப்புகளை தேடி வாசிக்க இந்தத் தொகுப்பின் அறிமுகம் போதுமானது.


வெளியீடு - உயிர்மை
தமிழில் - நிர்மால்யா