Wednesday, November 4, 2015

வானெங்கும் உனது பின்பம்..


"ஹாலிவுட் திரைப்படங்கள் பார்வையாளனை உணர்ச்சிவசப்பட வைப்பதை தவிர்த்து வேறொன்றும் செய்வதில்லை.என் திரைப்படங்களின் மூலம் நான் சாதிக்க விரும்புவதெல்லாம் அவ்வுணர்ச்சிகளை நிஜத்தில் பிரதிபலிக்கவும்,அதைக் குறித்து ஆராயவும் என் பார்வையாளனை தூண்டுவதே.."

- வெர்னர் பாஸ்பிண்டர்





ஜெர்மானிய சினிமாவில் புதிய அலை உருவாக காரணமானவர்களில் மிக முக்கியமானவர் வெர்னர் பாஸ்பிண்டர்.பத்தாண்டு கால திரைவாழ்வில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ள வெர்னர், அவற்றின் தனித்த அடையாளத்திற்காய் உலகின் கவனத்தை பெற்றவர். நடிகர், கதாசிரியர்,ஒளிப்பதிவாளர், எடிட்டர் என பல்வேறு முகங்களைக் கொண்ட வெர்னர்,மிக குறுகிய காலத்திற்குள் சினிமாவில் சாதித்தது அத்துறை மீதான அவரது பேரன்பைச் சொல்லுவது.சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் வெர்னரின் படங்கள்,எதார்த்த விவரிப்புகளால் நம்மை அதிர்விற்குள்ளாக்குவதோடு தீவிர சிந்தனைக்கும் உட்படுத்துகின்றன.The Marriage of Maria Braun,Veronika Voss,Berlin Alexanderplatz முதலான வெர்னரின் குறிப்பிட தகுந்த படைப்புகளுள் பரந்த கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்ற திரைப்படம் Ali:Fear Eats The Soul.

சமூகம் ஏற்றுக் கொள்ள மறுக்கும் காதல்,உலகப்போரின் விளைவாக குணம் மாறிப்போன மனிதர்கள்,சமூகத்தை எதிர்கொள்ள முடியாத முதியவளின் உளவியல் என இத்திரைப்படம் தொட்டுச் செல்லும் விஷயங்கள் ஏராளம்.ஒரு மழை இரவில் மதுவிடுதியொன்றில் நுழையும் முதியவள் எம்மி அங்கு ஒலிக்கும் அரேபிய இசையை கேட்கவே தான் வந்ததாக கூறுகிறாள். கவித்துவ பயணமொன்றிற்கு தயார் செய்து கொள்ள தூண்டும் அந்த முதல் காட்சியே நம்மை படத்தோடு ஒன்றிட செய்கிறது.60 வயதான எம்மி அங்கு மொரோக்கோ தேசத்து இளைஞனான அலியை சந்திக்கிறாள்.நண்பர்களின் கிண்டல்களுக்கு மத்தியில் எம்மியோடு நடனமாடிடும் அலி அம்முதியவளோடு சிநேகம் கொள்கிறான்.


ஒரு தாயின் அரவணைப்போடு அவனை அணுகிடும் எம்மி அவனது காதலை ஏற்றுக்கொள்ள தடுமாறுகிறாள்.தன் வயதை அவன் ஒரு பொருட்டாக கருதாதது அவளுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆச்சர்யமே.அவனோ அவள் மீது கொண்ட காதலில் உறுதியாய் இருக்கிறான்.ஒரு அரபு தேசத்து இளைஞனை தான் மணமுடிக்கப் போவதாய் மகளிடமும் மருமகனிடமும் எம்மி கூறிட,அவர்கள் அவளை நம்பாமல் சிரித்து கேலி செய்கின்றனர்.அவ்விருவரின் ஏளன பார்வை ஒட்டு மொத்த சமூகத்தின் பார்வையை குறிப்பது.மழை ஓய்ந்த ஒரு பகல் பொழுதில்,தங்களின் திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் அலியும் எம்மியும் தாங்கள் நினைத்ததை விட மிக மோசமான எதிர்வினையை சந்திக்க நேரிடுகிறது. எம்மியாக நடித்துள்ள மிரா,தன் இயல்பான நடிப்பால் நம்மை வசீகரிக்கிறார்.

அவர்களுக்கிடையேயான வயது வித்தியாசம் ஒரு பேசுபொருள் எனில் மற்றொன்று அலி, அரபு தேசத்தைச் சேர்ந்தவன் என்பது.அரேபியர்கள் சுத்தமற்றவர்கள்,தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள்,பெண்களை ஏமாற்றுபவர்கள் என உலவும் வதந்திகளை நம்புகிற சமூகம் அவர்களுடையது. அக்கம்பக்கத்து வீட்டு பெண்கள்,உடன் பணிபுரியும் தோழிகள்,வருட கணக்காக நட்போடு இருந்த மருந்துக்கடைகாரர் என எம்மிக்கு வேண்டியவர்கள் அனைவரும் அலியை வெறுக்கின்றனர்.அதனால் எம்மியோடான தங்களின் நட்பை முறித்துக் கொள்கின்றனர்.அவளது பிள்ளைகளோ பெரும் கூச்சலிட்டு அவளோடு சண்டையிட்டு பிரிகின்றனர்.அலியை அவ்விடம் இருந்து வெளியேற்ற குடியிருப்புவாசிகள் நாடகங்கள் நிகழ்ந்துகின்றனர்.எம்மி ஒரு இளைஞனை மணந்துள்ளால் என்பதைக் காட்டிலும் ஒரு அரேபியனை மணந்துள்ளால் என்பதே அவர்களின் வன்மத்திற்கு காரணமாக இருக்கிறது.ஜெர்மானிய சமூகம் கொண்டிருந்த நிறவெறியின் தாக்கத்தை அலியின் நிலை கொண்டு நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.




காதலின் மேன்மையை உணர்ந்த அவ்விருவரும் செய்வதறியாது சிக்கித் தவிக்கும் பொழுதொன்றில்,யாருமற்ற பூங்காவில் எம்மி அலியின் கைப்பற்றி அழுதிடும் காட்சி உருக்கமானது.அவனை புறக்கணிக்கும் சமூகத்தின் மீதான தன் கோவத்தை சொல்லி வீரிட்டு அழுதிடும் எம்மியை தேற்றுகிறான் அலி.அவளைப் போல எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவனில்லை அவன். அலியின் தீர்க்கமான குணாதிசியங்கள் அபூர்வமாய் காணக்கிடைப்பவை.தன்னை வெறுத்து ஒதுக்கும் மனிதர்களிடம் குறை காணாத அவன் முன்னே அச்சமுகமே சிறுமைப்பட்டு போவதாய் தோன்றுகிறது.அந்த அசாதாரண சூனியத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள அவர்கள் சிறிது நாட்கள் வேறு ஊருக்கு பயணப்படுகின்றனர்.

ஊர் திரும்பும் அவர்களுக்கு இம்முறை பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.எம்மியை விட்டு விலகியவர்கள் அனைவரும் இப்பொழுது அவளிடம் வலிய வந்து நட்பு பாராட்டுகின்றனர். அவளிடம் உதவி கேட்கின்றனர். பிள்ளைகள் தேடி வருகின்றனர்.பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் கைகூடிய மகிழ்ச்சியில் எம்மி, அலியிடம் சற்று கடினமாக நடந்து கொள்கிறாள். ஜெர்மானியர்களின் பழக்கவழக்கங்களை அவன் கற்றுக் கொள்ள வலியுறுத்துகிறாள்.முதல் முறை அவன் தான் தனித்து விடப்பட்டதை உணர்கிறான்.எம்மியிடம் சொல்லாமல் அவன் தன் தோழியோடு சென்று தங்குகிறான்.அவர்கள் மீண்டும் இணைந்தார்களா, எம்மியினால் அவன் அன்பை மீண்டும் பெற முடிந்ததா என்பது தீராக் காதலின் அழகினையொத்த இறுதிக் காட்சிகள்.

சமூகம் ஏற்றுக் கொள்ளாத அல்லது ஏற்றுக் கொள்ள தயங்கும் காரியங்களை எதார்த்தத்தை விட்டு கொஞ்சமும் விலகிடாமல் அழுத்தமாக பதிவு செய்துள்ள இத்திரைப்படம் ஒரு இனிய காதல் கதை என்பதைத் தாண்டி நமக்கு கடத்திடும் விஷயங்கள் உணர்வுப்பூர்வமானவை.Ali:Fear Eats The Soul பாஸ்பிண்டரின் உலகை அறிந்து கொள்ள உதவிடும் நிகரற்ற படைப்பு.இளவயதில் மரணித்து விட்ட வார்னர் தன் நிகரற்ற படைப்புகளின் வழி தொடர்ந்து பார்வையாளோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.போதைப் பொருளுக்கு அடிமை, ஓரின சேர்க்கையாளர் என தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கலகக்காரன் என பெயரெடுத்த வெர்னர் பாஸ்பிண்டர்,தன் திரைப்படங்களைப் போலவே சுவாரஸ்யங்களின் முரண்.

No comments: