Monday, August 11, 2014

மிலேச்சன்களின் உலகம்...Uzak (துருக்கி)


எதார்த்தத்தை மீறிய ஆச்சர்யங்கள் துருக்கி இயக்குனர் சிலானின் (Nuril Bilge Ceylan) படைப்புகள். அதிகமாக இவர் படங்களை பார்க்கப் பார்க்க இன்னும் அதிகமாக சினிமாவை நேசிக்கத் துவங்குகிறேன்.ஆண் மன சலனங்களை இவரைப் போல வேர் வரை ஊடுருவிச் சென்று கதை சொன்னவர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை.சிலானின் கதையுலகத்தில் பெண்களும் உண்டு. ஆனால் பிரதானமாக முன்னிறுத்தப்படுவதோ ஆண்களே. துரோகம் என்ற ஒற்றைச் சொல்லை சுற்றி கட்டமைக்கப்படுகின்றன சிலானின் கதையுலகம். அதன் நீட்சியாய் தொடரும் தடுமாற்றங்கள்,குற்ற உணர்வுகள், மன்னிப்புகள் இவற்றையும் காண்பிக்க தவறுவதில்லை இவர்.

Climates,Once Up On A Time In Anatolia வை தொடர்ந்து பார்த்த இவரின் Distant(Uza) மற்றுமொரு காவியம்.

மஹ்மத் - நடுத்தர வயதினன், படித்தவன்,ரசனைக்காரன், விவாகரத்து பெற்றவன்,புகைப்பட கலைஞன்,தனிமை விரும்பி,நாகரீகம் பேணுபவன்,பணக்காரன்,ஸ்த்ரி லோலன்,பந்த பாசங்கள் அற்றவன்;யூசூப் - இளைஞன்,ஏழை,கிராமத்தான்,வேலை தேடுபவன், பொறுமைசாலி, உறவுகளை நேசிப்பவன். இவ்விருவரும் ஒரே வீட்டில் தங்க நேரிடும் நாட்களின் விவரிப்புகள் தான் Distant(Uzak).

இணக்கமாய் தொடரும் நாட்கள்..மெல்ல மெல்ல மஹமெத்தின் அழுக்குக்கான மனநிலையையும்,பாவப்பட்ட யூசுப்பின் பரிதாப நிலையையும் நமக்கு விளக்கிச் செல்பவை.படித்த படிப்பும்,கொண்ட ரசனையும் மெஹ்மத் அந்த ஏழை இளைஞன் மீது காட்டும் வன்மத்தில் அர்த்தமற்று போகின்றன. பெருவாழ்விற்கு சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் குறைந்த பட்ச சிநேகம் போதும் என்பதை உரத்துச் சொல்லும் கதை.இவ்விருவரும் தனிமையை செலவிடும் காட்சிகள் முக்கியமானவை.வேலை ஏதும் கிடைக்காத சூழலில்,பனி போர்த்திய சாலையில் மகிழ்ச்சியாய் சுற்றித் திரியும் ஜோடிகளை யூசூப் பார்த்துக் கொண்டு நிற்பதும்,செய்வதறியாமல் எதிர்படும் பெண்ணொருத்தியை காரணமேயில்லாமல் துரத்துவதும்..பரிதாபம்!





மஹ்மூதும்,யூசுப்பும் அனடோலியா பகுதிக்கு புகைப்படம் எடுக்க செல்லும் காட்சிகள் அவர்கள் இருவரும் பயணிக்கும் திசைகளை நமக்கு அறிவிப்பவை.குறைந்த பட்சம் யூசுபிற்கு அவன் தாய் குறித்த அக்கறை உண்டு.அவளுக்காக அவன் சிரமங்கள் ஏற்க துணிகிறான்.உறவுகளின் பிடிமானம் ஏதுமில்லாமல் ரசனை சார்த்து இயங்கும் மஹ்மத்,யூசுப்பின் முன் தாழ்ந்து போகிறான்.பனிக்காலத்தில் தொடங்கும் கதை வசந்த காலத்தில் முடிவுறுகிறது.பனி உருகி ஆவியாகிப் போனது போல மஹ்மூத்தின் சுற்றி இருந்தவர்கள் விலகிப் போகிறார்கள்.அவன் அது குறித்து அலட்டிக் கொள்பவனும் இல்லை.அவன் அப்படித்தான்.

சிலான் மாபெரும் புகைப்படக்காரர் என்பது காட்சிக்கு காட்சி வெளிப்படும் அழகில் தெரிகிறது.இஸ்தான்புல் நகரை நேரில் சென்று பார்த்துவிட ஆசையை தூண்டும் ஒளிப்பதிவு.ரசனைகளில் மூழ்கித் திளைக்கும் மனிதர்கள் உண்மையில் மனிதர்களை விட்டு விலகியே இருக்கிறார்கள். அவர்களின் உலகத்தில் புதியவர்களின் வரவும்,கடந்த காலத்தின் நினைவுகளும் தொந்தரவிற்குரியவை.மஹ்மூத்தின் உலகத்தைப் போல...

7 comments:

karnasakthi said...

/ஆண் மன சலனங்களை இவரைப் போல வேர் வரை ஊடுருவிச் சென்று கதை சொன்னவர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை/ இவரோட ஒரு படம் கூட பாத்த்தில்லையே தப்பாச்சே ://
அழகா சொல்லியிருக்கீங்க ஜி இந்த படமும் குறித்துக்கொள்ளப்பட்டது,,,
மிக்க நன்றி

Unknown said...

நேர்த்தியான கருத்து பிறழா விமர்சன தொகுப்பு !

Unknown said...

நேர்த்தியான கருத்து பிறழா விமர்சன தொகுப்பு !

thainaadu said...

எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. பாராட்டுக்கள்.

மானிடன் said...

படம் பார்த்த பிறகு தான் விமர்சனம் படிக்கும் பழக்கம் உள்ளதால் படம் பார்த்த பிறகு தான் உங்களின் விமர்சனம் படித்தேன் . இயக்குனரின் சினிமா தான் உலக சினிமா என்று சொல்கிறார்கள். இயக்குனரின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட உங்களின் விமர்சனம் அருமை. காட்சிகளின் அழகியலுக்கு அடுத்து என்னை பெரிதும் கவர்ந்த விசயம், படத்தின் பின்னணி இசை ,பின்னணி இசை என்பதை விட பின்னணி சப்தம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். பறவைகளின் சப்தம்,விலங்குகளின் சப்தம் என்று இயல்பாக அந்தந்த இடங்களில் கேட்கும் சப்தங்கள் மட்டுமே நுணுக்கமாக பின்னணி இசையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த இசைக் கருவிகளும் பயன்படுத்தப்படவில்லை.இந்த அமைதி தான் காட்சிகளின் அழகியலை மேலும் அழகாக்குகிறது. நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

தினகரன் வெள்ளி மலர் கட்டுரையை ஸ்கேன் செய்து பிளாக்கில் போடலாமே?

Anonymous said...

ஆகா அருமை நன்றி