Friday, March 1, 2013

The Children Are Watching Us (1944)

சின்னஞ்சிறு சிறுவனின் உலகம் தாயின் போக்கினால் சிதைவுறுவதை சொல்லும் திரைப்படம் The Children Are Watching Us (1944).கதைகளாலும் கற்பனைகளாலும்,கற்று தரும் நல்லொழுக்கங்கள் ஆரம்ப நிலைய தொட்டுத் தொடங்குவதாகவும் இருக்க வேண்டிய அப்பருவம் சிறுவன் பிரிகோவிற்கோ வேறு மாதிரி அமைந்து விடுகின்றது.Bicycle Thieves திரைப்படத்தில் தகப்பனிற்கும் மகனிற்குமான நெருக்கத்தை நெகிழ்ச்சியுடன் முன்னிறுத்திய விட்டோரியோ டி சிகாவின் இக்காவியம் தாயும்/தந்தையும் பிள்ளைக்கு அமைத்து தர வேண்டிய உலகம் குறித்து பேசுகிறது.அவ்வுலகம் ஆடம்பர பொருட்களாலும் பொம்மைகளாலும் அமைய வேண்டிய ஒன்று இல்லை என்பது இங்கு கவனிக்க பட வேண்டியது .....!


ப்ரிகோவின் தாய் நீனா ராபர்டோ உடன் கொண்டிருக்கும் உறவு முதல் காட்சியிலேயே தெரிவிக்கப்படுகின்றது.பூங்காவில்,அவர்கள் இருவரின் உரையாடலை அமைதியாய் பார்கிறான் ப்ரிகோ..அன்றிரவே நீனா ராபர்டோ உடன் சென்று விட,இருளாய் விடிகிறது ப்ரிகோவின் அன்றைய தினம்.காலை தொடங்கி இரவு உறங்க போகும் வரை உடன் இருந்து கவனித்து கொண்ட தாயின் இடத்தை அவன் சித்தியோ,பாட்டியோ ஈடு செய்யவில்லை.மாறாக அவர்கள் இருப்பும் அவர்கள் சார்ந்த உலகமும் அவனிற்கு அச்சம் தருபவை. சித்தியின் அலங்கார உடைகள் தயாராகும் கடையில் அவன் செலவிடும் பொழுதுகள் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை.அங்குள்ள பெண்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள் அவன் உலகிற்கு அப்பாற்பட்டவை..அகவுலகின் குழந்தை நிலை,குழப்பம் அடைய தொடங்கும் இடம் அது.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!

கடும் காய்ச்சலில் அவதிபடும் ப்ரிகோவை குறித்து கேள்விபட்டு நீனா சில தினங்களில் திரும்பி வருகிறாள்.நீனாவை ஏற்க மறுக்கும் ப்ரிகோவின் தந்தை அவளை விடாது,தேம்பி அழுகும் ப்ரிகோவிற்காய் அவளை அனுமதிக்கின்றார்.சின்ன சின்ன நிகழ்வுகளின் இனிமையால் மெல்ல அவர்களின் குடும்பம் பழைய சந்தோஷத்தை அடைகின்றது.இதன் இடையே ராபர்டோ மீண்டும் நீனாவை தேடி வீடு வருகின்றான்.அவர்களுக்கு இடையே நிகழும் வாக்குவாதம் ப்ரிகோவின் முன்னே நிகழ்கின்றது.இம்முறை நீனா அவனை கடுமையாக பேசி வெளியேற செய்கிறாள்.ராபர்டோவின் வருகையையும்,நீனாவோடு அவனுடைய வாக்குவாதத்தையும் ப்ரிகோ அவன் தந்தையிடம் சொல்லுவதில்லை.அத்தகைய சூழ்நிலைகளுக்கு அவனை பழக்கப்படுத்தி கொள்கின்றான்.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!

ப்ரிகோவின் தந்தை குறித்து எந்த எதிர்மறை கருத்துகளும் இல்லை. மனைவி மீதும் மகன் மீதும் பேரன்பு வைத்திருக்கும் சராசரி குடும்ப தலைவனாகவே இருக்கின்றார்.இனி குறை ஒன்றும் இல்லை என அவர்கள் குடும்பத்தோடு கடற்கரை நகரம் ஒன்றிற்கு சுற்றுலா செல்லுகின்றனர்.தாயுடனும் தந்தையுடனும் ப்ரிகோவின் பொழுதுகள் இனிதாய் கழிகின்றது.வேலை நிமித்தம் ப்ரிகோவின் தந்தை அவர்கள் இருவரையும் அங்கு விட்டுவிட்டு கிளம்புகிறார்.மீண்டும் அங்கு வரும் ராபர்டோவை நீனா இம்முறை எதிர்க்கவில்லை மாறாக அவனுடன் நெருக்கம் கொள்கிறாள்.இதை காணும் ப்ரிகோ பைத்திய நிலைக்கு செல்கிறான்.அவ்விடம் விட்டு தந்தையை அடைய அலைந்து திரியும் ப்ரிகோவை போலீசார் மீட்டு தந்தையிடம் கொண்டு சேர்கின்றனர்.நீனா மீண்டும் ராபர்டோவுடன் சென்று விடுகிறாள்...தந்தையிடம் நீனாவை குறித்து இப்பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசிட அக்குழந்தை துணியவில்லை அவரின் பெருங்கருணை உள்ளம் தாங்கி கொள்ளாது என எண்ணி இருக்கலாம்.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!

அதன் பின் நிகழ்வது யாவும் துயரம்...!அவமானம் தாளாத தந்தையின் தற்கொலை,அநாதை விடுதி வாசம் என ப்ரிகோவின் வாழ்க்கை தடம் புரள்கிறது.சிதைக்கபட்ட அவன் அகவுலகை நெஞ்சை உருக்கும் அந்த கடைசி காட்சியின் வழியே உணரலாம்.இத்திரைப்படத்தில் ஒரு காட்சி கூட தேவை அற்றது என ஒதுக்கி விட முடியாது.காட்சிகளில் அத்தனை நுணுக்கம்.நம் பேச்சும்,செயல்பாடுகளும்,பழக்க வழக்கங்களும் எல்லா விதங்களிலும் அவர்களில் பாதிப்பை உண்டாக்குகின்றது.அவர்களை சுற்றி உலவும் மனிதர்களில் இருந்தே அவர்கள் கற்றுகொள்கின்றார்கள்.ப்ரிகோவாக நடித்துள்ள சிறுவனின் நடிப்பு இங்கு சொல்லி ஆக வேண்டியது,ஐந்து வயது சிறுவனிடம் இத்தனை அபாரமான உணர்ச்சி வெளிப்பாடா என்றிருக்கிறது.படம் பார்த்து பல மணிநேரம் ப்ரிகோவின் முகம் நினைவில வருவதை தவிர்க்க இயலாது.அவர்கள் நம்மை கவனிக்கின்றார்கள் என்ற உணர்வு நம்மில் எப்பொழுதும் இருந்தாலே குழந்தைகள் குழந்தைகளாக தொடர்வார்கள்...1944 இல் வெளிவந்துள்ள படம் இது..இன்றைக்குமான நிதர்சனத்தின் பதிவு என்றே சொல்ல வேண்டும்.!

3 comments:

உலக சினிமா ரசிகன் said...

தாயைப்புறக்கணித்து,
தனயன் தனியனாக
நீண்ட ஹாலில் நடந்து செல்லும் இறுதிக்காட்சி கல்வெட்டாய்
என் ஆழ் மனதில் உறைந்து விட்டது.

இப்படத்திற்கு நானும் பதிவெழுதி உள்ளேன்.
படம் பற்றிய நினைவலைகளை எழுப்பி விட்டது தங்கள் பதிவு.
நன்றி.

நிலாமகள் said...

அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள்... நாம் தான் பல நேரங்களில் தவற விடுகிறோம். நல்லதொரு பகிர்வு.

www.eraaedwin.com said...

விஷ்ணுபுரம் சரவணன் அடிக்கடி குறிப்பிடும் வலை உங்களுடையது. இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.

சரவணன் சொல்வதற்கும் கூடவே உணர முடிகிறது.

முழுவதும் வாசித்துவிடுவேன் கூடிய சீக்கிரம்