Thursday, March 4, 2010

அனுரணன் - வங்காள திரைப்படம்

கடந்த வார இறுதி,சில குறும்படங்கள்,சிறப்பான இந்த வங்காள திரைப்படம் என உருப்படியாய் கழிந்தது.லோக் சபா தொலைகாட்சியில் கடைசியாய் பார்த்த" அக்ரகாரத்தில் கழுதை" திரைப்படம் கொஞ்சம் ஏமாற்றம் தந்தாலும் துணிச்சலான முயற்சி என்னும் வகையில் பிடித்திருந்தது.மேலும் அத்திரைப்படம் வெளிவந்த காலத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து நிறையவே கேள்விப்பட்டு அதிக எதிர்பார்ப்போடு பார்த்திருந்தேன்.இந்த திரைப்படத்தையும் வழக்கம் போலவே டைட்டில் கார்டை தவற விட்டு பார்க்க தொடங்கினேன்.ராகுல் போஸ் முகத்தை பார்த்ததும் ஒரு வித ஆசுவாசம்,படம் நிச்சயம் ஏதோ வகையில் நிறைவை தரும் என.அது பொய்க்கவில்லை.கணவன், மனைவிக்கிடையேயான உறவை இவ்வளவு நுட்பமாய் இதற்கு முன் திரையில் பார்த்ததில்லை.மேலும் ஆண்- பெண் நட்புறவு எவ்வளவு புனிதம் காத்தாலும் சமுதாயத்தின் பார்வை மாறாது என்பதையும் அழுத்தமாய் பதிவு செய்கின்றது.ராகுல் - நந்திதா,அமித் - ப்ரீதா என நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு உறவுகளின் மேன்மையை வெகு சிறப்பாய் படைத்துள்ளார் இயக்குனர்.லண்டனில் வசிக்கும் ராகுல்(ராகுல் போஸ்),நந்திதா (ரிதுபர்னா )தம்பதியினர் குறித்த ஆரம்ப காட்சிகள்,அங்கே அவர்களுக்கு அறிமுகமாகும் அமீத் (ராஜத் கபூர்),கொஞ்சம் லண்டன் நகரம் என முதல் பாதி அழுத்தம் குறைவாய் தொடங்கினாலும்...வசனத்தின் வழியே இயக்குனர் நிறையவே சொல்லி செல்கின்றார்.அலுவலக தோழியோடு ராகுல் தனது சொந்த நகரமான கொல்கத்தா குறித்து சிலாகிக்கும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு.உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் குறித்தான ஏக்கமும்,பிரியமும் மாறாது என்பதை விளக்கும் காட்சி அது.

வேலை மாற்றல் வாங்கி கொல்கத்தா திரும்புகின்றனர் ராகுல் தம்பதியினர்..இனி வரும் காட்சிகள் ஒவ்வொன்றுமே கவித்துவமானவை!!தனது தாயின் கடிதத்தை ராகுல் நந்திதாவோடு சேர்ந்து வாசிக்கும் காட்சி கடிதங்களின் காலம் முடிந்து போக வேண்டிய ஒன்றில்லை என தோன்ற செய்தது.குழந்தையின்மை குறித்த இருவரின் வருத்தங்களும் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ச்சியாய் மழலையர் பள்ளியில் ஆசிரியையாய் சேரும் நந்திதா குழந்தைகளின் உற்சாகத்தில் புதிய உலகை காண்கிறாள்.நந்திதாவாக நடித்துள்ள ரிதுபர்னா எந்த இடத்திலும் அதீத உணர்ச்சியை காட்டாமல் வெகு எதார்த்தமாய் நடித்துள்ளார்.

ராகுல் தம்பதியினருக்கு அமீதின் மனைவி ப்ரீத்த அறிமுகமாவது ஒரு பார்ட்டியில். ராகுலிற்கும் ப்ரீதாவிற்குமான ஒத்த சிந்தனை அலைவரிசை அவர்களை நண்பர்களாக்குகின்றது.இயற்கை குறித்தும்,இலக்கியம் குறித்துமான இவர்களின் உரையாடல்கள் முக்கியமானவை.ப்ரீதா கதாபாத்திரத்தில் மெல்லிய புன்னகையோடு,அளவான உணர்ச்சி வெளிபாட்டோடு வெகு சிறப்பாய் நடித்துள்ளார் ரெய்மா சென்.எப்பொதும் பறவையின் சிறகை வேண்டும் ப்ரீதாவிற்கும்,பணத்தின் மீதே ஆவல் கொண்டிருக்கும் அமீதிற்குமான தோய்ந்த மணவாழ்க்கை
வெகு சில காட்சிகள் கொண்டு விளக்கபடுகின்றது.இத்திரைப்படத்தின் மற்றொரு கதாபாத்திரம் கஞ்சன்ஜங்கா மலைதொடர்ச்சி.பணி நிமித்தமாய் கொல்கத்தாவில் இருந்து அங்கு செல்லும் ராகுல்,அம்மலை தொடர்ச்சியின் அழகில் மூழ்கி புத்த பித்து சிறுவன் ஒருவனோடு,அம்மலையின் அமைதியை ரசிக்கும் காட்சி இயற்கையின் பிரம்மாண்டங்கள் மீதான ஆச்சர்யத்தை அதிகரிக்க செய்வது.நிலவொளியில் கஞ்சன்ஜங்கா மலையின் பேரழகை ராகுல் காண்பது மற்றொரு உன்னத காட்சி.ராகுலை காண கஞ்சன்ஜங்கா செல்லும் ப்ரீத்தாவின் பார்வையில் இந்த காட்சிகள் யாவும் மீண்டும் விரிகின்றன..அந்த இரவு அவர்கள் இயற்கையின் பேரழகை ரசிக்கும் மௌனத்திலேயே கழிகின்றது.ராகுலின் எதிர்பாரா மரணம்,சொந்தங்களால் துரத்தி அடிக்கபடும் ப்ரீதா,ராகுல்-ப்ரீத்தாவின் உறவு குறித்த குழப்ப மனநிலையில் நந்திதா என அதற்கு பின்னான காட்சிகள் அதிர்ச்சி தருபவை.நந்திதா,ராகுல் மேல் கொண்டிருந்த தீரா காதலும்,முழுமையான புரிதலும் மட்டுமே ப்ரீதாவை மீட்டெடுக்கின்றது.

இயக்குனர் அனிருத்தாவிற்கு முதல் படமான இது 2008 ஆம் ஆண்டு தேசிய விருதை பெற்றுள்ளது.முதிர்ச்சியான காட்சியமைப்பு..சிறப்பான நடிகர்கள் தேர்வு..முக்கியமாய் ராகுல் மற்றும் ரெய்மாவின் அலட்டி கொள்ளாத நடிப்பு,கூர்மையான வசனங்கள்,எழில் கொஞ்சும் கஞ்சன்ஜங்கா என சொல்லி கொண்டே போகலாம் ரசித்தவற்றை.சுலபத்தில் இக்கதை மாந்தர்கள் மனதை விட்டு அகல மாட்டார்கள்.மனித உறவுகள் அழகானவை,தொடர்ந்து இயங்க அதன் அற்புத கணங்கள் எப்போதும் நம்முள்ளே இருப்பது அவசியம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றது இத்திரைப்படம்.

11 comments:

Joe said...

பரிந்துரைக்கு நன்றி!

பிச்சைப்பாத்திரம் said...

நல்ல பதிவு லேகா.

Unknown said...

வாசித்தேன் நேசித்தேன்
தேவராஜ் விட்டலன்
அஸ்ஸாம்

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள் லேகா.

இந்தியாவிலயே அருமையான படைப்புக்கள் உள்ளன போல. நான் தான் இன்னும் அறியாமையிளியே இருக்கிறேன்

மாதவராஜ் said...

நல்ல பதிவு. உறவுகளை எந்தச் சிக்கலுமில்லாமல் மிக இயல்பாக குறிப்பிட்டிருப்பதும், கஞ்சன் ஜங்கா குறித்த விவ்ரனைகளும் சிறப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

லேகா said...

நன்றி ஜோ

நன்றி சுரேஷ் -

படத்தின் பெயரையே படம் பார்த்த பிறகு தான் தேடி தெரிந்து கொண்டேன்.
உங்களின் buzz தகவல் உதவியது.

லேகா said...

நன்றி தேவராஜ்

நன்றி ராம்ஜி

நன்றி மாதவராஜ்

KARTHIK said...

நல்ல விமர்சனங்க :-))

லேகா said...

Tnx Karthick

Madumitha said...

DVD யில் கிடைக்குமா?

லேகா said...

Madumitha,

I dont have any idea!!Need to chk..sure it shd be available wit subtitle since its a national award winning movie!!

I am in search of yet another Bengali movie..will let u know if this one is available in DVD.