Thursday, July 30, 2009

பஷீரின் "உலக புகழ் பெற்ற மூக்கு" - சிறுகதை தொகுப்பு

பஷீர்,மலையாள இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர்.பஷீரின் கதை நாயக நாயகிகள் பேரழகும்,பெருஞ்செல்வமும் கொண்டு சாகசங்கள் புரிபவர்கள் அல்ல.உங்களையும் என்னையும் போல கோபமும்,நகைச்சுவை உணவும் கொண்ட சாதாரண மனிதர்கள்.பஷீரின் நாவல்கள் மட்டுமே இதற்கு முன்பு படித்திருக்கின்றேன்.இவரின் "பாத்திமாவின் ஆடு","பால்ய கால சகி" குறுநாவல்கள் குறித்து ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.சில எழுத்தாளர்களால் மட்டுமே மோசமான ஏழ்மையை கூட துன்பம் கூட்டாமல் வர்ணிக்க முடியும்.வண்ணதாசன் கதைகளை தொடர்ந்து வாசிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு எளிதாய் புரியும்.பஷீரின் எழுத்துக்கும் அந்த வலிமை உண்டு.மிகுந்த நகைச்சுவை கொண்டு சொல்லப்பட்டுள்ளன இத்தொகுப்பின் கதைகள்.

"ஐசு குட்டி", வாய் விட்டு சிரிக்க வைக்கும சிறுகதை. பஷீர், பெண்களின் மனவோட்டத்தை,பெருமை பீற்றும் பேச்சுக்களை வர்ணிப்பதில் தேர்ந்தவர்.இவரின் "பாத்திமாவின் ஆடு" நாவல் அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.பிரசவ வேதனையிலும் ஐசுக்குட்டி நாட்டு மருத்துவச்சி வேண்டாமென பிடிவாதம் பிடித்து கார் பிடித்து பட்டணத்தில் இருந்து மருத்துவரை கொண்டு வர நடத்தும் நாடகமே இக்கதை.அவள் நடத்தும் அத்தனை நாடகமும் பின்நாட்களில் பெருமை பீற்றவே...பெண்களுக்குள்ள பொதுவான குணத்தை நகைச்சுவை மிகுந்து கதையாக புனைந்துள்ளார் பஷீர்."பூவன் பழம்",கணவன் மனைவிக்கு இடையே இருக்க வேண்டிய அன்னோனியத்தை அழகாய் சொல்லும் கதை. சில கருத்து பேதம் இருப்பினும் இக்கதை ரசிக்க கூடியதாகவே தோன்றியது.




"எட்டு கால் மம்மூது",மம்மூது போன்றவர்கள் கிராமங்களில் அதிகம் தென்படுவர்.கொடுக்கும் கூலியை வாங்கி கொண்டு சொன்ன வேலையை செய்து கொண்டு பார்க்க அரைகிறுக்கன் போல இருக்கும் மம்மூது ஊரில் நடக்கும் சுவாரஸ்யம் மிகுந்த செய்திகளை தருவதில் முதலாமவன்.கிராமத்து டீ கடை வெட்டி அரட்டைகளில் பேச்சு பொருளாய் மம்மூதே இடம்பெற தொடங்கும் பொழுது நிகழும் ஆச்சர்யங்களும்,அதிர்ச்சிகளுமே மீதி கதை."பகவத் கீதையும் சில முலைகளும்", இக்கதையில் தனது சக எழுத்தாளர் நண்பர்கள் குறித்தும்,புத்தக பதிப்பாளர் நண்பர் ஒருவர் குறித்த தனது நினைவுகளை காட்சிகளாய் பகிர்ந்துள்ளார்.

"சிரிக்கும் மரப்பாச்சி",இத்தொகுப்பில் எனக்கு மிக பிடித்த கதை.அழகான காதல் கதை.ஏழை காதலி,பணக்கார காதலன் என திரைபடங்களில் சுழற்றி அடிக்கப்படும் சராசரி காதல் கதை தான்..இருப்பினும் பஷீரின் வார்த்தைகளில் படிக்கும் பொழுது ஏற்படும் நிறைவு அலாதியானது."தங்கம்",முதல் பத்தியில் சொன்னது இக்கதைக்கு பொருந்தும்.துன்பத்தில் உழலும் பிச்சைகாரனான கூனன் நாயகன்,குறைபாடுகள் நிறைந்த தனது மனைவி தங்கத்தை சந்தித்த நாள் தொடங்கி,அவளை கைபிடித்து வரை தனது கதையை,தனது குறைகளை சோகம் கூட்டாமல் எதார்த்தமாய் சொல்லுவதாய் உள்ளது இக்கதை.

இவை தவிர்த்து "அம்மா",'மூடர்களின் சொர்க்கம்","பர்ர்ர்...","புனித ரோமம்" ஆகிய கதைகளும் ரசிக்கும் ரகம்.இத்தொகுப்பை குறித்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இரண்டு.முதலில்,குளைச்சல். யூசுபின் மொழிபெயர்ப்பு,இடறல் ஏதும் இல்லாத நேர்த்தியான மொழிபெயர்ப்பு.இரண்டாவது ஒவ்வொரு கதைக்கும் வரையபட்டுள்ள கார்டூன் சித்திரங்கள்.பஷீரின் முகம் கார்டூனுக்கு ஏற்றது..கதைகளுக்கேற்றபடி வெகு அழகாய் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.எதார்த்தம்,பகடி,போலித்தனம் கலைந்த மனித முகங்கள்...இவையே பஷீரின் கதைகளில் பிரதானம்.இந்த தொகுப்பின் கதைகளும் அது போலவே!!

வெளியீடு - காலச்சுவடு
விலை - 240 ரூபாய்

16 comments:

குப்பன்.யாஹூ said...

பதிவு இட இடைவெளி அதிகமாக இருந்தாலும் தரமான பதிவுடன் வந்து உள்ளீர்கள். சங்கர், கமல்ஹாஸ, மணிரத்தினம் போன்று எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தரம் உயர்ந்து கொண்டே செல்கிறது உங்கள் பதிவுகளில்.

நானும் எல்லா வார்ர்த்தையும் சொல்லி பாராட்டி அலுத்து விட்டது.

என்ன சொல்ல, எப்போதும் போல பதிவு மிக அருமை, பயனுள்ள பதிவு.

பஷீர் பற்றி சொல்லவா வேண்டும். நடிப்பில் சிவாஜி, மமூட்டி எப்படியோ அப்படி எழுத்தில் பஷீர்.

லேகா said...

நன்றி ராம்ஜி :-)

Unknown said...

நானும் பஷீரின் தீவிர விசிறி லேகா...'ஜென்மதினம், நீல வெளிச்சம் (பார்கவி நிலையம்)' இந்த இரண்டு சிறுகதைகளையும் கூட விரும்பிப் படித்தேன்.

மொழிபெயர்ப்பே இப்படி இருக்கிறது எனில் மூல மொழியில் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த வகையில் கொடுத்து வைத்தவர்கள் மலையாளிகள்...

நல்ல பதிவு லேகா தொடருங்கள்.

*******************
"பாத்திமாவின் ஆடு","பால்ய கால சகி" - இந்த புத்தகங்கள் இப்பொழுது சந்தையில் கிடைக்கிறதா என்ன...ஜெய மோகனுடைய இந்த கட்டுரையைப் படியுங்கள்...
http://jeyamohan.in/?p=191

...பஷீரை மொழிபெயர்ப்பது பெரிய சவால். கெ. விஜயம் மொழிபெயர்ப்பில் குறிப்பிடும்படியான வெற்றி பெறவில்லை... என்று கூறி இருக்கிறார்.
********************

லேகா said...

//மொழிபெயர்ப்பே இப்படி இருக்கிறது எனில் மூல மொழியில் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த வகையில் கொடுத்து வைத்தவர்கள் மலையாளிகள்...//

உண்மை தான் பிரபு!!

என்னிடம் உள்ள தொகுப்பு "பாத்திமாவின் ஆடு" மற்றும் "பால்ய கால சகி" இரு நாவல்களும் கொண்டது.80 களில் அப்பா வாங்கியது..தற்சமயம் எங்கு கிடைக்கும் என்ன தெரியவில்லை.

வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.

ilavanji said...

ஒவ்வொரு புத்தகவாசிப்பு முடிவிலும் கிடைக்கும் சிலவரிகள் நம் வாழ்வின் பல சிக்கலான கேள்விகளுக்கு மிகஎளிதான பதில்களை அளிப்பதுண்டு.

இப்புத்தகத்தில் எனக்கு கிடைத்தது...

“கடவுள் இருக்கிறாரா இல்லையா? தேவைப்படுபவர்களுக்கு இருக்கிறார்!”

தரவுகள் இல்லை. அறிவியல் நிறுவுகள் இல்லை. வாதங்கள் இல்லை. உணர்ச்சிகளின் பிழியல் இல்லை. ஜஸ்ட் லைக்தட் போகிறபோக்கில் சிரித்துக்கொண்டே பஷீர் என் பொடனியில் ஒன்று போட்டதுபோல இருந்தது எனக்கு. எத்தனை எளிய வரிகள்! உள்ளுக்குள் எத்தனையெத்தனை அர்த்தங்கள்! பலமணிநேரம் திகைத்துப்போய் உட்கார்ந்தது இன்னும் நினைவிருக்கிறது. வாழ்வானுபவங்களால் பழுத்த, சகஜீவிகளின் மேல் எந்தவித எதிர்பார்ப்புகளுமற்ற நேசமும் அக்கறையும் கொண்ட பெருசுகளால் மட்டுமே இத்தகைய வரிகளைச் சொல்ல இயலும்போல! பஷீர் அந்தவகையில் அடிபொலி சேட்டன் தான்! :)

நீங்கள் குறைவின்றி படித்து எங்களுக்கும் நிறைய அறிமுகப்படுத்த வாழ்த்துகள் :)

அ.மு.செய்யது said...

//சில எழுத்தாளர்களால் மட்டுமே மோசமான ஏழ்மையை கூட துன்பம் கூட்டாமல் வர்ணிக்க முடியும்//

கி.ரா வின் கதைகளும் அப்படித்தான்.

ஏழ்மையும்,சோகமும் வரிந்து கட்டி கொண்டு நின்றாலும்,எதைப்பற்றியும் புலம்பாதவர்கள் கி.ராவின் கதை மாந்தர்கள்.

வைக்கம் முகமது பஷீரின் நாவலான "மதிலுகள்" திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் இருக்கிறது.

Krishnan said...

"எதார்த்தம்,பகடி,போலித்தனம் கலைந்த மனித முகங்கள்...இவையே பஷீரின் கதைகளில் பிரதானம்.இந்த தொகுப்பின் கதைகளும் அது போலவே!!" படிக்க தூண்டும் வரிகள்....நன்றிகள் பல லேகா.

லேகா said...

//வாழ்வானுபவங்களால் பழுத்த, சகஜீவிகளின் மேல் எந்தவித எதிர்பார்ப்புகளுமற்ற நேசமும் அக்கறையும் கொண்ட பெருசுகளால் மட்டுமே இத்தகைய வரிகளைச் சொல்ல இயலும்போல! பஷீர் அந்தவகையில் அடிபொலி சேட்டன் தான்! :)//


இளவஞ்சி ,ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க!!

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

லேகா said...

செய்யது,

வருகைக்கு நன்றி.கி.ரா வின் "கொத்தை பருத்தி" சிறுகதை தொகுப்பு நேற்று பின்னிரவில் படித்து கொண்டிருந்தேன்...எங்கள் கிராமத்தின் நினைவுகளில் மூழ்கி போக செய்தன அக்கதைகள்.

பஷீரின் "மதிலுகள்" திரைப்படம் குறித்து கேள்விபட்டுள்ளேன்..இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி.

லேகா said...

நன்றி கிருஷ்ணன்

ஜீவி said...

ஆர்ப்பாட்டமில்லாத, எளிமையான எழுத்துக்களுக்குச் சொந்தமானவர்
பஷீர்.. மொழிபெயர்ப்புக்கு வாகானது அவரது எண்ண ஓட்டமும், எழுத்துக் கோர்வைகளும்..
நல்லதொரு பரிமாற்றத்திற்குப் பாராட்டுகள்.

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி ஜீவி :-)

Jayaprakashvel said...

we are running a short circulatory magazine among sceince students of madras university in the name neythal. we are about to bring the fourth issue. though we are infrequent it goes tieredless.

by the way i am writing this to ask your permission to publish the above review in our magazine.

I too had the gift of reading this book.By other means ur posts are very good. keep writing.

write ur decision ot jayaprakashvel@rediffmail.com

லேகா said...

ஜெய பிரகாஷ்வேல்

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

நெய்தல் குறித்து கேள்விபட்டுள்ளேன்...இக்கட்டுரையை தாராளமாய் உங்கள் பத்திரிக்கையில் வெளியிடுங்கள்.:-)

உங்கள் மின்னஞ்சலுக்கு தனி மடல் அனுப்புகின்றேன்..நன்றி.

முஹம்மது ,ஹாரிஸ் said...

எனக்கும் பசிருடைய எழுத்தை படித்தவுடன் நிறைய எழுத வேண்டும் என்று மனம் கனத்து நிற்கிறது.
ஆனால் உரைநடையில் நான் ரொம்ப வீக். உங்களுடைய எழுத்தை பார்க்கும்போது ரொம்ப பொறாமையாக இருக்கிறது. பால்ய கால சகியில் மஜீது சொல்லுவா என்னக்கு மா மரத்தில் ஏறதெரியும்மே . அதே மாறி எனக்கு கவிதை எழுத தெரியும்மேனு எனக்குள் சொல்லிகொண்டேன்.

சைக்கிள்காரன் said...

எங்கள் ஊர் அரசு நூலகத்தில் இப்புத்தகம் வாசிக்க கிடைத்தது, பஷீர் ஐயாவின் எழுத்துகள் மிகுந்த ஹாஷ்யம் நிறைந்ததாக இருக்கும், ஆனால் ஜென்மதினத்தில் அவர் விவரித்திருந்த பசியின் கொடுமையை சில நாட்கள் நானும் அனுபவித்திருக்கிறேன், அவரும் தகழியும் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பால், மூன்று மாதகாலம் கேரளத்திற்கு பணி மாற்றம் கேட்டு வாங்கி மலையாளம் கற்க முயற்சியும் செய்தேன், நல்ல பதிவு.