Wednesday, May 13, 2009

தோப்பில் முகமது மீரானின் "ஒரு கடலோர கிராமத்தின் கதை"



மிகச்சமீபத்தில் நான் படித்து மகிழ்ந்த நாவல் தோப்பில் முகமது மிரான் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை.தலைப்பை கொண்டு கடல் சார்ந்த மீனவர்களின் கதையாக இருக்கக்கூடும் என எண்ணியே நாவலை வாசிக்க தொடங்கினேன்.அதற்கு முற்றிலும் மாறாக கதை பயணிக்க தொடங்கியது.கடலோர கிராமத்தின் கதை வாழ்ந்து மறைந்த ஒரு தலைமுறையின் சரித்திரம்..

ஓர் இஸ்லாமிய கிராமத்தின் ஓர் தலைமுறை நிகழ்வை நம் கண் முன்னே காட்சிகளாய் பதிவு செய்துள்ளார் முகமது மிரான்.தேவையற்ற காட்சிகளையும் உரையாடல்களையும் புகுத்தாமல் கதை தன் போக்கில் செல்கிறது.. காதல்,கோபம்,வன்மம்,பொறாமை,பழிவாங்கல்,அறியாமை என யாவும் மிகை இல்லாமல் கூறப்படுகின்றது.நாவலில் முக்கியமாக குறிப்பிட படவேண்டிய ஒன்று கதை மாந்தர்கள் பேசும் வட்டார தமிழ் மற்றும் உருது கலந்த உரையாடல்கள்.பிற சமய வாசிபாளர்களுக்கு அது ஒரு முற்றிலும் புதிய,இனிய அனுபவம்.

சுதந்திரத்திற்கு முன் நிகழும் இக்கதை,மேல் ஜாதி கீழ் ஜாதி வேற்றுமைகள் எல்லா மதத்திலும் உள்ளதே என்பதை தீவிரமாய் உணர்த்துகிறது.மேலும் உயர் ஜாதி வீட்டோர் தம் சுயநலத்திற்காக ஏழைகள் மீது காட்டும் வன்மம்,அக்காலத்தில் அவங்களுக்கு இருந்த மதிப்பு,அதிகாரம்...எல்லா விதத்திலும் துன்ப பட்ட பிறகும் அவர்களுக்குள் இருக்கும் தீராத ஆணவம் என யாவற்றையும் கிராமிய சூழலுடன் ஆசிரியர் விவரித்துள்ள விதம் நேர்த்தி.நாவலில் பெரும் பகுதி மசூதியில் நிகழ்வதாய் உள்ளது.தொழுகை அம்மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றென உள்ளது.அங்கும் கீழ் ஜாதியினர் தனி இடத்தில் அமர விதிக்கப்பட்டுள்ளனர்.அஹமது என்னும் பாத்திரத்தின் வழியாக இத்தகைய வேற்றுமைகளை கடுமையாய் சாடியுள்ளார் ஆசிரியர்.

நாவலின் பிற்பகுதியில் அக்கிராமத்தில் ஆங்கில அரசு பள்ளிகூடம் தொடங்க அதை கிராமமே எதிர்ப்பதும் எல்லா வழியிலும் பள்ளியை நடத்தும் ஆசிரியருக்கு இடையூறு விளைவிப்பதும் அக்காலத்தில் நடக்க கூடிய நிதர்சனமே.. கதையில் நாயகன்,நாயகி என்று யாரும் இல்லை...கடலோர கிராமத்தின் மாந்தர்கள் யாவரும் கதை நாயகர்களே.மொத்தத்தில் இந்நாவல் முற்றிலும் ஒரு புதிய வாசிப்பு அனுபவம்

15 comments:

seik mohamed said...

ப‌டிக்கத் தூண்டும் விம‌ர்ச‌ன‌ம்.
வாழ்த்துக்க‌ள்

குப்பன்.யாஹூ said...

என்னடா பதிவு வெளி வர இடைவெளி என்று பார்த்தேன். நல்ல சுவையான பதிவுடன் வந்து உள்ளீர்கள்.

இந்த நாவல் தானா மமூட்டி சித்ரா நடித்த திரைப்படமாக வந்தது, அசுரம் அல்லது மாசரம் என்ற பெயரில், மறந்து விட்டேன்.


குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி பார்சா குமார்.

லேகா said...

நன்றி ராம்ஜி.

இந்நாவல் திரைப்படமாய் வந்ததா? எனக்கு தெரியவில்லை.தகவலுக்கு நன்றி.
மலையாள சினிமா எப்பொழுதும் இலக்கிய தரத்தோடு இருப்பதற்கு காரணம் சிறந்த நாவல்களை திரை காவியங்களாய் உருவாக்க உற்சாகமும்,உழைப்பும் உள்ள நபர்கள் அங்கே அதிகம்..

இருமேனிமுபாரக் said...

என்னை மிகவும் பாதித்த ஒரு எழுத்தாளர் என்றால் அது தோப்பில் முகமது மீரானாக இருக்கும். அவரின் கற்பனையோ நிஜமோ எனக்குத் தெரியாது. ஆனால் உண்மையில் அவரின் கதா மாந்தர்களுடன் நானும் வாழ்ந்திருக்கின்றேன்.சில கதைகளைப் படித்த பின் பல இரவுகளை தூங்காமல் கழித்திருக்கின்றேன். அவருக்கடுத்து என்னைப் பாதித்தது எஸ்.ராமகிருஷ்ணன்.

லேகா said...

மிக்க நன்றி முபாரக்.

முகமது மீரானின் கதைகளில் பிடித்தது அதன் எளிமை.வாசகனை வசியம் செய்ய எந்த பிரயத்தனமும் பண்ணாமல் கதை போக்கில் நம்மை வசீகரித்து கொள்ளும் மந்திரம் கொண்டவை இவரின் எழுத்துக்கள்.

முகமது மீரானின் முக்கியமான நாவல் "சாய்வு நாற்காலி".

Anonymous said...

This novel is important for me in the way it depicts the disintegration of a wealthy family (gentry) due to holding on to archaic values.
As you have mentioned it also brings out the class/caste distinction in other religions also.
'Sayvu Narkali' was made as a serial in DD 3-4 years ago.
This novel is surreal in the way the story is narrated and the manner in which past and present intermingle. Quite different from the realism of Meeran's other works.
Ajay

butterfly Surya said...

நல்ல பகிர்விற்கு நன்றி.

மலையாள சினிமா எப்பொழுதும் இலக்கிய தரத்தோடு இருப்பதற்கு காரணம் சிறந்த நாவல்களை திரை காவியங்களாய் உருவாக்க உற்சாகமும்,உழைப்பும் உள்ள நபர்கள் அங்கே அதிகம்..////

மிகச்சரி லேகா.

ஆனால் இங்கு படம் எடுக்க கதையே தேவையில்லையே.. சதையே போதும்... அதை நம்பிதானே இருக்கிறார்கள்..

லேகா said...

Ajay,

I hope u have read almost all the best novels in Tamil.

Am very much interested to read ur comments..

Thanks for sharing!!

லேகா said...

வண்ணத்து பூச்சியார்,

ரொம்ப ரொம்ப சரி :-)))

சிதம்பரம் said...

இவரது அஞ்சுவண்ணம் தெரு படித்துவீட்டிர்களா?

http://udumalai.com/prd_details.php?prd_id=3997

லேகா said...

படித்ததில்லை சிதம்பரம்.அது நாவல,சிறுகதையா?
அறிமுகத்திற்கு நன்றி.

சிதம்பரம் said...

அது நாவல் லேகா.

Ashok D said...

தட்டுதடுமாறி ஒரு நல்ல ப்ளாக்குள் வந்துவிட்டேன்..

முஹம்மது ,ஹாரிஸ் said...

//தமிழ் மற்றும் உருது கலந்த உரையாடல்கள்//

அவை உருது அல்ல. அரபி சொற்கள். கடலோர முஸ்லிம்களுக்கும் பாரசிக கலாச்சாரத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.