Monday, May 4, 2009

யுவன் சந்திரசேகரின் "ஏற்கனவே" - சிறுகதை தொகுப்பு

யுவனின் முந்தைய படைப்புகளான 'குள்ள சித்தன் சரித்திரம்' மற்றும் 'ஒளி விலகல்' ஏற்படுத்திய ஆவல் இந்த சிறுகதை தொகுப்பை படிக்க தூண்டியது.எனினும் இத்தொகுப்பு முன்னவற்றை போல முழுக்க முழுக்க மாய உலகத்தில் பயணிக்காது எல்லா வகை கதைகளின் கலவையே.

"மீகாமரே மீகாமரே" சிறுகதை சிந்துபாத் பயண கதைகளில் வருவது போன்றதொரு புனைவு.ஆள் இல்லாத நடுத்தீவோன்றில் தனியே மாட்டிக்கொள்ளும் மீனவனிற்கு துணையாய் வந்து சேர்கிறாள் கடல் மோகினி,பெண்ணுடல் பாதியும் மீனுடல் பாதியுமாய் இருக்கும் அவளோடு கழித்த நாட்களை பிறிதொரு நாளில் நினைத்து பார்க்கிறான்.கடலும்,காற்றும் தவிர்த்து இருவரும் பொதுவாய் அறிந்திருந்த விஷயங்கள் ஏதும் இல்லாததினால் ஒவ்வொரு பொழுதும் புதிதாய் அதிசயங்கள் பல கூட காதலோடு கழிகின்றது."மூன்று ஜாமங்களின் கதை" - பெரும்பாலான கதைகளில் யுவன் தன் தந்தையை பற்றி குறிப்பிடுவது உண்டு.சில உறவுகளோடான பிரிய தருணங்கள் மறக்க இயலாதவை.இக்கதை தம் தந்தை குறித்த மூவரின் பகிர்தல்.

கதை சொல்லுவதில் தேர்ந்த நபர்கள் குடும்பத்தில் ஒருவரேனும் இருப்பர்.எங்கள் குடும்பத்தில் அப்படி யாரும் இல்லாததால் என்னவோ குழந்தைகளுக்கு கதை சொல்ல மிகுந்த விருப்பம் உண்டு எனக்கு.ஒரு வேடுவன் கதையை எங்கோ தொடங்கி,விசித்திர முடிச்சுக்கள் போட்டு,ஆவல் கூட்டி எங்கோ கதையை செலுத்தி சிறுவர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த தன் சித்தப்பாவை குறித்த யுவனின் பகிர்தல் "காற்புள்ளி"."தெரிந்தவர்" -எங்கோ பார்த்த முகமாய் யாரேனும் எதிர்பட்டால் அந்நாள் முழுதும் அது பற்றி சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்,அது போன்றதொரு அனுபவத்தை பகிரும் கதை.

வண்ணதாசனின் "கடைசியாய் தெரிந்தவர்கள்" சிறுகதையை ஞாபகம்படுத்திய கதை 'வருகை'. எதிர்பாராது எதிர்படும் சிலரின் முகங்கள் தொலைந்து போன நட்பையோ,காதலையோ நினைவுபடுத்துவது இயல்பு.மருத்துவமனைஒன்றில் நாயகன் சந்திக்கும் நோயாளி அவனை தனது பள்ளி நண்பன் என நினைத்து ,ஏதோ ஒரு பெண்ணை குறித்து ஆவலாய் விசாரிப்பது தெரிந்து அவனை ஏமாற்றம் கொள்ள செய்யாது ஏதோ ஒரு பதிலை சொல்லி முகமற்ற அந்த நண்பனாய் இடத்தை சில நிமிடங்கள் நடித்து விடைபெறுவதாய் வரும் அக்கதை."ஏற்கனவே" - அசல் யுவன் பாணி சிறுகதை.தொடரும் நிகழ்ச்சிகள் யாவும் ஏற்கனவே நடந்துவிட்டதாய் பிரேமை கொள்ளும் நாயகன் அது குறித்து அறிய எடுக்கும் முயற்சியும் அதன் விபரீத முடிவுமே இக்கதை.

வெளியீடு - உயிர்மை
விலை - 100 ரூபாய்

15 comments:

Krishnan said...

அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி லேகா. கிராவின் கோபல்ல கிராமம் காலச்சுவடு கிளாச்சிக் பதிப்புற்கு யுவன் சந்திரசேகர் அவர்கள் எழுதியுள்ள முன்னுரையை சில தினங்கள் முன்தான் படித்து ரசித்தேன்.

கே.என்.சிவராமன் said...

லேகா,

அறிந்து செய்தீர்களா, அல்லது இயல்பாக வந்ததா என தெரியவில்லை :-)

'சாதாரணமாக' சென்றமாதம் 'உயிர்மெய்' இதழில் யுவன், ஒரு கட்டுரையை எழுதப்போக, அதன் காரணமாக சாரு தொடை தட்டி கிளம்ப, இந்த மாதம் 'டைனோசர்' வெடித்திருக்கிறது.

அதுதான் 'டைனோசர்' இனமே அழிந்துவிட்டதே, என்றெல்லாம் புத்திசாலித்தனமாக கேட்கக் கூடாது :-)

இந்தநேரத்தில் யுவனின் சிறுகதை தொகுப்பை குறித்த உங்கள் பார்வையை முன்வைத்திருக்கிறீர்கள். இதில் உள்குத்து எதுவுமில்லை என நம்புகிறேன்:-)

அதிகமும் கவனிக்கப்படாமல் இருக்கும் யுவன் சந்திரசேகரை அதிகமும் கவனப்படுத்துகிறீர்கள், என்னைப் போலவே :-(

முன்பே வாசித்துவிட்ட தொகுப்பு. உங்கள் பதிவின் வழியே மீள்வாசிப்பு செய்ய முடிந்தது.

இந்த புத்தகச் சந்தையில் அவரது 'மணற்கேணி' தொகுப்பு 'உயிர்மெய்' வெளியீடாக வந்திருக்கிறது. சின்னச் சிறு கதைகளின் தொகுப்பு. சேர்ந்தாற்போல வாசித்தால் ஒரு புதினமாகவும் விரியும்.

யுவனின் படைப்புகளில் சேர்ந்தாற்போல கிருஷ்ணன் வருவான். போலவே பத்மினியும். எனவே அவரது ஒட்டுமொத்த படைப்புகளுமே ஒரே பிரதியின் பல்வேறு பக்கங்களாக கொள்ளலாம்.

இதில் கிருஷ்ணனாக வாழ்வது யுவன்தான் என்றும், பத்மினியாக வருவது அவரது மனைவியே என்பதும் 7 மலைகளைத்தாண்டி வசிக்கும் கிளியின் ஜோதிடம்.

இறுதியாக ஒன்று. பதிவு எழுத நீண்ண்ண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

லேகா said...

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி கிருஷ்ணன்.

லேகா said...

பைத்தியக்காரன்,

இப்பதிவை எழுத தொடங்கும் பொழுதே இது குறித்து நினைத்தேன்.யுவன் X சாரு கட்டுரை போர் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்பதிவை எழுதுவதற்கு எந்த காரணமும் இல்லை.

ஒவ்வொரு முறை மதுரைக்கு சென்று திரும்பும் பொழுதும் கைக்கு கிடைக்கும் புத்தகங்களை எடுத்து வருவேன் இம்முறை எடுத்து வந்தது யுவனின் "ஏற்கனவே" மற்றும் "அழகிய பெரியவனின் "தகப்பன் கொடி" (அடுத்த கட்டுரை இது குறித்தே).

யுவனின் மணற்கேணி குறித்த அறிமுகத்திற்கு நன்றி.

அலுவல் காரணமாய் அதிகமாய் எழுத முடிவதில்லை இப்பொழுதெல்லாம்.ம்ம்ம்...

Anonymous said...

Hi,
This is somewhat unrelated to your post (not totally!!!). The conversations on Charu Vs Yuvan have made me post this.
The conversations got me been thinking about a portion in the novel 'Savage Detectives' by "Roberto Bolano" where Bolano has a duel with a critic whom he thinks (!!!, just imagine, he just thinks that a critic will give a bad review of his book!!!) will give a damaging review of his novel. Based on this hypothetical assumption, he has a duel(knife fight) with the critic. Though this seems far fetched at first (even Quixotic as in tilting at a windmill), once can feel the underlying tension in the relation between a critic and the author. After all, who wants to be criticized and no criticism can ever be totally objective.

I think the above point can be used to understand Charu's (for that matter any other writer) mindset when he is being questioned (leave alone critised). It's not like yuvan has critised him, more like he has mentioned him in an essay and that has got Charu all fired up.


BTW, I have read 3/4 posts by charu earlier (2-3 years ago) where he has bad mouthed Yuvan. (the same point about yuvan not having netconnection etc)
Well that cannot be treated as personal attacks since Charu is Charu and is above all petty things!!!
If one reads in detail most works of Charu (for that matter most other writers) you would find personal attacks on other writers.

Finally tolerance in the field of literature is just a myth. People will stoop down to any level to protect their work. This is not just specific to Charu, but endemic among most writers.

Ajay

லேகா said...

//People will stoop down to any level to protect their work. This is not just specific to Charu, but endemic among most writers//

மிக சரியான வார்த்தைகள் அஜய்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் யுவன் தனது "ஒளி விலகல்" முதல் பதிப்பை சாருவிற்கு சமர்ப்பணம் செய்து இருப்பார்.கால சூழற்சியில் தான் எத்தனை மாற்றங்கள்:-)

பொதுவாய் இதுபோன்ற எதிர்வினை கட்டுரைகளை முழுதுமாய் ஒதுக்கி விடுவேன்.நமக்கு தேவை நல்ல இலக்கியம் மட்டுமே.அவர்களின் சொந்த கதைகள் தேவை இல்லை.சமீபத்திய கட்டுரை ஒன்றில் சாரு தமிழின் மோசமான எழுத்தாளர்கள் என தாம் கருதுபவர்கள் வரிசையில் பெருமாள் முருகனை குறிப்பிட்டு இருந்தார்.அதிர்ச்சியாய் இருந்தது எனக்கு,ஏனெனில் பெருமாள் முருகனின் "ஏறுவெயில்" மற்றும் "கூள மாதாரி" தமிழின் முக்கியமான தலித் நாவல்கள் என்பது மறுக்க இயலாத ஒன்று.எனவே இது போன்ற கட்டுரைகளை படிக்காமல் ஒதுங்கி கொள்வதே நல்லது.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

குப்பன்.யாஹூ said...

பொதுவாய் இதுபோன்ற எதிர்வினை கட்டுரைகளை முழுதுமாய் ஒதுக்கி விடுவேன்.நமக்கு தேவை நல்ல இலக்கியம் மட்டுமே.அவர்களின் சொந்த கதைகள் தேவை இல்லை.சமீபத்திய கட்டுரை ஒன்றில் சாரு தமிழின் மோசமான எழுத்தாளர்கள் என தாம் கருதுபவர்கள் வரிசையில் பெருமாள் முருகனை குறிப்பிட்டு இருந்தார்.அதிர்ச்சியாய் இருந்தது எனக்கு,ஏனெனில் பெருமாள் முருகனின் "ஏறுவெயில்" மற்றும் "கூள மாதாரி" தமிழின் முக்கியமான தலித் நாவல்கள் என்பது மறுக்க இயலாத ஒன்று.எனவே இது போன்ற கட்டுரைகளை படிக்காமல் ஒதுங்கி கொள்வதே நல்லது.

மிகவும் சரியான வார்த்தைகள்.


எழுத்தாளர்களிடம் உள்ள மிக பெரிய குறை இது, ஒருவருக்கு ஒருவர் அன்பு பார்ராட்டாது, சண்டை பிடிப்பது. ஊர் கூடி தேர் இழுப்போம் என்ற பரந்த மனப்பான்மை இல்லது இருத்தல் வருத்தமே.

பதிவிற்கும், நூல் அறிமுகத்திற்கும் மிக்க நன்றிகள் லேகா.

குப்பன்_யாஹூ

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி ராம்ஜி.

மொழி said...

//எங்கோ பார்த்த முகமாய் யாரேனும் எதிர்பட்டால் அந்நாள் முழுதும் அது பற்றி சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்,அது போன்றதொரு அனுபவத்தை பகிரும் கதை.

உவமைகள் அருமை....
நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்...

வேலை பளு உங்களை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளவும்.

லேகா said...

நன்றி மொழி

Anonymous said...

//இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் யுவன் தனது "ஒளி விலகல்" முதல் பதிப்பை சாருவிற்கு சமர்ப்பணம் செய்து இருப்பார்.கால சூழற்சியில் தான் எத்தனை மாற்றங்கள்:-)//

Quite true. That must have been before any criticism by Yuvan of Charu or vice versa. I am reminded of an anecdote on Nakulan related by a writer.
Apparently Nakulan gave a decent review for a pretty bad work. When the writer asked him about this, Nakulan is said to have said "If you want friendships to last, this is how to do it. Forget critisicm". The writer wryly admits that he found this out later:)
I hope this does not come under divulging any personal information (as per Charu's view) :)

Anonymous said...

//இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் யுவன் தனது "ஒளி விலகல்" முதல் பதிப்பை சாருவிற்கு சமர்ப்பணம் செய்து இருப்பார்.கால சூழற்சியில் தான் எத்தனை மாற்றங்கள்:-)//

Quite true. That must have been before any criticism by Yuvan of Charu or vice versa. I am reminded of an anecdote on Nakulan related by a writer.
Apparently Nakulan gave a decent review for a pretty bad work. When the writer asked him about this, Nakulan is said to have said "If you want friendships to last, this is how to do it. Forget critisicm". The writer wryly admits that he found this out later:)
I hope this does not come under divulging any personal information (as per Charu's view) :)
Ajay

NILAMUKILAN said...

யுவனின் படைப்புகள் எதையும் நான் வாசித்தது இல்லை.

சாருவின் கட்டுரை கண்டு யுவனின் படைப்புகள் சிறந்தவையாக இருக்காது போல என நினைத்தேன். உங்களின் இந்த பதிவு என் எண்ணத்தை மாற்றிவிட்டது.

ஒரு படைப்பு சிறந்ததா இல்லையா என்பதை அந்த நபரின் குணம் கண்டு கருதுவது தவறு என்றும் ஒரு எழுத்தாளனுக்கும் அவனுடைய படைப்பிற்கும் வேறுபாடுகள் மிக உண்டு எனவும் தெளிந்தேன்.

எனினும் வம்படி சண்டைகள் நடக்குமிடத்தில் எட்டி பார்க்கும் ஆவல் ஒரு சராசரியான இந்தியனான எனக்கும் உண்டு. எனவே ஒதுக்க முடிவதில்லை.

அறிமுகத்திற்கு நன்றி. அடுத்த முறை இந்தியா வரும்போது வாங்க வேண்டிய புத்தக வரிசையில் சேர்த்து கொள்கிறேன்.

நன்றி.
நிலா முகிலன்

லேகா said...

Nice sharing Ajay,wat u have stressed i svery true!!

லேகா said...

நன்றி நிலா முகிலன்.

தவறான நேரத்தில் இந்த கட்டுரையை பதிவு செய்திருக்கின்றேன்.சாரு X யுவன் எழுது போர் நடக்கும் நேரத்தில் வந்துள்ளதால் அநேகர் அதை முன்வைத்து பின்னூட்டம் இட்டுள்ளனர்,இதுவரை யுவனை தெரியாதவர்கள் கூட சாருவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.முன்பே சொன்னது போல நல்ல இலக்கியம் மட்டுமே நமக்கு தேவை.

//ஒரு படைப்பு சிறந்ததா இல்லையா என்பதை அந்த நபரின் குணம் கண்டு கருதுவது தவறு என்றும் ஒரு எழுத்தாளனுக்கும் அவனுடைய படைப்பிற்கும் வேறுபாடுகள் மிக உண்டு எனவும் தெளிந்தேன்//

மிக சரியான வார்த்தைகள்.கவிதை உலகில் யுவன் மிகப்பிரபலம்...இவரின் இரண்டு சிறுகதை தொகுதிகள் மற்றும் ஒரு நாவலை படித்ததினால் சொல்கின்றேன் யுவனின் பாணி சராசரி கதை சொல்லும் விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

வருகைக்கும்,பகிர்தலுக்கும் மிக்க நன்றி நிலா முகிலன்.