கவிஞராக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு வைரமுத்துவை சிறந்த எழுத்தாளனாய் காட்டிய கரிசல் இலக்கியம் இது!!பகட்டில்லாத,முக பூசில்லாத கரிசல் மனிதர்களும்,மண்ணுடன் ஆனா அவர்களின் உறவும்,பிரியமும் மிக நெருக்கமாய் உணர செய்யும் இந்த நாவல் விகடனில் தொடராக வந்தது.ஒரு கரிசல்பூமியில் வாழ்ந்து மடிந்த பேயதேவர் என்னும் மனிதனின் சோக வரலாறே "கள்ளிகாட்டு இதிகாசம்".
மண்ணோடும் பெற்ற மக்களோடும் போராடும் பேயத்தேவர் ஒரு சிக்கலில் இருந்து விடுபட்டு தலை நிமிர நினைக்கும் பொழுதில் இன்னொன்று வந்து புயலென சூழ தொடர்ந்து சுழட்டி அடிக்கபடுவது மனதை கனக்க செய்வதாய் உள்ளது.கோழி குழம்பு வைப்பதில் இருந்து சாராயம் காய்ச்சுவது வரை,சவர தொழில் நேர்த்திமுறைகள் முதல் வெட்டியானின் ஒரு பிணம் எரிக்கும் அனுபவங்கள் வரை அனுபவித்து சொல்லப்பட்டுள்ளன.இவ்வாறு சிறு சிறு விஷயங்களை விரிவாய் விவரித்துள்ள இடங்கள் வைரமுத்துவின் எழுத்தாளுமைக்கு எடுத்துக்காட்டு.
கிராமத்து வாழ்க்கையோடு நமக்கு சிறிது பரிட்சயம் இருந்தால் இந்நாவல் மேலும் சுவாரசியமாக தோன்றும்.கமலை தோட்டத்தில் உழவு செய்யும் அழகை,தனி ஆளை தரிசு நிலத்தை விலை நிலமாக்க கிணறு வெட்டும் பேயதேவரின் உழைப்பும் எனக்கு வெவ்வேறு சம்பவங்களை நினைவு படுத்தியது.கோழி,ஆடு திருட்டு முதல் சாராயம் காய்ச்சுவது முதல் சகல கெட்ட காரியங்களில் ஈடுபட்டிருக்கும் பேயதேவரின் மகன் பாத்திர படைப்பு சண்டியர் தனம் செய்து திரியும் அசல் கிராமத்து இளைஞனின் குறியீடு.
பேயதேவரின் இளம் வயது காதல்,மனைவி மீதான பிரியம்,நாயக்கரோடு கொண்டிருந்த நட்பு,பேரனோடான தோழமை என யாவும் இயல்பு மாறாது உரையாடல்களால் சொல்லப்படுகின்றது. கிராமத்து மனிதர்களுக்குள்ளான நட்பும்,பிரியமும்,துன்பம் நேர்கையில் உதவும் மனமும்,மண்ணின் மீது கொண்ட பிரியமும்,கரிசல் பெண்கள் எப்படி எல்லா விதத்திலும் சராசரி பெண்களை விஞ்சி நிற்கின்றனர் என வைரமுத்து காலை முதல் மாலை வரை வயலில் உழைக்கும் அவர்களின் தின காரியங்களை பட்டியலிடும் இடமும் புழுதி காட்டின் மீதான பிரியத்தை அதிகரிக்க செய்பவை.
தொடர்ந்து வரும் துன்பங்களை சாபமாக கருதாது வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கும் வைக்கப்படும் சவால் என எண்ணி ஒவ்வொரு சிடுக்குகளையும் விடுவித்து கொண்டே பேயதேவர் முன்னேற இனி ஒரு போதும் வெளிவர முடியாத பெரும் துக்கம் வந்து தாக்குகின்றது.அணை கட்டும் பொருட்டு தேவரின் ஊரோடு சேர்த்து சில கிராமங்களை இடம் பெயர அரசாங்கம் வற்புறுத்துகிறது.அதை மீள இயலாது வீட்டு பொருட்களை கொஞ்ச கொஞ்சமாய் கொண்டு மேடு சேர்க்க,இறுதியில் தன் பூமியின் பிடிமண் எடுத்து திரும்பும் பொழுது நீரில் மூழ்கி இறக்கின்றார்.
நாவல் முழுவதும் தொடர்ந்து வரும் அதீத சோகம் ஒரு கட்டத்தில் அயர்ச்சியை தருகின்றது.இருப்பினும் சுவாரசியம் கூட்டும் வர்ணனைகளும்,மண்ணோடு வேர்விட்டு மழைக்கும்,புயலுக்கும் அஞ்சாது நிற்கும் ஆலம் விழுதென பேயத்தேவர் பாத்திர படைப்பின் வலிமையும் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை தருகின்றது.சேரும் புழுதியும் அப்பி மண்ணோடு மல்லு கட்டும் கரிசல் மக்களின் வாழ்க்கையை இந்நாவலில் அழகாய் பதிவு செய்துள்ளார் வைரமுத்து.
கிடைக்கும் இடம் : திருமகள் புத்தக நிலையம்,தி.நகர்
விலை : 200 ரூபாய்
Wednesday, October 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
//கவிஞராக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு வைரமுத்துவை சிறந்த எழுத்தாளனாய் காட்டிய கரிசல் இலக்கியம் இது//
வைரமுத்து ஒரு படத்திற்கு வசனம் எழுதியிருப்பதாக ஒரு நண்பர் கூறினார்
தொடராக வரும் பொழுது, புத்தகத்தில் படிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.
புத்தகமாக வந்த பொழுது அதன் தடியை பார்த்து பயந்து விட்டேன்
அதாவது இன்னும் படிக்கல
பகிர்தலுக்கு நன்றி அருண்.
இந்நாவல் பார்ப்பதற்கும் மட்டுமே பெருந்தொகுதியாய் தோன்றலாம் ,படிக்க தொடங்கினால் முடிவது தெரிவதில்லை.அதன் வர்ணனைகளும்,விவரிப்புகளும் அயர்வின்றி தொடர செய்கின்றது!!
//நாவல் முழுவதும் தொடர்ந்து வரும் அதீத சோகம் ஒரு கட்டத்தில் அயர்ச்சியை தருகின்றது//
கவிஞரின் இந்த புத்தகத்தை நான் குறைந்தது இருபது முறையாவது படித்திருப்பேன்.
ஒவ்வொரு முறையும் மனதிற்குள் நிற்கும் ஒரே கேள்வி " இந்த பேயத்தேவனின் வாழ்வில் கண நேரத்திற்குக் கூட சந்தோஷம் என்பது எட்டிப் பார்க்கவில்லையா, அல்லது அப்படி பார்த்த தருணங்களில் கவிஞர் கண்ணயர்ந்து விட்டாரா?"
எப்போதோ வாங்கிய புத்தகத்தை போனவாரம் தான் படித்து முடித்தேன் ( ஒரே நாளில் ). கருவாச்சி காவியம், கள்ளிகாட்டு இதிகாசம் கவிஞரின் இந்த இரண்டு படைப்புமே எனக்கு மிகவும் பிடிக்கும். சில இடங்களில் சில விடயங்கள் அயர்ச்சியை தந்தாலும் மொத்தத்தில் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்தது.
இந்நாவலில் நான் மிகவும் இரசித்த இடம்:
தன் மனைவியின் வாசத்தோடு இருக்கிற சேலை, தெரியாமல் துணி வெளுப்பவர் கைக்கு சென்று விட, அதைத் திரும்ப எடும்பதில் பேயத்தேவர் படும் அவஸ்தையும், அது வாசம் போகாமல் திரும்ப கிடைத்த உடன் அவர் பெறுகிற மன அமைதியும்.
ஆணை கட்டும் பொருட்டு - அணை கட்டும் பொருட்டு
@ Benjamin
//" இந்த பேயத்தேவனின் வாழ்வில் கண நேரத்திற்குக் கூட சந்தோஷம் என்பது எட்டிப் பார்க்கவில்லையா, அல்லது அப்படி பார்த்த தருணங்களில் கவிஞர் கண்ணயர்ந்து விட்டாரா?"//
எனக்கும் தோன்றிய கேள்வியே இது!இடைவெளி இன்றி தொடரும் சோகம் பரிதாபத்தை விட்டு அயர்வை தந்தது சில இடங்களில்.இருப்பினும் நல்ல முயற்சி!!
@Balachander
கருவாச்சி காவியத்தை தொடராய் விகடனில் படித்தேன்!! அதிலும் விஞ்சி நிற்பது சோகமே..மேலும் எனக்கு அந்நாவலின் முடிவு திருப்தி தருவதாய் இல்லை.
நீங்கள் கூறியது போல,சோகத்தை நீக்கி பார்த்தல் இரு படைப்புகளுமே கரிசல் வாழ்க்கை பற்றி அறியாதவர்களுக்கு பெரும் கொடை.
@ சுல்தான்
பேயத்தேவர் தம் மனைவி மீது கொண்டிருந்த அதீத அன்பின் வெளிப்பாடாய் அக்காட்சிகள் அமைந்திருக்கும்.மேலும் கிராமபுறங்களில் துணி வெளுப்போர் ஒவ்வொரு வீட்டு துணிகளுக்கும் தனி தனி குறியிட்டு அடையாளம் காண்பதை விவரிக்கும் இடமும் அருமை.
பிழையை திருத்தி விட்டேன்.நன்றி.
"கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படத்தில், "விடை கொடு எங்கள் நாடே" பாடலில் ஒரு பெரியவர் தன்னுடைய ஊரை விட்டு பிரிய முடியாமல் கோயிலிலேயே இருப்பது போன்று ஒரு காட்சி வரும்.
இந்த காட்சியை நான் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு நினைவுக்கு வருபவர் பேயதேவர்தான்....
நாவல் முழுதும் வரும் சோகத்தை மறுக்க முடியாதெனினும், அவை எல்லாமே பேயதேவரின் போராடும் குணத்தை வெளிக்காட்ட எடுக்கப்பட்ட உத்திகள். கதையின் முடிவுக்கு அது ஒரு பலம்.
நம்பிக்கைக்கும், சோகம் கொஞ்சம் தவிர்க்கப்பட (நிறைய காதலுக்கும்) படைப்புக்கு, கவிஞரின் "தண்ணீர் தேசம்" ஒரு நல்ல புத்தகம்...
நல்ல பதிவு...
வாழ்த்துக்கள்...
//நாவல் முழுதும் வரும் சோகத்தை மறுக்க முடியாதெனினும், அவை எல்லாமே பேயதேவரின் போராடும் குணத்தை வெளிக்காட்ட எடுக்கப்பட்ட உத்திகள்.//
உண்மை தான். நன்றி Jags
சோகத்த விடுங்கப்பா.. அதுதான் தெரிஞ்சதே..
பேயத்தேவர் இளம் வெந்நீரில் குளிப்பதை வர்ணிப்பதாகட்டும், அவர் மனைவி வைக்கும் துவையளின் செய் பக்குவத்தை விவரிப்பதாகட்டும், சுடுகாட்டில் மனித எலும்பு எடுக்க அமர்ந்திருக்கும் போது நிகழ்வதை எழுதுவதாகட்டும், சலவைத்துணி எப்படி அலசப்படுகிறது என்பதை அலசுவதாகட்டும்..
மிக நெருக்கமாகவும் நேர்த்தியாகவும் எழுதப்பட்ட நிகழ்வுகள்..
இப்பொழுதும் ஏதாவது ஒரு மழை ஞாயிறில் எடுத்து படித்தால் கடைசிபக்கம் வரை கண்கள் அசராது..
வழக்கம் போல் நல்ல பதிவு தோழி..
நர்சிம்
//பேயத்தேவர் இளம் வெந்நீரில் குளிப்பதை வர்ணிப்பதாகட்டும், அவர் மனைவி வைக்கும் துவையளின் செய் பக்குவத்தை விவரிப்பதாகட்டும், சுடுகாட்டில் மனித எலும்பு எடுக்க அமர்ந்திருக்கும் போது நிகழ்வதை எழுதுவதாகட்டும், சலவைத்துணி எப்படி அலசப்படுகிறது என்பதை அலசுவதாகட்டும்..//
:-))
நல்ல உள்வாங்கி படிச்சு இருக்கீங்க!!பகிர்தலுக்கு நன்றி
நன்றி நர்சிம்
வைரமுத்துவின் எழுத்துக்கள் என்னை அந்த அளவு தாக்கியது இல்லை. அவரது பெரும்பாலான எழுத்துக்கள் படித்து உள்ளேன், (இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் வேண்டுமானால் என்னை சற்று தொந்தரவு செய்த எழுத்து).மற்றவை எல்லாம் என்ன்னுள் அந்த அளவு பாதிப்பு ஏற்படுத்த வில்லை.
இருந்தாலும் உங்கள் எழுத்து மிக அருமை எப்போதும் போல.
சினிமா பாடல்களில் கூட தாமரை, முத்துகுமார், கபிலன் நம்பிக்கை தருகிறார்கள்.
நேரம் கிடைத்தால் வாலியின் - நானும் இந்த நூற்றாண்டும் படித்து பாருங்கள். சுவையாக இருக்கும்
குப்பன்_யாஹூ
நன்றி குப்பன்_யாஹூ
வாலியின் புத்தகம் படிக்க முயல்கிறேன்!! தாமரையும் & நா.முத்துக்குமார் இருவரின் வரிகள் எனக்கு மிக பிடித்தமானவை.கற்றது தமிழ் படத்தில் ராஜாவின் குரலில் வரும் "பறவையே எங்கு இருக்கிறாய்" என தொடங்கும் ந.முத்துகுமாரின் பாடல் வரிகள் தனிமையின் தேடலை சொல்லும் அற்புத வரிகள்.மிக பிடித்த பாடல் அது!!
தண்ணீர் தேசம் மென் புத்தகமாக இங்கே:
http://onlineebook4free.blogspot.com/search/label/Tamil
Tnx Balachander!!
Lekha: I remember reading it when it was serialized in Ananda Vikatan. Though I have no acquaintance with rural life, I was touched by Vairamuthu's lyrical touches and stunning portraits of Karisal land.
Beautiful review. Your blog has become my daily habit. May you read more and more. Happy Deepavali to your and all your folks.
Tnx Krishnan!!
//Though I have no acquaintance with rural life, I was touched by Vairamuthu's lyrical touches and stunning portraits of Karisal land//
பகிர்தலுக்கு நன்றி
கரிசல் பூமியில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் வைரமுத்துவினால் சிறு நிகழ்வுகளை கூட பெரும் ஈடுபாட்டோடு வர்ணனைகள் குலைத்து சொல்ல முடிந்திருக்கின்றது!!
இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள்!!
எனக்கு கள்ளிகாட்டு இதிகாசம் புத்தகத்தின் மின்னணு தொகுப்பு வேண்டும். யாரிடமாவது இருப்பின் தயவு சித்து அனுப்பி தாருங்கள்.
My Mail ID : kamardeen.it@gmail.com
அன்புடன்,
ஹஸன் கமருதீன்.
Post a Comment