* காற்றின் வெளி-- ஒரு காலை பொழுதில் தன் மகளோடு சென்ற நடைபயணம் குறித்த பதிவு இது.வாகன பயணத்தை விட நடை பயணம் சுவாரசியமானவை..நான் மிக நெருக்கமானதாய் உணர்த்த கதை இது.கடை வீதிகளுக்கு செல்லும் பொழுதோ,சாலையை கடக்கும் பொழுதோ அப்பாவின் கைகோர்த்து செல்வது மிகுந்த விருப்பதிர்க்குறிய ஒன்று.சொல்லில் உணர்த்த முடியாத அன்பின் வெளிப்பாடாய் அக்கணங்கள் தோன்றும்.சிறுமியான தன் மகளின் வியத்தகு கேள்விகளும்,பார்பவர்களிடத்தில் எல்லாம் சிரித்து பேசும் குணமும்,குழந்தைகளுக்கே உண்டான ஆச்சர்யங்களும்,கேலிகளும் ஒரு தந்தையின் பார்வையில் சொல்லி இருப்பது நன்று.பால்ய காலந்தின் மீதான ஏக்கத்தை அதிகரிக்க செய்யும் விவரிப்புகள் அருமை.

* ஜோதியும் நானும் அந்த பையனும் - காதலிக்கு கொலுசு வாங்க கனவுகள் சுமந்து கடைக்கு செல்லும் நாயகன் அங்கு வறுமையின் காரணமாய் தான் வாங்கிய பரிசு கோப்பைகளை விற்று பணம் பெற கெஞ்சும் இளைஞனை கண்டு தான் வந்த காரியம் அற்பமானது என்பதை உணர்கிறான்...மனதை கனக்க செய்யும் இக்கதை உள்ளார்ந்த அர்த்தம் கொண்டது.
* மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது - வண்ணநிலவனின் மற்றுமொரு சிறுகதையான "கடைசியாய் தெரிந்தவர்கள்" போலவே இதுவும்,மன உளைச்சல் கொண்டு பரிதவிக்கும் நண்பனுக்கு ஆறுதலாய் உடன் இருந்து உதவிய கணங்களின் பதிவு.உறவுகள் மேம்படுவது கேளிக்கையான தருணங்களை காட்டிலும் துன்ப காலங்களிலேயே...
* நடுகை - நாமே எதிர்பாரா வண்ணம் சில அபூர்வ மனிதர்களை காண நேரிடும்.படிப்பு,வளர்ப்பு என்பதை உலக ஞானம் பெற்று அவர்கள் கூறுபவை யாவும் நிதர்சனங்களாய் ஒலிக்கும்.பயிர் செடிகளின் மீது பிரியம் கொண்ட மாடு மேய்க்கும் கிழவரூடான சம்பாஷனைகளே இச்சிறுகதை.
இச்சிறுகதை தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையே ஒரு அழகிய சிறுகதையை போன்றது."இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது" என கூறுகிறார்.இன்றைய பொழுதுகளின் இறுக்கத்தில் இருந்து விடுபட நினைவுகளின் பகிர்தல் மிக அவசியமானதே!!
வெளியீடு - அன்னம் புக்ஸ்
விலை - 45 ரூபாய்