Thursday, July 24, 2008

குழந்தைகள் இலக்கியம் : பிஞ்சுகள் -கி.ராஜநாராயணன்

இன்றைய குழந்தை ஒன்றிடம் நீ ரசித்தது எது என கேட்டால் யோசிக்காமல் சொல்லும் பதில் ஏதேனும் ஒரு சினிமாவின் பெயராக தான் இருக்கும்.கணினியும்,தொலைக்காட்சியும் சிறுவர்களின் பொழுதுகளை விழுங்கி ஓடி விளையாடுவதற்கோ,நீதி கதைகள் படிப்பதற்கோ நேரம் இல்லாது செய்துவிடுகின்றன.என் வரையிலும் கற்பனை சக்தி வளர வாசிப்பு என்பது இன்றியமையாதது.
சமீபத்தில் ப்ளாக் ஒன்றில் அம்புலி மாமா சிறுகதை கண்டேன்.நினைவுகள் சட்டென எனது குழந்தை பருவத்தை நோக்கி சென்றது.

90'களின் தொடக்கத்தில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் இப்பொழுது போல இல்லை.ஞாயிறு இரவு திரைப்படமும், வெள்ளி இரவு ஒலியும் ஒளியும் மட்டுமே தொலைக்காட்சி பொழுதுபோக்கு.பெரும்பாலான நேரங்கள் தெருக்குழந்தைகளோடு கூடி "கல்லா மண்ணா" ,"பூ பறிக்க வருகிறோம்","பாண்டி","திருடன் போலீஸ்" "தாயம்" ,"பல்லாங்குழி" விளையாடுவதிலே செல்லும்..சிறுவர் நூல்கள் மீது நாட்டம் சென்றதும் "மாயாவி கதைகள்" "அம்புலி மாமா" "சிறுவர் மலர்" என படிக்க தொடங்கினேன்...வாசிப்பின் மீதான ஆர்வம் கூடியதே பால்ய கால சிறுவர் புத்தகங்கள் மூலமே..
எனது முதல் இலக்கிய வாசிப்பு தொடங்கியது கி.ராஜநாராயணனின் "பிஞ்சுகள்" குறுநாவல் மூலம்.வெங்கடேசு என்னும் கிராமத்து சிறுவனை சுற்றி நகரும் அக்கதை இன்று வழக்கில் இல்லாத பல தமிழ் சொற்களை கோடிட்டு விளக்குவதோடு,எண்ணில் அடங்கா நாம் அறியா பறவை இனங்களை வகைப்படுத்துகின்றது..ஒரு சிறுவனின் பார்வையில் ரயிலும்,அதனோடான நினைவுகளும் விளக்க படும் இடம் அருமை.மேலும் அக்காலகட்டத்தில் பெரியம்மை நோயின் தீவிரத்தை,அதன் விளைவால் கண் மற்றும் உரிய் இழந்தோரின் அவலங்களை கூறி இருப்பது அந்நோயின் அபாயத்தை விளக்குகிறது.

கிராமங்களில் தெருகூத்து எப்பொழுதும் நிகழும் ஒன்று.இன்று அதே கலைஞர்கள் தொழில் சோர்ந்து விட பாடல்களுக்கு நடனம் ஆடும் ரிக்கார்ட் நடனம் மேற்கொள்ளுகின்றனர்.இந்நாவலில் ஒரு பகுதியில் அவ்வூருக்கு வரும் கலைகூத்தாடிகள் நிகழ்த்தும் நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளது.தன் நண்பன் அசோக்கின் அண்ணனான மோகன் தாசுடனும் , மற்றொரு நண்பனான செந்தில்வேலின் குடும்பத்தோடும் வெங்கடேசு கொண்டிருக்கும் பற்றும் பிரியமும் சொல்லால் விவரிக்க இயலாத ஒன்று.தன் பழகும் ஒவ்வொரு நபருடனும் ஆழ்த்த அன்பை செலுத்தி புதிய புதிய காரியங்களை அறிந்து கொள்ளும் அவனது ஆவல் தேடல் நிறைந்த சிறுவனாய் அவனை அடையாளம் காட்டுகின்றது.மகிழ்ச்சியாய் நாட்கள் செல்ல வெங்கடேசுவிற்கு படிப்பின் மீது ஆர்வம் வருகின்றது.அசோக்கோடு சேர்ந்து பட்டணத்தில் சென்று படிக்க முடிவு செய்கிறான்.தன் பிரியத்திற்குரிய பறவைகளிடமும்,வீட்டு பூனையிடமும்,நாயிடமும் விடை பெற்று நீண்ட மௌனத்தோடு தன்பிரிவை சொல்லி வேதிநாயக்கரிடம் இருந்து விடைபெற்று ரயிலில் பட்டணம் புறப்படுகின்றான்....

நாவலில் குறிப்பிடப்படும் வழக்கொழிந்த சில தமிழ் சொற்கள்: தூறி:போக்கு நீரை எதிர்த்து வரும் மீனை பிடிக்க மூங்கிலால் செய்யப்பட்ட கருவி.

கொங்காணி : கோணியை போல மழைக்கு தலையில் போர்த்தி கொள்வது ,விரித்து படுக்கவும் உதவும்

தாப்பு : தங்கி இளைப்பாறும் இடம்

பொசல் வண்டி : கூட்ஸ் வண்டி

பூமரம் : ஒட்டுதல் உள்ளவர்கள் தனிமையில் தாம் சந்திக்க முன்னமே தேர்வு செய்த இடம்


நாவலில் குறிப்பிடப்படும் அறிய வகை பறவை இனங்கள்..

வல்லையதான் - போர் குணம் கொண்ட பறவை
தேன் கொத்தி - தேன் தீண்ட வண்ணம் உடல் அமைப்பு கொண்டது
நானுந்தான் - மைனா
சிட்டு குருவி வகைகள்: தேன்சிட்டு,மஞ்சள் சிட்டு,முள் சிட்டு,தட்டை சிட்டு...
தைலான் பறவைகள்,கரிச்சான் பறவை,குங்கும தட்டான்கள்,வால் குருவி


காக்கையும் குருவியும் அன்றி வேறு பறவைகளை காண முடியாத இப்பொழுதைய அவல நிலையில் இந்நூலின் பறவைகள் பெருமூச்செறிய வைக்கின்றன.

இவை மட்டும் இன்றி நாவலில் குறிப்பிடபட்டுள்ள செய்திகள் பல.மழை வேண்டி கண்மாய் பிள்ளையாருக்கு மிளகாய் அரைத்து பூசி வேண்டுதல்,புதர் மண்டிய இடத்தில் கோவில் நாகம் இருப்பதை சொல்லி உலவும் கட்டு கதைகள்,ரயில் வண்டியின் மீது சிறுவர்கள் கொண்டுள்ள மோகம் என கிராமத்து நிகழ்வுகள் நாவல் முழுதும் மிகை இன்றி சொல்லப்பட்டுள்ளது.பெரும் நிறைவையும் திருப்தியையும் வாசகனுக்கு தரும் இந்நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்தது மிகை இல்லை..

3 comments:

KARTHIK said...

//90'களின் தொடக்கத்தில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் இப்பொழுது போல இல்லை.ஞாயிறு இரவு திரைப்படமும், வெள்ளி இரவு ஒலியும் ஒளியும் மட்டுமே தொலைக்காட்சி பொழுதுபோக்கு.பெரும்பாலான நேரங்கள் தெருக்குழந்தைகளோடு கூடி "கல்லா மண்ணா" ,"பூ பறிக்க வருகிறோம்","பாண்டி","திருடன் போலீஸ்" "தாயம்" ,"பல்லாங்குழி" விளையாடுவதிலே செல்லும்..சிறுவர் நூல்கள் மீது நாட்டம் சென்றதும் "மாயாவி கதைகள்" "அம்புலி மாமா" "சிறுவர் மலர்" என படிக்க தொடங்கினேன்...//

உங்களுக்குன்னு இல்லைங்க எல்லோரும் இப்படித்தான்.எனகுத்தெரிஞ்சு ராணி காமிக்ஸ் மாயாவி,சிறுவர்மலர்,அம்புலிமாமா இதெல்லாம் வாசிக்காம் இருக்குரவிங்க கம்மிதான்.
நல்ல பதிவு லேகா.

லேகா said...

Thanks for ur comments Karthick :-)

Unknown said...

அருமையான பதிவு லேகா

//காக்கையும் குருவியும் அன்றி வேறு பறவைகளை காண முடியாத இப்பொழுதைய அவல நிலையில் இந்நூலின் பறவைகள் பெருமூச்செறிய வைக்கின்றன.//

மின்னணு தொலைபேசிகளால் சிட்டுக்குருவிகள் அருகியழிந்தது போல,காகங்களும் அடுத்தெந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கு படையலாகபோகிறதோ.. தகவமைப்புக்கு மாறாவிட்டால் தாரை தப்பட்டை தான் என அறிவியாலளர்கள் கூறித்தப்பிதாலும் இயற்கை பதில் சொல்லும் மனிதனால் அழிக்கப்படும் இனவொழிப்புக்கு