Tuesday, June 3, 2008

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி



மரங்களுக்கும் நம் போலே உயிர் உண்டு,சுவாசிக்கும் திறன் உண்டு என்பதை ஆறாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியை சொல்ல வகுப்பில் அனைவரும் வகுப்போரம் நின்ற மரத்தினை ஆச்சர்யத்துடன் பார்த்தது இன்றும் என் நினைவில் உண்டு.மரங்களுக்கும் நமக்குமான உறவு நீரோடு கொண்ட உறவு போல,வாழ்விற்கு இன்றியமையாதது அதே போல அதிக நெருக்கமும் கொண்டாடலும் கொண்டது அல்ல.கிராமங்களில் மரங்களுக்கு இருக்கு மதிப்பு பட்டணத்தில் இல்லை..ஆலமரதிற்கும்,அரசமரதிற்கும் அங்கு ஒவ்வொரு கதை வைத்து இருப்பார்கள்..அக்கதைகள் யாவும் சுவாரசியமான நிதர்சனமே!!!

சமீபத்தில் சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை படித்தேன்..இது நாள் வரை அவர் எழுத்துக்களை படிக்காமல் இருந்தது வருத்தம் அளித்து.முற்றிலும் புதிய கதை சொல்லும் பாணி,மிகுந்த நகைச்சுவை,அழகிய வட்டார பேச்சு வழக்கு என இந்நூல் ஒரு புதிய வாசிப்பு அனுபவம்.ஒரு மரத்தை மையமாய் வைத்து நாவல் படைப்பது எழுத்தாளனுக்கு சவாலான விஷயமே..அதை எந்த சிரமமும் இன்றி கதை சொல்லும் பாணியில் ஒர் அழகிய வரலாறை கூறி இருப்பது இனிமை.

கிராமங்களில் கதை சொல்லிகளுக்கு எப்போதும் கிராக்கி உண்டு..கற்பனை கலந்து நேரில் கண்டது போல அவர்கள் கூறும் சற்றே மிகை படுத்தி அவர்கள் கூறும் உண்மை நிகழ்ச்சிகள் கேட்பதற்கும்,கற்பனை செய்வதற்கும் திரும்ப திரும்ப சொல்ல கேட்டு மகிழ்வதற்கும் உரித்தானவை.இக்கதையிலும் ஆசான் என்னும் கதை கூறும் முதியவர் மூலம் அவ்வூரில் இருக்கும் புளியமரத்தின் ஆரம்ப கால வரலாறை கூறி இருப்பது வெகு அருமை.ஆசானின் கதை சொல்லும் அழகு அவரிடம் மேலும் பல கதைகளை கேட்டறிய நம்மை தூண்டுகிறது..புளியமரம் அமைந்துள்ள குளத்தில் பெண்கள் விளையாடி மகிழ்ந்ததையும், வேற்று ஆடவன் ஒருவனால் புத்தி பேதலித்து புளிய மரத்தில் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் கதையை ஆசான் விவரிக்கும் பாங்கு மர்ம நாவலின் கடைசி பகுதி போல் கேள்விகள் நிறைந்தது.மேலும் குளத்தின் துர் நாற்றத்தால் திருவிதாங்கூர் மன்னன் பவனி பாதியில் நின்றதை கூறும் இடம் சிறந்த நகைச்சுவை.ஆசான் கூறும் கதைகள் யாவும் சுதந்திரத்திற்கு முன்பு நடப்பதாய் உள்ளது.

இதன் பின் வரும் புளியமரம் குறித்த நிகழ்வுகள் யாவும் சுந்தந்திரம் பெற்ற பின் நிகழ்வது.மரத்தை ஏலம் விடுவதில் மக்களுக்கும்,அதிகாரிகளுக்கும் நிகழும் பனிப்போர் இன்றும் நிகழும் நிஜமே.மரம் அமைந்த குளம் வற்றி,அங்கு பெரிய அங்காடி தெரு அமைவதை இயல்பாய் சு.ரா விவரித்துள்ளார்.சற்று மரத்தின் கதையை விடு அங்கு கடை நடத்தும் வியாபாரிகள் பற்றி கதை செல்கிறது. காதர் மற்றும் தாமு இவர்களை சுற்றியே கதையின் பிற்பகுதி சுழல்கிறது.இருவரின் குடும்பம்,தொடக்க கால வாழ்க்கை,வியாபார நேர்த்தி பின் இருவருக்குள்ளும் நிகழும் வன்மம்..அதனால் ஒருவரை ஒருவர் பழி வாங்க புளியமரத்தை பகடையாய் ஆக்குவது என கதை அம்மரத்தின் அழிவை சமுதாயத்தின் மாற்றங்களோடு சொல்லி செல்கிறது.

இக்கதையில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது நாவல் முழுதும் விரவி உள்ள உயர்தரமான நகைச்சுவை.."திருவிதாங்கூர் தேசிகன்" பத்திரிக்கை நிருபர் இசக்கியின் பாத்திரத்தை சு.ரா செய்துள்ள பகடி ,சிரிப்பின் உச்ச கட்டம்...ஆபாசம் அற்ற இவ்வகை நகைச்சுவை ஹாஸியம் மிகுந்தது.வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் வாழ்கை அனுபவத்தை படித்த திருப்தி புளிய மரத்தின் கதையில் உணரலாம்.சு.ரா வின் பிற படைப்புக்களை தேடி படிக்கும் ஆர்வத்தை தருவதே இந்நூலின் வெற்றி..

2 comments:

இனியாள் said...

Lekha Jay Jay sila kurippugal padinga....

லேகா said...

உங்கள் பதிவிற்கு நன்றி இனியாள்..
எனது அடுத்த பதிவு ஜே.ஜே சில குறிப்புகள் நூல் குறித்து தான்..நூலை படித்து முடித்து மீண்டும் படிக்க ஆவலாய் உள்ளேன்.