Wednesday, July 2, 2014

கமலாதாசின் "சந்தன மரங்கள்"

கமலாதாஸ் கதைகளோ,கவிதைகளோ இதற்கு முன் அறிமுகமில்லை. பாலச்சந்திரன் சுள்ளிகாடு தனது சுயசரிதை நூலான சிதம்பர ரகசியத்தில் கமலாதாஸ் உடனான சந்திப்பை குறித்து எழுதி இருப்பார்.அந்தக் கட்டுரை இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் குறித்து இல்லாது கமலாதாசின் பிரியமும்,அக்கறையும் கொண்ட தயாள குணத்தை குறித்து பேசுவது. அதிலிருந்து அவரின் எழுத்துக்களை தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும்.மிகச்சமீபத்தில் எதிர்பாராத காரணங்களினால் நான் வேண்டிய புத்தகத்திற்கு பதில் "சந்தன மரங்கள்" கை வந்து சேர்ந்தது.மகிழ்ச்சியான ஏமாற்றம்!

முன்னுரையில் ஜெமோ குறிப்பிட்டுள்ளதைப் போல கமலாதாசின் உலகத்திற்குள் நுழைய இந்தப் புத்தகம் சிறுவாசல்.நாம் கண் பொத்தி,வாய் மூடி பகிர்ந்து கொள்ளும் ரகசிய மனிதர்கள் அவர் கதை மாந்தர்கள்.முழுக்க முழுக்க பெண் மன உளைச்சல்களை அணுகிப் பேசும் கதைகள்.கமலாதாசின் பெண்கள் சபிக்கப்பட்டவர்கள்,பிரியமானவர்களால் துரத்தியடிக்கப்பட்டவர்கள்,அன்பிற்கு ஏங்குபவர்கள்,மனதளவில் வலிமையற்றவர்கள்,வீட்டை மறந்து வேலையில் மூழ்கி கிடப்பவர்கள் இன்னும் இன்னும்..இதில் ஏதோ ஒன்றில் எந்தப் பெண்ணும் தன்னை சுலபமாக பொருத்திக் கொள்ள இயலும்.



ஒரு நாவலின் நேர்த்தி கொண்டது 'ருக்மணிக்கு ஒரு பொம்மை குழந்தை' கதை."Arappatta kettiya gramathil" என்றொரு பத்மராஜனின் படம்.பரத்தையர் கூடத்தில் மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடும் பெண்ணிற்கு உதவும் நண்பர்களின் கதை.ஏனோ இந்தக் கதை வாசிக்கையில் அப்படத்தின் ஞாபகம்.அங்கு நிகழும் காதலும்,வன்முறையும்,மரணமும் - மாற்றங்கள் இன்றி தொடர்பவை.ஒரு சிறுமியின் வருகையும், கருகலைப்பினால் நிகழும் மரணமும்,அங்கிருந்து தப்பிப்பிழைத்து பின் மீண்டும் வந்து சேரும் ஒருத்தியின் காதல் கதையும் பதரவைப்பவை.இளையவள்,மூத்தவள் என்கிற பாகுபாடின்றி அங்குள்ள பெண்கள்களின் மனவோட்டத்தை, கனவுகளை, நிராசைகளை நுட்பமாய் விவரிக்கும் கதையிது.அழுதாலும், புரண்டாலும் வாழ்க்கையை அங்கு தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும்.பத்மராஜனின் படத்தில் வருவது போல காப்பாற்றிச் செல்ல தேவகுமாரன்கள் கிட்டாத புறக்கணிக்கப்பட்ட தேவதைகள் இவர்கள்.

'சந்தன மரங்கள்', இருளும் - வெளிச்சமுமான இரண்டு தோழிகளின் கதை.பெண்ணிய கதைகள் எப்போதும் பெண்களின் சிறப்பை மட்டும் பேசுபவை அல்ல என்பதற்கோர் உதாரணம் இக்கதை.எண்ணங்களில் வன்மமும்,குரோதமும் மிகுந்து வார்த்தைகளில் கத்தியின் கூர்மையை கொண்டவள் கல்யாணிகுட்டி.தாழ்வுமனப்பான்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டவள்.பழிவாங்க காதலை ஆயுதமாக பயன்படுத்தவும் துணிபவள். கல்யாணி குட்டி காதல் கொள்வது தனது தோழி ஷீலாவோடு.ஆம் அவர்கள் காதலர்கள்.லெஸ்பியன் உறவு சார்ந்த கதையொன்றை வாசிப்பது இதுவே முதல் முறை.கதை முழுக்க ஷீலா நமக்கு சொல்வது போல வருகிறது.கல்யாணிகுட்டி மீதான சிநேகமும்,நெருக்கடியான திருமண வாழ்வும்,விலகிய பொழுதும் மீண்டும் மீண்டும் வாட்டும் நினைவுகளும்....
இரண்டு பெண்களுக்கிடையேயான அற்புதமான காதல் கதை.

இவை தவிர்த்து, கூடா காதல் என உலகம் வரையறுக்கும் ஒரு பெண்ணின் நேசத்தை பேசும் 'மாஹிம் வீடு',இரவு பகல் பாராது உழைத்து, தன் தொழிலை நேசிக்கும் பெண் மருத்துவருக்கு நேரும் 'துரோகம்' குறித்தான கதையும் குறிப்பிடத்தக்கவை.தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கொண்டு கமலாதாஸ் புனைந்துள்ள 'பறவையின் வாசனையும்' சிறப்பான கதையே.கண்ணுக்கு புலப்படாத சங்கிலியால் பிணைக்கப்பட்டு உறவுகளை விட்டு வெளியேற முடியாத எல்லாப் பெண்களுக்குமான கதைகள் இவை.கமலாதாசின் படைப்புகளை தேடி வாசிக்க இந்தத் தொகுப்பின் அறிமுகம் போதுமானது.


வெளியீடு - உயிர்மை
தமிழில் - நிர்மால்யா

Tuesday, June 3, 2014

KG ஜார்ஜ் மற்றும் பத்மராஜனின் கதையுலகம்

மிகச் சமீபத்தில் இவ்விரு மலையாள இயக்குனர்களின் படங்கள் அறிமுகம் ஆகின.இது வரை தவறவிட்டதற்கு வருந்தும்படியான படங்கள் இவை.

கே ஜி ஜார்ஜின் யவனிகா (1982) திரைப்படம் நேர்த்தியான த்ரில்லர்.இவரின் மற்றொரு படமான லேகேயுட மரணம் ஒரு ப்ளாஷ் பேக் (1983) தந்த அனுபவத்தில் இருந்து மீண்டு வருவதற்கும் இந்தப் படம்.

எளிய மனிதர்கள்,அவர்களை சுற்றிய உலகம்,தினசரி வாழ்வின் சிடுக்குகள் இவற்றை முடிந்த வரை விஸ்தாரமாய் பேசிச் செல்கின்றன இப்படங்கள். யவனிகா,நாடக கம்பெனி பின்னணியில் நிகழும் கதை.நாம் அறிந்திராத உலகம் இப்படித் தான் இருக்கும் என நம்பும்படியான காட்சியமைப்புகள். மேலும் திலகன்,பரத்கோபி, மம்மூட்டி, ஜகபதி,நெடுமுடி வேணு என மொத்த ராட்சச கூடமும் ஓரிடத்தில்.முரடன் - குடிகாரன் - யாருக்கும் கட்டுப்படாத ஐயப்பன் என்னும் கதாபாத்திரத்தில் பரத் கோபி.இவரின் அறிமுக காட்சி ஒன்று போதும் அசாத்திய நடிகன் எனக் கூற.கொலையை துப்பறியும் சாதாரணக் கதை அல்ல இது,ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர்கள் சார்ந்த நிகழ்வுகளையும் நுட்பமாய் விளக்கிச் செல்லும் திரைக்கதை முக்கியமானது.போலவே பின்னணி இசையும்.



ஜார்ஜின் மற்றொரு படமான லேகேயுட மரணம் ஒரு ப்ளாஷ்பேக் (1983),ஒரு நடிகையின் கதை.உண்மையில் இப்படம் ஒரு ஆவணம்.இதற்கு பின்னணியாய் அமைந்த கதை குறித்து பேச விருப்பமில்லை. அவசியமுமில்லை.ஏனெனில் இக்கதை முழுக்க முழுக்க ஒரு நடிகையின் தொடக்க நாட்கள் தொடங்கி விரிவாய் பேசிச் செல்கிறது.ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டது போல.நளினியின் நடிப்பு பெரிய ஆச்சர்யம்.இந்தளவு அவரை இதற்கு முன் ரசித்ததில்லை.கிராமத்து வெகுளிப் பெண்,நகர சாக்கடையில் மெல்ல மெல்ல அமிழ்ந்து போவதை கச்சிதமாய் தம் உடல்மொழியாலும், முகபாவனைகளாலும் வெளிக்கொணர்ந்துள்ளார்.நடிகைகள் குறித்து நமது நாளிதழ்கள் எழுதித் தீர்த்த கதைகளில் ஒன்றை மிக அருகில் சென்று பார்த்த உணர்வு.

குடிகாரர்கள்/ ஸ்த்ரீலோலர்களிடம் காதல் வேண்டி நிற்கும் பெண்கள். உறவுகளை விட்டு தப்பியோட முயலும் மனிதர்களென...பத்மராஜனின் கதையுலகம் தனித்துவமானதாய் இருக்கிறது.ரசித்து பார்த்த இவரின் படங்கள் இரண்டும் காதல் கதைகள்.காதல் என்றால் திஜாவின் கதைகளில் வரும் காதல்.அவர்கள் மட்டுமே உணர்ந்தறிந்த தெய்வீகம்.

பத்மராஜனின் தூவானதும்பிகள்(1987) லால்,பார்வதி,சுமலதா நடித்திருக்கும் முக்கோண காதல் கதை.கிளாரா என்னும் தேவதையாக சுமலதா. ஆரவாரமில்லாத அந்த அழகும்,நடிப்பும் அட்டகாசம்.இத்திரைப்படத்தில் மழையும் ஒரு கதாபாத்திரம்.கிளாராவின் வருகையை அறிவிக்கும் பெருமழைக் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை!மீண்டும் மீண்டும் கேட்டு மயங்கிடச் செய்யும் "ஒன்னாம் ராகம் பாடி.." என்ற பாடலில் முகத்தில் கை வைத்து ஆச்சர்யமாய் பார்வதியைப் பார்த்துச் சிரிக்கும் லால்....அசல் நடிகன்!மீண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லாத காதல் கணங்கள்..நினைவின் ரணங்கள் என்பதைச முடிந்த வரை கவிதை மொழியில் சொல்லும் கதை.



பத்மராஜனின் கதைகளை தேடி வாசிக்கவேண்டும் என்கிற ஆவலைத் தந்த படம் நமக்கு பார்க்காம் முந்திரி தோப்புகள்(1986).நினைவுகளை கிளறி விட்டு நம்மை மொத்தமாய் உள்ளிழுத்துக் கொள்ளும் படமிது.காதலர்களின் தேசம்..தேவதைகளின் தேசம்!சாலமன் என்னும் பெயர் கொண்ட நாயகர்கள் அன்பைத் தாங்கி வரும் தேவகுமாரர்கள் போல.ஆமெனில் பஹத்..இதில் லால்.வேதாகமத்தில் இருந்து மேற்கோள் காட்டப்படும் இவ்வரிகள். காதல்..காதல்..திகட்டச் செய்யும் காதல்.

Song Of Solomon 7:12 : "Let us rise early and go to the vineyards; Let us see whether the vine has budded And its blossoms have opened.And whether the pomegranates have bloomed. There I will give you my love"

இவ்வரிகளை மெய்ப்பிக்க அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் தான் கதை.கதையின் முடிவில் ஒரு திருப்பம் உண்டு,நிச்சயமாய் அது அதிர்ச்சி வைத்தியதிற்காய் வைக்கப்பட்டதில்லை.அவர்கள் காதலின் வலிமையை மீண்டுமொருமுறை அங்குள்ளவர்களுக்கு எடுத்துச்சொல்ல..

இரண்டு படங்களிலும் மிகப் பிடித்த பொதுவான விஷயங்கள் இரண்டு.ஒன்று காதல் மற்றொன்று லாலின் அசத்தல் நடிப்பு..One Devil Of An Actor!

--மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் யாவும்Youtube'ல் இருக்கின்றன--

Wednesday, February 26, 2014

INTO THE WILD (2007)

"I read somewhere... how important it is in life not necessarily to be strong, but to feel strong... to measure yourself at least once.” - Jon Krakauer, Into the Wild



I wish I were a Gypsy எனக் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அது சாத்தியமற்ற பெருங்கனவு என்பதையும் நன்கு அறிவேன்.

குடும்பம்,அலுவல்,தினசரி கடமைகள் என யாவற்றையும் துறந்து தேடல்,தேடல் என ஒரு இளைஞன் மேற்கொள்ளும் பயணங்களின் தொகுப்பு இத்திரைப்படம்.பயணங்கள் வழி அவன் சந்திக்கும் மனிதர்கள்,அவர்களோடு கூடிய உரையாடல்கள்,அவர்கள் அன்பில் தேங்கி நின்று விடாமல், விடைபெற்று தொடரும் அவனின் சாகச வாழ்க்கை...என் கனவை எவனோ வாழ்ந்து தீர்த்துள்ளான் என்கிற திருப்தி.இது உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு உருவாக்கப் பட்ட திரைப்படம்.இதுவே காட்சிகளுக்கு இன்னும் அழுத்தம் கூட்டுகின்றது.

வேரோடு முற்றிலும் தன்னை உறவுகளிடம் இருந்து துண்டித்துக் கொண்டு தேசாந்திரியாக அவன் மேற்கொள்ளும் பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள் யாவரும் அன்பைப் பற்றிக் கொண்டவர்கள்.அவர்களிடம் கேட்கவும்,பெறவும் ஏராள கதைகள் இருந்தன..மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் அவர்களிடமிருந்து புதுப்புது தொழில்களை கற்றுக் கொள்கிறான்."Career is the Invention of 20th Century' என்னும் அவனின் நிலைப்பாடு எத்தனை உண்மையானது. நிகழும் எல்லா சம்பவங்களுக்கும் தான் வாசித்த புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டிட அவனால் முடியும் என்கிறாள் அவன் சகோதரி.புத்தகப்பித்துகளுக்கு தெரியும் இதன் முழு அர்த்தம்.

மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவொன்று,அழுத்தமான வசனங்கள்.வாசிக்கும் புத்தகத்தில் மிகப் பிடித்த வரிகளை பென்சிலில் அடிக்கோடிட்டு கொண்டே வருவதை போல.. இப்படத்தின் வசனங்களை கவனமாய் குறித்துக் கொண்டேன். அத்தனையும் வாழ்க்கைப் பாடங்கள். பெற்றோர்களின் பொறுப்பு,மெய் வாழ்வின் தேடல்,Survival of the fittest என ஒன்றிற்கும் மேற்பட்ட படங்களில் தனித் தனியே சொல்லக் கூடிய விஷயங்களை திகட்டாமல்,நேர்த்தியாய் சொன்ன விதத்தில் இந்தப் படம் தனித்து தெரிகிறது.

பயணங்களும்,புத்தகங்களும் உங்களுக்கு பிடிக்குமாயின் இந்தத் திரைப்படம் உங்களுக்கானது..#MustWatch

Wednesday, February 12, 2014

அடூரின் எலிப்பத்தாயம் (1981)

கேளிக்கைகளும்,கொண்டாட்டங்களும் கொண்ட வாழ்க்கையை கனவிலும் கண்டிராத ஒரு குடும்பத்து மனிதர்களை குறித்த பதிவு.அதன் பொருட்டு அழுது,அரற்றி சோகத்தை பிழியும் திரைப்படம் இல்லை இது.மாறாக சூழ்நிலை கைதியாகிப் போன பெண்ணொருத்தியை மையமாகக் கொண்டு ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளை நுட்பமாய் விவரிக்கின்றது.

குடும்பத்தின் வீழ்ச்சியை சட்டை செய்யாத,தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள இயலாத உன்னி,கல்லூரி காலத்திற்கே உரிய கனவுகளோடு கற்பனை உலகில் மயங்கிக் கிடக்கும் ஸ்ரீதேவி, வீட்டுச் சுமையோடு,எந்நேரமும் அடுப்பங்கரையில் உழன்று கொண்டிருந்தாலும் மாறாத அன்போடு மற்ற இருவரையும் கவனித்துக் கொள்ளும் முதிர்கன்னி ராஜம்மா - இவர்களை சுற்றி நடக்கும் கதை.ராஜம்மாவாக வரும் சாரதாவின் நடிப்பு அசாத்தியம்.நேர்த்தியாக விவரிக்கப்படும் ராஜம்மாவின் பொழுதுகள் அவள் குறித்து அறிந்து கொள்ள போதுமானவை.நாலு பெண்ணுகள் திரைப்படத்தில் வரும் நந்திதாவின் கதாப்பாத்திரம் ராஜம்மாவின் சாயலை கொண்டதே.தன் திருமணத்தை தட்டிக் கழிக்கும் அண்ணன் உன்னியின் மீது அவளுக்கு எந்த வருத்தங்களும் இல்லை,வீட்டு வேலைகளில் உதவாது,அலங்கார மோகம் கொண்டு திரியும் ஸ்ரீதேவியின் மீதும் அவளுக்கு பிரியமே.





தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மட்டுமே உன்னி தன் உறவுகளை பயன்படுத்திக் கொள்கின்றான். அவனிடமிருந்து பெறுவதற்கு எதுவுமில்லை.பிறர் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே ராஜம்மாவின் வேலை,பரஸ்பர அன்பை பகிர்ந்து கொள்ள அவளுக்கு எவருமில்லை.ஊரில் இருந்து தனித்துவிடப்பட்ட அப்பெரிய வீட்டில்,ஒட்டுதல் இல்லாது இயங்கும் மூவர்.

எந்தவித மாற்றங்களும் காணாமல் தொடரும் அவர்களின் நாட்கள் எதிர்பாராத நாளொன்றில் அஸ்தமிக்கத் தொடங்குகின்றது.அவர்கள் வீட்டிலேயே ஒரு பெரிய எலிப்பத்தாயம் உண்டு.ஒவ்வொரு முறை அதில் சிக்கும் எலியை ஸ்ரீதேவி தூரத்தில் உள்ள குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரில் விடுகிறாள்.உன்னிக்கும்,ராஜம்மாவிற்கும் தெரியாத பிணியில் இருந்து தப்பிக்கும் கலையை அவள் நன்கு அறிந்து வைத்திருக்கிறாள், பின்னாளில் அதுவே அவளை அவ்வீட்டை விட்டு தூரம் போக செய்கின்றது.தீராத நோயின் காரணமாய் ராஜம்மாவும் உருகுலைந்துபோக நேரிடுகிறது.ஸ்ரீ தேவியும்,ராஜம்மாவும் இல்லாது போன வீட்டில் உன்னி எலிப்பத்தாயதிற்குள் சிக்கிய எலியைப் போல செய்வதறியாது திகைந்து வீட்டிற்குள் ஓடி ஒழிவதாக படம் முடிகின்றது.

மழை எந்தவொரு சூழ்நிலைக்கும் கணம் கூட்ட கூடியது. இப்படத்தின் இறுதிக் காட்சிகள் யாவும் மழையின் பின்னணியில் நிகழ்கின்றன.இப்பட கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வண்ணத்தில் உடை அமைத்ததில் உள்ள குறியீட்டை அடூர் தன் நேர்காணல் ஒன்றில் விளக்கியுள்ளார்(நன்றி விக்கி).ராஜம்மாவின் நீல நிற ஆடைகள் அவளின் தனிமையை,உன்னதத் தன்மையை விளக்குவதாக சொல்லியுள்ளார்,Blue Is The Warmest Color அல்லவா

கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் அடூரின் திரைப்படங்கள் தரும் நிறைவு அலாதியானது.தொடர்ந்து அவர் திரைப்படங்களை தேடிப் பார்க்க காரணமும் அதுவே.

Tuesday, November 19, 2013

கல்பட்டா நாராயணனின் சுமித்ரா (மலையாள நாவல்)


நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்த படைப்பிது.நாவலின் மனிதர்கள் நமக்கு பரிட்சயமான நபர்களை ஒத்திருந்தால் வரும் மனநிறைவு.நான் அறிந்து வைத்திருக்கும் எத்தனையோ பெண்களின் வாசம் சுமித்ராவிடம்.வயநாட்டின் ஈரத்தை தன்னிடத்தே கொண்ட பெண்ணவள்.

வயநாட்டில் கல்பட்டாவில் தன் கணவன்,மகளோடு வசிக்கும் சுமித்ராவின் உலகம் அவளை சுற்றி உள்ளவர்களால் நமக்கு அறிமுகம் ஆகிறது.கருப்பி, புருஷோத்தமன், தாசன்,அப்பு,கௌடர் என அனைவரும் சுமித்ராவின் அன்பை ருசித்தவர்கள்.கீதாவும்,சுபைதாவும் சுமித்ராவின் இள வயது தோழிகள்.அவர்களின் ரகசியத்தை அவர்களோடு சேர்ந்து கட்டிக் காத்தவள் சுமித்ரா.வயநாட்டின் தன் இருப்பை கடிதத்தின் வழி தூரத்தில் இருக்கும் அவர்களோடு உற்சாகமாய் பகிர்ந்து கொள்கிறாள்.

சுமித்ராவிற்கு மிகப் பிடித்த இடமென அவள் கொள்வது அவ்வீட்டின் பழங்கலம் (நெற் குதிர்கள்,உரல் வைத்திருக்கும் இடம்).தனது பெரும்பாலான நேரத்தை பழங்கலத்தில் கழிப்பதையே சுமித்ரா விரும்புகிறாள். புத்தகங்கள் படிப்பதற்கும்,கருப்பியுடன் ஆற அமர உட்கார்ந்து பேசுவதற்கும் அவள் தேர்ந்தெடுக்கும் இடம் பழங்கலமே.அவ்விடம் அவளுக்கு பிடித்து போனதிற்கான காரணங்கள் அவள் மட்டுமே அறிந்தது.சுமித்ரா தினமும் நான்கைந்து முறை குளிப்பவள்."த்ரா..உன் உடம்புல என்ன சேறு சொரக்குதா.." என அப்பு அவளை செய்கிறான்.பெண்களுக்கும் தண்ணீருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு இல்லியா.பெண்ணைப் போலவே தண்ணீர் இல்லாது போனால் ஜீவிதம் இல்லை.தண்ணீர்ப் பெண்ணவள்.

கல்பட்டாவிலும் சுமித்ராவிற்கொரு தோழி உண்டு.அவ்வூரில் உள்ள ஆண்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் மாதவியே அது.யாவரும் கண்டு ஒதுங்கும் அவளிடம் சுமித்ராவிற்கு தனித்த பிரியம்.அவளால் மட்டுமே மாதவியை கேலியும்,கிண்டலும் செய்து அரவணைத்துச் செல்ல முடிகின்றது.
போலவே,தேசம் முழுவதும் சுற்றித் திரிந்து ,நிலையான வேலையேதும் இல்லாமல் இருக்கும் தாசனோடான அவளின் நட்பு.அவளிடம் இருந்து அவன் வெகு தூரம் வேறுபட்டு நிற்கிறான் பயணங்களால்,சந்திக்கும் மனிதர்களால், ரசனையால். "கையிலிருக்கும் உலோகம் சொர்ணமாக மாறும் பயணங்கள் தான் எல்லா பயணமும்.." என தாசன் சந்திக்கும் சன்யாசி சொல்கிறார்.வீட்டில் அடைந்து கிடக்கும் சுமித்ரா பயணங்கள் துணை இல்லாமலும் உலோகத்தை தங்கமாக்கும் வித்தை அறிந்தவள்.அதிகம் மனிதர்கள் உடன் ஒட்டுதல் இல்லாமல் தனித்து இருக்கும் எடக்குனி நரசிம்ம கௌடருக்கு சுமித்ராவின் மீது தனி பிரியம் உண்டு.அது அவள் அவருக்கென செய்து தரும் ப்ரத்யேக உப்புமாவின் ருசியால் இருக்கலாம். அவள் அன்பின் மிகுதியாய் அந்த ருசி என்பதை அவர் அறிந்திருந்தார்.



கோழி,நாய் குட்டிகள்,அணில்,பூனைக் குட்டி,கன்றுக்குட்டி என அவள் முகம் அழுத்திக்முத்தமிடாத பிராணிகள் கொஞ்சமே.பூக்களும்,செடிகளும் அவள் விருப்பம்.வயநாட்டில் ஈரத்தில் அவை பூத்து குலுங்கும் நாட்களை திண்ணையில் அமர்ந்து ரசிக்கும் விருப்பமும் உண்டு அவளுக்கு.
சுமித்ராவிற்கு வாழ்வின் மீது குற்றசாட்டுகள் ஏதுமில்லை இல்லை.தான் காணும் மனிதர்களில் தொடங்கும் அவள் உலகம் அவர்களிடமே முற்று பெறுகிறது. 

சராசரி குடும்பப் பெண்ணின் நாட்குறிப்புகள் சுமித்ராவினுடையது."சராசரி" என்பது பொதுப் பார்வையில். உண்மையில் அவள் கவிதையைப் போல வாழ்ந்தவள்.நாவல் தொடக்கமே சுமித்ராவின் மரணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அதை நான் பொருட்படுத்தவில்லை.அவள் வாழ்ந்த வாழ்கையின் விவரிப்புகள் தந்த நிறைவு அவள் விடை பெற்றதை மறக்கச் செய்துவிட்டது.

சுமித்ரா,மழையைப் போல நதியைப் போல தான் சேரும் இடத்தை குளிர்வித்து விடை பெறுபவள்!

மார்கரெட் அட்வூட்டின் "Penelopiad " நாவலில் வருவதான இவ்வரிகள்
(முத்துலிங்கத்தின் வியத்தலும் இலமே தொகுதியில் வரும் அறிமுகம்)
எனக்கு சுமித்ராவை வாசிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.

"நீ ஒரு தண்ணீர்ப் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்..."

ஷைலஜாவின் மொழிப்பெயர்ப்பு குறித்து தனியே குறிப்பிட்டாக வேண்டும்.முன்னமே சூர்ப்பனகையும், பாலச்சந்திரன் சுள்ளிகாடின் சுய சரிதையும் ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வாசித்துள்ளேன்.மொழி பெயர்ப்பு என்று புத்தக அட்டையில் கண்டால் அன்றி நம்ப முடியாது.பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளில் புரியாத வரிகளை இரண்டு,மூன்று முறை வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.அந்த சிக்கல் இங்கில்லை.நேர்த்தியோடு கூடி நெருக்கமாகவும் உணரச் செய்கிற மொழிபெயர்ப்பு.

வெளியீடு - வம்சி

Tuesday, October 8, 2013

மாணிக்பந்த்யோபாத்யாயின் பொம்மலாட்டம் (வங்காள நாவல்)

கடந்த 50 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்துள்ள சிறந்த மொழி பெயர்ப்புகள் பட்டியலில் எஸ்.ரா இந்நாவலை குறிப்பிட்டு இருந்தார்.வங்காள இலக்கிய உலகிற்கு புது வேகம் பாய்ச்சிய தொடக்க கால எழுத்தாளர்களுள் மாணிக்பந்த் முக்கியமானவராக அறியப்படுகிறார்.சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள இந்நாவல் 1932ஆம் ஆண்டு எழுதப்பெற்றது.மலிவு விலை புத்தகங்களுக்கு மத்தியில் தள்ளுபடி விலையில் புத்தகச்சந்தையில் வாங்கினேன்.இந்த நாவாலானது அப்படி விற்கப்பட வேண்டிய ஒன்று அல்ல எனபது வாசித்ததும் விளங்கியது.

கொல்கத்தாவில் மருத்துவத்திற்கு படித்து முடித்து தன் கிராமத்திற்கு திரும்பும் சசிபாபு என்னும் இளைஞனை சுற்றி சுழலும் கதை.சசிபாபுவின் தந்தை பெரும் பணக்காரர்,பணம் ஈட்டுவதில் மட்டுமே பிரியம் கொண்டவர்.சசிபாபுவோ அதற்கு நேர் எதிர்.அப்பாவின் செல்வாக்கினால் அன்றி அவன் படித்த படிப்பை அவன் அவர்களுக்காய் செலவிடும் மேலான குணதிற்காய் கிராமத்தில் சசிபாபுவிற்கு ஏக மரியாதை.அவனுக்கு இணக்கமான ஒரு குடும்பம் உண்டு.அவன் பிரியத்திற்குரிய குஸுமாவின் குடும்பமே அது.அவள் திருமணமானவள்.அவளது கணவன் பாரான்.பரானின் தங்கை மதி.மதி காதலித்து திருமணம் செய்யும் குமுதன்.சசியின் தங்கை பிந்து.அவளின் கணவன் நந்தலால். இவர்களுக்கிடையேயான உணர்வுகளில் மிக மெல்லிய நூல் கட்டி பொம்மலாட்டம் ஆட செய்திருக்கிறார் மாணிக்பந்த்.






தொடக்கத்தில் சசிபாபு வெகு புத்திசாலி தோற்றத்தோடு வாசகனுக்கு அறிமுகம் ஆகின்றான்.கிராமத்தின் அநேக வீடுகளில் இவனிடம் யோசனை கேட்டே எதையும் செய்கின்றனர்.அவன் படிப்பின் மீதும்,உலக அறிவும் மீதும் அவர்களுக்கு தீராத பிரமிப்பு.அவனும் அவர்களில் ஒருவனாய் உருமாறி வீடு வீடாய் சென்று மருத்துவம் பார்த்து அறிவுரைகள் வழங்குகின்றான்.இருப்பினும் மதியும்,குஸுமாவும் அவனுக்கு தீராத புதிர்கள்.அந்த ஏழை பெண்கள் ஜாலங்கள் ஏதும் செய்யாது அவனின் பேரன்பை பெறுகிறார்கள்.


மதியின் காதல்..சிறு பெண்ணான மதிக்கு அவளின் கிராமத்தை தாண்டி வேறு உலகம் தெரியாது.அவ்வூருக்கு வரும் நாடக(ஜாத்ரா) குழுவில் இளவரசன் வேடமேற்கும் குமுதனை கண்டதும் காதல் கொள்கிறாள்.குமுதன் சசியின் நண்பன்.ஜிப்சியை போன்றதொரு வாழ்கையை விரும்புபவன்.இவர்களின் காதல் சசிக்கு அத்தனை உவப்பாய் இல்லை.மதியின் பிடிவாதமே வெல்கிறது.குமுதனும்,மதியும் கொல்கத்தா நகரில் கழிக்கும் நாட்களை துல்லியமாய் விவரிக்கப்படுகின்றன.அந்த பேதை பெண்ணின் அகவுலகமானது வாழ்வின் திடீர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதன் போக்கில் சத்தமின்றி பயணிக்கின்றது.குமுதனும் மதியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதலின் பொருட்டு அத்தனை ஏழ்மையிலும் வாழ்தல் இனிதாகின்றது.


குஸுமாவின் காதல்..சசிபாபுவின் மீது குஸுமா கொண்டிருக்கும் பிரியம் அவள் மட்டுமே அறிந்தது.துடுக்கான பெண்ணாய்,எப்போதும் சிறிது பேசும் குஸுமாவின் பால் ஈர்க்கப்பட்டே சசிபாபு அவள் குடும்பத்துடன் நெருக்கம் கொள்கிறான்.இவர்கள் காதல் சொல்லிகொண்ட நாளே முடிவிற்கும் வருகின்றது.குஸுமாவிடமும் சசி தோற்று போகிறான்.குஸுமாவின் கணவன் பாரானுக்கோ எல்லாமும் சசிபாபுவே.எதிலும் நாட்டம் இல்லாத விவசாயி.அவன் நிலமும்,அவன் வீட்டு பெண்களும் அவன் உலகம்.சசியோ,குஸுமாவோ அவனுக்கு துரோகம் செய்யவில்லை.அழகான தங்கள் காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றனர்.1900களின் தொடக்கத்தில் இது போன்றதொரு காதலை நாவலின் வழி உரக்க சொல்லி இருக்க முடிந்திருக்கே என்பது ஆச்சர்யம்.காதலை வகைப்படுத்துதல் சரியல்ல இல்லியா..

இவர்கள் தவிர்த்து சசிபாபுவை பெரும் பொறுப்புகளுக்கு ஆளாக்கும் யாதவ் என்னும் சாமியாரின் கதையும் உண்டு.

சசிபாபுவை சுற்றி நகரும் கதையாகினும் அவனிடத்து பெண்களே பெரும் விருட்சமென நாவல் முழுவதும் வியாபித்து உள்ளனர்.கணவன் நந்தலாலின் ஒழுங்கற்ற வாழ்கையை பொறுத்துக் கொள்ள இயலாது போராடும் சசியின் தங்கை பிந்து,சந்தேக கணவனின் பிடியில் நோயுற்று கிடக்கும் சசியின் அன்பிற்குரிய ஸேன்திதி என அவன் கண்டு வியக்கும் பெண்கள் யாவும் அக்கிராமத்தை சேர்ந்தவர்களே.படிப்பறிவும்,உலக ஞானமும் வாழ்கையை கொண்டு செலுத்த போதாது அதற்கு மேலான மனதிடமும் வாழ்வின் மீதான பிடிப்பும் அவசியம் என்பதை இவர்கள் வாயிலாய் உணர்கிறான்.மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை தாண்டி நாவலின் புலப்படும் நிதர்சனம் நம்மை வசீகரித்து கொள்கிறது.

75 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட நாவல் இது.நாவலின் சங்கதிகள் இன்றைக்கும் பொருந்திப் போவது தான் பெருவியப்பு.மேலான வாசிப்பனுபவம் தரும் படைப்பிது.கூடவே நிறைய புரிதல்களும்..!

வெளியீடு - சாகித்ய அகாதமி
தமிழாக்கம் - த.நா.குமாரசாமி
விலை - 90/-

Friday, July 26, 2013

குட்டி இளவரசன் (Le Petit Prince)

பேசி பேசித் தீராத நினைவுகள் சிறுவயது புத்தகங்கள் குறித்தவை..சிறுவர் மலரில் தொடங்கி..அம்புலி மாமா,டிங்கிள், இரும்புக்கை மாயாவி,தெனாலி ராமன் கதைகள், சிந்துபாத்தின் சாகசங்கள்,அக்பர் - பீர்பால்,ஈசாப் நீதி கதைகள் என நீளும் பட்டியல் அது.அன்றைய பொழுதுகளின் உற்சாகமும், சுவாரஸ்யமும் சிறிதும் குறையவில்லை மீண்டும் சிறுவர் புத்தகங்களை தேடி வாசிக்கையில்.

சிறுவர் இலக்கியம் விரும்புவோர் தவற விடக் கூடாத நாவல் குட்டி இளவரசன்.


1943 ஆம் ஆண்டு பிரஞ்சு மொழியில் வெளியான இந்நாவல்(Le Petit Prince ) 200 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கதை நாயகனாக சிறுவன் ஒருவன் அறிமுகமாகி தன் ஓவியங்களை குறித்து நம்மிடம் சொல்லி கொண்டே தான் சந்தித்த குட்டி இளவரசனை அறிமுகம் செய்கின்றான்.கதை நாயகன் இனி நமது குட்டி இளவரசன்.எங்கள் உலகம் கேள்விகளால் மட்டுமே நிறைந்தது என்பதை நிறுவும் வண்ணம் அற்புதமான பாத்திரப்படைப்பு.பெரியவர்கள் குறித்த அவனுடைய கருத்துகள் "அவர்கள் விசித்திரமானவர்கள்..", "அவர்கள் அசாதாரணமானவர்கள்......." ,"எண்ணிகையில் நம்பிக்கை கொண்டவர்கள்.." மறுப்பதற்கில்லை!

குட்டி இளவரசனின் பிரியத்திற்குரிய மலர் குறித்த வர்ணனைகள் சிரிப்பை வரவைப்பவை..அன்பை பொழியும் குட்டி இளவரசனிடம் எதற்கெடுத்தாலும் இருமி தன் இருப்பை காட்டி கொள்ளும் அந்த சிறு மலரை,பெண்களின் குறியீடாக கொள்ளலாம்.


பல்வேறு கிரங்களுக்கு பயணம் செய்யும் குட்டி இளவரசன் சந்திக்கும் மனிதர்கள் அவன் கூற்றுபடியே விசித்திரமானவர்கள்.கட்டளை பிறப்பிப்பதையே தன் அடையாளமாக கொண்டிருக்கும் அரசன்,தற்பெருமைக்காரன், குடிகாரன்,நட்சத்திரங்களை எண்ணி வைத்து சொந்தமெனக் கொள்ளும் வியாபாரி,ஓய்வின்றி தெருவிளக்கு ஏற்றுவதை கடமையாக கொண்டவன் என ஒவ்வொருவரையும் தன் கேள்விகளால் சந்தித்து முடித்து பூமிக்கு வருகிறான்.

பாம்பும்,நரியும் நண்பர்கள் ஆகின்றனர்.பூந்தோட்டம் அவனுக்கு ஆச்சர்யம் தருகின்றது.இங்கும் மனிதர்களே அவன் முன் விசித்திர தோற்றம் கொள்கின்றனர்.

"மனிதர்கள் நீர்ப் பிரவாகத்தில் சிக்கிக் கொள்வார்கள்.ஆனால் எதை தேடுகிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது.அவர்கள் அதற்காக அலை பாய்ந்து சுற்றிச் சுற்றி வருவார்கள்...."


கதை சொல்லி சிறுவனும்,குட்டி இளவரசனும் பரிமாறிக் கொள்ளும் ஓவியங்கள் குறித்து கட்டாயம் சொல்லியாக வேண்டும்.யானை விழுங்கிய மலைப்பாம்பின் வரைபடத்தை கொண்டே கதை சொல்லி சிறுவன் அறிமுகமாகின்றான்..பின்பு குட்டி இளவரசன் கேட்பதற்கு இணங்க இவன் பிவோபாப் மரம்,ஆட்டுக்குட்டி என படங்கள் வரைவதும்,அவன் அதை பரிகசிப்பதும் என தொடர்கின்றது அவர்களின் விளையாட்டு.

குட்டி இளவரசனின் எதார்த்த கேள்விகளுக்கு பதிலளிக்க நிதானம் அற்று பெரியவர்கள் தங்கள் வேலையில் மூழ்கி கிடக்க..அவர்களை வியந்தபடி தன் பயணத்தை தொடர்கின்றான்.

தமிழில் குழந்தைகளுக்கான படைப்புகள் அதிகம் கவனம் பெறாமல் இருப்பது வருத்தமளிக்கும் விஷயம். குழந்தைகளுக்கு கதை சொல்லியாக இருப்பது எத்தனை சௌகர்யமான விஷயம்.நாம் கேட்ட,வாசித்த கதைகளை கற்பனையுடன் சேர்த்து சொல்லிடலாம். கேட்கப்படவிருக்கும் கேள்விகள் நம்மை ஆச்சர்யபடுத்தலாம்..சில சமயம் சிரிப்பில் ஆழ்த்தலாம்.அது வேறு உலகம், அவர்களுக்கேயானது.. கேள்விகளும்,கற்பனைகளும் நிறைந்தது.அதை அழகானதாகவும்,அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிட கதைகளால் மட்டுமே சாத்தியம்!

வெளியீடு - கிரியா பதிப்பகம்