இலங்கையில் இருந்து தன் சொந்த ஊரான சாயவனதிற்கு திரும்பும் சிதம்பரம்,கரும்பு ஆலை நிறுவ விரும்பி வனம் ஒன்றினை விலைக்கு வாங்குகிறான். விவசாயத்தை நம்பி பிழைக்கும் அவ்வூரில் யாரும் வனத்தை அழிக்க கூலிக்கு வராததால்,தானே சிறுவர்கள் இருவரை துணை கொண்டு செடிகளை அகற்றி,மரங்களை வெட்டி திட்டம் வகுத்து துரிதமாய் வேலையில் இறங்குகிறான்.கொஞ்சம் கொஞ்சமாய் வனம் அழிந்து வரும் நிலையில் வாசிக்கும் நமக்கு ஒரு கசப்பான மன உணர்வை தருவதாய் உள்ளது.அதிலும் பறவைகளும்,அணில்,முயல்,காளை மாடு ஆகிய விலங்குகளும் வனத்தை அழிக்க வைத்த தீயில் இரையாவது வலி அதிகரிக்க செய்யும் வர்ணனை.

கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலில் சிறு காட்டினை தீ வைத்து அளித்து சம வெளியாக்கி,பின் அதில் குடியேறி விவசாயம் செய்த வேதி நாயக்கரின் மூதாதையர் பற்றிய குறிப்புகள் இந்நாவல் படிக்கும் பொழுது வந்து போனது.ஒரு சமூகம் செழிக்க மேற்கொள்ளப்பட்ட அந்த அழிப்பு நியாமாக தோன்றியது.சிதம்பரம் தன் விருப்பம் நிறைவேற வனத்தினை அழிக்கும் செயல் முரணாக தோன்றினாலும்,
அதில் அவன் கொண்டிருக்கும் உறுதி,சிறு சிறு தோல்விகளில் பெறும் பாடத்தை கொண்டு வரும் நாட்களுக்கான வியுகம் அமைப்பது,எப்பொழுதும் எதிர்மறை கருத்து கூறி அவனை திசை திருப்ப முயலும் ஊரார்களை சிறு புன்னகை யோடு எதிர்கொள்ளும் பாங்கு என சிதம்பரத்தின் பாத்திர படைப்பு வெகு நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
கதை தொடங்கி வெகு நேரம் வரை அது நடக்கும் காலத்திற்கான குறிப்பு இல்லை,நிகழ கால கதை எனவே கருதும் வண்ணம் செல்லும் கதையோட்டம் சுதந்திரத்திற்கு முன்பு நிகழ்வதாய் உள்ளது.நிலவின் ஒளியில் அழிந்து வரும் வனத்தை ரசிக்கும் சிதம்பரத்தின் மனவோட்டம்,சாயாவன மக்களின் ஜாதி பேதம் தாண்டிய நட்பு,திருமண சடங்குகள்,புதிதாய் தொழில் தொடங்க வந்திருக்கும் இளைஞனிற்கு அவர்கள் தரும் உற்சாகம்,முரண் பட்ட சிந்தனையால் ஏற்படும் மன பிறழ்வுகளை எளிதில் மாற்றி கொள்ளும் முதிர்ச்சி,சற்றும் மனம் தளராது எடுத்த காரியத்தில் உறுதி கொண்டு உழைக்கும் சிதம்பரம் என நாவல் முழுவதும் நாம் சாயாவன மனிதர்களிடம் கற்று கொள்ள ஏராளமானது உள்ளது.யாவருக்கும் பயன்பட்ட எக்காலமும் காய்த்து குலுங்கிய வனத்தின் புளியமரங்களை அழித்தது குறித்து சிதம்பரத்திடம் கிழவி ஒருத்தி இடிந்து கூறும் இடத்தில் அவன் கொள்ளும் அமைதி,அவன் அதுவரை செய்த முயற்சிகள் அனைத்தையும் அர்த்தமற்றதாகிவிட்டதின் குறியீடாய் உள்ளது.
வெளியீடு : கவிதா பதிப்பகத்தார்
விலை : 60 ரூபாய்









