நேற்றைய பொழுது ஈரானிய சினிமாவின் பிதாமகன் அப்பாஸின் மரணச் செய்தியோடு துவங்கியது.கண்டு நெகிழ்ந்த அவரின் திரைப்படங்களை ஒவ்வொன்றாய் யோசித்து கொண்டிருக்கிறேன்.மேலோட்டமாக அணுக முடியாதவை அப்பாஸின் படைப்புகள்.ஆழ்ந்த வாழ்வியல் தத்துவங்களை பேசுபவை அவை.
இவரது Taste Of Cherry(1997) தற்கொலை செய்யத் துணிந்தவனின் ஒரு நாள் பயணம் குறித்தது.மரணத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கும் இப்படத்தில் மரணம் முரண்பாடுகளின் இடைவெளி என்பதை தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் முன்வைத்திருப்பார்.
சுயநலத்தினால் மனிதம் சிதைவுறுவதை கிராமத்து - நகரத்து மனிதர்களின் வேற்றுமை கொண்டு பேசும் Wind Will Carry Us திரைப்படம் நெடுகிலும் இரானிய கவிதைகளை மேற்கோள் காட்டியிருப்பார்.கவித்துவம் நிறைந்து வழியும் காட்சிகளுக்கு குறைவில்லை. அப்பாஸின் ஆகச் சிறந்த படைப்பாக இத்திரைப்படம் கருதப்படுவதற்கு அதன் கருப்பொருளாக அடிப்படை மனிதநேயம் இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.
அப்பாஸ் கியோஸ்தமியின் "Ten(2002)" ஆரவாரமான டெக்ரான் நகர வீதிகளில் காரில் பயணிக்கும் நாயகி, உடன் பயணிப்பவர்களுடன் கொள்ளும் சுவாரஸ்யமான/தீவிரமான விவாதங்களின் தொகுப்பு. தன சகோதரி,ஒரு மணப்பெண்,பாலியல் தொழிலாளி என அவள் சந்திக்கும் யாவரிடமும் அவளுக்கு விவாதிக்க விஷயங்கள் இருக்கின்றன. எதிர்ப்பார்ப்பில்லாமல் எந்த உறவும் சாத்தியமில்லை என்கிறாள் பாலியல் தொழிலாளி.மற்ற பெண்களின் பேச்சில் இருந்து அது உண்மை என்றே நிறுவப்படுகிறது.நவீன வாழ்வின் பல்வேறு சிக்கல்களை வெவ்வேறு பெண்ணிய பார்வையில் முன்வைக்கிற வகையில் இப்படம் எனது விருப்பத்திற்குரியது.
"நல்ல சினிமா என்பது நம் நம்பிக்கையை பெறுவது. மோசமான சினிமாவோ நம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று .." இது அப்பாஸின் புகழ் பெற்ற வாசகம். அத்தகையதொரு நம்பிக்கையை பெற்றவையே அவரது படைப்புகள்.
"Definition of death is nothing but Closing your eyes on the beauty of the world.." என்கிற அப்பாஸின் கூற்றுப் படியே அவர் விடைபெறலை காண்கிறேன்!
Adieu Master!!
No comments:
Post a Comment