Thursday, July 26, 2012

காதலும் மரணமும்.....Pedro Almodovar's "Talk To Her"

சுயநினைவை இழந்த காதலியுடன் தீரா காதல் கொண்டிருக்கும் பெனிங்கோ என்னும் அற்புத காதலனின் கதை. பேசி பேசி தீராத காதல் கணங்கள் இவனுக்கும் உண்டு! மீண்டு வருவது நிச்சயமற்ற போதும், அயர்ச்சி அற்று அவளோடு அவன் செலவிடும் மருத்துவமனை நாட்கள்...காதல் இனிது!இவர்கள் நீண்ட நாள் காதலர்கள் இல்லை,பேசி சிரித்து மகிழ்ந்தவர்கள் இல்லை,எதிர்காலம் குறித்து திட்டமிட்டவர்கள் இல்லை... அவன் காதலை சொல்லும் முன்னர் அவள் விபத்தில் சுயநினைவை இழக்கின்றாள்.பெனிங்கோவிற்கோ அது ஒரு தடை இல்லை,அன்பு செய்ய எப்பொழுதும் தயாராய் இருக்கும் பெருங்காதலன் அவன்.
விடாது அவளோடு உரையாடி தீர்க்கும் பெனிங்கோ,அவளுக்கு சொல்லும் தான் கண்ட திரைப்பட காதல் கதை ஒன்று நெகிழ்ச்சியானது.தவறான மருத்துவ ஆராய்ச்சியினால் உடல் சிறுத்து சிறுத்து விரல் அளவு ஆகிவிடும் அத்திரைப்படத்தின் நாயகன், கொண்ட காதலின் பிடியில் இருந்து தப்பிக்க காதலியின் யோனிக்குள் சென்று உயிரை மாய்கின்றான்...புனிதம்!பெனிங்கோவின் காதலும் அது போலவே சோக முடிவை அடைகின்றது. இத்திரைப்படம் இரண்டு காதல் ஜோடிகளை குறித்து பேசுகின்றது.ஏனோ பெனிங்கோவின் காதல் மட்டுமே அதிக கனத்தை கூட்டுகின்றது.அல்மொடோவரின் "ALL I KNOW ABOUT MY MOTHER" திரைப்படம் தாய்மை குறித்து பேசும்..இதுவோ தாயாகி போன காதலனின் கதை!

பெனிங்கோவின் கதாபாத்திரம் எனக்கு கதேயின்,காதல் நாயகன் "வெர்தர்" யை அதிகம் நினைவூட்டியது.17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலைய செய்த காதல் காவியம் ,கதேயின் "The sorrows of young werther".தமிழில் இந்நாவல் "காதலின் துயரம்" என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வெர்தர்,பேரழகன்,இசை கலைஞன்,பயணங்களை விரும்புபவன்,விசித்திர நாடோடி,குழந்தைகளை நேசிப்பவன்,இயற்கையின் காதலன்......வெர்தர் காதல் கொள்ளும் யுவதியோ ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவள்.இரக்கமற்ற காதலின் தீவிரத்தால் தன்னுயிரை மாய்த்து கொள்கிறான் வெர்தர்.கேட்டு சலித்த காதல் கதை போல தோன்றினாலும்,கதேயின் விவரிப்புகளால் இது பெருங்காவியம் ஆகின்றது.

காதல் பெருந்துயரம்!!


Departures : மரணத்தின் ஊடான பயணம்...

மரணம் தோற்றுவிக்கும் பயத்தில் இருந்து தப்பியவர் எவருமில்லை. தவிர்க்க விரும்பும்,நினைவில் நிறுத்த மறுக்கும் செய்திகள் மரணம் குறித்தானவை .ஜப்பானிய திரைப்படமான "Departure " முழுக்க முழுக்க மரணம் குறித்து பேசுகிறது,அமுங்கிய குரலில்.எந்த வித பதற்றமோ,ஆர்ப்பாட்டமோ இல்லாத காட்சிகளினால்/எதார்த்த வாழ்வின் நிதர்சனங்களை காட்டி மரணம் ஒரு தவம் என எடுத்துரைக்கிறது.

ஏழ்மையின் காரணமாய் இசைக் கலைஞனான நாயகன் ,இறந்தவர்களின் உடலை சுத்தம் செய்து,கடைசி நேர சடங்குகள் செய்து தரும் நிறுவனம் ஒன்றில் தவறுதலாய் பணியில் சேர்கிறான்.தொடக்கத்தில் தன் பணியை வெறுக்கும் அவனுக்கு ஒவ்வொரு இறந்த வீட்டிலும் ஒரு அனுபவம் கிடைகிறது.அதீத அன்பின் மொழி, உச்ச குரலில் ஒலிக்கும் இடங்கள் அவை .மெல்ல மெல்ல தன் பணியை நேசிக்க தொடங்குகிறான்.மரணத்தை மிக அருகில் இருந்து பார்க்கும் அந்த தொழில்,வருமானத்தை மீறி கற்று தரும் பாடங்கள் பல .. இறந்தவரை வெறுப்பவர் எவரும் இலர்.காட்சிகளுக்கு உயிரூட்டும் பின்னணி இசை இத்திரைப்படத்திற்கு பெரும் பலம்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டிய காட்சிகள் பல.குறிப்பாக அந்நிறுவனத்தில் அவன் உடன் பணி புரியும் பெண் ,விலைக்கு தகுந்தாற்போல,வேலைபாடுகள் கொண்ட வித விதமான சவ பெட்டிகளை அவனுக்கு காட்டி சொல்லுவது.."மரணத்திற்கு பிறகு உனக்கான தேர்வுகள் உனதில்லை......"! என்பது.

கதையில் உலவும் மனிதர்கள் யாவரும் அன்பை பற்றிக்கொண்டவர்கள்.அவன் நிறுவனத்தின் தலைவர்,உடன் பணிபுரியும் பெண்,அவன் பால்ய கால சிநேகிதன்,கட்டண குளியல் அறை நடத்தும் நண்பனின் தாயார்,அங்கு வரும் முதியவர் என அவன் சந்திக்கும் மனிதர்கள் யாவருக்கும் அவனிடத்து பகிர காரியங்கள் உண்டு."மரணம் முடிவு அல்ல,அடுத்த நிலைக்கு செல்வதற்கான வாசல் வழி...." என வரும் முதியவரின் கூற்று உணர்த்துவது ஏராளம்.சிறு வயதில் தன்னையும்,தாயையும் விட்டு சென்ற தந்தையை குறித்து அவன் நினைவில் இருந்து மீட்டெடுக்கும் காட்சிகள்..கவிதை!

"ஆதியில் மொழி தோன்றுவதற்கு முன்னர், மனிதர்கள் தம் உணர்வுகளை கூழாங்கற்களை பரிமாறி பகிர்ந்து கொண்டனராம்.அன்பை சொல்ல மென்மையான கற்களையும்,துயரத்தை பகிர முரடான கற்களையும் பரிமாறி கொள்வார்கள்.." என அவன் தந்தை அவனுக்கு சொல்லி சென்ற கதை ஒன்று திரைப்படத்தின் சாரத்தை உணர்த்துவது.மரணத்திற்கு முன்பான நம்முடைய தேர்வுகள் யாவும் நம்முடையதே..அதன் பொருட்டு அன்பை பரிமாறும் கற்களை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் கொள்ள அவசியம் இல்லை!


4 comments:

உலக சினிமா ரசிகன் said...

இரு படங்களையும் பார்த்திருக்கிறேன்.

ஹைக்கு பாணி விமர்சனம்...உங்களுக்கு கை வந்த கலை.
வாழ்த்துக்கள்.

Jegadeesh Kumar said...

ரொம்ப நாள் கழித்து எழுத வந்ததில் மகிழ்ச்சி.
அல்மதோவரின் படம் பார்த்திருக்கிறேன். கதையை ஓர் இசை நாடகம் போல் சொல்லும் அவரது பாணி உவப்புக்குரியது.

K.சரவணக்குமார் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதியுள்ளீர்கள். சிறப்பான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் . உங்கள் பதிவின் வழி யுவனின் மணற்கேணி வாசித்தேன். அதன் மூலம் இன்று அவருடன் நல்ல நட்பில் உள்ளேன். நன்றி!

K.சரவணக்குமார் said...

நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதியுள்ளீர்கள். சிறப்பான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் . உங்கள் பதிவின் வழி யுவனின் மணற்கேணி வாசித்தேன். அதன் மூலம் இன்று அவருடன் நல்ல நட்பில் உள்ளேன். நன்றி!.