Monday, February 14, 2011

யுவனின் "மணற்கேணி"

"யுவன் சந்திரசேகரையும் கதைசொல்லி என்றே சொல்ல வேண்டும். கதைசொல்லிகள் எப்போதுமே சொல்லும் உற்சாகத்தில் ஆழ்ந்து போகிறவர்கள். நுண்ணிய அகத்தைவிட அழகிய புறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். செறிவை விட சரளத்தை சாதிப்பவர்கள். எத்தனை தூரம் இயல்பாக அவர்களின் எழுத்து நிகழ்கிறதோ அத்தனை தூரம் அவை சிறந்த கலைப்படைப்பாக ஆகின்றன. யுவன் சந்திரசேகரையும் அவ்வகையில் தயக்கமில்லாமல் சேர்க்கலாம்."

- ஜெமோயுவனின் எழுத்துக்களில் விரியும் மாய வெளியை வாசித்து உணர்ந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல.புனைவின் உச்சம் என நான் கருதும் குள்ள சித்தன் சரித்திரத்தில் கிடைத்தது யுவனின் முதல் அறிமுகம்.ஒளி விலகல்,ஏற்கனவே,பகடையாட்டம் என தொடர்ந்து வாசித்த யுவனின் படைப்புகள் தந்து சென்ற அனுபவத்தை வார்த்தைகளில் சொல்ல தெரியவில்லை...ம்ம்....மாயவெளிப் பயணம் என கொள்ளலாம்.மணற்கேணி இவற்றிற்கு மாறான தொகுப்பு.கதையா, கட்டுரையா,சுயசரிதையா என்ற கேள்விகளுக்குள் அடங்காது எல்லாமுமாய் உள்ளது.

"ஒரு மாபெரும் மரத்தையும் அதன் அடித்திண்டாக அமைந்த சிமென்ட்டுத் திண்ணையையும் ,நன்கு விளைந்த ஐந்து மனித உருவங்களையும் ஒரு சின்னஞ்சிறு நெஞ்சுக்குள் சுமப்பது எளிதா என்ன?இவற்றின் மொத்த எடையை விட,ஒரே ஒரு கோணல் வகிட்டின் எடை இன்னும் அதிகம்.."

வாசிக்கும் புத்தகத்தில் பிடித்த வரிகளை கோடிட்டு வைப்பது வழக்கம்.மாறாய் இத்தொகுப்பில் பிடித்த வரிகள் வரும் பக்கத்தின் நுனியை மடித்து வைத்து கொண்டே வந்ததில்...அனேகமாய் எல்லா பக்கங்களும் மடிப்பில் இருந்து தப்பவில்லை என வாசித்து முடித்ததும் அறிந்தேன். வாழ்வனுபவங்களை சுவாரஸ்யம் கூட்டி,எளிமையான வார்த்தைகள் கொண்டு விவரிக்கும் 100 குறுங்கதைகளின் தொகுப்பு மணற்கேணி.

"மனநிலை பிறழ்வு என்றெல்லாம் எதுவும் கிடையாது.மரபணு வழியாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் ஒவ்வொரு தனிமனமும் ஒரு ஸ்திதிக்கு வந்து சேர்க்கிறது.அதை சரி என்றும் தவறு என்றும் நிர்ணயிப்பதற்கு பிறருக்கு அதிகாரம் கிடையாது.உடல் ஊனமுற்றவர்களுடன் சகஜமாக கோ-எக்சிஸ்ட் பண்ண கற்று கொண்டுவிட்ட சமூகத்துக்கு மாற்று மனநிலையாளர்களுடன் வசிப்பது எப்படி என்று இன்னும் தெரியவில்லை............."

யுவனின் பிரதியாய் கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரத்தின் வழியே,கடந்து வந்த மனிதர்களை குறித்த கூர்மையான அவதானிப்பை முன்வைத்து சொல்லப்படும் கதைகள்.சொல் வித்தைகள் எதுவும் இன்றி எளிமையான சம்பவங்களின் மூலம் அம்மனிதர்களின் ஊடே நாமும் நடமாட முடிகின்றது. இஸ்மாயில், ரவி, அனுராதா, விசாலாட்சி,தபால்காரர் சுப்பிரமணியம்,தாயம்மா பாட்டி, வேங்கோபராவ், பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் சந்திக்க நேரிடும் போலீஸ்காரர், எதிரியாகி போன ஜப்பானிய நண்பன் ஒருவன்,மலாவி தேசத்து மாணவன்,பெயர் குறிப்பிடப்படாத காதலி என உயிர் பெற்று உலவும் மனிதர்கள் அநேகம்.

குறிப்பாய் வங்காள விவசாய கிராமத்தில், இரவொன்றில் சந்திக்க நேரிடும் அக்கிழவர் ..வார்த்தைகள் அற்று அவரோடு நிகழ்ந்த உரையாடல் என நீளும் அக்கதை யுவன் பாணியிலான புனைவாக இருக்க கூடும் முடிவு செய்து கொண்டேன்.இத்தொகுப்பில் வரும் கீழ் உள்ள வரிகள் என் போன்றவர்களுக்கு தான் போல....

"கடந்த சில வருடங்களில் எனக்கென்று உருவாகி இருக்கும் வாசகர்களில் பலரும்,நான் சொல்லும் நிஜமான செய்திகளில் கூட புனைவின் நெடியை நுகரும் வல்லமை கொண்டவர்கள்"
அப்பாவை ஆதர்ச நாயகனாய் கொள்ளாதோர் யாரிங்கே? தந்தையை குறித்தான யுவனின் தொடர்ச்சியான குறிப்புகள் அளப்பரிய பிரியத்தை சொல்லுபவை.இத்தொகுப்பில் பல கதைகள் தந்தையோடு கரட்டுப்பட்டியில் கழித்த நாட்களை பற்றி பேசுபவை.நடுத்தர வாழ்வின் சிக்கல்கள் உறவுகளை முன்வைத்து தொடரும் சங்கடங்கள்... சமநிலையை பாதிக்கும் எல்லா சம்பவங்களுமே எல்லாருக்கும் பொதுவானவையே.முடிந்த வரை இவை யாவும் கழிவிரக்க மனநிலையில் இருந்து விலகி பகடி கூட்டியே முன்வைக்கப்படுகின்றன.யுவனிற்கு கைகூடும் பகடி இங்கு அரிதாய் காணக்கிடைப்பது..ஒரு கதை இவ்வாறாக தொடங்குகின்றது.

"மகாவாக்கியங்களை இன்ன சந்தர்ப்பத்தில் இன்னார் உதிர்ப்பார் என்று யூகிக்க இயலாது.முந்தைய வாக்கியத்தில் ஒரு சிறு மிரட்டல் இருக்கிறதல்லவா?ஒன்றுமில்லை,இந்த பத்தியை ஒரு கனமான வாக்கியத்துடன் தொடங்க ஆசையாய் இருந்தது.தொடங்கி விட்டேன்.அதற்கு மேல ஒன்றுமில்லை."


சோழவந்தான்,கரட்டுப்பட்டி தொடங்கி.. தல்லாகுளம், கோரிப்பாளையம்,சிம்மக்கல்,ஜெய்கிந்தபுரம்,குரு தியேட்டர்,காலேஜ் ஹவுஸ் என மதுரை நகரின் ஊடே பயணித்து சென்னையில் முடிவற்று தொடர்ந்து கொண்டிருக்கும் பயணம்... முன்னும் பின்னுமாய் கலைத்து போடப்பட்டுள்ள சம்பவங்கள்..முரணான குணாதிசியங்கள் கொண்ட மனிதர்கள்... கொண்ட இத்தொகுப்பு கலைவையான மனநிலையை தந்தது. கால ஓட்டத்தில்,முற்றிலுமாய் தொடர்பு துண்டிக்கப்பட்ட சில முகங்களை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்ய தூண்டுவதே இத்தொகுப்பின் வெற்றி.

வெளியீடு - உயிர்மை

27 comments:

ராம்ஜி_யாஹூ said...

பதிவிற்கு நன்றிகள் லேகா

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

வாசிக்கத் தூண்டும் விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

Krishnan said...

Currently reading Yuvan's short stories collection (Kizhakku publication) and yes it is a new experience for me reading his stories.

லேகா said...

நன்றி ராம்ஜி

நன்றி கனாக்காதலன்

லேகா said...

கிருஷ்ணன்,

நீங்க சொல்ற யுவனோட சிறுகதை தொகுப்பிற்கான அறிமுக கட்டுரைல தான், நான் குறிப்பிட்டு இருந்த ஜெமொவோட குறிப்பு இருந்தது.யுவனோட ஒளி விலகல் மற்றும் ஏற்கனவே சிறுகதை தொகுப்புகள் வாசிச்சு இருக்கேன்.முழுத்தொகுதியும் வாசிக்கணும்.நினைவூட்டியதிற்கு நன்றி.

யுவனோட நாவல் , "குள்ள சித்தன் சரித்திரம்" படிங்க..அசல் யுவன் பாணியிலானது!

அ.மு.செய்யது$ said...

யுவன் சந்திர சேகரின் முழு சிறுகதை தொகுப்பு ( மேலே குறிப்பிட்டவாறு )
படிக்க தவறாதீர்கள்.( தலையணை சைஸ் 350 ரூபாய், )

யுவனின் எழுத்துகளுக்கு இணையாக தற்காலத்தில் யாரையும் குறிப்பிட முடியாது என்பது என்னுடைய அனுமானம்.

முழுமையாக வாசித்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.

இருப‌த்து மூன்று காத‌ல் க‌தைக‌ள்
நூற்றிச் சொச்ச‌ம் ந‌ண்ப‌ர்க‌ள்
த‌ப‌ஸ்வினி
வ‌ருகை
விருந்தாளி.

என்ன சொல்ல....! Brilliant of All time.

அ.மு.செய்யது$ said...

அந்த 350 ரூபாய் புத்தகம், கிழக்கு தள்ளுபடியில் 60 ரூபாய்க்கு தந்தார்களாம்.

வருத்தமாக இருந்தது.அதே நேரத்தில் அந்த எழுத்து எல்லோரையும் போய் சேருமே என்று மகிழ்ச்சியாகவும் இருந்தது.

Sugirtha said...

//மனநிலை பிறழ்வு என்றெல்லாம் எதுவும் கிடையாது.மரபணு வழியாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் ஒவ்வொரு தனிமனமும் ஒரு ஸ்திதிக்கு வந்து சேர்க்கிறது.அதை சரி என்றும் தவறு என்றும் நிர்ணயிப்பதற்கு பிறருக்கு அதிகாரம் கிடையாது.உடல் ஊனமுற்றவர்களுடன் சகஜமாக கோ-எக்சிஸ்ட் பண்ண கற்று கொண்டுவிட்ட சமூகத்துக்கு மாற்று மனநிலையாளர்களுடன் வசிப்பது எப்படி என்று இன்னும் தெரியவில்லை............." //

இந்த பத்தி மிக பிடித்தது. எனக்கு இது நல்ல அறிமுகம். நல்ல பதிவு லேகா. நன்றி.

லேகா said...

யுவனின் சிறுகதை தொகுப்பு குறித்த அறிமுகத்திற்கு நன்றி செய்யது. லாண்ட்மார்க்கில் அந்த புத்தகம் கிடைக்கின்றது.அவசியம் வாசிக்கின்றேன்.வருகையும் விருந்தாளியும் வாசித்துள்ளேன்.நன்றி.

நன்றி சுகிர்தா :)

அன்பேசிவம் said...

ஒரு பத்து கதைகளை வாசித்தபின்னர், அந்த எழுத்தாளரின் வேறொரு கதையை வாசிக்கும்போது இது இன்னார் எழுதியது என்று ஒரு பிம்பம் உருவாகுமே, யுவனிடம் அதற்கு வாய்ப்பே இல்லை, ஒவ்வொரு கதையிலும் அசரடிக்கும் மாதிரியாக ஒவ்வொரு தொணி.
நல்ல அறிமுகம், முழுத்தொகுப்பில் இன்னும் வாசிக்கவேண்டியிருக்கிறது.
நன்றி லேகா, நினைவூட்டியமைக்கு... :-)

லேகா said...

//ஒரு பத்து கதைகளை வாசித்தபின்னர், அந்த எழுத்தாளரின் வேறொரு கதையை வாசிக்கும்போது இது இன்னார் எழுதியது என்று ஒரு பிம்பம் உருவாகுமே, யுவனிடம் அதற்கு வாய்ப்பே இல்லை//

உண்மை தான் முரளி :) யுவன் பாணி அசலானது..

ராம்ஜி_யாஹூ said...

http://www.vallinam.com.my/issue27/vannanilavan.html

இனியாள் said...

நல்ல பகிர்வு லேகா. சமீபத்தில் நானும் மணற்கேணியை வாசிக்க நேர்ந்தது, இயல்பான வார்த்தைகளில் அற்புதமான விஷயங்களை சொல்லி செல்லும் யுவனின் நடையை வாசிக்கும் அனைவருக்குமே பிடிக்கும் என்று தான் தோன்றுகிறது. என்னை அதில் மிகவும் பாதித்த விஷயங்கள் எனின், மனநிலை பிறழ்ந்த நண்பனை பார்க்க நேரும் தருணம், எதிர்பாராமல் நடக்கும் வழிப்பறிக்கு பிறகான மனநிலை, அப்பாவுடனான பகிர்வுகள் எல்லாமே மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவே இருந்தது.

எஸ்.கே said...

வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_18.html

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிகவும் ஆழ்ந்த, அர்த்தமுள்ள பதிவு லேகா.பகிர்விற்கு நன்றி.

ரா.கிரிதரன் said...

இப்பதான் படித்தேன் லேகா. அவருடைய சில சிறுகதைத் தொகுப்புகள் படித்திருக்கேன். மண்ற்கேணி ரொம்ப பிடித்தது. நன்றி.

அகநாழிகை said...

அருமையான விமர்சனம் லேகா. வாழ்த்துகள்.

லேகா said...

நன்றி இனியாள்.யுவனோட மற்ற படைப்புகளும் வாசிங்க..குள்ள சித்தன் சரித்திரம் மற்றும் ஒளி விலகல் சிறுகதை தொகுப்பு நல்லா இருக்கும்.

மிக்க நன்றி எஸ்.கே

நன்றி புவனேஸ்வரி

லேகா said...

நன்றி கிரிதரன்.

நன்றி வாசு.

Unknown said...

அருமையான பகிர்வு லேகா. குள்ள சித்தன் கதையைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். யுவனின் மற்றைய படைப்புக்கள், கவிதைகள் உட்பட படித்திருக்கிறேன். இரண்டு நாட்கள் முன்னர் தான் கன்னிமரா நூலகத்தில் அவரது “நீர்ப்பறவையின் தியானம்” எடுத்து வந்தேன். அவ்வப்போது சஞ்சிகைகளில் வாசித்திருந்தாலும் தொகுப்பாக படிக்கும் போது அற்புதமான வாசிப்பானுவத்தை தருகிறது. புத்தகத்தைப் பற்றி தனியாக பதிவு எழுத வேண்டும்...நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.

புத்தகத்தை வாசிப்பதோடு மட்டும் இல்லாமல் அருமையான வரிகளை கோடிட்டு, இவ்வளவு அழகான பதிவை உன்னால் மட்டும்தான் லேகா எழுத முடியும். Yuvan deserves this appreciation abd so you are.

பகிர்வுக்கு நன்றி லேகா...

Anonymous said...

vimarsanam arumai lega

Anonymous said...

u know about buzz..google documents...but u dont know about google form with 100% width...see it here

https://docs.google.com/spreadsheet/embeddedform?formkey=dDgwazVPTEVmc1lHbC12OVNra3k2Y3c6MQ

....d...

Rettaival's Blog said...

யுவனின் "ஊர்சுற்றிக் கலைஞன்" படித்திருக்கிறீர்களா..?

Rettaival's Blog said...

யுவனின் "ஊர்சுற்றிக் கலைஞன்" படித்திருக்கிறீர்களா..?

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் லேகா. தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

sugi said...

ஹலோ மேம், வணக்கம். எனக்கு உங்க blog அறிமுகம் twitter மூலம் கிடைச்சது. நான் நீங்க அறிமுகப்படுத்தியிருக்கிற எல்லா புக்ஸ் லிஸ்ட்டையும் எடுத்துட்டேன். இங்க லண்டன்ல இருக்கிறதால, எனக்கு இப்படி ஒரு அருமையான புத்தகங்களை எல்லாம் அறிமுகம் செய்றதுக்கு யாருமில்ல..பேசறத்துக்கு கூட..தொடர்ந்து எழுதுங்க மேம், ப்ளீஸ்.. எவ்ளோ சந்தோஷம் உங்க blog கிடைச்சது. எனக்கும் சம்பத்தோட `இடைவெளி` நாவல் உங்களுக்கு டைம் கிடைக்கிறப்போ அனுப்புங்க மேம்.. நன்றிகள் பல பல..
sugiarul@gmail.com

sugi said...

ஹலோ மேம், வணக்கம். எனக்கு உங்க blog அறிமுகம் twitter மூலம் கிடைச்சது. நான் நீங்க அறிமுகப்படுத்தியிருக்கிற எல்லா புக்ஸ் லிஸ்ட்டையும் எடுத்துட்டேன். இங்க லண்டன்ல இருக்கிறதால, எனக்கு இப்படி ஒரு அருமையான புத்தகங்களை எல்லாம் அறிமுகம் செய்றதுக்கு யாருமில்ல..பேசறத்துக்கு கூட..தொடர்ந்து எழுதுங்க மேம், ப்ளீஸ்.. எவ்ளோ சந்தோஷம் உங்க blog கிடைச்சது. எனக்கும் சம்பத்தோட `இடைவெளி` நாவல் உங்களுக்கு டைம் கிடைக்கிறப்போ அனுப்புங்க மேம்.. நன்றிகள் பல பல..
sugiarul@gmail.com