Wednesday, January 12, 2011

ஹீப்ரு மொழிச் சிறுகதைகள்

ஹீப்ரு மொழிச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான "Not Just Milk and Honey " யின் தமிழாக்கம் "பூந்தென்றலோ வாழ்க்கை" என்னும் இத்தொகுப்பு. மொழிபெயர்ப்பு கதைகள் தரும் வினோத மனநிலையை சற்று அதிகமாகவே இச்சிறுகதைகளில் பெற முடிந்தது.அறிமுகமற்ற தேசமும்,அதன் மக்களும் கற்பனையில் இயல்பாய் விரிவது மொழிப் பெயர்ப்பின் வெற்றி.இதில் அது சிக்கலின்றி சாத்தியப்பட்டுள்ளது..புலம் பெயர் வாழ்வின் துயரங்களும்,தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களால் அலைகழிக்கப்படும் யூதர்களின் சோக நிலையும் இக்கதைகளின் ஊடே முன்வைக்கபடுகின்றன.பெரும்பாலான கதைகள் பிரிவின் வாதையோடும், யுத்த காலத்தின் பதற்றத்தோடும் பிரியமானவர்களுக்காய் காத்திருக்கும் சபிக்கப்பட்ட காதலிகளை குறித்தவை.

"....இனப்படுகொலைகள்,போர்,பெரும் அரசியல் மாற்றங்கள் என்று அல்லல்பட்டு வாழ்ந்த காலங்களில் மாற்றமும் அமைதியும் வேண்டி துடித்த துடிப்புகளையும்,ஏற்பட்டு வந்த மாற்றங்களை பிரதிபலித்து,அவற்றை தன்னுள்ளே ஒரே அங்கமாகக் கொண்டு ஹீப்ரு படைப்பிலக்கியம் உருவாகிற்று....."

- முன்னுரையில்


இத்தொகுப்பில் என்னை கவர்ந்த சில கதைகள்..........

"கிளாரா ஷியாதோவின் அழகிய வாழ்க்கை" - யோராம் கனியுக்

ஒரு பெண்ணின் சிறு வயது தொடங்கி மரணம் வரையிலான சம்பவங்களின் அழகிய கோர்வை இக்கதை.இழப்புகளை மட்டுமே கொண்டு நகரும் கிளாராவின் வாழ்க்கை போர் கால பயங்கரத்தின் ஊடே சொல்லப்படுகின்றது.பிரியத்திற்குரிய தந்தையின் மரணம்..கிறிஸ்துவ பாதரியாய் தூர தேசம் போன மகன்..காதலனின் எதிர்பாரா மரணம் ..என தொடர்ச்சியான வருத்தங்களுக்கிடையே அவளை உயிர்ப்பித்து கொண்டிருப்பது சிறுவயதில் அவள் கண்டிருந்த அந்த பசிய பொன் நிற கண்கள்.அந்த கண்களுக்கு உரிமையானவன் சாமுவேல் அபுமென்..சுழற்றி அடித்த வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை தன் பால்ய சிநேகிதன் அபுமேனோடு கழித்திட தான் கிளாரா அத்தனை துன்பங்களையும் கடந்து வந்திருக்கிறாளோ என்னும் படியான முடிவு.தேர்ந்த நாவலின் குறு வடிவமாகவே இக்கதை தோன்றியது.




"பன்றியை உடைத்தல்" - எட்கர் கீரத்

பொம்மையின் மீது பேரன்பு கொண்ட சிறுவனின் அகவுலகை நேர்த்தியாய் சொல்லும் கதை.வேண்டும் பொம்மைகள் அனைத்தும் எல்லா சிறுவர்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை.கிடைக்கும் பொம்மைகளிடம் அவர்கள் கொள்ளும் பிரியம்,அவற்றோடு வரிந்து கொள்ளும் அவர்களுக்கே உரித்தான ப்ரேத்யேக உலகம் நாம் உணர்ந்து உட் புக முடியாதது.சிம்சன் பொம்மை வேண்டி,அது கிடைக்காது மாற்றாய் பெற்ற பன்றி உண்டியல் பொம்மையோடு சந்தோஷப்பட்டு கொள்ளும் சிறுவன்,அதன் வருகையையும் விலகலையும் நேரடியாய் நம்முடன் பகிர்கின்றான்.சேமித்து வைத்திருக்கும் பணத்திற்காய் உடை பட போகும் பொம்மையை,தந்தையிடம் இருந்து காக்கும் பொருட்டு அதை யாரும் அறியாமல் வயல் வெளியில் விட்டு வீடு திரும்பும் அச்சிறுவனின் மீது இனம் புரியா பற்றுதல் வருவதென்னவோ உண்மை.

"வெள்ளை" - லீஹ் எய்னி

குற்ற உணர்ச்சியில் உழலும் சராசரி மனிதனின் உணர்வுகளை வெகு அருகில் கண்டடைந்த உணர்வை தரும் இக்கதை இத்தொகுப்பில் குறிப்பிட தகுந்த ஒன்று.சோம்பல் நிறைந்த பகல் பொழுதொன்றில், மன சோர்வில் இருந்து முழுதுமாய் விடுபட முயன்று தோற்கும் தனிமையில் சந்திக்க நேரும் சிறுவனுக்காய் உடைகள் தைக்க ஒத்து கொள்ளும் தையல்காரன் - அச்சிறுவனோடு வரும் பெண்ணிடம் பெரும் உபகாரம் - வெகு நாட்களாய் அவ்வுடையை வாங்க வராத அவர்களுக்காய் காத்திருக்கும் தருணங்கள் - சிறுவனின் மரணம் - வெள்ளை நிறம் ஏற்படுத்தும் மரண பீதி என இக்கதை குறியீடுகளை கொண்டு கலவரமானதொரு மனநிலைக்கு இட்டு செல்கின்றது.

"ஒரு நல்ல இடம்" - ரூத் அல்மோக்

இக்கதை இவ்வாறாக தொடங்குகின்றது..

"ஸிலா கஸ்தான் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய வாழ்க்கையில் இரண்டே விருப்பங்கள் தான் உண்டு.ஒன்று அவளது மகன் அரிலாஹ் மற்றது அவளுடைய பாலாலைகா.........."

இவ்விரு வரிகளில் இக்கதை முழுதுமாய் அடங்கி விடும்.தன் பிரியத்திற்குரிய இசைக்கருவியை இசைப்பதில் மகனும் வல்லவன் ஆக வேண்டும் என விரும்பும் தாய்.அவ்விருப்பத்தை தனக்குள்ளே வைத்து அவன் போக்கில் விடுகிறாள்.போரில் சில காலம்,தந்தையின் தோல் தொழிற்சாலையில் சில காலம்,இறுதியாய் நிரந்தரமாய் பிரிந்து தூர தேசம் செல்லும் அரிலாஹ், இசைப்பதை அவள் ஒருபோதும் கேட்டாலில்லை.மகனை நினைத்து மலை மேடுகளில் - வெளிச்சமற்ற வீட்டு முற்றத்தில் - நாடோடி பாடல்களை தன் இசைக்கருவியில் இசைத்து கொண்டே இருந்த ஸிலாவின் பாடல்கள் குறித்தான விவரணைகள் - கவிதை.ஸிலாவின் பிராத்தனைகள் ஏற்று கொள்ளப்படுகின்றன இறுதியாய் - திடீரென தொலைந்து போகும் அரிலாஹ்,பல வருட தேடலுக்கு பிறகு நாடோடி இசைக் கலைஞனாய் கடற்கரையோரம் சுற்றி அலைந்ததாய் அறியப்படுகிறான்.அதனினும் நெகிழ்ச்சியான செய்தி ஒன்றும் இக்கதையில் உண்டு.

"தெருவின் குறுக்கே மோர்கானா" - யெகுடித் ஹென்டெல்


" கதவின் இடைவெளிகளில் நுழைந்து வந்த ஒளி கசங்கிக் கிடந்த படுக்கை விரிப்பிலும் தலையணை மீதும் வெளிறிய கோடுகளை வரைந்தது.படுக்கையில் உட்காரவும் அஞ்சினால்.அவள் முகம் குளிர்ந்து போய் இருந்தது.கன்னத்தில் கவனத்தோடு லேசாக தட்டிக் கொண்டால்.யாருடைய கரங்களில் யார் சுருண்டு கிடந்தது என்பதை நினைத்து பார்க்க முயன்றால்.ஒளி வண்ணத்து பூச்சிகள் படுக்கையில் நடனமாடின.அவள் கைகளிலும்,தோளிலும் தங்க வண்ண ஒளிக்குமிழ்கள் மிளிர்ந்தன..........."

இத்தொகுதியில் எனக்கு மிகப்பிடித்த கதை.எப்போதுக்குமான தேவதை கதைகளை ஒத்திருந்தது காரணமாய் இருக்கலாம்.சில நாட்கள் தன்னோடு இருந்து,பின் சொல்லாமல் விட்டு சென்ற காதலனை(?), எதிர் நோக்கி காத்திருக்கும் யுவதியை குறித்த கதை.காத்திருத்தலின் வலிக்கு நினைவுகளே ஒத்தடம்.அவன் பரிசளித்து சென்ற வெள்ளை நிற,பூ வேலைபாடுகள் கொண்ட குடையுடன் வீதியில் தோன்றும் மோர்கானா - அவன் சார்ந்த நினைவுகளை அசை போட்டபடி - பருவ கால மாற்றங்களில் கூட அக்கறை இன்றி, தான் மேகங்களின் மீது நடப்பதாய் சொல்லி திரிகிறாள். அவனோடிருந்த ஒவ்வொரு நாளும் அவளின் நினைவுகள் வழியே வாசகனுக்கு விவரிக்கபடுகின்றது.நினைவுகளில் மட்டுமே மூழ்கி திளைக்கும் அவளுக்கேயான காதல் கணங்கள்...அற்புதமான கதை.

உலகின் மிகத் தொன்மையான மொழி ஒன்றின் இலக்கியம் எவ்வாறிருக்கும் என்னும் ஆவல் மேலிட வாசிக்க தொடங்கினேன். கொஞ்சமும் ஏமாற்றம் அளிக்காத கதைகள்.யூதர்களின் வாழ்க்கைமுறை,பிரதான தொழில்கள்,யுத்த காலத்தில் சாதாரணர்களின் நிலை,இசை மீது அவர்களுக்கிருந்த அதீத பிரியம் குறித்தான செய்திகள் சுவாரஸ்யமானவை. எல்லா கதைகளின் பின்னணியிலும் ஒரு குரல்,மென் சோக பாடல் ஒன்றை தொடர்ந்து இசைத்தபடி வருவதான மாயை.... ஸிலா கஸ்தானின் பாடலைப் போல,மோர்கானாவின் காதலைப் போல!

தொகுப்பாசிரியர் - ஹயா ஹோப்மேன்
தமிழாக்கம் - த.சித்தார்த்தன்
வெளியீடு - நேசனல் புக் ட்ரஸ்ட்
விலை - 60 ரூபாய்

10 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றிகள் லேகா

பதிப்பகத்தின் /புத்தக விற்பனை நிலையத்தின் தொலைபேசி எண், இணையதள முகவரியும் கொடுத்தால் வாங்குவதற்கு வசதியாக இருக்கும்.

WordsBeyondBorders said...

யூதர்களின் வாழ்கை சார்ந்து 'Cynthia Ozick', 'Michael Chabon' போன்றோரும் ஆங்கிலத்தில் எழுதி உள்ளனர். 'Primo levi ', யூத வதை முகாம்களை பற்றிய முக்கிய ஆக்கங்கள்
தந்துள்ளார்.

அஜய்

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி லேகா.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமையான அறிமுகம் சகோ. பகிர்வுக்கு நன்றி.

லேகா said...

நன்றி ராம்ஜி

நன்றி சரவணன்

நன்றி கனாக்காதலன்

லேகா said...

மிக்க நன்றி அஜய்.இந்நூலின் மொழிப்பெயர்ப்பு அத்தனை சிறப்பாக இல்ல.புரிதலில் சிக்கல் இருந்தது. நேரடி ஆங்கில மொழி பெயர்ப்பை வாசிப்பதே உத்தமம்.

உங்க வலைத்தளம் குறித்து மகிழ்ச்சி.தொடர்ந்து சிறப்பாய் எழுத வாழ்த்துகள் :)

Krishnan said...

Lekha, surprised to see no posts about just concluded Chennai Book Fair. Not in town ?

Piraisoodi said...

Hi,

I have this book, but i didnt started as of now, Will ping you soon once it is done!!!

Me discussed this book with writer charu and prapanchan, they said one author to read b4 to go, i forget the writer name! soon i will forward the same to you!!

Thanks for your work!!! I think writer muttulingam will like this article!!!

Bye

vks said...

உங்களுடைய வலை தளத்தை நான் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் மக்களுக்காக .... அதே சமயம் என்னுடைய வலைத்தளத்தை நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்ககளை சொல்ல வேண்டும் நான் ஆசைப்படுகிறேன் நான் ஒரு உதவி இயக்குனராக பணி புரிந்து வருகிறேன் என்பதை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன் நன்றி ......
http://vkschellam.blogspot.com/

பாலாஜி said...

வணக்கம்,

தங்களின் எழுத்துகள் அருமை. ஆழ்ந்த

இலக்கிய வாசிப்பு உள்ளவர் என்பதை தங்களின்

எழுத்துகள் உணர்த்துகின்றன. ஒரு சிறு

கருத்தை இங்கு சொல்ல விரும்பிகிறேன்.

இலக்கியத்தின் விவரணைகள் போன்று சற்று

இலக்கணத்திலும் கவனம் செலுத்தினால்

இன்னும் சிறப்பாக இருக்கும் என

நினைக்கிறேன். காட்டாக

மொழிப்பெயர்ப்பு -- மொழி பெயர்ப்பு
குறுங்கதை தொகுப்பு -- குறுங்கதைத்தொகுப்பு
கட்டுரை தொகுப்பு -- கட்டுரைத்தொகுப்பு
இலக்கிய பயணம் -- இலக்கியப்பயணம்

சிலவற்றில் நல்ல தமிழ் சொற்களைப்

பயன்படுத்தினால் உங்கள் எழுத்துகளை

தொடர்ந்து வாசிப்பவர்களை அது விரைவில்

சென்றடையும் வாய்ப்புள்ளது. காட்டாக

தமிழ் நாவல்கள் -- தமிழ் புதினங்கள்

இதை குறை கூறும் எண்ணமாக கருத

வேண்டாம். தமிழின் மீதான அன்பின்

காரணமாக இதை சொல்லுகின்றேன்.

தங்களுக்கு தனிப்பட்ட அஞ்சல் அனுப்ப எண்ணினேன். அதற்கான வாய்ப்பு இல்லாததால் இங்கு கருத்திடுகின்றேன்.

நன்றி