Sunday, December 12, 2010

நிராயுதபாணியின் ஆயுதங்கள் - ஜெயந்தன் கதைகள்

ஜெயந்தனின் அறிமுகம் கிடைத்தது அசோகமித்ரனின் "தேர்ந்தெடுத்த சிறுகதைகள்" (நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு)தொகுப்பில்.ஜெயந்தனின் "பகல் உறவுகள்" சிறுகதை அதில் இடம்பெற்றிருந்தது.அத்தனை எளிதில் கடந்து விட முடியாத கதை அது.வெளியுலகத்திற்கு ஆதர்சமாய் தெரியும் தம்பதிகளின் நிஜ உலகம் பழிவாங்கலும்,வன்மமும் பீடித்து அலங்கோலமாய் இருப்பதைச் சொல்லும் கதை.புரிதலின் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் விபரீதங்கள் அழுத்தமாய் முன்வைக்கப்படுகின்றன இக்கதையில்.எதிரியின் பலவீனம் அறிந்து வீழ்த்துவது புத்திசாலித்தனம்,இதுவே கணவன் மனைவிக்கிடையே நிகழுமாயின்?!அவர்கள் படித்தவர்கள். நாகரிகம் கற்றவர்கள்.காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்க படவேண்டியவை.தமிழில் முக்கியமான சிறுகதை இது.

அதற்கு பிறகு ஜெயந்தனின் கதைகள் எங்கும் வாசிக்க கிடைக்கவில்லை.தொடர்ந்து அந்த எழுத்தாளனை நினைவில் நிறுத்திக்கொள்ள இச்சிறுகதையே போதுமானதாய் இருந்தது.தமிழில் கவனம் பெறாமல் போன எழுத்தாளர்களுள் ஜெயந்தனும் ஒருவர்.வம்சி வெளியிட்டுள்ள ஜெயந்தனின் மொத்த சிறுகதைகளின் இத்தொகுப்பு நீண்ட தேடலுக்கு பிறகு வாசிக்க கிடைத்தது.நிதானமாய் வாசித்து,ரசிக்கப்பட வேண்டியவர்கள் ஜெயந்தனின் கதை மாந்தர்கள்.தன் இயல்போடு இருந்து நம்மை பதற்றம் கொள்ள செய்பவர்கள்.மேலும் சமூகத்தின் மீதான கோபத்தை தன் கதைகளில் வெளிக்காட்ட கொஞ்சமும் தயங்கவில்லை இவர்.




இத்தொகுப்பில் மிகப்பிடித்த சில கதைகள் குறித்து இங்கே..

"வெள்ளம்",பெரு மழை நாளொன்றில் தன் வயலில் தனித்திருக்கும் நாயகன் , மழைக்கு ஒதுங்கும் அக்கிராமத்து பெண்களால் அலைக்கழிக்கபடும் கதை.பெண்கள் தான் எத்தனை வசீகரமானவர்கள்..ரகசியங்களின் குடுவை...விடை அறிந்து கொள்ள முடியாத புதிர் விளையாட்டில் எப்போதும் வெற்றி பெறுபவர்கள்.சிறுமி,பேரிளம்பெண்,புதிதாய் திருமணம் ஆனவள் என அவ்விடம் இருக்கும் ஒவ்வொருத்தியும் மாறி மாறி தேவதை கோலம் பூணுகின்றனர்,அவன் தனிமை புலம்பல்களுக்கும்,சிந்தனைகளுக்கும் உரம் போட்டபடி.மழை விட்டதும் பெண்கள் யாவரும் சென்று விட,சட்டென தோன்றிய வெறுமையை அவன் மேகத்தின் துணை கொண்டு வரவேற்பதோடு முடிகின்றது கதை.ஆணின் அகவுலகை - தனிமை துயரை இத்தனை நெருக்கமாய் வாசகனுக்கு வேறெந்த கதையும் முன்வைத்தாய் நினைவில்லை.

"துப்பாக்கி நாயக்கர்",தன் மனைவியை பெண்டாள முயன்ற வேலையாளின் துரோகத்தை,ஊரார் முன் ஏற்பட்ட அவமானத்தை கடக்க நிதானிக்கும் முன் நிகழும் அவனின் தற்கொலை - என சுழற்றி அடிக்கும் சூழலில்,இயல்பிற்கு மாறாய் நடந்து கொள்ளும் துப்பாக்கி நாயக்கரின் நிதான புத்தி அவ்வூராரோடு நம்மையும் ஆச்சர்யம் கொள்ள செய்வதே.பேச்சை காட்டிலும் மௌனத்திற்கு வீரியம் அதிகம்.சமயங்களில் எல்லா உணர்ச்சிகளும் அதில் அடங்கி விடுவதுண்டு. சகித்து கொள்ள இயலாத துரோகத்தை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதை நேரடி உரையாடல் அதிகம் இன்றி காட்சிகளின் விவரிப்பில் நமக்கு உணர்த்துபவை ஏராளம்.

"உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது"

- ஜெயந்தனின் 'சம்மதங்கள்' சிறுகதையில்


"வாழ்க்கை ஓடும்",ராஜேந்திர சோழனின் சிறுகதை ஒன்றை நினைவூட்டிய கதை இது.பகல் முழுக்க அடித்து கொள்ளும் மருமகள் - மாமியார்,தொடர்ச்சியான வசைகளில் அக்கம்பக்கத்தாரை குளிர்வித்துவிட்டு,வீடு வந்து சேரும் ஆணிடமும் தங்கள் நியாயத்தை சொல்லி மேலும் கொஞ்சம் களேபரம் செய்து முடங்கி போகின்றனர்.மறுநாள் வெளியூருக்கு நாட்கணக்கில் கூலி வேலை செய்ய அவன் புறப்பட...முன்னிரவில் நடந்த கலவரத்தின் சுவடே தெரியாது மகிழ்ச்சியாய் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.அவர்கள் அப்படிதான், அவர்களின் அன்றாடம் அது..அடித்து கொள்வதும்,சேர்ந்து கொள்வதும்..எனக்கும்,உனக்கும், எல்லோருக்குமான வாழ்க்கை அப்படிதான் என்பதை போல!

"மீண்டும் கடவுளும் கந்தசாமியும்",புதுமைபித்தனின் ஓவியத்திற்கு நவீன வண்ணம் பூசும் முயற்சி.கந்தசாமிபிள்ளையை சினிமா தயாரிப்பாளராக்கி/குடிசை வீட்டை கோபுரமாக்கி....கடவுளுக்கு தொடர்ச்சியான ஆச்சர்யங்கள் இம்முறை."ஊமை ரணங்கள்", திருமண சடங்குகளுக்காய் மகளிடமே கையேந்த நேரிடும் ஏழை தந்தையின் கதை.சில அவமானங்களை வலிந்து ஏற்று கொள்வது கொடுமை.கதை.மோசமானதொரு சமூக சூழலை/மாற்றம் காணாது தொடரும் திருமண கொடுக்கல் வாங்கல்களை சாடும் இக்கதை எந்த காலகட்டத்திற்கும் பொருந்திப் போவது.

"நாலாவது பரிமாணம்",இக்கதையின் முடிவில் உடன்பாடில்லை.கொஞ்சம் சினிமாத்தனமாய் தோன்றியது.இருப்பினும் பள்ளி ஆசிரியர்களான நாயகன் மற்றும் நாயகிக்கு இடையே தோன்றி,படரும் காதல்,வெகு இயல்பான உரையாடல்களோடு சொல்லப்பட்டிருக்கும் பாணி அருமை. தொடர்ச்சியான அவர்களின் உரையாடல்கள் இட்டு செல்லபோகும் இடம் எதுவென வாசகன் அறிந்திருந்தும், உடன் சேர்ந்து பயணிக்கும் சுவாரஸ்யம் குறையவில்லை.

"பைத்தியம்","மாரம்மா",எழுதியவனும் படித்தவளும்",ஜாதி மான்" ஆகியவையும் குறிப்பிட தக்கவையே.நம்மை குறித்த,நமக்கான கதைகள் இவை.அலங்காரமற்ற வர்ணிப்புகள்.வாசகனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் எதார்த்தங்களின் சித்தரிப்பு.கொஞ்சம் காத்திரமான குரலில் சமூகத்தை சாடும் கதைகளில் தெரிவது எழுத்தாளனின் கோபமும் அக்கறையும்.தொடர்ச்சியாய் முன்வைக்கப்படும் மாற்று கருத்துக்களில் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டும் கதைகள் இவை.

"நிராயுதபாணியின் ஆயுதங்கள்",தமிழ் சிறுகதை தொகுதிகளில் மிக முக்கியமானதொன்று.

வெளியீடு - வம்சி
விலை - 400 ரூபாய்

15 comments:

ராம்ஜி_யாஹூ said...

உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடி பணிகிறது.
ஜெயந்தனின் 'சம்மதங்கள்' சிறுகதையில்

பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல லேகா.
இந்தப் பதிவில் பழைய லேகாவை லேகாவின் எழுத்துக்களை படிக்க முடிந்தது

நிராயுதபாணியின் ஆயுதங்கள்",தமிழ் சிறுகதை தொகுதிகளில் மிக முக்கியமானதொன்று.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

ஜெயந்தனின் வரிகள் வைரங்கள். அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

ஜெயந்தனின் வரிகள் வைரங்கள். அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

CS. Mohan Kumar said...

அருமை. ஜெயந்தன் அற்புதமான எழுத்தாளர். கதைகளை எளிமையாக அழகுற விளக்கி உள்ளீர்கள்.

என்றைக்கும் மறக்க முடியாத, பல நேரங்களில் நினைவு கூறும் ஜெயந்தனின் கவிதை ஒன்றை எனது பதிவிலும் அது குறித்த புரிதலை பின்னூட்டத்திலும் பகிர்ந்துள்ளேன். அதற்கான லிங்க் இதோ:

http://veeduthirumbal.blogspot.com/2009/06/blog-post.html

இயலும் போது வாசித்து பாருங்கள்

rashavaathi.blogspot.com said...

லேகா,

சமீபமாக தான் உங்கள் வலை பூ எனக்கு அறிமுகம், நல்ல நூல்களுக்கு சிறப்பான அறிமுகம் கொடுக்குரீர்கள், தொடர்ந்து வாசிக்கிறேன் வாழ்த்துக்கள்.



உலக இலக்கியம் குறித்து, சிறந்த மொழி பெயர்ப்பு நூல்கள் பற்றி உங்களிடம் எதாவது பட்டியல் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

அன்புடன்

rashavaathi.blogspot.com

லேகா said...

நன்றி ராம்ஜி

நன்றி கனாக்காதலன்

லேகா said...

நன்றி மோகன்குமார்.ஜெயந்தன் கவிதை குறித்த அறிமுகத்திற்கும்.


மிக்க நன்றி ரசவாதி :)

எனது தளத்தில் மொழிபெயர்ப்பு நூல்கள் என்னும் லேபளின் கீழ் நீங்கள் வேண்டும் பட்டியல் உண்டு.

ரைட்டர் நட்சத்திரா said...

புதுமைபித்தன் சிறுகதைகள் தேடி வந்த போது உங்கள் வலை பூ கிடைத்தது. இயல்பான இலக்கியம் போய் சேர உதவும் உங்கள் பகிர்வு பாராட்டதக்கது.

ரைட்டர் நட்சத்திரா said...

புதுமைபித்தன் சிறுகதைகள் தேடி வந்த போது உங்கள் வலை பூ கிடைத்தது. இயல்பான இலக்கியம் போய் சேர உதவும் உங்கள் பகிர்வு பாராட்டதக்கது.

Anonymous said...

அன்புள்ள லேகா,

என் வலை பூவில் ஒரு சிறுகதை பதிவேற்றம் செய்துள்ளேன், நேரம் இருந்தாள் வாசித்து பார்க்கவும்.


நன்றி
http://rashavathi.blogspot.com/2010/12/blog-post_27.html

sujatha sivaram said...

Hi Lekha, could you please share your wish list for the book fair 2011?

Krishnan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Krishnan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

KODU கோடு ஓவியமும் எழுத்தும் said...

தன் எழுத்துக்களுக்கு அவர் உயிர் கொடுத்ததால் ; வாழ்வதற்கு உயிர் போதவில்லை.
எவ்வளவோ சிந்தனைகளை கருக்கொண்டு; எழுத்தில் கொண்டுவரும் முன் இறந்து போனார்.
இன்னும் பத்து வருடத்திற்கு எழுத சரக்கு இருக்கிறது என்று மரணத்திற்கு 10 நாட்களுக்கு முன் என்னிடம் சொன்னார்.
மரணம் ஒரு முட்டாள் சர்வாதிகாரி.
சீராளன் ஜெயந்தன்.

KODU கோடு ஓவியமும் எழுத்தும் said...

தன் எழுத்துக்களுக்கு அவர் உயிர் கொடுத்ததால் ; வாழ்வதற்கு உயிர் போதவில்லை.
எவ்வளவோ சிந்தனைகளை கருக்கொண்டு; எழுத்தில் கொண்டுவரும் முன் இறந்து போனார்.
இன்னும் பத்து வருடத்திற்கு எழுத சரக்கு இருக்கிறது என்று மரணத்திற்கு 10 நாட்களுக்கு முன் என்னிடம் சொன்னார்.
மரணம் ஒரு முட்டாள் சர்வாதிகாரி.

Seeralan Jeyanthan