Monday, November 8, 2010

The Day I Became A Woman (2000)

ஒரே நாளில் நிகழும் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.ஒரு சிறுமி,ஒரு நடுத்தரவயது பெண்,ஒரு மூதாட்டி - தங்களை அடையாளம் கண்டு கொள்ள நேரிடும் ஒரு நாளை குறித்த மூன்று தனிக்கதைகள்.முதல் முறை சுதந்திரம் முடக்கப்படும் பொழுது எழும் கேள்விகள்,விருப்பங்களுக்கு தடை ஏற்படும் பொழுது அதை மீறி வென்றிட நடத்தும் போராட்டம்,பிடிதமானதொரு வாழ்வை இறுதி நாட்களில் கண்டெடுத்து அடையும் மகிழ்ச்சி,இவற்றை இப்பெண்களின் வாழ்வில் ஒரு நாள் நிகழ்வின் மூலம் பார்வையாளனுக்கு சிறப்பாய் கொண்டு சேர்ந்திருக்கிறார் இரானிய பெண் இயக்குனர் மர்சீ மெஷ்கினி.
முதல் கதை, ஹவா என்னும் சிறுமி தனது ஒன்பதாவது பிறந்த நாளின் பொழுது அம்மாவாலும்,பாட்டியாலும் இனி நீ ஒரு பெண் என போதிக்கப்படுகிறாள். சதோர் எனப்படும் கருப்பு அங்கியை அணிந்து கொள்ள அதுவே சரியான நாள் என தீர்மானம் ஆகின்றது.ஆண் நண்பர்களோடு விளையாடவும்,வெளியே செல்லவும் தடை விதிக்கப்படுகின்றது."நேற்று வரை விளையாடி கொண்டுதானே இருந்தேன்" என அவள் கேட்கும் இடம்...சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நீண்ட போராட்டத்திற்கு பிறகு பகல் 12 மணிவரை விளையாட அனுமதி பெற்று நேரத்தை கணிக்க குச்சியை எடுத்து கொண்டு வெளியேறுகிறாள்.வெகு இயல்பாக வந்து விழும் கேள்விகளும்,நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியாத சிறுமியின் மனநிலையை அழகாய் பிரதிபலிக்கும் பகுதி இது.

இரண்டாவது கதை - கணவனின் எதிர்ப்பை மீறி சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொள்ளும் ஆஹு என்னும் பெண்ணை குறித்து.இக்கதை முழுதும் பந்தைய களத்திலேயே நடிக்கிறது.எத்தனையோ பெண்களோடு பந்தயத்தில் பங்கு கொண்டிருக்கும் ஆஹூவிடம் அவளது கணவன் அதை விடுத்து வீடு வருமாறு வற்புறுத்துகிறான்.விவாகரத்து செய்து விடுவேன் எனவும் மிரட்டுகிறான்...மத குருவை அழைத்து வந்து விவாகரத்தும் செய்கின்றான்..எதையும் கண்டுகொள்ளாமல் இறுக்கமான மனநிலையில் போட்டியில் வெற்றி பெற தொடர்ந்து சைக்கிள் ஒட்டி செல்லும் ஆஹு தனது சகோதரர்களால் பாதி வழியில் சைக்கிள் பிடுங்கப்பெற்று தனித்து விடப்படுவதோடு முடிகின்றது இக்கதை.மத ரீதியான கட்டுபாடுகள் நியாயமான விருப்பங்களுக்கு இடையூறாய் வந்தால் அதை துணிந்து எதிர்கொள்ளும் மனநிலை கொண்டிருப்பவர்கள் பெண்கள் என்பதை சொல்லுவதான கதை.மூன்று கதைகளில் அழுத்தம் மிகுந்தது இதுவே.மூன்றாவது கதை - தான் அனுபவித்து அறியாத சொகுசான வாழ்கையை இறுதி நாட்களில் சாத்தியப்படுத்திட நினைக்கும் மூதாட்டி ஹூரா,வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் அத்தனையையும் கூலிக்கு சிறுவர்களை வைத்து கொண்டு வாங்கி தன் நகரம் நோக்கி பயணிக்கின்றால். அத்தனை சுவாரஸ்யமான பகுதி இல்லை இது..இருப்பினும் ஹூரா கிளம்பும் முன்னர் அவள் சந்திக்கும் இரண்டு பெண்கள்,ஆஹூவை குறித்து அவளிடம் சொல்லுகின்றனர்,அத்தனை எதிர்ப்பை மீறி அவள் சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொண்டதும்,சகோதரர்களால் சைக்கிள் பிடுங்கப்பட்டு பந்தய களத்தில் தனித்து விடபட்டாலும் அவள் வாடகைக்கும் சைக்கிள் பெற்று அதில் வெற்றி அடைந்துவிட்டாள் என அவர்கள் பேசி கொள்வது பெருத்த நிம்மதி அளிக்கும் செய்தி.இரண்டாம் கதையின் வெற்றியும் அதுவே.

தான் வாங்கிய பொருட்களை படகில் ஏற்றி கொண்டு செல்லும் ஹூராவை பார்த்தபடி சிறுமி ஹவா நிற்பதோடு முடிகின்றது இத்திரைப்படம்.ஆஹூவை போல போராட்ட குணமும்,ஹூராவிற்கு இறுதி நாட்களில் கிடைத்த மகிழ்ச்சியும் நிறைவும் இனி வாழ்க்கையை தொடங்க போகும் சிறுமி ஹவாவிற்கு சாத்தியம் ஆகுமா என்கிற கேள்விகள் தொக்கி நிற்பதென்னவோ உண்மை.தீவிரமான பெண்ணிய கருத்துக்களை வெளிப்படையாக பேசும் இத்திரைப்படம் இரானில் சிறிது காலம் தடை செய்யப்பட்டுள்ளது.மத ரீதியான கட்டுபாடுகளை விலக்கி பார்த்தால் இத்திரைப்படம் எல்லா தேசத்து பெண்களும் பொருந்தி வருவதே.

10 comments:

எஸ்.கே said...

சிறப்பான படம்! சிறப்பான விமர்சனம்! பார்க்க முயற்சிக்கிறேன்!

butterfly Surya said...

லேகா, பதிவிற்கு நன்றி. இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

இதன் இயக்குநர் மோஷன் மெக்மல்பப் அவர்களின் மனைவி. இவர்களது மகளும் திரைக்கதையாசிரியர், இயக்குநர்.

இந்த ஒரே குடும்பம் திரைப்படங்களுக்காக 150க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளனர். மூவரும் என் மனம் கவர்ந்த இயக்குநர்கள்.

இங்கும் ஒரே குடும்பம் தமிழ் சினிமாவை எந்த பாடு படுத்துகிறது என்று யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை.

பகிர்விற்கு வாழ்த்துகள்.

Anonymous said...

வணக்கம் உங்கள் பதிவினை இங்கே பதிந்துள்ளோம் -

http://meenakam.com/tamilthirai/?p=1921

http://meenakam.com/topsites இல் உங்களின் வலைப்பூவையும் இணைக்கவும்,

நன்றி

மீனகம் குழு

Kanchana Radhakrishnan said...

பகிர்விற்கு நன்றி.லேகா.

Prabu M said...

ஆஹா...!!


"சைக்கிள் பறிக்கப்பட்டுவிட்டதா"!! என்று தொய்ந்த ஸ்ருதியை மூன்றாவது பாகத்தில் ஒரு வாக்கியத்தில் மீட்டெடுக்கும் திரைக்கதைக்கு சல்யூட்... உங்களுக்கும்தான்... அதே பாணியில் மூன்று கதைகளையும் விட்டுவிட்டுச் சொல்லி பின் இணைத்துக்கொடுத்த உங்கள் திரைக்கதையோடொன்றிய திரைப்பார்வை நுணுக்கமானது...

லேகா said...

நன்றி எஸ்.கே

@சூர்யா ,தகவலுக்கு நன்றி சார்.இந்த திரைப்படத்தின் இயக்குனர் குறித்து இணையத்தில் கிடைத்த தகவல்கள் சுவாரஸ்யமானவை.கணவரின் துணையுடனே இப்படத்தை சாத்தியமாக்கி இருக்கின்றார்.இரானிய தேசத்தில் இருந்து பெண்ணியம் பேசும் படம் என்பதே இதைக் காணும் ஆவலை தூண்டியது.

லேகா said...

நன்றி ராம்ஜி

நன்றி காஞ்சனா

நன்றி பிரபு :-)

விஷ்ணுபுரம் சரவணன் said...

லேகா..

இப்படம் குறித்த பகிர்வுக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.

தமுஎகசவுன் திரைப்படமுகாம் ஒன்றில் நண்பர்களின் உதவியால் நள்ளிரவு நெருங்கும் நேரத்தில் பார்த்தோம். முதல் சிறுமியின் பகுதியில் உறைந்துவிட்டோம் என்றே சொல்லலாம். ஒரு நல்ல கவிதை மனதை எந்தளவு பாதிக்குமோ அந்த அளவு இந்த படம் பாதித்தது. அந்த சிறுமி மிட்டாயை ஊட்டிவிடும் காட்சியும், குச்சியின் நிழலை அளந்துப்பார்க்கும் காட்சிகளில் கண்கள் இயல்பு ஈரத்தை கடந்துவிட்டது.

திருமணமான சைக்கிள் ரேஸ் போர்ஷ்ன் ஒரு படிமத்தைப்போல என்னனவோ சொல்லிச்சென்றது. மதம் குறித்த நீண்ட உரையாடலை அது தன் மெளனத்தால் நிகழ்த்தியிருக்கிறது. அவள் பர்தாவின் நுனியை அடிக்கடி இழுத்து கடித்துக்கொள்ளும் ஷாட்கள் அற்புதமானவை. மேலும் இந்த பகுதி தொழிற்நுட்ப ரீதியாக அத்துறை சார்ந்தவர்களுக்கு ஒரு பாடத்தை போன்றது. லாங் ஷாட் , மிடில், குளோஸப் ஷாட் பற்றி வகுப்பெடுப்பவர்கள் இந்த பகுதியை போட்டுக்காட்டி சிறப்பான வகுப்பை எடுக்கலாம்.

இந்த பட இயக்குனர் மீது வழக்கெல்லாம் போடப்பட்டு அதிலிருந்து மீண்டதெல்லாம் தனிக்கதை.

நன்றி லேகா.. தொடர்ந்து எழுதுங்கள்..

லேகா said...

சரவணன்,

விரிவான பகிர்தலுக்கு நன்றி.

//குச்சியின் நிழலை அளந்துப்பார்க்கும் காட்சிகளில் கண்கள் இயல்பு ஈரத்தை கடந்துவிட்டது//
கடற்கரையில்,அந்த சிறுவனிடம் பொம்மைக்கு மாற்றாக தனது சதோர் துணியை தரும் காட்சி கூட இதை ஒத்த உணர்வை தருவதே!
//மதம் குறித்த நீண்ட உரையாடலை அது தன் மெளனத்தால் நிகழ்த்தியிருக்கிறது.//

உண்மை.இரண்டாவது கதை ரொம்பவே அழுத்தமானது.போட்டியில் ஒவ்வொரு முறை அனைவரையும் முந்தி வரும் பொழுது அவளுக்கான எதிர்ப்பு கணவன் வடிவிலோ,மத குருக்கள் வடிலோ,சகோதரர்கள் வடிலோ காத்து கொண்டிருப்பது...அவர்களை வணங்குவதை தவிர்த்து அவள் வேறேதும் வசனம் பேசாதிருப்பது என நுணுக்கமாய் செதுக்கப்பட்ட காட்சியமைப்புகள்..அசாத்தியமான முயற்சி இத்திரைப்படம் என்பதில் மாற்று கருத்தில்லை.

Unknown said...

sila padngal paarppadhai vida adhaippatriya vimarsanam nammai engo azhaithu sendru vidum... the cyclist padam naan paarthadhillai... aanalum pala naatkalukku mun anandha vikatan idhazhin ulaga cinema pagudhiyil paditha andha padathai patriya katturai ennai azha vaithu vittadhu... ippodhum adhiappatri ennaal slaagikka mudigiradhu.. adhu poladhan idhuvum..