Tuesday, December 29, 2009

ஆர்மேனியா தேசத்து சிறுகதைகள்

ஆர்மேனியா....சோவியத் யூனியன் குடியரசுகளில் ஒன்றான இந்த தேசத்தின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பிது.இந்த நூலிற்கு அசோகமித்திரன் எழுதியுள்ள விரிவான முன்னுரை ஆர்மேனியா தேசம் குறித்தும்,ஆர்மேனியாவிற்கும் இந்தியாவிற்குமான வர்த்தக மற்றும் காலாச்சார தொடர்பினை குறித்தும் சொல்லும் செய்திகள் ஏராளம்.ஆர்மேனியர்கள் வர்த்தகம் தொடர்பாய் இந்தியாவிற்கு வரும் முன்னரே உலக யுத்த காலத்தில் அகதிகளாய் கொல்கத்தாவிலும்,சென்னையிலும்,கேரளத்திலும் குடியேறி உள்ளனர் என்னும் செய்தி ஆச்சர்யம் தருவதாய் இருந்தது.மேலும் சென்னையில் ஆர்மேனியா வீதியில் மிகப்பழமையான கிறிஸ்துவ தேவாலயம் இன்றும் அவர்களின் சுவடினை நினைவூட்டுவதாய் உள்ளதாம்.இச்செய்திகள் யாவும் படிக்க படிக்க ஆர்மேனியா தேசம் குறித்து அறிய ஆர்வம் மேலிட,இணையத்தில் தேடியதில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்களில் ஒருநாள் முழுதும் மூழ்கி போனேன்.

அடர்ந்த மலைகளும்,பூக்கள் விரிந்த சோலைகளும்,புராதான கட்டிடங்களும் நிறைந்த அழகிய ஆர்மேனியா தேசத்தின் இலக்கிய சூழல் 1990 களில் தொடக்கத்தில் வெகு சிறப்பாய் இருந்துள்ளது.இத்தொகுதியின் சிறுகதைகள் யாவும் 1880-1930களில் எழுத பெற்றவை. "என் நண்பன் நெசோ",சிறு பருவத்து நண்பன் நேசொவை பின்னாட்களில் பரம ஏழையாய் சந்திக்கும் பணக்கார வாலிபனின் கதை.மங்கிய நிலவொளியில் வட்டமாய் அமர்ந்து பேசும் சிறுவர்களுக்கு மத்தியில் விசித்திர கதைகளை சொல்லுவதில் நெசோ ஒரு நாயகன்....ஏற்ற தாழ்வுகள் அற்ற சிறுவர் பிராயம் மெல்ல மெல்ல மறைந்து அவர் அவர் பெற்றோரின் பொருளாதார நிலைக்கேற்ப மாறுபடுவதை அழகாய் சொல்லி இருகின்றார் இக்கதை ஆசிரியர் ஹோவன்னஸ்."வயிறு",பெரும் பசி கொண்ட தச்சன் ஒருவனின் கதை.வருமானம் ஏதும் அற்ற நிலையில் தன் பசியின் பொருட்டு கிடைக்காத உணவு வகைகளை,பார்க்காத பதார்த்தங்களை கனவில் உண்டு மகிழும் விசித்திர பிறவியான தச்சனின் கதையை எழுதி இருப்பவர் தெரனிக்.



"ஆட்டு குட்டி",தனித்து வாழும் ஒரு ஏழை தந்தை தூர நகரத்தில் பெரும் பதவியில் இருக்கும் தம் மகன் குறித்தான நினைவுகளில் மூழ்கி, அவன் வரவை எதிர்நோக்கும் ஒரு நாளின் குறிப்புகள். மலிந்து வரும் உறவுகளுக்கிடையேயான பிணைப்பு குறித்து 1915 இல் எழுத பட்ட இக்கதை கூறுவது ஆச்சர்யம் ஏற்படுத்துகின்றது. "ஒரு சிறுவனும் பெரிய லாரி டிரைவரும் ",உலகத்தை சுற்றி வர ஆர்வம் கொண்டிருக்கும் சிறுவனுக்கும் அந்த ஆவலை தன கற்பனையால் பூர்த்தி செய்யும் ஆர்மேனிய எல்லையை தாண்டிடாத ஏழை லாரி டிரைவருக்குமான நடப்பை சொல்லுகின்றது இக்கதை.உலக வரைபடத்தை மனப்பாடமாய் வைத்திருக்கும் சிறுவனின் கேள்விகளுக்கு,தன் கற்பனையை கொண்டு ஆப்பிரிக்க யானைகளையும்,காட்டேருமைகளையும்,அவர்களின் வேட்டை திறமைகளையும் வர்ணிக்கும் உரையாடல் அழகானது.


"ஆட்டு குட்டி" ,சிறுகதையை ஒத்திருந்த கதை "அம்மாவின் வீடு",கிராமத்தில் தனித்திருக்கும் தாயை சந்திக்க வரும் மகனின் கதை.இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் இரண்டு,"துரோகி" மற்றும் "பெண்களே,நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்" ."துரோகி",பாம்பிற்கும் மனிதனுக்குமான நட்பு சாத்தியமா என்கிற கேள்விக்கு கொஞ்சம் கற்பனை கலந்து பதில் அளிக்கும் கதை இது.வேட்டையின் பொழுது குழியில் விழுந்துவிடும் நாயகன் அங்கு வசித்திருக்கும் பாம்பிடம் நட்பு கொண்டு அதன் உதவியால் மீண்டு வருகின்றான்.சிறப்பு பொருந்திய அப்பாம்பினை சில வருடங்கள் கழித்து அவனே சிறு தொகைக்காக பாம்புகளை வைத்து வித்தை காட்டுபவர்களிடம் காட்டி கொடுத்து விடுகின்றான்.துரோகத்தை தாங்காத அப்பாம்பு கக்கிய விஷமானது அவன் முகத்தை அகோரமாக்கிவிடுகின்றது.நட்பின் துரோகத்தை விசித்திர உறவுகள் மூலம் சொல்ல முயலும் கதை.

"பெண்களே,நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்",1800 மற்றும் 1900இல் நிகழ்வதான இரு வேறு காதல் கதைகள்.இரு கதைகளும் ஏழை - பணக்கார - ஜாதி - எதிர்ப்பு என பார்த்து சலித்த திரைகாதல் போல இருப்பினும் ஆசிரியரின் விவரிப்பு ஏரவான் நகரத்தின் அழகினை அற்புதமாய் வர்ணிப்பதோடு காலங்களுக்கு ஏற்ப மாறும் காதலின் தீவிரத்தை அழகாய் சொல்லி செல்கின்றன.காதல்,துரோகம்,உறவுகளின் பிரிவு என இந்த கதைகள் ஒவ்வொன்றும் ஒரு களத்தை மையபடுத்தியே உள்ளன.வயலட் பூக்களின் தேசமான ஆர்மேனியா குறித்து அறியும் ஆவலை தூண்ட போதுமான செய்திகள் இந்த தொகுப்பில் உள்ளன.ஆர்மேனியா மொழியில் இருந்து ஆங்கிலத்திலும் பின்பு ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.சென்ற பதிவில் குறிபிட்டது போல நேசனல் புக் டிரஸ்ட் தொடர்ந்து இம்மாதிரியான மொழிபெயர்ப்புகளை வெளியிடாமல் போனது வருத்தம் தரும் விஷயமே.

வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
தமிழில் முதல் பதிப்பு - 1991
தமிழில் மொழிபெயர்ப்பு - வல்லிகண்ணன்

12 comments:

குப்பன்.யாஹூ said...

அருமை லேகா, மீண்டும் ஒரு முறை வித்தியாசமான சுவாரஸ்யமான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

கண்டிப்பாக உங்கள் பதிவுகள் , பள்ளிக்கூடம் கல்லூரி பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டிய வகையில் உள்ளது.

தொடரட்டும் இந்த நல்ல பணி.

லேகா said...

ஆஹா...:-)

Krishnan said...

லேகா சென்னை புத்தக கண்காட்சியில் என்ன புத்தகங்கள் வாங்க போறீங்க ? பட்டியல் தயாரா ?

இனியாள் said...

புத்தக கண்காட்சி வந்திருக்கும் இந்த வேளையில் நான் என் நண்பர்களுக்கு உங்களின் வலைப்பூவை தான்
பார்க்க சொல்லி பரிந்துரைக்கிறேன், பல புத்தகங்களை படித்து நல்ல அறிமுகத்தை தருவது நல்ல விஷயம் லேகா, வாழ்த்துக்கள்.

இனியாள் said...

புத்தக கண்காட்சி வந்திருக்கும் இந்த வேளையில் நான் என் நண்பர்களுக்கு உங்களின் வலைப்பூவை தான்
பார்க்க சொல்லி பரிந்துரைக்கிறேன், பல புத்தகங்களை படித்து நல்ல அறிமுகத்தை தருவது நல்ல விஷயம் லேகா, வாழ்த்துக்கள்.

Krishnan said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

லேகா said...

இனியாள்,

நன்றி.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

லேகா said...

கிருஷ்ணன்,

எப்படி இருக்கீங்க??!!புத்தக கண்காட்சிக்காக இம்முறை எதுவும் தயார் செய்ய வில்லை.

எஸ்.ரா வின் "நகுலன் வீட்டில் யாருமில்லை" மற்றும் ஜெயந்தனின் சிறுகதைகள் முழுத்தொகுதி இரண்டும் அவசியம் வாங்க வேண்டியவை இம்முறை.

தனி மடலில் உங்களுக்கு புத்தகங்களின் பட்டியல் அனுப்புகின்றேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

//இனியாள் said...
புத்தக கண்காட்சி வந்திருக்கும் இந்த வேளையில் நான் என் நண்பர்களுக்கு உங்களின் வலைப்பூவை தான்
பார்க்க சொல்லி பரிந்துரைக்கிறேன், பல புத்தகங்களை படித்து நல்ல அறிமுகத்தை தருவது நல்ல விஷயம் லேகா, வாழ்த்துக்கள்.
//

அஃதே மேடம்.

வாழ்த்துக்கள்..

லேகா said...

நன்றி நர்சிம் :-))

நேசமித்ரன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

லேகா said...

நன்றி நேசமித்திரன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:-)