பனகர்வாடி..ஆடு மேய்ப்பதை பிரதான தொழிலாய் கொண்ட மக்கள் வாழும் ஒரு சிறிய மராத்திய கிராமம்.படிப்பறிவில்லாத அம்மக்களுக்கு நடுவே இளைஞன் ஆன வாத்தியார் ராஜாராம் விட்டல் மூன்று வருடம் பெரும் அனுபவங்களின் கோர்வை.கதை முழுதுமே நாயகனான ஆசிரியன் சொல்லுவதாய் அமைந்துள்ளது.அச்சிறு கிராமத்தின் ஒவ்வொரு மனிதரையும் அவர்தம் விருப்பு வெறுப்புகளையும் உடனிருந்து அவதானிக்கும் நாயகன்..மெல்ல மெல்ல தயக்கங்கள் விலகி அவர்களின் ஒருவனாகின்றான்.
பாடம் கற்பிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதை செய்ய முனையும் நாயகன் ஒரு கட்டத்தில் அவர்களின் எல்ல சிக்கல்களுக்கும் தீர்வு தர வேண்டிய ரட்சகனாய் ஆகிறான்.
பள்ளிக்கூடம் என்ற ஒன்றினை மறந்துவிட்டிருந்த பனகர்வாடி கிராமத்திற்கு வந்து சேரும் நாயகன்..பெரும் குழப்பமும்,அக்கிராமத்தில் கழிய போகும் மீதி நாட்கள் குறித்த அச்சத்தோடும் தன் நாட்களை தொடங்குகின்றான்.அக்கிராமத்தின் நாட்டாண்மை கிழவரின் ஆதரவு தரும் நம்பிக்கையில் பள்ளிக்கு சிறுவர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் அடைகின்றான்.பெரும்பால குழந்தைகளை ஆடு மேய்க்க செல்வதால் பள்ளி நடைபெற தடங்கல் ஏற்படுகின்றது..மெல்ல மெல்ல பெற்றோர் மனநிலையை மாற்றி..குழந்தைகளை பள்ளிக்கு வர வழைக்கின்றான்.படித்தவர்களுக்கு கிராமத்தில் எப்பொழுதும் மரியாதை உண்டு.படித்தவர்களின் எடுக்கும் முடிவும் சொல்லும் தீர்ப்பும் உறுதியானது என நம்பும் மக்கள் அவர்கள்..அவ்விதத்தில் வாத்தியாரான ராஜாராமும் சில நாட்களில் அங்கு முக்கிய நபராக எல்லோராலும் விரும்படுகின்றான்.
அக்கிராமத்தில் நாயகனுக்கு நெருக்கமாய் இருக்கும் சிலரை குறித்த கிளைக்கதைகள் சுவாரஸ்யமாய் சொல்லபடுகின்றன.ஆனந்தா ராமோஷி-வேட்டையாடுவதில் சிறந்தவரான ராமோஷி இனத்தவரான ஆனந்தா சிறு சிறு திருட்டுக்கள் செய்து பிழைத்தாலும் யாராலும் வெறுக்கபடாதவன்,அக்கிராமத்தின் நாட்டாண்மை கிழவர்- தன் பேத்தி அஞ்சியோடு வசிக்கும் அவர் ஊரின் எல்லா முடிவுகளையும் திறத்தோடு எடுக்கிறார்,நாயகனோடு அவருக்கு வரும் சிறு ஊடல் தோன்றி மறைவது வெகு அழகாய் சொல்லப்பட்டுள்ளது.ராமாகோனான்- அவ்வூரின் மிகப்பெரும் ஆட்டு மந்தைக்கு சொந்தக்காரன்..மந்தை முழுதும் பார்த்து கொள்வது ராமாக்கொனானின் தந்தையான காகூபா கிழவன்,ஆடு மேய்ச்சலில் பல வருட அனுபவம் கொண்ட அவர் வாசத்தை கொண்டு ஓநாய்கள் நடமாட்டத்தை கண்டுபிடித்துவிடுவார்.கசாப்பு தொழில் செய்யும் ஆய்பு ஆகியோரே ராஜாராமின் உற்ற தோழமையுடன் இருந்தனர்.
பனகர்வாடி கிராமத்தில் விளையாட்டு கூடம் ஒன்றினை கட்டிட நாயகன் முடிவு செய்கின்றான்.கூரை வீடுகளே உள்ள அவ்வூரில் திடமான கட்டிடம் ஒன்றினை நிறுவினால் அது பல காரியங்களுக்கு பயன்படும் நோக்கில்."வீட்டை கட்டி பார்.." என்னும் சொலவைடைக்கு ஏற்றார் போல பல சிக்கல்களுக்கு இடையே கிராமத்தினரை ஒன்று சேர்த்து விளையாட்டு கூடத்தை கட்டி முடித்து அதை மகாராஜாவை கொண்டே திறந்து வைக்கின்றான்.அக்கிராமத்து பெண்களும் காதலும் வீரமும் கொண்டவர்களே.நோஞ்சானான சேகூவின் மனைவி கலைப்பையில் ஒரு எருதை கட்டி மறுமுனையில் தான் நின்று நிலத்தை உழுது ஊரை வியக்க வைத்தவள்.எதிர்பாரா திருப்பம் போல வறட்சி காலம் தீவிரமடைந்து பனகர்வாடி கிராமத்தை ஆட்டி படைகின்றது.ஆடுகள் இறந்துவிட,விளைநிலங்கள் பொய்த்து விட மக்கள் யாவரும் பிழைக்க வழி தேடி வேற்று ஊர்களுக்கு செல்வதோடு நாவல் முடிகின்றது.
வெங்கடேஷ் மாட்கூல்கரின் இந்நாவல் 1954 இல் ஒரு மராட்டி வார பத்திரிகையில் வெளிவந்து பின் நூல் வடிவம் பெற்றுள்ளது.இந்திய கிராமங்கள் யாவும் ஒன்றே என எண்ண தோன்றியது இந்நாவலை வாசித்த பொழுது.பள்ளி ஆசிரியனான நாயகன் கிராமத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் - ஆடு வளர்ப்பு,பயிர் விளைச்சல்,சண்டை சச்சரவுகள்,கருத்து வேற்றுமைகள்,பஞ்சகால அழிவு என தன் பார்வையில் நமக்கு முன்வைகின்றான்.இந்நாவல் "The Village Had No Walls" என்கின்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.பனகர்வாடி மொழிபெயர்ப்பு என்கின்ற நெருடல் ஏதும் இல்லாத மிக சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் நாவல்.
வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
ஆசிரியர் - வெங்கடேஷ் மாட்கூல்கர்
மொழி பெயர்ப்பு - உமா சந்திரன்
விலை - 18 ரூபாய் முதல் பதிப்பு (1977)
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
Hi Leka,
Is this book available anywhere now? It seems you have read a first edition copy. More such introductions on books from other parts of India are needed.
Reminds me just a bit of 'Legends Of Khasak' by O.V Vijayan. (This has been written before that)
Ajay
Ajay
ஏதோவொரு அல்லது சில திரைப்படங்களின் நினைவு வருகிறது. :-)இது திரைப்படமாக்கப்பட்டதோ?
வித்தியாசமான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல லேகா.
இந்த பதிவு வழக்கம் போலவே அருமை.
நானும் மஹாராஷ்டிராவில் பல மாதங்களாக இருக்கிறேன்.சிறந்த படைப்புகள் இங்கும் இருக்கின்றன என்பது உங்கள் பதிவை பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி லேகா.
அஜய்,
தற்பொழுது இந்த புத்தகம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகின்றேன்.
கட்டுரையில் குறிப்பிட நினைத்த ஒன்று அந்நாட்களில் வெளிவந்த நேஷனல் புக் டிரஸ்ட் இன் வெளியீடுகள்.
என்னிடம் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் இன் வெளியீடுகளான அனிதா தேசாயின் "கடலோர கிராமம்", ரஸ்கின் பாண்டின் "ருஷ்டியின் வீரதீரங்கள்" ஆகியவை 90 களில் வாங்கியவை.
சுரேஷ்,
வருகைக்கு நன்றி.
இந்நாவல் திரைப்படமாக வந்துள்ளதா என்ன தெரியவில்லை.
முன்னுரை குறிப்புகளை கொண்டு இது மராத்திய இலக்கியத்தில் மிக முக்கிய நூல் என தெரிகின்றது.
நேர்த்தியான மொழிபெயர்ப்பு நல்லதொரு கரிசல் இலக்கியம் படித்த திருப்தியை தந்தது.
நன்றி செய்யது.
இந்திய கிராமங்கள் குறித்த ஆய்விற்கு இந்நாவலை பலர் முன்மாதிரியாய் எடுத்து கொள்வதாய் குறிப்புக்கள் உள்ளது.முடிந்தால் மராத்திய கிராமங்களை பார்த்து வாருங்கள்..
ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு படித்த இந்த நாவலை, திரும்ப நிழலாடச் செய்திருக்கிறீர்கள். வெங்கடேஷ் மாட்கூல்கரின் எழுத்துக்களில் அந்த பாழடைந்த கிராமம் உயிர் பெறுகிறது. ஆட்டுப்புழுக்கையின் நெடியோடு புழுதி படருகிறது. ஆயபூ, ராமாக்கோனான், அஞ்ஜி, ராமோஷி எல்லோரும் என் நினைவுகளுக்குள் அழியாதச் சித்திரங்களாயிருக்கின்றனர்.இரவின் மெலிய வெளிச்சத்தில் ஷேகு தன் மனைவியின் முதுகில் நின்று மிதித்துக் கொண்டிருக்கும் காட்சி பெரும் காவியத்தை முன்னிறுத்துவதாக இப்போதும் புலப்படுகிறது. எல்லாவற்றையும் நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி லேகா. எனக்குப் பிடித்த மிகச்சிறந்த நாவல்களில் பன்கர்வாடி ஒன்று என்பதை தயக்கமில்லாமல் சொல்வேன்.
மாதவராஜ்,
வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.இத்தனை ஆண்டு கழித்தும் "பன்கர்வாடியின்" கதாபாத்திரங்களும் ,காட்சிகளும் நினைவில் உள்ளதென்றால் இதை கொண்டே நாவலை தரம் பிரித்து கொள்ளலாம்.
//இரவின் மெலிய வெளிச்சத்தில் ஷேகு தன் மனைவியின் முதுகில் நின்று மிதித்துக் கொண்டிருக்கும் காட்சி பெரும் காவியத்தை முன்னிறுத்துவதாக இப்போதும் புலப்படுகிறது. //
:-))
அச்சிறுகிராமத்தின் விசித்திர மனிதர்களின் இந்த தம்பதியர் முக்கியமானவர்கள்.கலப்பையில் எருதுக்கு சமமாய் நின்று நிலத்தை உழுதவள்..அஞ்சியின் பொருட்டு நாயகனிடம் வந்து வருந்தி அழுகும் காட்சி அப்பெண்ணை இருவேறு விதமாய் முன்னிறுத்துவதாய் இருக்கும்.
பதிவிற்கு நன்றி. வலைப்பூவின் முக்கிய சாரமாய் நல்ல விசயங்களை பகிர்தல் என நான் பார்க்கிறேன். என் கல்லூரி நாட்களில் படித்த நாவல்.பின் நாட்களில் DD-ல் (அப்பொழுது DD மட்டும் தான்)ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் சினிமாவாக பார்த்த ஞாபகம் அமோல் பலேக்கர் நடித்த படம்.
தரமான விசயங்களை தேடிப்போக தூண்டுவது அதன் மூலம் மனிதர்களையும் வாழ்வையும் புரிந்துக்கொள்வது என்ற நோக்கில் உங்கள் வலைப்பூ முக்கியமானதாக படுகிறது. வாழ்த்துக்கள்.
எண்பதுகளில் ஒரு புத்தகம் சாத்தூருக்கு வந்தது. தோழர் பீகே மூலமாக. பகலில் அலுவலகம் போய் விட்டு இரவுகளை முழுமையாக புத்தகங்களுக்கு செலவழித்த காலத்தில் கிடைத்தது பன்கர்வாடி.நீங்கள் சொன்ன அத்துணையும் பொருந்தும் அந்த நாவலின் நெடுக ஆட்டுப்புழுக்கை,கிடைவாசம்,கீதாரிகளின் புழங்குசொற்கள் விரவிக்கிடக்கும். அந்த வாசம் இன்று திரும்ப நாசிக்குள் சுகந்தமாக ஊடுறுவுகிறது. நன்றி.
பகிர்தலுக்கு நன்றி ஜெயமார்த்தாண்டன்.
சுரேஷ் அநேகமாய் அந்த திரைபடத்தை தான் குறிதிருக்க வேண்டும்.அமோல் பாலகரை அந்த கதாபாத்திரத்திற்கு சுளுவாய் பொருத்தி பார்க்க முடிகின்றது.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
//பகலில் அலுவலகம் போய் விட்டு இரவுகளை முழுமையாக புத்தகங்களுக்கு செலவழித்த காலத்தில் கிடைத்தது பன்கர்வாடி//
எனது தற்பொழுதைய பொழுதுகள் இவ்வாறு தான் கழிகின்றன:-)
வருகைக்கும்,பகிர்தலுக்கும் மிக்க நன்றி.
Post a Comment