கால எந்திரத்தின் உதவி இன்றி தலைமுறைகள் பல பின்நோக்கி பயணிக்க செய்கின்றது
இந்த "அரசூர் வம்சம்" .தாத்தா பாட்டி உடன் கூட அமர்ந்து பேச நேரம் இன்றி ஓடிடும், உறவுகள் மலிந்து வரும் இன்றைய சூழலில் முன்னோர்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டிடும் நாவல் இது.பாட்டனும்,பூட்டனும் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நினைக்கவே சுவாரசியமாய் இருக்கும் தானே??!!.அப்பாவும்,அம்மாவும் எப்போதும் அவர்களின் அம்மச்சி குறித்தோ,பெரிய தாத்தா குறித்தோ பேசி கொண்டிருப்பார்கள்.பெரியவர்களிடம் நிறைய கதைகள் புதையுண்டு கிடக்கும்..அதை கிளறி கேட்பதும் ஒதுங்கி போவதும் நம் விருப்பம்.மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகளற்ற அந்த காலங்களில் கூட்டு வண்டி கட்டி மதுரைக்கு இரவில் ராக்கொள்ளையர்களுக்கு பயந்து ஆண்களும்,பெண்களுமாய் சென்று வந்த கதையை அப்பாவின் அத்தை முறை பாட்டி சொல்லி கேட்டது ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சி.
இரா.முருகனின் இந்நாவல் குறித்த சில கட்டுரைகளை சிவராமன் பகிர்ந்திருந்தார்..சுஜாதாவின் கட்டுரை அதில் ஒன்று.தி.ஜ,கு.பா.ரா என பல எழுத்தாளர்களின் சாயல் தொனிப்பதாய்..அற்புத நடையில் இந்நாவல் அமைந்துள்ளதாகவும் சொல்லி இருக்கின்றார்.அது முற்றிலும் உண்மை.கோர்வையாய் கதையாடல் இல்லாது முன்னும் பின்னுமாய் கொஞ்சம் சுழற்றி அடித்து நாவலின் முதல் சில அத்தியாயங்கள் குழப்புவதாய் தொடங்கினாலும் பின்பு சுவாரஸ்யமாய் ஜெட் வேகமெடுக்கின்றது..முன்னோர்கள் அல்லது நாவலில் குறிப்பிடுவது போல மூத்தகுடிகள் தாம் இக்கதையின் நாயகர்கள்...கற்பனைக்கு எல்லையில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தும் முயற்சி இது.
அரசூர் வம்சம் ...புகையிலை விற்று செல்வதில் கொழித்த பிராமணர்களின் வம்சம். சுப்ரமணிய அய்யர்..அவர் தம் புதல்வர்கள் சாமிநாதன் மற்றும் சங்கரன்,இவர்களின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் ஜமீன்தார் அவரின் மனைவி,சங்கரன் பெண் எடுக்கும் கிட்டவாயனின் குடும்பம் என மூன்று குடும்பங்களை பற்றிய கதை.இதில் பன்யன் சகோதரர்கள் காலத்தின் குறியீடாய் வந்து போகின்றனர்.மூத்த குடிகளோ கடந்த காலத்தின் எச்சங்களை நிகழ் காலத்தில் பதித்திடவும்,எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகளை கோடிட்டு காட்டவும் வந்து போகின்றனர். சுப்ரமணிய அய்யரின் வளர்ச்சியை கண்டு பொறாமைபடும் ஜமீந்தார் பின்பு சமரசம் செய்து கொண்டு அரண்மனையை புகையிலை கிடங்காக மாற்றி லாபம் சம்பாதிக்கின்றார்.ஜமீந்தார் வரும் காட்சிகள் யாவும் சிரிப்பை வரவழைப்பவை.அளவில்லாத பகடி.
தன்னை விட பல நூறு வருடம் மூத்த பெண்ணுடன் காதல் கொள்ளும் சாமிநாதன்,விசித்திர சாபம் கொண்டு நித்திய சுமங்கலியாய் இருக்கும் சுப்பம்மா கிழவி,பறக்கும் சக்தி கொண்ட கிட்டவாயனின் மாமனார்,பணத்தின் பொருட்டு மதம் மாறும் குடும்பத்தார்,துர் தேவதைகள்-மந்திரங்கள்-ஜபித்த எந்திரங்கள் என காலத்தை ஓட்டும் ஜோஸ்யர்,சகல வித்தைகளும் கற்று அறிந்த கொட்டகுடிதாசி என அரசூர் வம்சத்தின் கதாபாத்திரங்கள் யாவும் மர்மமும் ஆச்சர்யங்களும் பொருந்தியவர்கள்.
எங்கள் வீட்டு முந்தைய தலைமுறை பெண்கள் தொட்டு தடவிய வேலைபாடுகள் கொண்ட பல்லாங்குழி,கரையான் அரித்த புகைப்படங்களின் அமர்ந்திருக்கும் முண்டாசு கட்டிய கிழவன்கள், பாம்படம் மாட்டிய கிழவிகள்,பாட்டன் காலத்து கைத்தடிகள்,வைத்தியர் என அறியப்பட்ட தாத்தாவின் அப்பா காலத்து ஓலை சுவடிகள் என கிராமத்து வீடு முழுதும் சின்ன சின்ன விஷயங்கள் மூதாதையர்களை இன்றும் நினைவுபடுத்தி கொண்டே இருக்கின்றன.இந்த நாவல் இதுபோல எத்தனையோ விஷயங்களை கிளறிவிட்டது.இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பாட்டன் பூட்டன் குறித்த காரியங்கள் அவசியம் தானா? என கேட்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாய் இந்த நாவல் உங்களுக்கானது இல்லை.
Saturday, December 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
லேகா பக்ரிந்தமைக்கு மிக்க நன்றி.
இந்த முருகன் தான் உன்னை போல ஒருவன் திரைப் பட வசன கர்த்தாவா.
வாங்கி படிக்க முயலுகிறேன்
போன வருஷம் புத்தக கண்காட்சில வாங்கினது...இன்னும் படிக்காம வச்சிருக்கேன்... இந்த மாசத்துக்குள்ள படிச்சிர வேண்டியது தான்.... நல்ல பதிவு....
நன்றி ராம்ஜி.
ஆம்,இரா.முருகன் "உன்னை போல ஒருவன்" திரைப்படத்தின் வசனகர்த்தாவே தான்.
நன்றி பாஸ்கி.
சுவாரஸ்யமான நாவல் இது. தொடங்கினால் முடிக்காமல் வைக்க முடியாது.
இந்த ஆண்டில் நான் முதலில் வாசித்த நாவல்...magical realism...அவருடைய வலைமனை http://www.eramurukan.in/
பகிர்தலுக்கு நன்றி கிருஷ்ணன்
Post a Comment