Monday, June 29, 2009

அழகிய பெரியவனின் "நெரிக்கட்டு"

நெரிக்கட்டு,இந்த தொகுப்பிற்கு இதைவிட சிறந்த தலைப்பு எதுவும் இருக்க முடியாது.தொகுப்பின் ஒரு சிறுகதை தான் நெரிக்கட்டு எனினும் ஏனைய எல்லா கதைகளுக்கும் இப்பெயர் பொருந்தும்.ஒவ்வொரு கதையும் ஒருவித மனநிலையை தோற்றுவிட்டது.எல்லா கதைகளும் விளிம்பின் நிலையை சோகத்துடன் சொல்பவையே,இருப்பினும் இந்த கதைகளங்கள் இதுவரை படித்திடாதது.இப்படியுமான சூழ்நிலைகளை யோசிக்க இயலுமா என ஆச்சர்யத்தை தோற்றுவித்த கதைகள் "நெரிக்கட்டு" மற்றும் "நீர் பரப்பு".

நெரிக்கட்டு,வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியேறிய நாயகன் புலம் பெயர்ந்த ஊரில் மணமான பெண்ணொருத்தியுடன் கொள்ளும் காதலும் அதன் காரணமாய் சந்திக்கும் மரணமும் பற்றிய கதை.இக்கதையில் தெளிவாய் சொல்லபடாதது நாயகனின் வயது,அதன் காரணமாய் புரிதலில் சிறிது குழப்பம் உள்ளது. "திசையெட்டும் சுவர்கள் கொண்ட கிராமம்",மேல்குடியினருக்கு எதிரான தலித் இளைஞர்களின் போராட்டத்தை பற்றிய கதை.தலைமுறை தலைமுறையாய் தொடரும் தீண்டாமை,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் என தீராத கொடுமைகளை மையபடுத்தி பின்னப்பட்டுள்ள இக்கதை அழுத்தமாய் வலியுறுத்துவது தலித் இளைஞர்களுக்கு/பெண்களுக்கு இவற்றை எதிர்த்து போராட வேண்டிய மன தைரியத்தையும் உறுதியையும்.




"இறகு பிய்த்தல்",உயிர்களின் மீது பேரன்பு கொண்டவனும்,தான் சார்ந்துள்ள சமூகத்தை குறித்த நுண்ணறிவு பெற்றவனாகவும் உள்ள பிச்சைகாரனை பற்றிய கதை.அவனின் தெரிவிக்கப்படாத தொடக்க காலங்களை காட்சிகளின் விவரிப்பில் மறைமுகமாய் தெரிவிக்கின்றார்."உயிரிடம்",சொந்தமாய் வீடு இல்லாதவர்களுக்கு அது குறித்த கனவுகளும்,ஏக்கமும்,கற்பனையும் இருப்பது போலவே வீடு உள்ளவர்களுக்கு அது குறித்த நினைவுகளும்,பெருமைகளும் இருப்பது இயல்பு.பிறந்த வீடும்,புகுந்த வீடும் ஒரு பெண்ணிற்கு நெருக்கமாய் அமைவதை உருக்கமாய் விவரிக்கும் கதை.

"நீர்பரப்பு",இக்கதையில் மிக சிக்கலான மன போராட்டத்தை எழுத்தில் கொணர்ந்து உள்ளார் அழகிய பெரியவன்.கரகாட்டகாரியான தனது காதலியின் தாய்,அவன் ஊருக்கே ஆட வரும் சமயத்தில் நாயகனுக்கு ஏற்படும் மன போராட்டமே கதை.தர்மசங்கட நிலையில் தத்தளிக்கும் அவனின் ஒவ்வொரு கனங்களும் விவரிக்கப்பட்டுள்ள விதம் மிகையில்லாதது."கண்காணிக்கும் மரணம்",மரணத்தின் பிடியில் இருக்கும் மனைவியை உயிராய் கவனித்து கொள்ளும் கணவன் அவளோடு கூடிய கடந்த கால வாழ்கையை நினைவு கொள்வதை சில பூடகங்களோடு சொல்லும் கதை.

இவை தவிர்த்து "பால் மறதி","யாரும் யாரையும்" ஆகிய கதைகளும் குறிப்பிட்டு சொல்லபடவேண்டியவை.ஆழமான வாசிப்பு இக்கதைகள் நன்கு உணர செய்யும்.அழகிய பெரியவனின் கதைகள் மனித உறவுகளுக்குள்ளான மிக மிக மென்மையான உணர்ச்சி போராட்டங்களை தொட்டு செல்பவை.

வெளியீடு - United Writers
விலை - 50 ரூபாய்.

8 comments:

குப்பன்.யாஹூ said...

வித்தியாசமான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல லேகா.

பதிவு வழக்கம் போலவே அருமை.

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி ராம்ஜி.

Krishnan said...

அழகிய பெரியவன் எழுதியதை இதுவரை படித்ததில்லை. அவர் கட்டுரைகள் சிறப்பாக இருக்கும் என கேள்விபட்டிருக்கிறேன்.

deesuresh said...

அழகிய பெரியவனின் அறிமுகத்தைக் கொடுத்ததற்கு நன்றி லேகா. எனக்கு ஒன்று தோன்றுகிறது. நானாக எந்தப் புத்தகத்தையும் தேடிப் படிப்பதை விட தங்களின் அறிமுகப் புத்தகங்களைப் படித்தாலே ஒரு சிறு இலக்கியவாதிக்கான தகுதி எனக்கு வந்து விடும் என்று நினைக்கிறேன். இது வெறும் புகழ்ச்சி அல்ல...!:)

லேகா said...

வருகைக்கு நன்றி கிருஷ்ணன்.

அழகிய பெரியவனின் இரு புத்தகங்கள் மட்டுமே படித்துள்ளேன்.விளிம்புநிலை வாழ்கையை தனது பாணியில் தொகுத்துள்ளார்.

லேகா said...

நன்றி சுரேஷ் :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

deesuresh said...
அழகிய பெரியவனின் அறிமுகத்தைக் கொடுத்ததற்கு நன்றி லேகா.

வழிமொழிகிறேன்

லேகா said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா :-)