Tuesday, June 23, 2009

குற்றால சாரல்....

சமீபத்திய அலுவலக பயிற்சி வகுப்பொன்றில் "DRIVE" என்கிற வார்த்தையை கேட்டதும் தோணும் ஐந்து விஷயங்களை பட்டியலிட சொன்னார்கள்.சட்டென எனக்கு தோன்றியது "மழை நாள்".மழையோடு செய்யும் எந்த காரியமும் அழகு தானே!!சமீபத்தில் மழையோடு கூடிய நெருக்கத்தை அதிகரிக்க செய்வதாய் அமைந்தது குற்றால பயணம்.மதுரைக்கு அப்பால் ஒரு நாலு மணிநேர பயணத்தில் ஒரு சொர்க்கபுரி இருக்கின்றது என்பதே பெரிய சமாதானம் தான்.
பள்ளி,கல்லூரி நாட்களில் குற்றாலம் சென்று திரும்புவது ஏதோ ஒரு வருடாந்திர கடமை போல இருக்கும்.சென்னை வந்த பிறகு மெல்ல குற்றால ஆசை தூர கனவாய் போனது.இந்த வருடம் சீசன் துவக்கதிலேயே செல்லும் வாய்ப்பு..குற்றாலதிற்கே உரிய சாரல்,குளிர் காற்று,ஈரம் ஒட்டிய நீண்ட சாலைகள்,முன்பின் அறிமுகம் இல்லாத பொழுதும் அருவியின் பொருட்டு நட்பாய் சிரித்த பெண்கள்,சாரலோடு கூடிய பயணத்தில் கேட்ட ராஜாவின் பாடல்கள்,இரவில் வெள்ளி கம்பியென தூரத்தில் காட்சியளித்த மெயின் அருவி என மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ பல காட்சிகளை எனக்காய் பத்திரபடுத்தி வைத்துள்ளேன்.வாசுதேவநல்லூரை கடந்ததும் வைக்கோல் போருக்கும் பாழடைந்த ஒரு மண்டபத்தின் பின்னணியிலும் கண்ட வானவில் காட்சி..பிரம்மாண்ட காற்றாலைகள்...சின்ன சின்ன பழைமை மாறாத கிராமங்கள்..நெல்லை தமிழ் என முற்றிலுமாய் என்னை உள்ளிழுத்து கொண்டது இந்த பயணம்.தலையை தட்டும் மேகங்கள் உங்களுக்கு பிடிக்குமா?? பெரு மழைக்கு முன் திரண்டு இருக்கும் மேகங்கள் அச்சத்தை மீறிய சிலிர்ப்பை தருவதை மறுக்க முடியாது.குற்றாலத்தில் மேக கூட்டங்களுக்கு பஞ்சமில்லை.நிற்பதாய்..நடனமிடுவதாய். அசைந்து நடப்பதாய் உருவம் தரித்து மலைகளை வலம் வருகின்றன.குற்றாலம், அருவிகளின் இரைச்சலும்,மனதை வருடும் சாரலும்,குளிர் தென்றலோடு எண்ணெய் பிசுபிசுப்பு மணமும்,தீரா மர்மங்கள் பொதிந்த மலைகளும் என ஒருவித சௌதர்யத்தை ஏந்தி நிற்கும் ஊர்...வேறென்ன சொல்ல?!!!

28 comments:

மொழி said...

//குற்றாலதிற்கே உரிய சாரல்,குளிர் காற்று,ஈரம் ஒட்டிய நீண்ட சாலைகள்,முன்பின் அறிமுகம் இல்லாத பொழுதும் அருவியின் பொருட்டு நட்பாய் சிரித்த பெண்கள்,சாரலோடு கூடிய பயணத்தில் கேட்ட ராஜாவின் பாடல்கள்,இரவில் வெள்ளி கம்பியென தூரத்தில் காட்சியளித்த மெயின் அருவி........

கவிதை...கவிதை...
எழுத்து நடை மிளிர்கிறது....

Ayyanar Viswanath said...

லேகா இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம்.நல்ல மொழி :)

லேகா said...

நன்றி அய்யனார்...

ம்ம்ம்ம்...விரிவாய் எழுதவேண்டும் என்று தான் ஆசை,இந்த பதிவே மூன்று நாள் ட்ராப்டில் இருந்தது..:-((

லேகா said...

நன்றி மொழி :-)

துபாய் ராஜா said...

//பிரம்மாண்ட காற்றாலைகள்...சின்ன சின்ன பழைமை மாறாத கிராமங்கள்..நெல்லை தமிழ் என முற்றிலுமாய் என்னை உள்ளிழுத்து கொண்டது //

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரு போல வருமா.........

லேகா said...

நன்றி ராஜா.

குப்பன்.யாஹூ said...

அய்யனார் சொல்வதை வழி மொழிகிறேன். நீங்கள் மதுரை திருமங்கலம் ஆரம்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர், கடயநல்லூர், sokkampatti, naalu mukku saalai தென்காசி பற்றி எல்லாம் விரிவாக எழுத வேண்டுகிறேன்.

குற்றாலமும் மெயின் அருவி, ஐந்து அருவி, பழைய குற்றாலம் எல்லாம் பற்றி எழுத வேண்டுகிறேன்.

குப்பன்_யாஹூ

Vishnu - விஷ்ணு said...

// மெயின் அருவி, ஐந்து அருவி, பழைய குற்றாலம் எல்லாம் பற்றி எழுத வேண்டுகிறேன். //

என்ன குப்பன்_யாஹூ கொஞ்ச அருவி மட்டும் சொல்லிருக்கீங்க. இன்னும் செண்பகா தேவி அருவி,தேன் அருவி,பழதோட்ட அருவி, புலி அருவி,சிற்றறுவின்னு பல இருக்கே.

இந்த வார சனிகிழமை நானும் குற்றாலம் போறேனே....

butterfly Surya said...

எழுத்தும் நடையும் அருமை.

நிறைய எழுதுங்கள்.

வாழ்த்துகள்

NILAMUKILAN said...

கவிதை நடை அழகு. குற்றாலத்தை பற்றி மேலும் நிறைய எதிர்பார்த்தேன். விகடனில் குற்றாலம் பற்றிய கட்டுரையை படித்தவுடன் சிலிர்த்து விட்டது எனக்கு. உங்கள் பதிவு மற்றும் எழுத்து நடை உங்கள் தெளிந்த ரசனையை காட்டுகிறது. அமெரிக்காவில் இருக்கும் நான் நயாகரா நீர் வீழ்ச்சியின் சாரலை அனுபவித்தாலும் குற்றால சாரலில் குளித்து கும்மாளமிட ஆசை வருகிறது. வழக்கம் போல 'அடுத்தமுறை இந்தியா வரும்போது...' என என்ன சமாதானபடுத்திக் கொள்கிறேன்.

கே.என்.சிவராமன் said...

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க :-) விரிவா எழுதியிருக்கலாம்னு எல்லாரும் கேட்கறதே, உங்க மொழி நடைக்காகத்தான். புத்தக வாசிப்பு சம்பந்தமான பதிவுகள் தவிர, அப்பப்ப இதுமாதிரியான பதிவுகளையும் எழுதுங்க

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anonymous said...

நல்ல அனுபவப் பகிர்தல் லேகா.

லேகா said...

//ஸ்ரீவில்லிபுத்தூர், கடயநல்லூர், sokkampatti, naalu mukku saalai தென்காசி//

ராம்ஜி,

வாசிக்கும் பொழுதே முகத்தில் சாரல் அரைந்தது போல உள்ளது...விரிவாய் எழுதி இருக் அவேண்டிய கட்டுரை தான்..நேரமின்மையால் சுருக்க எழுதி விட்டேன்!!

வருகைக்கு நன்றி ராம்ஜி.

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி விஷ்ணு!

நன்றி வண்ணத்து பூச்சியார்.

லேகா said...

நிலா முகிலன்,

விகடன் கட்டுரை குறித்த அறிமுகத்திற்கு நன்றி.

//அமெரிக்காவில் இருக்கும் நான் நயாகரா நீர் வீழ்ச்சியின் சாரலை அனுபவித்தாலும் குற்றால சாரலில் குளித்து கும்மாளமிட ஆசை வருகிறது//

:-))

லேகா said...

@பைத்தியக்காரன்,

//எல்லாரும் கேட்கறதே, உங்க மொழி நடைக்காகத்தான். புத்தக வாசிப்பு சம்பந்தமான பதிவுகள் தவிர, அப்பப்ப இதுமாதிரியான பதிவுகளையும் எழுதுங்க//

நிச்சயமாய் இனி வரும் காலங்களில் எழுதுகிறேன்.வருகைக்கு நன்றி.

லேகா said...

நன்றி வேலன் :-)

☼ வெயிலான் said...

உடனே குற்றாலம் போகத் தூண்டும் வரிகளும், வர்ணனைகளும் அருமை!

Krishnan said...

கடத்த மே மாத இறுதியில் நானும் குற்றாலம் சென்றேன், அருவியில் நீர் அதிகம் இல்லை. நான் நினைத்ததையெல்லாம் அழகு தமிழில் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

KARTHIK said...

Welcome back

நல்ல மொழிநடை

பதிவு சுருக்கமா இருக்கனுமின்னு சுருக்கி எழுதினமாதிரி இருக்குங்க :-))

லேகா said...

வருகைக்கு நன்றி வெயிலான்:-)

லேகா said...

கிருஷ்ணன்,

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் பின்னூட்டம்..

வருகைக்கு நன்றி.

லேகா said...

கார்த்திக்,

இடையில் ரெண்டு வாரம் இடைவெளி விட்டதும் "Welcome Back" :-)))

நேரமின்மையால் சுருக்கமாக எழுதி விட்டேன்!!குற்றால அருவிகள் ஒவ்வொன்றை பற்றியும் எழுதுவதிற்கு நிறைய உள்ளது.

deesuresh said...

பள்ளி,கல்லூரி நாட்களில் குற்றாலம் சென்று திரும்புவது ஏதோ ஒரு வருடாந்திர கடமை போல இருக்கும்.சென்னை வந்த பிறகு மெல்ல குற்றால ஆசை தூர கனவாய் போனது//

எனக்கும் அதே தான். அதுவும் நான் வேலை பார்த்தது நெல்லையில், தென்காசிக்கு வாரம் ஒரு நாள் வரும் வேலை வேறு. சீசன் வரும்போதெல்லாம், எனது விநியோகஸ்தரின் கெஸ்ட் ஹவுஸில் 3 நாட்கள் அலுவல் ரீதியாகவே தங்கி(ஹிஹி..!:D ) அருவிகளின் அமர்க்களத்தை அனுபவித்ததுண்டு. தேனருவி, செண்பகாடவி அருவிகளுக்கு மலைப் பயணம் செய்த நாட்கள் எல்லாம் மறக்க இயலா மனப் பதிவுகள்.
இப்பவும் குற்றாலம் செல்ல ஆசை தான் ஆனால் சென்னையில் நான் பார்க்கும் இந்த ரிலையன்ஸ் தொழில் என்னை விட மாட்டேன் என்கிறது.

மன நிகழ்வுகளைப் புரட்டிப்பார்க்க வாய்ப்பளித்த லேகாவிற்கு நன்றி

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி சுரேஷ்

ராகவன் said...

ஸ்ரீவில்லிபுத்தூரை சொந்த ஊராகக் கொண்டதால், குற்றாலம் எந்தவிதமான தவங்களும், ஜபங்களும் இல்லாமல் கிடைத்த ஒரு வரமானது...ஒரு இரவில் சென்றுவரக்கூடிய சனிக்கிழமை இரவுகள் அருகி இருந்தன அப்போது. இரவில் குற்றாலமே குளித்து முடித்து விரிதலை உலர்த்துவது போல் இருக்கும்.
அங்கங்கே வெளிச்ச பொத்தல்கள் நிறைந்த கந்தல் ஆடை போர்த்து வெட வெடன்னு நடுங்குகிற ஒரு ராப்பிச்சைக்காரியைப் போல விடியும் வரை சத்தமிடும்..குளிப்பதற்கு ஏனோ எனக்கு பெரிதாய் நாட்டம் இருந்ததில்லை..வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும், கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றும்...பிறருக்கு விந்தையாய் போன பழக்கம் இது...

ஏதோ ஒருமூலையில் எந்தவித பச்சய வாசமும் மனக்காத ஒரு கான்கீரிட் காட்டில் வாழும் எனக்கு உடம்பு சில்லிட்டு மூளையில் பலாவாய்....உங்களுடைய பகிர்வு இருந்தது...

அழகான, இயல்பான மொழி ஆளுமை உங்களுடையது..எளிதாக கைபிடித்து வருகிறது எழுத்து ...தொடர்ந்து நிறைய எழுதவும்....வாழ்த்துக்கள்

ராகவன் said...

ஸ்ரீவில்லிபுத்தூர் சொந்த ஊராய் போனதில் எந்தவித தவங்களும் ஜபங்களும் இல்லாமல் வாய்த்த ஒரு வரமானது குற்றாலம் எனக்கு. ஒரு இரவில் குற்றாலம் சென்று திரும்பி வர என்னுடைய சனிக்கிழமை இரவுகள் அருகி இருந்தன அப்போது.
இரவில் குற்றாலமே குளித்துவிட்டு விரிதலை உலர்த்துவது போல் ஒரு பிரமை இருக்கும். அங்கங்கே வெளிச்ச பொத்தல்களுடன் இருட்டை போர்த்திய ஒரு ராப்பிச்சைக்ககாரியின் குரலாய் எதற்காகவோ இறைந்து கொண்டே இருக்கும் அருவிகள். எனக்கு குற்றாலம் பார்த்துக் கொண்டே இருக்க, கேட்டுக் கொண்டே இருக்க மாத்திரமே நிரம்ப பிடிக்கிறது. எல்லா அருவிகளிலும் குளிப்பது என்னால் இயலாத காரியம், உடன் வருபவர்களின் விநோதப் பார்வை எனக்கு பழகிவிட்டது, அவர்களுக்கும்.

எங்கோ பச்சய வாசங்கள் மனக்காத கான்கிரீட் காடுகளில் வாழும் எனக்கு உங்களின் அனுபவ பகிர்வு சுகமாய் இருந்தது.

உங்களின் மொழி ஆளுமை மிக அழகாக, இயல்பாக இருக்கிறது. ஒரு கற்பூர ஆரத்தியின் வெம்மை போல, துளசியின் மனம் போல...இதமாய் இருக்கிறது... உங்கள் எழுத்து. உங்களுடன் கைபிடித்து உடன் வருகிறது..திருவிழா குழந்தையின் பத்திரத்துடன்.. வாழ்த்துக்கள்...

குற்றால அருவிகளே

லேகா said...

ராகவன்,

உங்களின் பின்னூட்டத்திற்கு எப்படி பதிலளிக்காமல் இருந்தேன் என தெரியவில்லை, மன்னிக்கவும்.

//இரவில் குற்றாலமே குளித்து முடித்து விரிதலை உலர்த்துவது போல் இருக்கும்.
அங்கங்கே வெளிச்ச பொத்தல்கள் நிறைந்த கந்தல் ஆடை போர்த்து வெட வெடன்னு நடுங்குகிற ஒரு ராப்பிச்சைக்காரியைப் போல விடியும் வரை சத்தமிடும்..//

சில வரிகளில் ரொம்ப அழகா சொல்லிடீங்க..தவம் ஏதும் செய்யாமல் அடிக்கடி குற்றாலம் சென்று வர உங்களுக்கு வாய்ப்பு உள்ளதால்..நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலி தான்..மதுரைக்கு அடுத்து நான் மிக நெருக்கமாய் உணரும் ஊர் நெல்லை.பெருமழை காலத்தில் தாமிரபாரனியை பார்க்க வேண்டும் என்கின்றன ஆவல் எப்போதும் உண்டு..

வாழ்த்துக்களுக்கு நன்றி.