- ஜெமோ

யுவனின் எழுத்துக்களில் விரியும் மாய வெளியை வாசித்து உணர்ந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல.புனைவின் உச்சம் என நான் கருதும் குள்ள சித்தன் சரித்திரத்தில் கிடைத்தது யுவனின் முதல் அறிமுகம்.ஒளி விலகல்,ஏற்கனவே,பகடையாட்டம் என தொடர்ந்து வாசித்த யுவனின் படைப்புகள் தந்து சென்ற அனுபவத்தை வார்த்தைகளில் சொல்ல தெரியவில்லை...ம்ம்....மாயவெளிப் பயணம் என கொள்ளலாம்.மணற்கேணி இவற்றிற்கு மாறான தொகுப்பு.கதையா, கட்டுரையா,சுயசரிதையா என்ற கேள்விகளுக்குள் அடங்காது எல்லாமுமாய் உள்ளது.
"ஒரு மாபெரும் மரத்தையும் அதன் அடித்திண்டாக அமைந்த சிமென்ட்டுத் திண்ணையையும் ,நன்கு விளைந்த ஐந்து மனித உருவங்களையும் ஒரு சின்னஞ்சிறு நெஞ்சுக்குள் சுமப்பது எளிதா என்ன?இவற்றின் மொத்த எடையை விட,ஒரே ஒரு கோணல் வகிட்டின் எடை இன்னும் அதிகம்.."
வாசிக்கும் புத்தகத்தில் பிடித்த வரிகளை கோடிட்டு வைப்பது வழக்கம்.மாறாய் இத்தொகுப்பில் பிடித்த வரிகள் வரும் பக்கத்தின் நுனியை மடித்து வைத்து கொண்டே வந்ததில்...அனேகமாய் எல்லா பக்கங்களும் மடிப்பில் இருந்து தப்பவில்லை என வாசித்து முடித்ததும் அறிந்தேன். வாழ்வனுபவங்களை சுவாரஸ்யம் கூட்டி,எளிமையான வார்த்தைகள் கொண்டு விவரிக்கும் 100 குறுங்கதைகளின் தொகுப்பு மணற்கேணி.
"மனநிலை பிறழ்வு என்றெல்லாம் எதுவும் கிடையாது.மரபணு வழியாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் ஒவ்வொரு தனிமனமும் ஒரு ஸ்திதிக்கு வந்து சேர்க்கிறது.அதை சரி என்றும் தவறு என்றும் நிர்ணயிப்பதற்கு பிறருக்கு அதிகாரம் கிடையாது.உடல் ஊனமுற்றவர்களுடன் சகஜமாக கோ-எக்சிஸ்ட் பண்ண கற்று கொண்டுவிட்ட சமூகத்துக்கு மாற்று மனநிலையாளர்களுடன் வசிப்பது எப்படி என்று இன்னும் தெரியவில்லை............."
யுவனின் பிரதியாய் கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரத்தின் வழியே,கடந்து வந்த மனிதர்களை குறித்த கூர்மையான அவதானிப்பை முன்வைத்து சொல்லப்படும் கதைகள்.சொல் வித்தைகள் எதுவும் இன்றி எளிமையான சம்பவங்களின் மூலம் அம்மனிதர்களின் ஊடே நாமும் நடமாட முடிகின்றது. இஸ்மாயில், ரவி, அனுராதா, விசாலாட்சி,தபால்காரர் சுப்பிரமணியம்,தாயம்மா பாட்டி, வேங்கோபராவ், பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் சந்திக்க நேரிடும் போலீஸ்காரர், எதிரியாகி போன ஜப்பானிய நண்பன் ஒருவன்,மலாவி தேசத்து மாணவன்,பெயர் குறிப்பிடப்படாத காதலி என உயிர் பெற்று உலவும் மனிதர்கள் அநேகம்.
குறிப்பாய் வங்காள விவசாய கிராமத்தில், இரவொன்றில் சந்திக்க நேரிடும் அக்கிழவர் ..வார்த்தைகள் அற்று அவரோடு நிகழ்ந்த உரையாடல் என நீளும் அக்கதை யுவன் பாணியிலான புனைவாக இருக்க கூடும் முடிவு செய்து கொண்டேன்.இத்தொகுப்பில் வரும் கீழ் உள்ள வரிகள் என் போன்றவர்களுக்கு தான் போல....
"கடந்த சில வருடங்களில் எனக்கென்று உருவாகி இருக்கும் வாசகர்களில் பலரும்,நான் சொல்லும் நிஜமான செய்திகளில் கூட புனைவின் நெடியை நுகரும் வல்லமை கொண்டவர்கள்"

அப்பாவை ஆதர்ச நாயகனாய் கொள்ளாதோர் யாரிங்கே? தந்தையை குறித்தான யுவனின் தொடர்ச்சியான குறிப்புகள் அளப்பரிய பிரியத்தை சொல்லுபவை.இத்தொகுப்பில் பல கதைகள் தந்தையோடு கரட்டுப்பட்டியில் கழித்த நாட்களை பற்றி பேசுபவை.நடுத்தர வாழ்வின் சிக்கல்கள் உறவுகளை முன்வைத்து தொடரும் சங்கடங்கள்... சமநிலையை பாதிக்கும் எல்லா சம்பவங்களுமே எல்லாருக்கும் பொதுவானவையே.முடிந்த வரை இவை யாவும் கழிவிரக்க மனநிலையில் இருந்து விலகி பகடி கூட்டியே முன்வைக்கப்படுகின்றன.யுவனிற்கு கைகூடும் பகடி இங்கு அரிதாய் காணக்கிடைப்பது..ஒரு கதை இவ்வாறாக தொடங்குகின்றது.
"மகாவாக்கியங்களை இன்ன சந்தர்ப்பத்தில் இன்னார் உதிர்ப்பார் என்று யூகிக்க இயலாது.முந்தைய வாக்கியத்தில் ஒரு சிறு மிரட்டல் இருக்கிறதல்லவா?ஒன்றுமில்லை,இந்த பத்தியை ஒரு கனமான வாக்கியத்துடன் தொடங்க ஆசையாய் இருந்தது.தொடங்கி விட்டேன்.அதற்கு மேல ஒன்றுமில்லை."
சோழவந்தான்,கரட்டுப்பட்டி தொடங்கி.. தல்லாகுளம், கோரிப்பாளையம்,சிம்மக்கல்,ஜெய்கிந்தபுரம்,குரு தியேட்டர்,காலேஜ் ஹவுஸ் என மதுரை நகரின் ஊடே பயணித்து சென்னையில் முடிவற்று தொடர்ந்து கொண்டிருக்கும் பயணம்... முன்னும் பின்னுமாய் கலைத்து போடப்பட்டுள்ள சம்பவங்கள்..முரணான குணாதிசியங்கள் கொண்ட மனிதர்கள்... கொண்ட இத்தொகுப்பு கலைவையான மனநிலையை தந்தது. கால ஓட்டத்தில்,முற்றிலுமாய் தொடர்பு துண்டிக்கப்பட்ட சில முகங்களை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்ய தூண்டுவதே இத்தொகுப்பின் வெற்றி.
வெளியீடு - உயிர்மை