பாட்டா,வாசவேச்வரம் கிராமத்தின் மரியாதைக்குரிய பெரியவர்.இவரின் கம்பீரமும் தீர்க்கமான மனதைரியமும் பல இடங்களில் புலப்படுகின்றது.ரோஹிணி,அக்கிராமத்தின் படித்த,சௌந்தர்யம் மிக்க ஒரே பெண்..இவளின் கணவன் சந்திரசேகர் ஐயர்,வயற்காட்டு வேலைகள் மீது மட்டுமே மோகம் கொண்டு,புத்திகூர்மை கொண்ட ரோஹினியின் முன்னர் தாழ்மைஉணர்ச்சி கொண்டு இருக்கும் சராசரி மனிதர்.டாக்டர் சுந்தா,எதற்கெடுத்தாலும் ஆர்பாட்டம் செய்யும் முன்கோபி.முற்போக்கு சிந்தனைகள் கொண்ட வாசுவேச்வரத்தின் இளைங்கர்களை எல்லா விதத்திலும் எதிர்க்க துணிந்த மூடன்.சுப்பையா,பெயர் தெரியா வியாதியின் பிடியில் மட்டும் அல்லாது சதா திட்டி கொண்டிருக்கும் மனைவி விச்சுவின் பிடியிலும் உழல்பவர்.

வாசவேச்வரத்தின் ஆண்கள் பலர் மனைவி மீது கொண்டுள்ள பிரியத்தை காட்டிலும் மற்ற பெண்டிரின் மீது மோகம் கொண்டவராகவும் உள்ளனர்சுப்பு குட்டி,சுந்தாவை போல,பெண்கள் சிலர் கொண்டவனை எப்போது குறை கூறி,இயலாமையில் பொறாமை கொண்டவர்களாக உள்ளனர் விச்சுவை போல.முக்கியமான பாத்திரபடைப்பு பிச்சாண்டியுடையது.எழுச்சி மிக்க சிந்தனை கொண்டவனாக,புரட்சிகாரனாக ஊரில் கலகங்கள் செய்து திரியும் இவனுக்கும் ரோஹிணிக்குமான பிரியம் அர்த்தம் மிகுந்தது.
குழப்பமும்,சங்கடங்களும் நிறைந்ததாகவே இருப்பினும் வாசவேச்வரதினரின் அன்றாட வாழ்க்கை அதன் போக்கில் சென்ற கொண்டிருக்கின்றது....தேர் திருவிழாவிற்கு முன்வரை..எதிர்பாராது நிகழும் ஒரு கொலையின் பொருட்டு ஏற்படும் குழப்பங்கள்..பாட்டா அதன் உண்மையை அறிய முயல்வதும்..அதன் தொடர்ச்சியாய் ஒரு தற்கொலையும் என முடிகின்றது.ஒரு சிறு கிராமத்தின் வெவ்வேறு மனித மனங்களின் ஆசைகள்,ஏக்கங்கள்,தாழ்வுணர்ச்சி,ஈடேரா காதல்,புரிதல் அற்ற வாழ்வு,போலித்தனங்கள் ஆகியவற்றை பூடகமாய் சொல்லுகின்றது இந்நாவல்.
வெளியீடு - காலச்சுவடு
விலை - 140 ரூபாய்