
தென்மாவட்ட கிராமங்களில் இன்றும் ஊர் திருவிழா என்றால் நாடகம்,கரகாட்டம்,ஆடல் பாடல் என கிராமமே விழாக்கோலம் கொண்டு அழகுரும்.எங்கள் கிராம சாமி கும்பிடும் அப்படியே ,திருவிழா என்றால் நாடகம்,கரகாட்டம்,ராஜாராணி ஆட்டம் என மொத்தமாய் ஒரு வாரம் கோலாகலமாய் இருக்கும்.திருவிழாவிற்கு நாள் குறிந்த அன்றே நாடகம் குறித்த ஆவலும்,ஆயத்தமும்,ஏற்பாடுகளும் தொடங்கிவிடும்.அதிலும் வருடம் தோறும் ஒரே கதையான வள்ளி திருமணம் நாடகத்தை சலிக்காமல் மக்கள் பார்த்து ரசிப்பர்.இது முதலில் எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது..பின்பு வருடம் முழுதும் ஓயாது உழைக்கும் அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை குடுக்கும் இக்கலைகள் மீது தீரா விருப்பம் வருவது இயல்பே என புரிந்தது.இரவு 9 மணி வாக்கில் தொடங்கும் நாடகம் காலை 6 மணிக்கு முடிவு பெரும்.விடிய விடிய நடைபெறும் நாடகத்தை காண பெரிசுகள்,பெண்கள்,சிறுவர்கள் என திடலில் அமர்ந்து போன வருட நாடகத்தை பற்றியும்,வள்ளியாய் நடித்த நடிகை குறித்தும்,பப்பூன் செய்த ஆபாச சேட்டைகள் குறித்தும் பேசி பேசி ஓய்ந்து இந்த வருட நாடகத்தை காண ஆவலோடு ஆயத்தமாவர்.

கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் கலைகளான தெரு கூத்து,பாவை கூத்து,கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை தற்பொழுது அழிவை நோக்கி செல்லுகின்றன.அழிந்து வரும் கிராமிய கலைகளுள் முக்கியமான ஒன்று தெரு கூத்து..ஒரு தெரு கூத்து கலைஞனின் ஒரு நாள் பொழுதினை படம் பிடித்து அக்கலையின் இன்றைய அவல நிலையை அழுத்தமாய் பதிவு செய்துள்ளார் கர்ண மோட்சம் இயக்குனர் முரளி.
பள்ளி ஒன்றில் கூத்தாட அழைத்ததை கொண்டு தன் மகனுடன் கர்ணன் வேடமிட்டு நகரத்திற்கு வருகிறான் நாயகன்.யாரோ இறந்ததின் காரணமாய் பள்ளி அன்று விடுமுறை என அறிந்து தலைமை ஆசிரியர் வீடு தேடி செல்ல அவர்களும் அங்கு இல்லாது போகவே மிகுந்த பசி கொண்டு டீ கடை ஒன்றில் தன் மகனோடு நிற்கிறார்.அங்கு கடைக்காரனிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி பணி செய்யும் சிறுமி ஒருத்தி உணவு தர அவளுக்காக மட்டும் கூத்தாடுகிறார்.... அதே திருப்தியோடு தனது ஊருக்கு செல்கிறார்..இதனிடையில் கூத்தாடியின் மகன் கிரிகெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டு அவரிடம் மட்டையும் பந்தும் வாங்கி தர தொடர்ந்து நச்சரிகிறான்...தற்போதைய சிறுவர்களின் ஆர்வம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லும் அக்காட்சி அருமை.

பதினைந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்திற்கு ஓடும் இக்குறும்படம் ஓர் அற்புத முயற்சி.கர்ணனாய் வேடம் தரித்து கூத்தாடியாய் வலம் வரும் நாயகன் மிக எளிமையாய் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.பின்னணி இசை பெரும் பலம்..மிகை இன்றி கதையோடு ஒன்றி பொருந்துகின்றது..அழிந்து வரும் கலைகளினால் கலைஞர்கள் கட்டாய வறுமைக்கு தள்ளபடும் நிலையை மிகையின்றி எளிமையாய் அதே நேரம் அழுத்தமாக பதிவு செய்துள்ள இக்குறும்படம் பல பாராட்டுகளையும்,பரிசுகளையும் பெற்றுள்ளது...இயக்குனர் முரளியின் இம்முயற்சி வரவேற்க படவேண்டிய ஒன்று.
கர்ண மோட்சம் குறும்படத்தினை காண கீழ் உள்ள இணைப்பை நகல் எடுத்து இணையதள முகவரி தளத்தில் ஒட்டவும்
http://video.google.com/videoplay?docid=5284960075003286933&q=karna+motcham&total=1&start=0&num=10&so=0&type=search&plindex=0