Thursday, May 1, 2008

நான் வித்யா - ஒரு திருநங்கையின் வலி மிகுந்த வாழ்கை பயணம்


நான் வித்யா, சரவணனாய் இருந்து வித்யாவாக மாறி தனக்கென ஒரு அடையாளத்தை பெற போராடும் ஒரு திருநங்கையின் சுயசரிதம்..தன் குழந்தை பருவத்து நிகழ்வுகளில் இருந்து,குடும்பத்து சூழ்நிலை,சென்னை வருகை,பால்மாற்று சிகிச்சை,மும்பையில் பெற்ற வேதனையான அனுபவங்கள்,நாடகத்துறை ஈடுபாடு,மேற்படிப்பு,மதுரையில் வேலை,தற்போதைய சென்னை வாசம் என நாவல் முழுதும் தன்னோடு நம்மையும் அழைத்து செல்கிறார் தான் கண்ட,பெற்ற வலி மிகுந்த அனுபவங்களை விவரித்து கொண்டே.....
திருநங்கைகளை பார்த்தால் எனக்கு கேலி,கிண்டல்,அருவருப்பு அன்றி ஒருவித பயமே மேலிடும்.நான் பீச்சிலும்,மின்சார ரயில்களிலும் மிகையான மேக்கப் உடனும் செயற்கை பாவனையுடனும் பணம் கேட்டு வரும் திருநங்கைகளை விசித்திர பிம்பங்களாய் பார்ப்பேன்..சமுதாயத்தில் தங்களுக்கென ஒரு அடையாளம் அற்று,செய்து பிழைக்க தொழில் அன்றி,குடும்பத்தின் ஆதரவு அன்றி,கேலி பேச்சுக்கும்,கிண்டலுக்கும் ஆளாகும் அவர்களின் நிலையை நின்று யோசிக்க நமக்கு இந்த இயந்திர வாழ்வில் நேரமும் இல்லை,விருப்பமும் இல்லை.இவையாவும் நான் வித்யா நாவலை படித்த பின்பு முற்றிலும் மாறியது.வாழ்கை முழுதும் வேதனையை சுமந்து செல்லும் அவர்களின் நிலை மாற்றம் பெறாமல் தொடரும் அவலம்.



நான் வித்யா ஒரு விழிப்புணர்வு நாவல்.திருநங்கைகள் குறித்த சமுதாயத்தின் பார்வையை மாற்றக்கூடிய ஒரு முயற்சி.வித்யா படித்து,சமுதாயத்தில் ஒரு மதிப்பிற்குரிய வேலையில் இன்று தன்னை நிலைநிறுத்திகொண்டுள்ளார்.இலக்கிய வாசிப்பின் மீதும்,உலக சினிமா மீதும் அவர் கொண்டுள்ள ஆர்வத்தினை அவரது லிவிங் ஸ்மைல் blog இல் காணலாம்.
வித்யா போலவே ஆஷா பாரதி,பிரிய பாபு,ரேவதி என பல திருநங்கைகள் பல சுய உதவி குழுக்களில் தங்களை ஈடுபடுத்தி உதாரண மங்கைகளாய் இருக்கின்றனர்.நர்த்தகி நடராஜ் யாவரும் அறிந்த நடன மங்கை,இவரும் ஒரு திருநங்கை.அவர்களுக்கான வாழ்கையை தீர்மானிப்பதில் திடமாய்,தீவிரமாய்,தெளிவாய் உள்ளனர்..குழப்பத்துடன் குற்றம் விளைவிப்பது இந்த சமுதாயமே.

1 comment:

Anonymous said...

குழப்பமான சமுதாயத்தினிடையே வாழ்ந்து வரும்போது சமுதாயத்தின் எதிர் வினைகளை சந்திக்கத்தான் வேண்டும். இதற்கெல்லாம் பயந்தால் வாழவே முடியாது. எது வந்தாலும் சரி ஒரு கை பார்க்கலாம் என்று ரத்தம் சூடேற , எண்ணங்களில் தீப்பொறி பறக்க முடிவில் மாற்றமின்றி நம்பிக்கை எனும் தீப்பந்தத்தை கையில் ஏந்தி நடக்கனும். வெற்றி நம் கையில் சிக்கி விடும்....