Sunday, November 27, 2016

சாதத் ஹசன் மண்டோவின் இரண்டு சிறுகதைகள்

மண்டோவின் எழுத்து இதற்கு முன் அறிமுகமில்லை.உரையாடல்களில் நண்பர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு சிலாகிக்கும் பெயர். காலச்சுவடு வெளியீடான "மௌனப் பனி ரகசியப் பனி " மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுதியில் மண்டோவின் இரண்டு சிறுகதைகள் வாசிக்கக் கிடைத்தன. மண்டோவின் மீது பெருமதிப்பை ஏற்படுத்திய கதைகள் இவை. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக் கால நிகழ்வுகளை மையப்படுத்திய இவ்விரண்டு கதைகளும் நிகழும் சூழலும்,இடமும் ஒன்றே. சுற்றி வளைத்து கொண்டிருக்காமல், இப்படியான போராட்ட சூழ்நிலையில் அப்பாவி குடும்பங்கள் சிதைவுறுவது இவ்விதமே என மாண்டோ சொல்லியிருக்கும் விதம் நம்மை அதிர்விற்குள்ளாக்குகிறது.

"மீளல்",கண்ணெதிரே மனைவி கொல்லப்பட்டதை கண்டவன் மிஞ்சியிருக்கும் மகளை போராட்ட பூமியில் தொலைத்து பின் கண்டடையும் இக்கதை நம்பிக்கை துரோகத்தின் மோசமான முகத்தை குறித்தது. வன்புணர்வுக்கு ஆளாகும் அச்சிறு பெண் சந்தித்தவை எதுவும் நமக்கு நேரடியாய் சொல்லப்படவில்லை.இருப்பினும் அந்த அசாதாரண சூழ்நிலையின் பதற்றமும்,இருண்மையும் நம்மை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டு அவளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் வீரியத்தை உணரச்செய்கின்றன."உங்களின் மகளை எப்படியும் கண்டுபிடித்து தந்துவிடுவோம்.." என அந்த அப்பாவி தகப்பனுக்கு உறுதி அளித்த போராட்டகாரர்கள் அவனுக்கு இழைத்த துரோகம்,மலிந்த மனித மனங்களை அம்பலப்படுவதோடு பிரிவினையின் போது இத்தகைய கீழ் நிலைக்கு நம் மக்களை இட்டுச் சென்றது எதுவென்கிற கேள்வியையும் முன் வைக்கிறது.

"கடமை",ஹிந்து-இஸ்லாமியர் இடையேயான போராட்டம் அதன் உச்சத்தை எட்டி நகரே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில்,மரணத் தருவாயிலிருக்கும் வயதான நீதிபதி தன் பிள்ளைகளோடு,தான் முன்பு உதவிய ஒரு குடும்பத்தின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் கதை.மத பூசல்கள் ஏதுமற்ற பிரிவினைக்கு முந்தைய நாட்களின் இனிமை இதில் நம் கற்பனைக்கு விடப்படுகிறது.சகோதரத்துவம் கொண்டு பழகி வந்த அம்மனிதர்கள் மதவெறி என்னும் சுழலில் சிக்கி அழிவை நோக்கி நகர்வதை பேசும் இக்கதையும் நம்பிக்கை துரோகத்தை குறித்ததே.

மண்டோவின் கதைகள் பிரிவினை கால கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்ற நிகழ்வுகளுக்கு காரணியாய் அமைந்தவற்றையும் ஆராய தூண்டுகின்றன.வன்முறை மிகுந்த இரக்கமற்ற இந்தியாவின் சரித்திர பக்கங்களை நேர்மையான முன்வைக்கும் அதே சமயம் நிலையற்ற மனித இயல்பின் மீதான நம் பார்வையை விரிவுபடுத்துபவை.கையறு நிலையின் காரணமாக சக மனிதர்களை அழிக்க துணிந்தவர்கள் குறித்த இக்கதைகளை எங்கோ எவருக்கோ நேர்த்தவை என ஒதுக்கிவிட முடியாது.இக்கதைகள் நமக்கானவை.நாம் யாரென்று நமக்கு எடுத்துரைப்பவை.


நூல் : மௌனப் பனி ரகசியப் பனி
தொகுப்பாசிரியர்: கண்ணன்
பதிப்பகம் : காலச்சுவடு

Wednesday, November 9, 2016

எம்.டி.வாசுதேவன் நாயரின் "இறுதி யாத்திரை"


ரகசியங்களோடு புதைந்து போகும் மனிதர்கள் தன் தலைமுறைக்கு விட்டுச் செல்வதென்னவோ நிம்மதியின்மையே

ஒரு மரணத்தை அடியொற்றிய ஆர்ப்பாட்டமில்லாத கதை.இறந்த தந்தையின் எரியூட்டலுக்கு வரும் சகோதரர்களின் மனவோட்டங்கள்  அவர்கள் வாயிலாகவே நமக்கு சொல்லப்படுகிறது.வாழ்வில் பெரிதாய் சந்தோஷங்களை கண்டிராத நடுத்தர குடும்பத்தின் புத்திரர்கள் அவர்கள். எவ்விதத்திலும் தந்தையின் மரணத்தால் பாதிக்கப்படாதவர்கள். உண்மையில்,நகர ஓட்டத்தின் பிடியில் சிக்கித் திணறும் அன்றாட வாழ்வில் இருந்து சற்று விலகி ஆசுவாசம் கொள்ள உதவுகிறது அந்த மரணம்.அக்கிராமத்தில், கடந்து போன பால்ய நாட்களின் சிற்சில நிகழ்வுகளும், கை சேராது போன காதல்களும் அந்த அசாதாரண சூழ்நிலையிலும் அவர்களின் நினைவுகளை ஆக்ரமித்துக் கொள்கின்றன.


யின் மீது அவர்களுக்கு பெரும் மதிப்போ,பயமோ, பிரியமோ ஏதும் இருப்பதாய் சொல்லப்படவில்லை. ஆண்பிள்ளைகளுக்கும் தந்தைகளுக்குமான உறவென்பது வெளிப்படைத்தன்மை அற்றது. பெண்களைப் போல ஏதேனும் ஒரு வழியில் அன்பை விடாது தெரிவித்துக் கொண்டே இருப்பது ஆண்களுக்கு வாய்க்காதது.குட்டேட்டனும்,ராஜனும், அப்புவும், உன்னியும் அவ்விதமே.சிலோனில் தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்ட தந்தையை குறித்து அவர்களுக்கு தீராத கேள்விகள் இருக்கின்றன.மனக் குமுறல்களை கூட வெளிக்காட்ட தயங்கும் அந்த சகோதரர்களின் குணம் அவர்களின் தாயிடம் இருந்து வந்ததாக இருக்க வேண்டும்.வேலை தேடி சிலோன் சென்று வெறும் கையோடு திரும்பும் ராஜனை எவ்வித சலனமும் இன்றி தூணில் சாய்ந்து நின்று வரவேற்கும் அப்பெண்மணி குறித்து கதையில் அதிகம் சொல்லப்படவில்லை.அதற்கான அவசியமும் இல்லை. பெண்கள் எதிர்பார்ப்புகள் ஏதுமற்று குடும்பத்தை காப்பவர்கள்.

ராஜனின் சிலோன் பயணம்,நாவலில் குறிப்பிடத்தக்க பகுதி.கேள்விகள் கேட்கவும்,ஆதரவு அளிக்கவும் யாருமற்ற அந்த தேசத்தில் அவர் கழித்த சொற்ப நாட்களின் நிகழ்வுகள் பலவும் நெகிழ்ச்சியானவை. அங்கு அவன் சந்திக்கும் தந்தையின் உதவியாளர் குருப்பின் சோகம் அப்பிய சொந்தக் கதை நம்மை அசைத்துப் பார்ப்பது.அனுபவங்களே மனிதர்களை பக்குவப்படுத்துகின்றன என்று கேட்டு சலித்த வாசகம் மீண்டுமொருமுறை நினைவிற்கு வராமலில்லை குருப்பின் கதையை ராஜனோடு சேர்ந்து நாமும் கேட்கையில்.

இறந்த வீட்டின் சடங்குகள்,அதன் பொருட்டு நிகழும் சங்கடங்கள்,சலித்துக் கொண்டாலும் காரியங்களை தலைமை ஏற்று செய்யும் முதியவர் ஒருவர் என காட்சிகளை கண் முன் நிறுத்துவதான விவரிப்பு.காலம் காலமாக பின்பற்றப்படும் சடங்குகளுக்கு இன்றைய தலைமுறையின் பதில் என்னவோ,"சீக்கிரம் முடிந்தால் ஊருக்கு கிளம்பலாம்.." என்பதாகவே இருக்கு.வாழ் நாள் முழுக்க தங்களை தனித்து பயணிக்கச் செய்த ஒரு பொறுப்பற்ற தந்தையின் இறுதி யாத்திரையில், அப்பிள்ளைகள் அவர் குறித்த இனிய நினைவுகளை மீட்டெடுக்க முயன்று தோற்றுப் போவதை சொல்லும் பாசாங்கில்லாத படைப்பு.

இது எம்டிவியின் சொந்தக் கதை என்று ஷைலஜாவின் குறிப்பு கூறுகிறது. பாசாங்குகற்றதன்மைக்கு அதுவே காரணமாக இருக்கக் கூடும்.உரத்த குரல்களும், கசப்பான மனங்களும், பழிவாங்கும் மனிதர்கள் என யாருமற்றது எம்டிவி விஸ்தரித்துள்ள இவ்வுலகம். மெல்லிய மனம் கொண்டு, வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக் கொண்ட மனிதர்களின் எதார்த்த பதிவு. நாவலின் இந்த மேலான இயல்பை நம்மை முற்றிலும் உணர்ந்து கொள்ள செய்வதாக உள்ளது ஷைலஜாவின் சிறப்பான மொழிபெயர்ப்பு.

நாவல் : இறுதி யாத்திரை
ஆசிரியர்: எம் டி வாசுதேவன் நாயர்
தமிழில்: கே.வி.ஷைலஜா
வெளியீடு : வம்சி பதிப்பகம்
விலை: ரூ.140/-