Showing posts with label சிறுவர் இலக்கியம். Show all posts
Showing posts with label சிறுவர் இலக்கியம். Show all posts

Tuesday, August 30, 2016

சத்யஜித் ரேயின் ஃபெலூடா கதைகள்


சினிமாவும் இலக்கியமும் அபூர்வமாய் சந்தித்துக் கொள்ளும் தருணங்கள் சில உண்டு.கி ராவின் பிஞ்சுகள் நாவலுக்கும் ரேயின் பதேர் பாஞ்சாலிக்கு ஏதோ ஒரு நெருங்கிய தொடர்புண்டு என்றே எனக்கு தோன்றும்.சிறுவர்களின் பிரத்யேக கனவுகளுக்குள் நம்மை இட்டுச் செல்லும் இவ்விரு கதைகளுமே சிறார்களின் அகவுலகை வார்த்தைகளால்/காட்சிகளால் நமக்கு காட்டிச் செல்லும் இடங்கள் உணர்வுபூர்வமானவை.

தம் கவித்துவ திரைப்படங்களின் வழி இந்தியாவின் பெயரை உலகளவில் உயர்த்திப் பிடித்த சத்யஜித்ரேயின் ஆச்சர்யமிக்க மற்றுமொரு முகம் ஃபெலூடா கதைகளை வாசிக்கையில் புலப்பட்டது.ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளின் பாதிப்பால் ரே உருவாக்கியுள்ள ஃபெலூடா கதைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நம் மனதை கவர்பவை.வயது வித்யாசமின்றி அனைவராலும் விரும்பப்படும் விதமான நேர்த்தி கொண்ட 20 தனித்த கதைகளின் தொகுப்பு.சிறுவர்களுக்கான தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பில் இக்கதைகள் மிக முக்கியமானவை.


துப்பறியும் நிபுணர் ஃபெலூடா,அவருக்கு உதவியாய் தம்பி தொப்ஷே,எழுத்தாளர் லால் மோகன் பாபு என மூவர் கூட்டணியின் சாகசங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை. பெலூடாவின் புத்தி சாதுர்யத்தை வியந்தபடியே ஒவ்வொரு கதையும் நாம் கடக்க வேண்டியுள்ளது. அறிவின் துணை கொண்டே அவிழ்க்கப்படும் மர்மங்களின் பின்னணி மிகையின்றி சித்தரிக்கப்படுவதோடு முடிந்த வரை எளிய நடையில் வாசகனுக்கு முன்வைக்கப்படுகின்றன.

புராதான பொருட்கள் திருட்டு,புதையல் வேட்டை துவங்கி பெரும் மாபியாவாக செயல்படும் கொள்ளைக் கூட்டம் வரை ஃபெலூடா விசாரிக்கும் குற்றங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. சிறுவர்களுக்கான கதைகள் தான் என்றாலும் போகிற போக்கில் சமூகத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கவும் தவறவில்லை ரே.அதே போலவே இந்திய திரைப்படங்கள் குறித்த கேலிகளும். பம்பாயில் கதைகள் தயாரிக்கப் படுகின்றன,கொல்கத்தாவில் கதைகள் ரசிக்கப்படுகின்றன என்கிறார்.எத்தனை உண்மை!

ஃபெலூடா கதைகள் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடப்பதாக உள்ளன.வாரணாசி, டார்ஜிலிங், லக்னோவ், ஜெய்சால்மர்,புவனேஸ்வர், பம்பாய்,சிலிகுரி என ஃபெலூடா பயணிக்கும் நகரங்கள் குறித்த விவரணைகள் குறிப்பிடத்தக்கவை.மேலும் அந்நகரங்களின் தட்ப வெட்பம்,உணவு பழக்கங்கள், சுற்றுலாத் தளங்கள் என முடிந்த வரை விரிவாகச் சொல்லி நம்மை அப்பயணத்தில் ஒருவராக உணர்ச்சி செய்கிறார் ரே.பரந்துப்பட்ட அவரது ஞானமும்,பயணங்கள் மீதான காதலும்,பழம் பொருட்கள் மீதான அக்கறையும் இக்கதைகளின் வழி நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எப்போதும் தீவிர சிந்தனையில் பைப் புகைத்தபடி இருக்கும் ஃபெலூடாவை ரேயாகவே உருவகித்துக் கொண்டேன்.ரேயின் கம்பீரம் அத்தகையது தான் இப்புகைப்படத்தில் உள்ளது போல.

மொத்தம் 30 புத்தகங்களின் தொகுப்பான இதில் 20 புத்தகங்கள் மட்டுமே தமிழில் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன. வீ.பா.கணேசனின் மொழிபெயர்ப்பு தங்கு தடையின்றி எளிதாக புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளது மேலும் ஒரு சிறப்பு. இந்தியாவின் ஷெர்லாக் என பெருமையோடு சொல்லிக் கொள்ளும்படியான ஃபெலூடா கதைகள் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அவசியம் பரிந்துரைக்கப்பட்ட வேண்டிய தொகுப்பு.


புத்தக வரிசை: ஃபெலூடா கதைகள்
ஆசிரியர்: சத்யஜித் ரே
மொழிபெயர்ப்பு: வீ.பா.கணேசன்
வெளியீடு : பாரதி புத்தக நிலையம்

Friday, July 26, 2013

குட்டி இளவரசன் (Le Petit Prince)

பேசி பேசித் தீராத நினைவுகள் சிறுவயது புத்தகங்கள் குறித்தவை..சிறுவர் மலரில் தொடங்கி..அம்புலி மாமா,டிங்கிள், இரும்புக்கை மாயாவி,தெனாலி ராமன் கதைகள், சிந்துபாத்தின் சாகசங்கள்,அக்பர் - பீர்பால்,ஈசாப் நீதி கதைகள் என நீளும் பட்டியல் அது.அன்றைய பொழுதுகளின் உற்சாகமும், சுவாரஸ்யமும் சிறிதும் குறையவில்லை மீண்டும் சிறுவர் புத்தகங்களை தேடி வாசிக்கையில்.

சிறுவர் இலக்கியம் விரும்புவோர் தவற விடக் கூடாத நாவல் குட்டி இளவரசன்.


1943 ஆம் ஆண்டு பிரஞ்சு மொழியில் வெளியான இந்நாவல்(Le Petit Prince ) 200 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கதை நாயகனாக சிறுவன் ஒருவன் அறிமுகமாகி தன் ஓவியங்களை குறித்து நம்மிடம் சொல்லி கொண்டே தான் சந்தித்த குட்டி இளவரசனை அறிமுகம் செய்கின்றான்.கதை நாயகன் இனி நமது குட்டி இளவரசன்.எங்கள் உலகம் கேள்விகளால் மட்டுமே நிறைந்தது என்பதை நிறுவும் வண்ணம் அற்புதமான பாத்திரப்படைப்பு.பெரியவர்கள் குறித்த அவனுடைய கருத்துகள் "அவர்கள் விசித்திரமானவர்கள்..", "அவர்கள் அசாதாரணமானவர்கள்......." ,"எண்ணிகையில் நம்பிக்கை கொண்டவர்கள்.." மறுப்பதற்கில்லை!

குட்டி இளவரசனின் பிரியத்திற்குரிய மலர் குறித்த வர்ணனைகள் சிரிப்பை வரவைப்பவை..அன்பை பொழியும் குட்டி இளவரசனிடம் எதற்கெடுத்தாலும் இருமி தன் இருப்பை காட்டி கொள்ளும் அந்த சிறு மலரை,பெண்களின் குறியீடாக கொள்ளலாம்.


பல்வேறு கிரங்களுக்கு பயணம் செய்யும் குட்டி இளவரசன் சந்திக்கும் மனிதர்கள் அவன் கூற்றுபடியே விசித்திரமானவர்கள்.கட்டளை பிறப்பிப்பதையே தன் அடையாளமாக கொண்டிருக்கும் அரசன்,தற்பெருமைக்காரன், குடிகாரன்,நட்சத்திரங்களை எண்ணி வைத்து சொந்தமெனக் கொள்ளும் வியாபாரி,ஓய்வின்றி தெருவிளக்கு ஏற்றுவதை கடமையாக கொண்டவன் என ஒவ்வொருவரையும் தன் கேள்விகளால் சந்தித்து முடித்து பூமிக்கு வருகிறான்.

பாம்பும்,நரியும் நண்பர்கள் ஆகின்றனர்.பூந்தோட்டம் அவனுக்கு ஆச்சர்யம் தருகின்றது.இங்கும் மனிதர்களே அவன் முன் விசித்திர தோற்றம் கொள்கின்றனர்.

"மனிதர்கள் நீர்ப் பிரவாகத்தில் சிக்கிக் கொள்வார்கள்.ஆனால் எதை தேடுகிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது.அவர்கள் அதற்காக அலை பாய்ந்து சுற்றிச் சுற்றி வருவார்கள்...."


கதை சொல்லி சிறுவனும்,குட்டி இளவரசனும் பரிமாறிக் கொள்ளும் ஓவியங்கள் குறித்து கட்டாயம் சொல்லியாக வேண்டும்.யானை விழுங்கிய மலைப்பாம்பின் வரைபடத்தை கொண்டே கதை சொல்லி சிறுவன் அறிமுகமாகின்றான்..பின்பு குட்டி இளவரசன் கேட்பதற்கு இணங்க இவன் பிவோபாப் மரம்,ஆட்டுக்குட்டி என படங்கள் வரைவதும்,அவன் அதை பரிகசிப்பதும் என தொடர்கின்றது அவர்களின் விளையாட்டு.

குட்டி இளவரசனின் எதார்த்த கேள்விகளுக்கு பதிலளிக்க நிதானம் அற்று பெரியவர்கள் தங்கள் வேலையில் மூழ்கி கிடக்க..அவர்களை வியந்தபடி தன் பயணத்தை தொடர்கின்றான்.

தமிழில் குழந்தைகளுக்கான படைப்புகள் அதிகம் கவனம் பெறாமல் இருப்பது வருத்தமளிக்கும் விஷயம். குழந்தைகளுக்கு கதை சொல்லியாக இருப்பது எத்தனை சௌகர்யமான விஷயம்.நாம் கேட்ட,வாசித்த கதைகளை கற்பனையுடன் சேர்த்து சொல்லிடலாம். கேட்கப்படவிருக்கும் கேள்விகள் நம்மை ஆச்சர்யபடுத்தலாம்..சில சமயம் சிரிப்பில் ஆழ்த்தலாம்.அது வேறு உலகம், அவர்களுக்கேயானது.. கேள்விகளும்,கற்பனைகளும் நிறைந்தது.அதை அழகானதாகவும்,அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிட கதைகளால் மட்டுமே சாத்தியம்!

வெளியீடு - கிரியா பதிப்பகம்

Wednesday, February 24, 2010

எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாருமில்லை"


நவீன பாணி குறுங்கதைகளின் தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்துள்ள எஸ்.ரா வின் "நகுலன் வீட்டில் யாருமில்லை".Fables and parables எனப்படும் குறுங்கதை வடிவங்கள் ஏற்கனவே நமக்கு பரிச்சயமானவையே.முல்லா நீதி கதைகள்,ஜென் கதைகள் அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.அவ்வகையில் எஸ்.ரா வின் இந்நூல் தமிழில் மிக முக்கியமான பதிவு.புனைவின் உச்சத்தை தொட்டு செல்லுகின்றன பல கதைகள்.முட்கரண்டிகளும்,மது கிண்ணங்களும்,தீக்குச்சியும்,சிகரெட்டும் உயிர் பெற்று உலவுகின்றன....பேசும் தாவரங்கள்,தவளைகள்,விந்தையான சிறுவர்கள்,நகரும் தீவு என ஒவ்வொரு கதையும் ஒரு மாய உலகினுக்குள் இட்டு செல்கின்றது.இத்தொகுப்பின் கதைகள் யாவும் சிறுவர்களுக்கானது அல்ல.மிகப்பெரிய தத்துவங்களை வெகு சில வரிகளில் உணர்த்தும் கதைகளும் ஏராளம்.

ஸ்பூன் மற்றும் முட்கரண்டியின் காதலை அவைகளின் உரையாடலோடு நகைச்சுவையாய் சொல்லும் கதை "காதல் மேஜை".நகரமயமாக்கல் பறவைகளை காணாமல் போக செய்து விட்டது போலவே தவளைகளையும்...அச்சிறு உயிரினம் குறித்து நாம் நினைத்து கூட பார்ப்பதில்லை.பெருநகரம் ஒன்றில் மிஞ்சும் கடைசி இரு தவளைகள் குறித்த "பெருநகர தவளைகள்",அழிந்துவரும் உயிரினங்கள் குறித்த அபாய எச்சரிக்கையை முன்வைக்கின்றது.குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிப்பதில் தொடங்கி ஒவ்வொரு காரியத்திற்கு வசதியாய் நாம் அணித்து கொள்ளும் முகமூடிகள் ஏராளம்..இதை உணர்ந்தும் குறுங்கதை "வீட்டிற்குள் ஓடும் ஆறு".




கண்ணீரும் சிரிப்பும் பெருநகர வாழ்க்கையை சிக்கல் இன்றி தொடர அவசியபடுகின்றன என்பதை "கண்ணீர்பூட்டு" கதை உணர்த்துகின்றது.குழந்தையுடன் உரையாடும் மாயவித்தைகாரனின் கதையான "கைமூடி திறந்து", சிறுவர் உலகமானது விசித்திரங்களை விரும்புவதோடு கேள்விகள் நிறைந்ததென்பதை நினைவூட்டுகின்றது.ரயில் பூச்சி மீதேறி தொடங்கும் மீசை முளைத்த சிறுவன் ஒருவனின் சாகச பயணத்தில் அவன் எதிர் கொள்ளும் யாவுமே விசித்திரங்கள்!பேசும் மீன்கள்,மூன்று கண் திருடன்,தும்பிக்கை இல்லா யானைகள் என கற்பனை உலகினுக்குள் முழுதாய் நம்மை இட்டு செல்லும் கதை "எப்படி என்று மட்டும் கேட்காதீர்கள்".

இரு வேறு கதைகளில் வரும் சம்பத்தின் தினகரன் மற்றும் நகுலன் உடனான உரையாடல்கள் வாசித்து கொண்டாடப்பட வேண்டிய புனைவின் உச்சங்கள்!இத்தொகுதியில் வாய் விட்டு சிரிக்க வைத்த கதை "சிறகுள்ள பொறியாளன்".கார்பரேட் வாழ்க்கை தேவதூதனை கூட காதல்,கடன்...என ஆசை கொண்டவனாய் மாற்றி விடும் அவலத்தை நிறைந்த பகடியோடு சொல்லுகின்றது.வாசிப்பு மனிதனை மட்டும் இன்றி தவளையை கூட ஆட்கொண்டு விடும் என்பதை "படிக்க தெரிந்த தவளை" கதை சொல்லுகின்றது."மழையின் எறும்பு" மற்றும் "பகலின் முதுகு" கதைகள் மனிதனின் தேடலுக்கு புத்த பிக்குகளின் தத்துவார்த்த விளக்கங்களை சொல்லுகின்றன.

கொட்டி கிடக்கும் இத்தொகுப்பின் குறுங்கதைகளுள் வெகு சிலவற்றை மட்டுமே பகிர்ந்துள்ளேன்.கதைகளுக்கு சிறகுகள் உண்டு!!தேசங்கள் பல கடந்து தொடர்ந்து உலாவி வரும் பல கதைகள் இப்படியாய் நினைக்க செய்கின்றன.சிறுமி ஒருத்தியை மடியில் வைத்து கொண்டு சில கதைகளை உடனே வாசித்து காட்ட வேண்டும் என தோன்றியது..நவீன வாழ்வின் சிக்கல்கள்,சிறுவர்களின் மாய உலகம்,துறவிகளின் தத்துவார்த்தம்,மிகு காமம்,தொடர்ந்து வரும் நம்பிக்கைகள்.........என இக்குறுங்கதைகள் தொட்டு செல்லாத களங்களே இல்லை எனலாம்!!

வெளியீடு - உயிர்மை
விலை - 80 ரூபாய்

Wednesday, February 17, 2010

வேலுசரவணனின் "தங்க ராணி"

வேலுசரவணன்,குழந்தைகள் நாடக கலைஞரான இவரை குறித்த அறிமுகம் இலக்கிய இதழ் ஒன்றில் வெளிவந்திருந்த இவரின் நேர்காணல் மூலம் கிடைத்தது.இலக்கிய வெளியில் வேலுமாமா என்று அழைக்கபடுகிறார்.வேலுசரவணனின் நாடகங்கள் குறித்தான செய்திகள் எங்கு கிடைப்பினும் தேடி வாசிப்பேன்.அரிதாரம் கலைந்த இவரின் முகம் காண கிடைப்பது அரிது என்று தோன்றும் வண்ணம் எப்போதும் குழந்தைகளை குதூகலிக்க செய்யும் ஒப்பனையில் மட்டுமே இவரின் புகைப்படங்கள் காண கிடைக்கின்றன.வம்சியில் இவரின் "தங்க ராணி" புத்தகம் வெளியீட போவதான அறிவிப்பு மிகுந்த ஆவலை ஏற்படுத்தி இருந்தது.இந்த ஆண்டு புத்தக சந்தையில் விரும்பி வாங்கிய நூல்களில் இது ஒன்று.




இத்தொகுப்பில் ஐந்து சிறுவர் நாடகங்கள் உள்ளன.நமக்கு வெகு பரிட்சயமான கதைகளும் அடக்கம்.பார்வையாளர்கள்,மேடை அலங்காரம்,நாடக பாத்திரங்கள் என சிறு அறிமுகத்தோடு காட்சிகள் விரிகின்றன."ஓவியர் நரி", ஈசாப் நீதி கதைகளில் ஒன்றிது.தந்திர நரியானது அப்பாவி கழுதை ஒன்றை ஏமாற்றி சிங்கத்திற்கு உணவாக்கும் இக்கதை பெரியவர் சொல் பேச்சு கேட்க வேண்டும் என்பதை போதிப்பது.இயல்பான மொழி நடையில் வசனங்கள் உள்ளன."குதூகூல வேட்டை",சோவியத் எழுத்தாளர் நிக்கலாய் நாசாவின் கதையொன்றை தழுவிய இந்நாடகம் கோமாளிகளான இரு நண்பர்கள் வேட்டைக்கு போய் வந்ததை நகைச்சுவையாய் சொல்லுகின்றது.கிளை கதைகளும் கொண்டுள்ளது இந்நாடகம்.இது போன்ற வேடிக்கை கதைகளில் சிறுவர்களை நாடக கதாபாத்திரங்களாய் யோசித்து பார்க்கவே சுவாரஸ்யமாய் உள்ளது.

"அல்லி மல்லி",பிரபலமான நாடோடி கதைகள் பலவும் தேசத்திற்கு தேசம் சிறு சிறு மாற்றங்கள் கொண்டு உலவி வருகின்றன.இக்கதையும் அது போலவே மாறுபட்ட குணம் கொண்ட சகோதரிகள் இருவரை பற்றியது.தலையில் ஒரே ஒரு முடி கொண்டதால் கேலிக்கு ஆளாகும் தங்கை கடல் தாண்டி,மலை தாண்டி எதிர்படும் உயிரினங்களுக்கு உதவி செய்து,மந்திர கிழவியை கண்டடைந்து நீண்ட கூந்தல் பெறுகிறாள்.அதே போல பயணத்தை தொடரும் அவளின் சகோதரியோ எதிர்படும் உயிர்களை உதாசினபடுத்துவதால் பயன்பெறாமல் போகின்றாள்.இந்நாடகத்தில் மருதாணி செடியும்,பசு மாடுகளும் கூட பேசுகின்றன...கதை சொல்லும் சிறுவன்,பாடல் குழுவினர்,நடன பெண்கள் இவர்களுக்கு மத்தியில் அல்லி மல்லி சகோதரிகள் என மேடை காட்சிகள் வாசிக்க வாசிக்க கற்பனையில் விரிவடைவது அழகு.


இத்தொகுப்பின் மற்றொரு நாடகம் "தங்கராணி",உலக பிரசாத்தி பெற்ற "மைதாஸ் கோல்டன் டச்" கதையின் தழுவல்.பொன்னாசை கொண்ட ராணி,சிரிப்பு மூட்டும் அவளின் நம்பிக்கைக்கு உரிய சேவகர்கள் இவர்களோடு சேர,சோழ,பாண்டிய அரசிகள் என கதையை முற்றிலுமாய் தன நோக்கில் மாற்றி அமைத்துள்ளார் வேலுசரவணன்.சில கதைகள் திரும்ப திரும்ப படித்தாலும்/கேட்டாலும் அலுக்காது..மேலும் பல புதுமைகள் புகுத்தி இதுபோல சொன்னால் சிறுவர்களுக்கு ஆர்வம் மேலிடும் என்பதில் ஐயமில்லை."நீதி கதைகள்","வேடிக்கை கதைகள்" மட்டும் இன்றி இதிகாச சம்பவங்களையும் நாடகமாய் கொணர்ந்துள்ளார்.துரோணரின் சக்கர வியுகத்தை உடைத்து வெற்றி கண்ட சிறுவன் அபிமன்யுவின் வீரத்தை சொல்லும் இந்நாடகம் மகாபாரதத்தின் போர் காட்சிகளை கண் முன் கொண்டு வருகின்றது.சிறுவர்களுக்கு விளையாட்டு பயிற்சியின் முக்கியதுவத்தை உணர்த்துவதற்காக இந்நாடகம் எழுதப்பட்டதாக ஆசிரியர் கூறுகின்றார்.

சிறுவர் நாடகங்கள் இன்றைய சூழலில் எந்த அளவிற்கு சாத்தியமாகின்றன என தெரியவில்லை.சிறுவர்கள் சிறுவர்களாய் இல்லாமல் சினிமாத்தனம் மிகுத்து இருப்பதே அதற்கு காரணம்.பெரும் சிரத்தை எடுத்து அதை தொடர்ந்து சாத்தியபடுத்தி வரும் வேலு சரவணன் பாராட்டுதலுக்குரியவர்.

வெளியீடு - வம்சி
விலை - 80 ரூபாய்

Monday, January 18, 2010

எஸ்.ராவின் கிறுகிறுவானம்

தமிழில் நான் வாசித்த வரையில் குழந்தைகள் உலகினுள் எளிதாய் புகுந்து இலக்கியம் படைப்பதில் கி.ரா விற்கு அடுத்த படியாய் சிறந்தவர் எஸ்.ரா மட்டுமே.எஸ்.ரா வின் "ஆலீஸின் அற்புத உலகம்" மொழிபெயர்ப்பை புத்தக கண்காட்சியில் வாங்க தவறிவிட்டேன்.அதற்கு மாற்றாய் இந்த நூல் கிடைத்தது.துடுக்கான சிறுவன் ஒருவன் அவனின் பிரத்தியேக உலகினுக்குள் நம்மை அழைத்து செல்வதாய் உள்ளது இந்நூல்.மீண்டும் மீண்டும் பேசினாலும்,வாசித்தாலும் அலுக்காத குழந்தைகளின் உலகம் சுலபமாய் நம்மை உள்ளிழுத்து கொள்கின்றது.

சிறுகதையோ,நாவலோ பிரதான பாத்திரத்திற்கு உருவம் கொடுத்து வாசிப்பதில் பல சௌகரியங்கள் உண்டு.இந்நாவலின் நாயகன் ஓட்ட பல்லு செம்பாவிற்கு உருவம் ஏதும் சட்டென தோன்றவில்லை காரணம்,ஒவ்வொரு காரியங்களாய் அவன் விவரிக்கும் பொழுது நமது பால்ய காலமே கண்முன் வந்து போகின்றது.செம்பா தனது ரகசியங்கள் என கருதும் பலவற்றையும் தயக்கமின்றி வாசகனோடு பகிர்ந்து கொள்கின்றான் விரிவான தனது அறிமுகத்தோடு!!சாப்பாடும் கூப்பாடும்,குழந்தைகளின் பசி எல்லோரும் அறிந்ததே..இன்ன வேலை என்றில்லாமல் நினைத்த போதெல்லாம் தின்று திரியும் வயசு..தனது பசி குறித்து வேடிக்கையாய் செம்பா விளக்குவது தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்து,உண்டு பிறகு திரும்பி தூங்கி போகும் கி.ராவின் கோபல்ல கிராமத்து சிறுவன் ஒருவனை நினைவூட்டியது..



கை நிறைய பொய்,கள்ளன் கணக்கு பகுதிகளில் செம்பா சொல்லுவது சிறு பருவத்தில் சகஜமான கபடமற்ற திருட்டும்,பொய்யும்.சின்ன சின்ன திருட்டுக்கள், நண்பர்களை,பெற்றோரை ஏய்க்க கூறிய பொய்கள் இப்பொழுது நினைவில் இல்லாவிடினும் அவை மறுப்பதிற்கில்லை.கிறுகிறுவானம்,இதை விளையாடாமல் யாரும் பால்ய காலத்தை தாண்டி வந்திருக்க முடியாது..கிறுகிறுவானம் சுத்தி கீழே விழுந்து வானத்தை பேரதிசியமாய் பார்த்த நினைவுகள் மீண்டும் துளிர்த்தெழுந்த சந்தோசம்!!.கிறுகிறுவானம் தவிர்த்து கள்ளன் போலீஸ் ,கிளியாந்தட்டு,கபடி,கோலி,கிட்டி என மறந்து போன விளையாட்டுகள் பலவற்றையும் நினைவூட்டுகிறது இப்பகுதி.இவை தவிர்த்து ஆற்றில் மீன் பிடிப்பது,கனவுகள் சுமந்து திரியும் தனது பால்ய காலத்தில் செம்பா விரும்பும் குதிரை சவாரி,புது துணி அணிந்து கொள்ளும் சமயம் ஏற்படும் மகிழ்ச்சி,பேய்கள் குறித்தான விளங்க முடியா அச்சம்,பிள்ளைகள் மொய்க்க இரவில் வரும் பலகார வண்டி என அந்த வயதிற்கே உரிய விஷயங்களை ஒன்று விடாமல் நினைவூட்டுகின்றன செம்பாவின் வர்ணனைகள்..

செம்பா விவரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஊடாக எண்ணற்ற சிறுவர் நாடோடி கதைகளும் வருகின்றன.பெரும்பசி கொண்ட பூசணிக்காய் சாமியார் கதை,தூங்கு மூஞ்சி சோணன் கதை,கால் திருடன்-அரை திருடன் - முழு திருடன் கதை,ஊசி கள்ளன் கதை என படிக்க சுவாரஸ்யமான சில நாடோடி கதைகள் இத்தொகுப்பில் உண்டு.நட்சத்திரங்களோடு பேசும் சிறுவர்கள் யாரேனும் இப்பொழுது உண்டா??!! குழந்தைத்தனம் மீறி சினிமாத்தனம் அதிகம் கொண்டுள்ள இக்காலத்து சிறுவர்கள் இழந்து கொண்டிருப்பவை எத்தனையோ என்பதை மீண்டும் அழுத்தமாய் நினைவூட்டுவதாய் உள்ளது இந்நூல்.குழந்தைகளுக்கான இலக்கியங்களை தொடர்ந்து படைத்து வரும் எஸ்.ராவிற்கு நன்றிகள்.

எஸ்.ராவின் "ஏழு தலை நகரம்" குறித்தான எனது பதிவு

கி.ராவின் "பிஞ்சுகள்" குறித்த எனது பதிவு

வெளியீடு - பாரதி புத்தகாலயம்
விலை - 25 ரூபாய்

Saturday, November 14, 2009

ரஸ்டியின் வீரதீரங்கள் - ரஸ்கின் பாண்ட்

மீண்டும் ஒரு சிறுவர் நாவல்.ரஸ்கின் பாண்ட் எழுதியுள்ள இந்த சிறுவர் இலக்கியம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.ரஸ்கின் பாண்ட் குறித்து பல சுவையான செய்திகள் இணையத்தில் கிடைத்தன.ஆங்கிலோ இந்தியரான இவர் சிறுவர்களுக்காக பல நூல்கள் எழுதியுள்ளார்.பெரும்பாலான இவரின் நாவல்கள் குழந்தைகள் பார்வையில் உலகம் என்கிற போக்கில் உள்ளது.சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நிகழ்வதாய் வரும் இக்கதை கூட ரஸ்டி என்னும் சிறுவன் பள்ளி வாழ்கையை வெறுத்து உலகத்தை சுற்றி பார்க்க ஆர்வம் கொண்டு மேற்கொள்ளும் பயணத்தை பற்றியது.


தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டு பாகங்களாக உள்ளது "கென் மாமா" & "ஓடி போதல்" என.கோடைகால விடுமுறைகள் பள்ளிபருவத்தின் போது மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாய் இருக்கும்.பாட்டி தாத்தாவுடன் செலவிட எங்கள் கிராமத்திற்கு சென்று விடுவேன்!!!பேசுவதற்கு அவர்களிடம் அதிக செய்திகள் உண்டு..கேட்பதற்கு தான் நாம் தயாராக இல்லை."கென் மாமா" பகுதி ரஸ்டியின் கோடைகால விடுமுறைகள் குறித்தது.அருமையாக சமையல் செய்வதில் வல்லவலான தனது பாட்டியின் வீட்டிற்கு செல்லும் ரஸ்டி,தனது தூரத்து உறவினரான கென் மாமாவோடு டெகராடூன் நகரில் கழித்த காலங்களை கூறுவதாய் உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் மலைகளை,பள்ளத்தாக்குகளை..அழகாய் வர்ணித்துள்ளார்.



நாவலின் இரண்டாம் பகுதி சுவாரஸ்யமானது.ஜாம் நகருக்கு வரபோகும் கப்பல் காப்டனான தனது மாமா கென்னை சந்தித்து அவரோடு உலக பயணம் மேற்கொள்ள முடிவு செய்து பள்ளியை விட்டு அந்நகருக்கு மேற்கொள்ளும் பயணம் குறித்தது. பயணங்கள் எப்போதும் உற்சாகம் தரக்கூடியவை.புதிய இடங்கள்..புதிய மனிதர்கள்..புதிய உணவு பழக்கங்கள்..மொழிவேற்றுமை என முற்றிலுமாய் புதிய உலகத்திற்குள் பயணிப்பது சுவாரசியமானது தானே!!டெகராடூன்இல் இருந்து ஜாம் நகருக்கு ரஸ்டியும் அவனின் நண்பன் தல்ஜித்தும் ஆர்வமும்,பயமும் கொண்டு மேற்கொள்ளும் பயணம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானாதாய் இல்லை..இருப்பினும் அச்சிறுவர்களின் மன உறுதி அவர்களின் இலக்கை சுலுவாய் சென்றடைய துணை நிற்கின்றது.

தேகராடூனில் தொடங்கும் இச்சிறுவர்களின் பயணம்..டெல்லி..ராஜஸ்தான் வழியாக ஜாம் நகர் சென்றடையும் வரை இடறல்களை மட்டுமே தருகின்றது.இவர்கள் சந்திக்கும் நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகை.அன்பாய் வரவேற்கும் டீ கடைகாரர்,பணம் எதுவும் வேண்டாமல் ராஜஸ்தான் அழைத்து செல்லும் லாரி ஓட்டுனர்..இவரின் சத்தம் மிகுந்த ஹாரன் குறித்த ரஸ்டியின் கருத்துக்கள் சிரிப்பை வரவைப்பவை,இடிந்த மண்டபம் ஒன்றில் சந்திக்கும் கொள்ளையர் கூடம்,ஜாம் நகரின் துறைமுகத்திற்கு செல்ல உதவும் ஜட்கா வண்டிக்காரன் என.கஷ்டங்கள் பல கடந்து ஜாம் நகரை வந்தடையும் ரஸ்டியின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பது சின்ன சோகத்தோடு சொல்லப்படுகின்றது.

ரஸ்கின் பாண்ட் நாவல்கள் தவிர்த்து கவிதைகள்,கட்டுரைகள்,சுயசரிதைகள் பல எழுதியுள்ளார்.சாகித்திய அகாதமி மற்றும் பத்மஸ்ரீ விருதுகளும் பெற்றுள்ளார்.நேஷனல் புக் டிரஸ்ட் பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளன தமிழில்.எளிய தமிழில் உள்ள இந்நாவல்கள் சிறுவர்களின் உலகினுக்குள் சென்று வந்த திருப்தியை தருகின்றன.

Wednesday, May 20, 2009

ஆர்.கே.நாராயணனின் "மால்குடி டேய்ஸ்"

மால்குடி டேய்ஸ் - பலருக்கும் பரிட்சயமான பெயர் இது.முன்பு தொலைகாட்சியில் தொடராய் வந்த ஆர்.கே நாராயணனின் சிறுகதை தொகுப்பு.தமிழ் அளவிற்கு ஆங்கில இலக்கியம் படிக்க ஆர்வம் இருப்பதில்லை.முதல் முயற்சியாய் இந்த சிறுவர் இலக்கியத்தை படித்து முடித்தேன்."மால் குடி" நாராயணனின் கற்பனை கிராமம்,அதன் சூழல்,அதன் மனிதர்கள் இவற்றை மையப்படுத்தி வெகு எளிமையாய் சொல்லபட்டுள்ள கதைகளின் தொகுப்பு.மால்குடி டேய்ஸ் படிக்க துவங்கியதும் சட்டென நினைவில் வந்து போனது பள்ளியில் பாடத்தில் வாசித்திருந்த சரோஜினி நாயுடுவின் "Bazaar's Of Hydrebad' கவிதை.மிக சில வரிகளில் ஐதராபாத்தின் ஜன நெருக்கடி மிகுந்த கடை வீதி ஒன்றை நுட்பமாய் வர்ணித்திருப்பார்.



மால்குடி டேய்சின் கதை நாயகர்களை தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் எந்த சிரமமும் மேற்கொள்ளவில்லை. தபால்காரர்,ரோட்டோர ஜோசியக்காரர்,அலுவலக காவலர்,மருத்துவர்,ரோட்டோர பலகார கடை வைத்திருப்பவர் என நாம் அன்றாட காண நேரிடும் நபர்களையே மையப்படுத்தி,சிறு கருத்தை வலுயுறுத்துவதாய் உள்ளன இச்சிறுகதைகள்.இத்தொகுப்பை குழந்தைகளுக்கு மட்டும் என ஒதுக்கி விட முடியாது,கற்பனைக்கு மீறிய சாகசங்களோ,மாயஜாலங்களோ ஏதும் இல்லாவிடினும் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை தாங்கி உலவுகின்றன இக்கதைகள்.

முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இருந்து மிக பிடித்த சில கதைகளை பகிர்ந்து கொள்கின்றேன்."An Astrologer's day",ஊரை விட்டு ஓடி வந்து பிழைக்க வழி இல்லாது ஜோசியகாரனாய் வேடம் தரித்து நடைபாதையில் கடை விரித்திருக்கும் நாயகனின் ஒரு நாள் பொழுதினை விவரிக்கும் கதை.ஜோசியம் கேட்கவந்தவனை கவர அவன் சொல்லும் ஒரே மாதிரியான குறிப்புகள்,அலுப்பில்லாமல் சொல்லும் பொய்கள் நகைப்பிற்குரியதாய் இருப்பினும் அவனின் தினக்கூலி அவன் நடிப்பின் சிறப்பை பொறுத்தே!!"Tiger's Claw",புலியுடன் தான் நிகழ்த்திய சாகச நிகழ்வை கிராமத்து சிறார்களுக்கு விளக்கும் ஒரு வீரனின் கதை."Leela's Friend", திருடனாய் இருந்து திருந்திய ஒருவனோடான ஒரு குழந்தையின் உறவை/நட்பை விளக்கும் கதை.

"Missing Mail", வெயிலும்,மழையும் பாராது சைக்கிளில் அலைந்து தபால் பட்டுவாடா செய்யும் தபால்காரர்களிடம் உற்சாகாதையோ,சீரான நட்பையோ எளிதில் கண்டு பெற்றுவிட முடியாது.பொதுவான இந்த குணத்திற்கு மாறாக இக்கதையின் நாயகன் எல்லோரிடத்திலும் பேரன்போடு, பொதுவான காரியங்களை பகிர்ந்துகொள்வதோடு துன்ப பொழுதில் உதவும் உற்ற நண்பனாகவும் சித்தரிக்கபட்டுள்ளார்.மேலும் "Mother and a Son","Shadow","Ishwaran","Wife's Holiday" ஆகிய கதைகளும் சிறந்தவையே.மால்குடி கற்பனை கிராமமாய் இருந்தாலும்,அதன் சூழலும்,மனிதர்களும் எல்லா இந்திய கிராமங்களுக்கும் பொதுவானவையே..

வெளியீடு - Indian Thoughts Publications

விலை - 110 ரூபாய்

Friday, September 26, 2008

அனிதா தேசாயின் "கடல்புறத்து கிராமம்" - ஒரு இந்திய குடும்பத்தின் கதை

ஆரம்ப கால இலக்கிய வாசிப்புகளை எளிதில் மறக்க முடியாது.சிறுவர் இலக்கியம் படிக்க ஆவல் மேலிட தேடிய பொழுது முதல் பக்கத்தில் என் ஒன்பதாம் வகுப்பு கிறுக்கல்களோடு இப்புத்தகம் கிடைத்தது."ஈசாப் நீதி கதைகள்","பிஞ்சுகள்","டின்கில்","அக்பர் அண்ட் பீர்பால்",தெனாலிராமன்","டாம் சாயேர்" ஆகிய நூல்களை இப்பொழுது பார்த்தாலும் எனது பால்யம் திரும்பி வந்ததாகவே உணர்வேன்.குழந்தைகளுக்கு என பல புதினங்கள் எழுதிய அனிதா தேசாயின் அற்புத படைப்பு "கடல்புறத்து கிராமம்".




படிப்பறிவில்லாத ஹரிக்கு வேலை செய்ய உகந்தது என தெரிவது மூன்று வழிகள்.ஊரில் புதிதாய் வரபோகும் ரசாயன ஆலை,அவ்வூரின் பெரும் பணக்காரனான பிஜ்ஜுவின் மீன் பிடி கப்பலில்,மும்பை சென்று பிழைத்து கொள்வது.முதல் இரண்டு வழிகளில் நம்பிக்கை இழந்து மும்பை சென்று பிழைக்க எண்ணி கப்பல் ஏறுகிறான். கிராமத்து சிறுவனான ஹரிக்கு மும்பை நகரின் ராட்சச பிரம்மாண்டம்,ஓயாத மக்கள் நடமாட்டம்,இயந்திர நடவடிக்கைகள் ஆச்சர்யத்தை தருகின்றது..அப்பெரு நகரிலும் ஹரிக்கு உதவ ரோட்டு உணவு கடை முதலாளி முன் வந்து அவரோடு அவனை வைத்து கொள்கிறார்.

மெல்ல நிறைவேறி வரும் தன் கனவுகளை எண்ணி வியப்பும் பெரிமிதமும் கொண்டு இருக்கும் வேளையில் ஹரிக்கு அவன் பனி செய்யும் உணவு கடையின் அருகில் கடிகார பழுது கடை நடத்தும் கிழவர் ஒருவரோடு நட்பு உண்டாகிறது.பகல் பொழுதுகளில் அவரோடு அமர்ந்து கடிகாரம் பழுது செய்ய கற்று கொள்கிறான்.நாட்கள் செல்ல செல்ல தொழில் தேர்ச்சி உடன் உலக ஞானமும் பெற்று நிறைவான பணத்தோடு வீடு திரும்புகிறான்.இதனிடையில் அவன் சகோதரிகள் தம் வீட்டருகே உள்ள பங்களாவில் வேலை செய்தும்,அவ்வீட்டரின் உதவியோடு தாயை மருத்துவமனையில் சேர்த்து குணமாக்குகின்றனர்.அவன் தாயின் நிலை கருதி தந்தையும் திருந்துகிறார்.




மேலோட்டமாக பார்த்தால் பட்டணம் சென்று பணம் சம்பாதித்து திரும்பும் கிராமத்து சிறுவனின் கதையாய் தோன்றும். குடும்பம் குறித்த அவனது சிறு வயது கடமைகளும்,கனவுகளும்..எட்டா கனியான விஷயங்கள் குறித்த அவனது பார்வைகள் விரிவாய் சொல்ல பட்டுள்ளது.ஹரியின் மூத்த சகோதரி லைலாவின் பாத்திர வடிவமைப்பு மிக நேர்த்தியானது,சிறு வயதில் குடும்ப நிலை அறிந்து தம் விருப்பங்களை விடுத்து உழலும் பல பெண்களின் குறியீடு.தென்னை மரங்களும்,கடல்கரை இரவுகளும் தந்த மகிழ்ச்சியை தொலைத்து மும்பை செல்லும் ஹரியின் பார்வையில் அந்நகரம் விவரிக்கப்படும் இடம் அற்புதம்.

மிக நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் சிறுவர்கள் அவசியம் படிக்க வேண்டியது.வறுமையின் கொடுமைகளை பாரம் என கருதாது எப்படியேனும் பிழைத்து முன்னேற துடிக்கும் ஹரியின் கதை மிக்க நம்பிக்கை தரவல்லது.மொழிபெயர்ப்பில் எந்த வித இடறலும் இல்லாதது பெரும் ஆறுதல்.பிரிட்டன் அரசு இந்நாவலுக்கு இலக்கிய விருது அளித்துள்ளது.

வெளியீடு :நேஷனல் புக் டிரஸ்ட்
விலை : 22 ரூபாய்

Sunday, July 27, 2008

எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுவர்களுக்கான நாவல் -ஏழு தலை நகரம்

உலக இலக்கியம், உலக சினிமா,பயண அனுபவங்கள் என எஸ்.ராவின் அனுபவ தேடல்கள் பலவற்றுள் இருந்து வேறுபட்டு குழந்தைகளுக்கான மிகுந்த கற்பனை,தந்திரங்கள்,மாயாஜாலங்கள் நிறைந்தது இந்நாவல்."இரும்புக்கை மாயாவி" ,"வேதாள கதைகள்" ,"சிந்துபாத்" என சிறு பிராயத்தில் படித்த கதைகளை மீண்டும் நினைவில் கொண்டும் இந்நாவலின் கதையாடல் முற்றிலும் ஒரு புதிய அனுபவம். குழந்தைகளுக்கான வாசிப்பு வெளிகள் முற்றிலும் சுருங்கிய இன்றைய சூழலில் ஆனந்த விகடனின் இம்முயற்சி பாராட்டுதலுக்கு குரியது.




தற்கால நிகழ்வாகவே சொல்லப்படும் இந்நாவலின் கதையாடல் எங்கோ அமைந்திருக்கும் மாய தந்திரங்களும் விடை தெரியா ரகசியங்களும் கொண்ட "ஏழு தலை நகரத்தை" சுற்றி வருகிறது.அந்நகரின் பெரும் மாயையை கருதப்படும் "கண்ணாடிகார தெரு" வை பற்றிய வர்ணனைகளோடு தொடங்குகிறது கதை.ஒரே போன்ற அமைப்பு கொண்ட வீடுகளை எதிரெதிரே கொண்ட அவ்வீதியில் யார் நுழைந்தாலும் அவர்கள் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவர்களின் வயதி இருமடங்காகும் எனவும்,அவ்வீதியில் வசிப்போர் யாவும் மாய உலகத்தார் எனவும் உலவும் செய்திகளால் ஏழு தலை நகர மக்கள் அதனுள் செல்ல பீதியுற்றுள்ளனர்.

நாவலின் நாயகன் அசிதன் சாகசம் புரியும் சிறுவனாக காட்ட படாமல் சராசரி சிறுவர்களை போல நட்சத்திரங்களோடும்,பறவைகளோடும் பேசி மகிழ்ந்து பாடத்தை வெறுப்பவனாக வருகிறான்..பல்வேறு இன பறவைகளை சேகரித்து வைக்கும் அசிதனின் தாத்தாவிடம் மானீ என்னும் அறிய வகை புத்திசாலி பேசும் பறவை கிடைக்கின்றது.அசிதனுக்கு உற்ற நண்பனாய் விளங்கும் மானீ பேசும் பாங்கு சிரிப்பை வரவழைக்க கூடியது..மானீயோடு அசிதனுக்கு கிடைக்கும் மற்றொரு நண்பன் அவ்வீட்டில்
உலாவரும் எலி.








கண்ணாடிகார தெருவில் இருந்த வெளிவரும் சிறகு முளைத்த சிறுவன் "பிகா" மாநீயோடும் அசிதனோடும் நட்பு கொண்டு தினமும் இரவில் அவர்களை பார்க்க வருகிறான்,அவீதியை சேர்ந்த ஒருவை கண்ட மகிழ்ச்சியில் அசிதன் எப்படியாவது அதனுள் செல்ல பெரு விருப்பம் கொள்கிறான்.இந்நிலையில் இரும்பு மனிதன் ஒருவனால் நெடிய மரம் ஒன்றில் சிறை வைக்கப்படும் பிகாவை கதை சொல்லிகள் மூவரின் துணை கொண்டு அசிதன் காப்பாற்றுவதோடு கதை முடிகிறது.கதை நிகழும் காலத்தை கதையோடு பொருத்திப்பார்க்க முடியவில்லை மேலும் கதையின் முடிவு குழப்பமுற்றதாய் உள்ளது.இவ்விரு குறைகளை நீக்கிப்பார்த்தால் இது சந்தேகம் இல்லாமல் சிறுவர்களை மகிழ்விக்கும் மாயாஜால நாவலே.

நகரும் ரயில்வே பிளாட்பாரம்,பேசும் நூலகம்,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லிகள்,அவர்களின் பேசும் மீன்,குரங்கு,மானியின் பார்வையில் நடக்கும் நட்சத்திர குள்ளர்களுக்கும் வான் விலங்குகளுக்கும் நடைபெறும் போர்,பெரும் பழம் கொண்ட இரும்பு மனிதன்,தினமும் ஒரு வண்ணம் பெரும் எழுதலை நகரத்தின் தெருக்கள்,கேள்வி கேட்கும் மஞ்சள் நாய் என திகட்ட திகட்ட மாயாஜாலங்களுக்கு குறைவின்றி வந்துள்ள இந்நாவல் குழந்தைகள் படித்து கற்பனை செய்து மகிழ ஏற்றது.

Thursday, July 24, 2008

குழந்தைகள் இலக்கியம் : பிஞ்சுகள் -கி.ராஜநாராயணன்

இன்றைய குழந்தை ஒன்றிடம் நீ ரசித்தது எது என கேட்டால் யோசிக்காமல் சொல்லும் பதில் ஏதேனும் ஒரு சினிமாவின் பெயராக தான் இருக்கும்.கணினியும்,தொலைக்காட்சியும் சிறுவர்களின் பொழுதுகளை விழுங்கி ஓடி விளையாடுவதற்கோ,நீதி கதைகள் படிப்பதற்கோ நேரம் இல்லாது செய்துவிடுகின்றன.என் வரையிலும் கற்பனை சக்தி வளர வாசிப்பு என்பது இன்றியமையாதது.
சமீபத்தில் ப்ளாக் ஒன்றில் அம்புலி மாமா சிறுகதை கண்டேன்.நினைவுகள் சட்டென எனது குழந்தை பருவத்தை நோக்கி சென்றது.

90'களின் தொடக்கத்தில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் இப்பொழுது போல இல்லை.ஞாயிறு இரவு திரைப்படமும், வெள்ளி இரவு ஒலியும் ஒளியும் மட்டுமே தொலைக்காட்சி பொழுதுபோக்கு.பெரும்பாலான நேரங்கள் தெருக்குழந்தைகளோடு கூடி "கல்லா மண்ணா" ,"பூ பறிக்க வருகிறோம்","பாண்டி","திருடன் போலீஸ்" "தாயம்" ,"பல்லாங்குழி" விளையாடுவதிலே செல்லும்..சிறுவர் நூல்கள் மீது நாட்டம் சென்றதும் "மாயாவி கதைகள்" "அம்புலி மாமா" "சிறுவர் மலர்" என படிக்க தொடங்கினேன்...வாசிப்பின் மீதான ஆர்வம் கூடியதே பால்ய கால சிறுவர் புத்தகங்கள் மூலமே..




எனது முதல் இலக்கிய வாசிப்பு தொடங்கியது கி.ராஜநாராயணனின் "பிஞ்சுகள்" குறுநாவல் மூலம்.வெங்கடேசு என்னும் கிராமத்து சிறுவனை சுற்றி நகரும் அக்கதை இன்று வழக்கில் இல்லாத பல தமிழ் சொற்களை கோடிட்டு விளக்குவதோடு,எண்ணில் அடங்கா நாம் அறியா பறவை இனங்களை வகைப்படுத்துகின்றது..ஒரு சிறுவனின் பார்வையில் ரயிலும்,அதனோடான நினைவுகளும் விளக்க படும் இடம் அருமை.மேலும் அக்காலகட்டத்தில் பெரியம்மை நோயின் தீவிரத்தை,அதன் விளைவால் கண் மற்றும் உரிய் இழந்தோரின் அவலங்களை கூறி இருப்பது அந்நோயின் அபாயத்தை விளக்குகிறது.

கிராமங்களில் தெருகூத்து எப்பொழுதும் நிகழும் ஒன்று.இன்று அதே கலைஞர்கள் தொழில் சோர்ந்து விட பாடல்களுக்கு நடனம் ஆடும் ரிக்கார்ட் நடனம் மேற்கொள்ளுகின்றனர்.இந்நாவலில் ஒரு பகுதியில் அவ்வூருக்கு வரும் கலைகூத்தாடிகள் நிகழ்த்தும் நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளது.தன் நண்பன் அசோக்கின் அண்ணனான மோகன் தாசுடனும் , மற்றொரு நண்பனான செந்தில்வேலின் குடும்பத்தோடும் வெங்கடேசு கொண்டிருக்கும் பற்றும் பிரியமும் சொல்லால் விவரிக்க இயலாத ஒன்று.தன் பழகும் ஒவ்வொரு நபருடனும் ஆழ்த்த அன்பை செலுத்தி புதிய புதிய காரியங்களை அறிந்து கொள்ளும் அவனது ஆவல் தேடல் நிறைந்த சிறுவனாய் அவனை அடையாளம் காட்டுகின்றது.மகிழ்ச்சியாய் நாட்கள் செல்ல வெங்கடேசுவிற்கு படிப்பின் மீது ஆர்வம் வருகின்றது.அசோக்கோடு சேர்ந்து பட்டணத்தில் சென்று படிக்க முடிவு செய்கிறான்.தன் பிரியத்திற்குரிய பறவைகளிடமும்,வீட்டு பூனையிடமும்,நாயிடமும் விடை பெற்று நீண்ட மௌனத்தோடு தன்பிரிவை சொல்லி வேதிநாயக்கரிடம் இருந்து விடைபெற்று ரயிலில் பட்டணம் புறப்படுகின்றான்....

நாவலில் குறிப்பிடப்படும் வழக்கொழிந்த சில தமிழ் சொற்கள்: தூறி:போக்கு நீரை எதிர்த்து வரும் மீனை பிடிக்க மூங்கிலால் செய்யப்பட்ட கருவி.

கொங்காணி : கோணியை போல மழைக்கு தலையில் போர்த்தி கொள்வது ,விரித்து படுக்கவும் உதவும்

தாப்பு : தங்கி இளைப்பாறும் இடம்

பொசல் வண்டி : கூட்ஸ் வண்டி

பூமரம் : ஒட்டுதல் உள்ளவர்கள் தனிமையில் தாம் சந்திக்க முன்னமே தேர்வு செய்த இடம்


நாவலில் குறிப்பிடப்படும் அறிய வகை பறவை இனங்கள்..

வல்லையதான் - போர் குணம் கொண்ட பறவை
தேன் கொத்தி - தேன் தீண்ட வண்ணம் உடல் அமைப்பு கொண்டது
நானுந்தான் - மைனா
சிட்டு குருவி வகைகள்: தேன்சிட்டு,மஞ்சள் சிட்டு,முள் சிட்டு,தட்டை சிட்டு...
தைலான் பறவைகள்,கரிச்சான் பறவை,குங்கும தட்டான்கள்,வால் குருவி


காக்கையும் குருவியும் அன்றி வேறு பறவைகளை காண முடியாத இப்பொழுதைய அவல நிலையில் இந்நூலின் பறவைகள் பெருமூச்செறிய வைக்கின்றன.

இவை மட்டும் இன்றி நாவலில் குறிப்பிடபட்டுள்ள செய்திகள் பல.மழை வேண்டி கண்மாய் பிள்ளையாருக்கு மிளகாய் அரைத்து பூசி வேண்டுதல்,புதர் மண்டிய இடத்தில் கோவில் நாகம் இருப்பதை சொல்லி உலவும் கட்டு கதைகள்,ரயில் வண்டியின் மீது சிறுவர்கள் கொண்டுள்ள மோகம் என கிராமத்து நிகழ்வுகள் நாவல் முழுதும் மிகை இன்றி சொல்லப்பட்டுள்ளது.பெரும் நிறைவையும் திருப்தியையும் வாசகனுக்கு தரும் இந்நாவலுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்தது மிகை இல்லை..