Saturday, September 24, 2016

ஒரு மிகை எதார்த்தவாதியின் சுயசரிதை


"எது எப்படியாகினும் என் உறுதிப்பாடுகளில் சமரசம் செய்தோ,தனிப்பட்ட ஒழுக்க நெறியில் சமரசம் செய்தோ ஒரு காட்சி கூட எடுத்ததில்லை நான் "

 - இயக்குநர் லூயிஸ் புனுவல்

 

மிகை எதார்த்தவாதியாக தன்னை முன்னிறுத்தும் ஸ்பெயின் நாட்டு இயக்குநர் லூயிஸ் புனுவலின் சுயசரிதை "இறுதி சுவாசம்" வாசிக்க கிடைத்தது.முதன் முதலில் பார்த்த புனுவலின் Belle de jour ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது.எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் தெளிவான மணவாழ்க்கை கொண்ட பெண் திடீரென விபச்சார விடுதியின் காரியங்களில் ஈடுபட துணிவதும்,தொடர்ச்சியாய் அவளை துரத்தும் வினோத கனவுகளுமென அத்திரைப்படம் அதுவரை கண்டிராத திரை அனுபவமாக இருந்தது.அதன் தொடர்ச்சியாய் புனுவலின் திரைப்படங்களை தேடிப் பார்க்க துவங்கினேன்.படைப்பாளியின் சுதந்திரம் என்பது எல்லைகளற்று நீண்டு கொண்டே இருப்பதென்பதை மெய்ப்பிக்கும் படியான திரைப்படங்கள் புனுவலுடையவை.

ஒரே கதாபாத்திரத்தை இரு வேறு நாயகிகள் செய்வது,ஒரு காட்சியின் முடிவில் அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத மற்றொரு கதை துவங்குவது,கண்ணுக்கு புலப்படாத மந்திர கோட்டினால் பீடிக்கப்பட்டு ஒரு அறையில் மாட்டிக் கொள்ளும் மனிதர்கள் என புனுவல் தேர்ந்தெடுக்கும் காட்சிப் பின்னணிகள் ஆச்சர்யம் கொள்ள வைப்பவை.

மத நம்பிக்கைகள் மீதும்,அதிகாரவர்க்கத்தின் மீதும் தனது கறாரான விமர்சனத்தை தெளிவாக முன்வைக்கும் புனுவல் அதன் காரணமாக தொடர்ச்சியாய் சந்தித்த எதிர் விமர்சனங்களும்/மிரட்டல்களும் குறித்து இப்புத்தகத்தில் தனக்கே உரிய பகடியோடு விவரித்துள்ளார்.Un Chien Andalou,Viridiana,Los Olvidados முதலான படங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்தவை.Virdianaவில் இடம் பெரும் "Last Supper"யை பகடி செய்யும் ஒரு காட்சி பிரசித்தி பெற்றது.தேவகுமாரன் மீண்டும் பூமியில் ஜனித்தால், அவனது பரிசுத்தம் அர்த்தமற்று போகும்படியாகவே உலகம் பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதை உரத்துச் சொல்லுவதாக இருக்கும் அவரது Nazarin.கடவுளின் இருப்பையும்,மிஷினரிகளின் சேவைகளையும் தொடர்ந்து விமர்சிக்கும் லூயிஸ்,இரக்கமற்ற இவ்வுலகிற்கு புனிதர்கள் தேவையில்லை என்கிறார்.

ஸ்பெயின்-மெக்சிகோ-பாரிஸ் என தொழில் நிமித்தமாய் பயணப்பட்ட அவரது நினைவுப் பாதை முழுக்க நிறைந்திருப்பது நண்பர்களே. சார்லி சாப்ளின்,பிக்காஸோ உடனான புனுவலின் அனுபவ பகிரல்கள் வாசகனுக்கு நிச்சயம் சுவாரஸ்யம் கூட்டுவது.புனுவலின்  கதைகளில் கனவுகளுக்கு முக்கிய இடமுண்டு.அவை அசாதாரணமானவை.ஒரு நாளில் 2 மணி நேரம் தவிர்த்து மீதமுள்ள 22 மணிநேரமும் கனவுகளில் லயித்திருப்பதையே விரும்புவேன் என்கிறார் புனுவல்.திரையில் அவர் இடம்பெறச் செய்த காட்சிகள் மிகக் குறைவே என எண்ணும்படியாக தன் வினோத கனவுகளை குறித்து மட்டுமே நான்கு பக்கங்களுக்கு மேலாக விவரிக்கிறார்.

குடும்பம்,மனைவி,காதலிகள் குறித்து அதிகம் பகிரவில்லை மாறாக விதவிதமான மது வகைகள் குறித்து பக்கம்பக்கமாக விவரிக்கிறார். புனுவலின் படங்களின் விருந்துண்ணும் காட்சிகள் பிரதான இடம் பிடித்திருப்பதற்கு காரணம் புலப்படுகிறது.இயக்குநராய் கால் பாதிக்கும் முன்னர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதிர் கொண்ட சிரமங்களை குறித்தும்,மனதிற்கு ஒப்பாத ஹாலிவுட் படங்களில் பணியாற்றியது குறித்தும் புனுவல் சொல்பவை இத்தொழிலின் மீது அவர் கொண்டிருந்த தீரா காதலை பறைசாற்றுவது.உலக யுத்தம் உச்சத்தில் இருந்த சமயம் கொண்டிருந்த அரசியல் கொள்கைகள் காரணமாக எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள்,மறைந்து திரிந்த நாட்கள் என உலக யுத்தத்தின் நாட்களையும் பதிவு செய்துள்ளார்.வரலாறுகளால் நிரம்பிய கடந்த காலம் புனுவலுடையது.

தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகப் பிடித்ததென்ன "Phantom Of Liberty"யை குறிப்பிடுகின்றார்.வாழ்வில் நிகழ்ந்த மறக்கவியலா சம்பவங்களை பிற்காலத்தில் தமது படத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இடம்பெறச் செய்ததாக குறிப்பிடுகின்றார்.ஒளிப்பதிவு அழகியலின் அதிக நாட்டமில்லை அது கதையின் போக்கிலிருந்து பார்வையாளனை நகர்த்தி விடும் எனக் கூறும் புனுவல், தனக்கு பிரியமான இயக்குநர்கள் என பெடரிக்கோ பெலினி,பிரிட்ஸ் லேங்,ஹிட்ச்காக்,விட்டோரியோ டிசிகா,பெர்க்மான் முதலானோரை குறிப்பிடுகின்றார்.

மத நம்பிக்கைகள் மீதும்,அதிகாரவர்க்கத்தின் மீதும் தனது கறாரான விமர்சனத்தை முன்வைத்த புனுவலின் சுயசரிதை அவரை குறித்து மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது. திரைப்படங்களின் வழி நாம் அறிந்திருந்த புனுவலுக்கும் சுயசரிதையில் காணும் புனுவலுக்கும் அதிக வித்தியாசமில்லை.தன் கருத்துக்களில் பிடிவாதமும் படைப்புகளில் சமரசமும் செய்து கொள்ளாத மாபெரும் மனிதனின் நாட்குறிப்புகள் இவை.

Te amo Luis Bunuel!

புத்தகம்: இறுதி சுவாசம் 
ஆசிரியர்: லூயிஸ் புனுவல் 
தமிழில் சா.தேவதாஸ் 
வெளியீடு: வம்சி 

Monday, September 5, 2016

ராணியுடன் ஒரு தேநீர் விருந்து


காணா தேசங்களின் மனிதர்களை,அவர் தம் வாழ்க்கைச் சூழலை,கடந்து வந்த போராட்டங்களை,மேன்மை பொருந்திய காதலை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டல்லவா. உலக இலக்கியங்களின் ருசி என்பது எல்லைகள் கடந்து விரிந்து நிற்கும் விருட்சம் போன்றது. மொழியால்,பண்பாட்டால், பழக்க வழக்கங்களால்,தட்ப வெட்பத்தால் முற்றிலும் நம்மிடம் இருந்து வேறுபட்டு நிற்கும் தேசங்களின் கதைகள் தரும் நிறைவு படித்துணர வேண்டியது.


அரவிந்தனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து" தேர்ந்தெடுத்த வெல்ஷ் மொழிச் சிறுகதைகளின் இத்தொகுப்பு செறிவான படைப்பு.கதைகளின் தேர்வும் அவற்றின் கச்சித மொழிபெயர்ப்பும் சிறப்பு.தனித்தலையும் மனிதர்களின் கதைகள் இத்தொகுதியில் பிரதான இடம் பிடித்துக் கொண்டதாக தோன்றியது.அவர்களின் தனிமையின் காரணங்கள் வேறு பட்டவை.போரின் பொருட்டும், காதலின் பொருட்டும்,பிரியத்திற்கு உரியவர்களை இழந்ததின் பொருட்டும் நினைவுக்கு குழிக்குள் சிக்குண்டு வெளி வர வழியறியாது தவிப்பவர்கள் அவர்கள்.

தொடர்ச்சியாக பிள்ளைகளை இழந்த தம்பதியினரின் கதையை சொல்லும் "தொலைந்து போன குழந்தைகள்" நெகிழ வைப்பது.மாலை மங்கிய பொழுதில் வழி தவறி காட்டினுள் செல்லும் நாயகியின் குழப்பம் மிகுந்த மனநிலை அவளது தினசரி நாட்களின் குறியீடு. "குழந்தைகள் உருவில் நாம் அழியாமல் இருக்கிறோம்" என்னும் வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளும் அவள் அப்பழுக்கற்ற தாயன்பின் அடையாளம்.மார்ட்டின் தாவிஸ்'ன் "தண்ணீர்" போரின் கோர முகத்தை ஒரு எளியவனின் ஒரு நாள் போராட்டத்தை கொண்டு அழுத்தமாக பதிவு செய்கிறது.தூரத்தில் விடாது ஒலித்துக் கொண்டிருக்கும் வெடிகுண்டு முழக்கத்திற்கு சற்றும் குறைந்ததல்ல பதுங்கு குழியில் அவன் காணும் காட்சிகள்.

தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்ததும் தலைப்பு கதையுமான "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து",வாழ்ந்து கெட்ட ராணியின் நினைவுகள் வழி பயணித்து வரும்படியான கதை.யாருமற்ற அவ்வீதியின் ஆளரவமற்ற வீடுகளை சுட்டிக் காட்டியபடியே அவ்வீட்டு மனிதர்கள் சந்தித்த துயரங்களை பகிர்கிறார். உண்மையில் அக்கதைகள் யாவும் அச்சம் தருபவை. நினைத்து பாராத மோசமான முடிவை சந்தித்த அம்மனிதர்கள் குறித்து கதை சொல்லியின் நேர்த்தியுடன் எடுத்துரைக்கும் ராணி அவ்விடம் தனித்து இருப்பதின் காரணம் பெரும் சோகத்தில் ஆழ்த்துவது. மீண்டெழ முடியா நினைவுகள் மோசமானவை!

"வாட்டிலன் ஒரு திருடன்" - கெட்டவர்கள் தண்டிக்கப்பட்டு இறுதியில் நல்லவர்களே வெற்றி பெறுவார்கள் என்று காலங்காலகமாக கண்டும்/படித்தும் வந்த நமக்கு எதார்த்தத்தை பகடி செய்யும் இச்சிறுகதை குட்டு வைக்கிறது.லோயிட் ஜோன்ஸ்'ன் "தபால் நிலைய சிகப்பு" கதை குறித்து என்ன சொல்ல.கதையின் ஓட்டத்தில் நம்மை மறந்து நாயகனோடு அவன் பார்க்கும் ரகசியம் பொதிந்த வீடுகளை நாமும் கண்காணிக்க துவங்குகிறோம். எதார்த்தத்தில் இது போன்ற நிகழ்வுகள் சாத்தியமே எனினும் அதை கதையாக்கிய இக்கதாசிரியரின் நுட்ப சிந்தனை ஆச்சர்யம் கொள்ள வைத்தது.

"பனிப் புயல்" ,சிறுநகரொன்றில் தாந்தோன்றி இளைஞனான பெர்ரி உடல் நலிவுற்ற தன் தாயுடன் செலவிடும் ஒரு இரவின் நிகழ்வுகளை குறித்தது.ஒழுங்கீனங்களின் மொத்த உறைவிடமான பெர்ரி குடியின் மயக்கத்தில் தன் தாயை இரக்கமின்றி நிராகரிக்கும் காட்சிகள் அப்பனி இரவின் மூர்க்கத்திற்கு இணையானது.பெர்ரியின் மீது பரிதாபமும் கோபமும் ஒன்று சேர தோன்றி மறைவதை தவிர்க்க முடியாது.இருண்மையின் கதைகள் சகித்துக் கொள்ள முடியாதவை,பனிப் புயல் அதிலொன்று.

தமிழில் வெளியாகி உள்ள உலக சிறுகதை தொகுதிகளில் நிச்சயம் "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து" மிக முக்கிய இடம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெல்ஷ் மொழிச் சிறுகதைகள்
தமிழில்: அரவிந்தன்
வெளியீடு: காலச்சுவடு
விலை: 90 ரூபாய்

Friday, September 2, 2016

Mustangதுருக்கி இயக்குநர் Deniz Gamze Ergüven'ன் #Mustang பெண் விடுதலையை முன்வைத்து ஐந்து சகோதரிகளின் கதையை பகிர்கின்றது. பெண்களுக்கான சுதந்திர வெளி முற்றிலும் ஒடுக்கப்பட்ட தேசத்தில் இருந்து வந்திருக்கும் துணிச்சல் மிகுந்த படைப்பிது.துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் பனி நாவலில் பேசப்படும் முக்காடு பெண்கள் குறித்த காரியங்கள் இப்படம் பார்க்கையில் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை. ஒரு கோணத்தில் பனி நாவலின் நவீன பிரதியாகவே இத்திரைப்படம் காட்சியளிக்கிறது

நகரத்தில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட கிராமம் ஒன்றில் பாட்டியுடன் வசிக்கும் ஐந்து சகோதரிகள்.சிரிப்பும் ,கேலி விளையாட்டுமாய் அவர்கள் அறிமுகம் ஆகும் காட்சி அப்பெண்களின் விருப்ப வாழ்வின் ஒரு துளி.அதன் தொடர்ச்சியாய் நிகழ்பவை யாவும் சீழ் பிடித்த சமூகத்தின் கோர முகத்தை பறைசாற்றுபவை.ஒழுக்க நெறிகள் என பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட அற்ப விஷயங்களுக்காய் அவர்கள் முற்றிலுமாய் வீட்டினுள் சிறை வைக்கப் படுகிறார்கள்.அச்சிறையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரே தீர்வு திருமணம்.அது சிறை மாற்றம் மட்டுமே என்பதை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளவும் செய்கின்றனர்.

உடைகளில் துவங்கும் ஒடுக்குமுறை வீட்டு வேலைகளுக்கு அப்பெண்களை தயார்படுத்துவது, கன்னித் தன்மையை மருத்துவரிடம் சோதனை செய்வது,கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்துவது என நீள்கிறது.பாலியல் ரீதியிலான அடக்குமுறை இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.நீச்சல் உடையில் இல்லாத குளத்தை கற்பனை செய்துகொண்டு அச்சிறுமிகள் தரையில் விழுந்து நீந்தும் காட்சி அவர்களின் கையறு நிலையைச் சொல்ல போதுமானது. ஐந்து சகோதரிகளில் நம் கவனத்தை ஈர்ப்பது கடைசி பெண்ணாக நடித்துள்ள Günes Sensoy.துணிச்சல்காரியாக அவரது தீர்க்கமான நடிப்பு நம்மை ஆச்சர்யப்படுத்துவது.

கற்பு நிலை சார்ந்த கோட்பாடுகள் பெண்களுக்கு மட்டுமே என்றான சமூகத்தில் உளவியல் ரீதியிலாக பாதிக்கப்படும் அப்பெண்கள் எவ்விதம் தங்களை அச்சூழலில் இருந்து விடுவித்துக் கொள்கின்றனர் என்பதை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். அவர்களுள் சமூகத்தை எதிர்த்து நிற்க துணிந்தவர்களே உண்மையான வெற்றியை பெறுகின்றனர்.நவீன உலகில் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்றும் சில அடக்குமுறை சமூகங்கள் தம் பெண்களை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அழுத்தமாகவே பதிவு செய்துள்ளது இப்படைப்பு.

Guardian இதழுக்கு இயக்குனர் டெனீஸ் அளித்துள்ள விரிவான நேர்காணல் இத்திரைப்படம் குறித்த பல்வேறு புரிதல்களை தெளிவுபடுத்துகின்றது. தைரியமாக தன கருத்துக்களை பதிவு செய்ததற்கு பலனாக இனி துருக்கியில் தொடர்ந்து படங்கள் செய்ய முடியாத நிலை இயக்குநருக்கு. எப்படி பட்ட அடக்குவாத சமூகத்தில் இருந்து அவரது புரட்சிகர குரல் வெளிப்பட்டுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.

ஆணாதிக்க சமூகத்தின் பிடியில் இருந்து வெளிவர புத்தி சாதுர்யமும் மிகுந்த துணிச்சலும் பெண்களுக்கு அவசியம் என்பதை எதார்த்த மொழியில் ரசிக்கும்படி சொல்லியுள்ள இப்பெண்ணிய படைப்பு எளிய கதை சொல்லல் வழி மாபெரும் பேருண்மையை உரத்துப் சொல்கிறது.

Tuesday, August 30, 2016

சத்யஜித் ரேயின் ஃபெலூடா கதைகள்


சினிமாவும் இலக்கியமும் அபூர்வமாய் சந்தித்துக் கொள்ளும் தருணங்கள் சில உண்டு.கி ராவின் பிஞ்சுகள் நாவலுக்கும் ரேயின் பதேர் பாஞ்சாலிக்கு ஏதோ ஒரு நெருங்கிய தொடர்புண்டு என்றே எனக்கு தோன்றும்.சிறுவர்களின் பிரத்யேக கனவுகளுக்குள் நம்மை இட்டுச் செல்லும் இவ்விரு கதைகளுமே சிறார்களின் அகவுலகை வார்த்தைகளால்/காட்சிகளால் நமக்கு காட்டிச் செல்லும் இடங்கள் உணர்வுபூர்வமானவை.

தம் கவித்துவ திரைப்படங்களின் வழி இந்தியாவின் பெயரை உலகளவில் உயர்த்திப் பிடித்த சத்யஜித்ரேயின் ஆச்சர்யமிக்க மற்றுமொரு முகம் ஃபெலூடா கதைகளை வாசிக்கையில் புலப்பட்டது.ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளின் பாதிப்பால் ரே உருவாக்கியுள்ள ஃபெலூடா கதைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நம் மனதை கவர்பவை.வயது வித்யாசமின்றி அனைவராலும் விரும்பப்படும் விதமான நேர்த்தி கொண்ட 20 தனித்த கதைகளின் தொகுப்பு.சிறுவர்களுக்கான தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பில் இக்கதைகள் மிக முக்கியமானவை.


துப்பறியும் நிபுணர் ஃபெலூடா,அவருக்கு உதவியாய் தம்பி தொப்ஷே,எழுத்தாளர் லால் மோகன் பாபு என மூவர் கூட்டணியின் சாகசங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை. பெலூடாவின் புத்தி சாதுர்யத்தை வியந்தபடியே ஒவ்வொரு கதையும் நாம் கடக்க வேண்டியுள்ளது. அறிவின் துணை கொண்டே அவிழ்க்கப்படும் மர்மங்களின் பின்னணி மிகையின்றி சித்தரிக்கப்படுவதோடு முடிந்த வரை எளிய நடையில் வாசகனுக்கு முன்வைக்கப்படுகின்றன.

புராதான பொருட்கள் திருட்டு,புதையல் வேட்டை துவங்கி பெரும் மாபியாவாக செயல்படும் கொள்ளைக் கூட்டம் வரை ஃபெலூடா விசாரிக்கும் குற்றங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. சிறுவர்களுக்கான கதைகள் தான் என்றாலும் போகிற போக்கில் சமூகத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கவும் தவறவில்லை ரே.அதே போலவே இந்திய திரைப்படங்கள் குறித்த கேலிகளும். பம்பாயில் கதைகள் தயாரிக்கப் படுகின்றன,கொல்கத்தாவில் கதைகள் ரசிக்கப்படுகின்றன என்கிறார்.எத்தனை உண்மை!

ஃபெலூடா கதைகள் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடப்பதாக உள்ளன.வாரணாசி, டார்ஜிலிங், லக்னோவ், ஜெய்சால்மர்,புவனேஸ்வர், பம்பாய்,சிலிகுரி என ஃபெலூடா பயணிக்கும் நகரங்கள் குறித்த விவரணைகள் குறிப்பிடத்தக்கவை.மேலும் அந்நகரங்களின் தட்ப வெட்பம்,உணவு பழக்கங்கள், சுற்றுலாத் தளங்கள் என முடிந்த வரை விரிவாகச் சொல்லி நம்மை அப்பயணத்தில் ஒருவராக உணர்ச்சி செய்கிறார் ரே.பரந்துப்பட்ட அவரது ஞானமும்,பயணங்கள் மீதான காதலும்,பழம் பொருட்கள் மீதான அக்கறையும் இக்கதைகளின் வழி நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எப்போதும் தீவிர சிந்தனையில் பைப் புகைத்தபடி இருக்கும் ஃபெலூடாவை ரேயாகவே உருவகித்துக் கொண்டேன்.ரேயின் கம்பீரம் அத்தகையது தான் இப்புகைப்படத்தில் உள்ளது போல.

மொத்தம் 30 புத்தகங்களின் தொகுப்பான இதில் 20 புத்தகங்கள் மட்டுமே தமிழில் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன. வீ.பா.கணேசனின் மொழிபெயர்ப்பு தங்கு தடையின்றி எளிதாக புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளது மேலும் ஒரு சிறப்பு. இந்தியாவின் ஷெர்லாக் என பெருமையோடு சொல்லிக் கொள்ளும்படியான ஃபெலூடா கதைகள் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அவசியம் பரிந்துரைக்கப்பட்ட வேண்டிய தொகுப்பு.


புத்தக வரிசை: ஃபெலூடா கதைகள்
ஆசிரியர்: சத்யஜித் ரே
மொழிபெயர்ப்பு: வீ.பா.கணேசன்
வெளியீடு : பாரதி புத்தக நிலையம்

Thursday, July 7, 2016

ஒதுக்கப்பட்டவைகளின் உலகம்


இயக்குநர் ஆக்னஸ் வார்டாவின் "Gleaners & I" தேவையற்றவை என நாம்  ஒதுக்கும் பொருட்களை சார்ந்து வாழும் மனிதர்கள் பற்றியது.விளை நிலங்களில் மிஞ்சிய காய்கறிகள்,வைன் தோட்டத்து திராட்சைகள் , ,வீட்டு உபயோக பொருட்கள்,எலெக்ட்ரானிக் சாதனங்கள்,விளையாட்டு பொம்மைகள் என ஒதுக்கப்படும் யாவையும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஆட்களை தேடிச் செல்லும் ஆக்னஸ்  வார்டாவின் திரையாக்கம் இது.

சிறு பிள்ளையின் உற்சாகத்தோடும் தன் 67வது வயதில் ஆக்னஸ் இந்த டாக்குமென்ட்ரியை சாத்தியப்படுத்தி இருப்பது ஆச்சர்யம்.அதனினும் பெரிய ஆச்சர்யம் அவர் நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் மனிதர்கள்.விவசாய நிலங்களில் அதீதம் என விட்டுச் சென்றவற்றை குடும்பம் குடும்பமாக எடுத்துச் செல்லும் ஆட்கள்..அதில் ஒரு குடும்பம் வைன் காடுகளில்  உற்சாகமாக பாடிக் கொண்டே பழங்களை பறிப்பது ஓவியத்தின்  அழகை மிஞ்சும் காட்சி.

பிரெஞ்ச் தேசத்தின் கிராமபுறங்கள்,நகர தெருக்களில் உலாவும் ஆக்னஸின் கேமரா பின்தொடரும் நபர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு தனித்து வாழும் தேசாந்திரிகள்.வீதியில் கண்டெடுக்கும் பொருட்களைக் கொண்டு ஜீவிதத்தை செலுத்துபவர்கள்.தங்களின் காரியங்கள் குறித்து அவர்களுக்கு எந்தவித புகாரும் இல்லை.மாறாக குடும்பம்,அலுவல்,கடமைகள் என சராசரி மனிதர்களின்  சிக்கல்கள் தங்களிடம் இல்லாதது குறித்த மகிழ்ச்சியே அதிகம் தெரிகிறது.

ஆங்காங்கே  ஆக்னஸ் தன்னைக் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.Gleaner ஆக மாறி முட்கள் இல்லாத கடிகாரம் ஒன்றையு வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஆக்னஸ் அதை குறித்து  "This handless clock will help me to forget the passage of time, to paper it over, and forget  my increasing age.." எனக் கூறுகிறார்.வார்டாவின் மனவெளியை நமக்கு விளக்கிச் செல்லும் காட்சியது.

ஒரு ஓவியத்தின் தூண்டுதலால், ஆக்னஸ் மேற்கொள்ளும் இப்பயணத்தில் நாம் அறிந்திராத அவ்வுலகம் குறித்த முக்கிய செய்தியொன்று இருக்கிறது.மார்க்கெட் வீதியின் காய்கறி மிச்சங்களை மட்டுமே உண்டு,பகுதி நேரத்தில் அகதிகளுக்கு இலவச கல்வி புகட்டும் உயிரியல் பேராசியர் அலைனின் வாழ்க்கைமுறை நமக்குச் சொல்லும் விஷயமும் அதுவே.அவர்கள் ஞானியைப் போல தீர்க்கமானவர்கள்!

காற்று நம்மை ஏந்திச் செல்லும்...நேற்றைய பொழுது ஈரானிய சினிமாவின் பிதாமகன் அப்பாஸின் மரணச் செய்தியோடு துவங்கியது.கண்டு நெகிழ்ந்த அவரின் திரைப்படங்களை ஒவ்வொன்றாய் யோசித்து கொண்டிருக்கிறேன்.மேலோட்டமாக அணுக முடியாதவை அப்பாஸின் படைப்புகள்.ஆழ்ந்த வாழ்வியல் தத்துவங்களை பேசுபவை அவை.
இவரது Taste Of Cherry(1997) தற்கொலை செய்யத் துணிந்தவனின் ஒரு நாள் பயணம் குறித்தது.மரணத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கும் இப்படத்தில் மரணம் முரண்பாடுகளின் இடைவெளி என்பதை தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் முன்வைத்திருப்பார்.

சுயநலத்தினால் மனிதம் சிதைவுறுவதை கிராமத்து - நகரத்து மனிதர்களின் வேற்றுமை கொண்டு பேசும் Wind Will Carry Us திரைப்படம் நெடுகிலும் இரானிய கவிதைகளை மேற்கோள் காட்டியிருப்பார்.கவித்துவம் நிறைந்து வழியும் காட்சிகளுக்கு குறைவில்லை. அப்பாஸின் ஆகச் சிறந்த படைப்பாக இத்திரைப்படம் கருதப்படுவதற்கு அதன் கருப்பொருளாக அடிப்படை மனிதநேயம் இருப்பதும் ஒரு முக்கிய காரணம்.

அப்பாஸ் கியோஸ்தமியின் "Ten(2002)" ஆரவாரமான டெக்ரான் நகர வீதிகளில் காரில் பயணிக்கும் நாயகி, உடன் பயணிப்பவர்களுடன் கொள்ளும் சுவாரஸ்யமான/தீவிரமான விவாதங்களின் தொகுப்பு. தன சகோதரி,ஒரு மணப்பெண்,பாலியல் தொழிலாளி என அவள் சந்திக்கும் யாவரிடமும் அவளுக்கு விவாதிக்க விஷயங்கள் இருக்கின்றன. எதிர்ப்பார்ப்பில்லாமல் எந்த உறவும் சாத்தியமில்லை என்கிறாள் பாலியல் தொழிலாளி.மற்ற பெண்களின் பேச்சில் இருந்து அது உண்மை என்றே நிறுவப்படுகிறது.நவீன வாழ்வின் பல்வேறு சிக்கல்களை வெவ்வேறு பெண்ணிய பார்வையில் முன்வைக்கிற வகையில் இப்படம் எனது விருப்பத்திற்குரியது.

"நல்ல சினிமா என்பது நம் நம்பிக்கையை பெறுவது. மோசமான சினிமாவோ நம் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று .." இது அப்பாஸின் புகழ் பெற்ற வாசகம். அத்தகையதொரு நம்பிக்கையை பெற்றவையே அவரது படைப்புகள்.

"Definition of death is nothing but Closing your eyes on the beauty of the world.." என்கிற அப்பாஸின் கூற்றுப் படியே அவர் விடைபெறலை காண்கிறேன்!

Adieu Master!!

Wednesday, February 10, 2016

எருது - உலகச் சிறுகதைகள்


தேர்ந்தெடுத்த உலக சிறுகதைகளின் தொகுப்பு.தேர்ந்தெடுத்த என்பதை அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என்னும் படியான அற்புத கதைகளின் தேர்வு. உலக நாடுகளின் தலை சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் வெகு நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன.

யாவருக்கும் புதிரான முதியவன் முர்லாக்கின் வாழ்வின் மோசமானதொரு நாளை விவரிக்கும் முதல் கதையான அம்புரோஸ் பியர்ஸின் "சட்டமிடப்பட்ட சாளரம்" ஏற்படுத்தும் அதிர்வில் இருந்து வெளிவரும் முன்னர்,பல்வேறு மனநிலைக்கு இட்டுச் செல்லும் பின்வரும் கதைகள்.நாம் மறந்து போன கடந்த காலம் மீண்டும் நினைவிற்கு கொண்டு வரும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமானதாக இருப்பின் கவலையில்லை,ஆனால் பிரியத்திற்கு உரிய கார்ட்டருக்கு நிகழ்ந்ததென்னவோ துன்பகரமானது.கார்ட்டரின் கதையை சொல்லும் கிரகாம் கிரீனின் "நிலப்படம்" அசலான வாசிப்பனுபவம்.ரைஸ் யூக்ஸின் "கல்லறை சாட்சியம்" சிறுகதை லூயிஸ் புனுயலின் "The Phantom of Liberty" திரைப்படத்தை நினைவூட்டியது.ஒரு கதையின் முடிவே மற்றொரு புதிய கதையின் துவக்கமாய் நீளும் பாணி..எழுத்தில் எதிர்பார்க்காதது.இரானிய எழுத்தாளர் யூசுப் இதிரிஸின் "சதையாலான வீடு" இருண்மை சூழ்ந்த குடும்பத்தின் கதை.யாருமறியா ரகசியம் ஒன்றை உள்ளடக்கி எழுதப்பட்ட கவிதையைப் போல அவ்வீடும் அவ்வீட்டுப் பெண்களும்.

ஒவ்வொரு கதையும் ஒரு விதத்தில் ஈர்க்கும் தன்மையில் இருப்பினும் தொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு கதைகள் உண்டு. மொழிபெயர்ப்பின் சாயல் ஏதுமற்ற துல்லியமான நடை கொண்ட கதைகள் இவை.பிரபல அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசனின் "வசன கவிதை" அதிலொன்று.இனத்தால் வேறுபட்ட (ராபர்ட்டா - ட்வைலா) இரு தோழிகளின் கதை.சிறுவயதில் துவங்கும் அவர்களின் நட்பு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பிருந்தும் புதுப்பிக்க வழியற்று போகும் அவலத்தை சொல்லுவது.சிறுமிகளாய் இருந்த சமயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாத பலவும் வயது கூட கூட பெருஞ்சுவராய் அவர்களுக்கு நடுவில் எழுகிறது. சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நிழல் அவர்களை சூனியமாக துரத்துவதும்,அதன் பொருட்டு நிகழும் உரையாடல்களும்.. ராபர்ட்டாவின் மனவெளியை புரிந்து கொள்ள முயன்று தோற்கும் ட்வைலாவின் போராட்டங்கள் நம்மையும் அசைத்துப் பார்ப்பது.

தலைப்புக் கதையான மோ யானின் "எருது" - மான அவமானங்களின் பொருட்டு பிள்ளையின் முன் சிறுமைப்பட்டும் பெருமைப்பட்டும் நிற்கும் தகப்பனின் கதை.மகன் கண்ணெதிரே,எதிரியின் அத்தனை அவமதிப்புகளையும் கண்டு கொள்ளாது அல்லது சகித்துக் கொள்ளும் தகப்பன், இறுதியில் வெடித்துக் குமுறும் இடம் தகப்பன் - பிள்ளை உறவின் புனிதத்தை உரத்துச் சொல்வது."Bicycle Tieves" படத்தின் இறுதிக் காட்சிக்கு ஒப்பான மனநிலையை தந்து செல்லும் படைப்பிது.சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளுள் ஆகச் சிறந்த கதையும் இது தான்.

நூலை தொகுத்து மொழி பெயர்த்துள்ள நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு அன்பும் வாழ்த்துகளும்.


எருது
எதிர் வெளியீடு