Saturday, April 18, 2009

சிவராமகரந்தின் "அழிந்த பிறகு" - கன்னட மொழிபெயர்ப்பு

கன்னட இலக்கியத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் எழுத்துக்களை தீவிரமாய் வாசித்ததுண்டு.பாவண்ணனின் "நூறு சுற்று கோட்டை" தொகுப்பின் மூலம் கன்னடத்தின் மிக சிறந்த எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம் கிடைத்தது.இந்நாவல் படித்த முடித்த பின் அந்த தேசத்தின் இலக்கியம் மீதான தேடலும்,ஆர்வமும் அதிகரித்து.சிவராமகரந்த் குறித்து இணையத்தில் தேடிய பொழுது கிடைத்த தகவல்கள் எண்ணற்றவை.எழுத்தோடு இசையும்,ஓவியமும் இவரின் தனி சிறப்புக்கள்.மேலும் மிகச்சிறந்த சமூக போராளியாய் இருந்துள்ளார்.



உங்கள் கடைசி ரயில் பயணத்தில் சந்தித்த நபர்களை குறித்து கேட்டால் சட்டென சொல்ல இயலுமா?பொதுவாய் நம்மிடையே முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களோடு பயணத்தின் பொழுதோ,எதிர்பாரா சந்திப்புகளிலோ பேசுவது என்பது அரிதான ஒன்று.அபூர்வமாய் கிடைக்கும் சில சிநேகங்கள் இறுதிவரை தவிர்க்க முடியாததாகி விடுவதுண்டு. சிவராமகரந்தின் இந்நாவல் பயணிப்பது ரயில் பயணத்தின் பொழுது அறிமுகமான தனது தன் நண்பனின் கடந்த கால நினைவுகளை தேடி..அவனின் மரணத்திற்கு பிறகு!!

மரணத்திற்கு பிறகான மனிதனின் வாழ்கை நிறைவு பெறுவது அவன் விட்டு சென்ற நினைவுகள் அர்த்தம் பெரும்பொழுது.ரயில் பயணத்தில் அறிமுகமான நண்பரின் மரணத்தை தொடர்ந்து தனிமையில் தங்கி இருந்த யசுவந்தரின் மும்பை வீட்டுக்கு செல்கின்றார்.யசுவந்தரின் ஓவிய குறிப்புகளும் தொடர்ந்து அவர் பணம் அனுப்பி வந்த சிலரின் முகவரிகலுமே மிஞ்சி இருக்க...அம்முகவரி மனிதர்களை தேடி கர்நாடக கிராமம் ஒன்றிற்கு செல்கிறார்.இவ்விருவருக்கும் இடையே வெகு சில சந்திப்புகளே நிகழ்த்திருந்த பொழுதும் இருவரின் நட்பின் ஆழம் ஒருவரின் மரணத்திற்கு பின் கூடுகின்றது.

சிவராமகரந்தின் பயணம் நினைத்ததை போல அவ்வளவு சுலுவாய் இல்லை.யசுவந்தர் குறித்து வைத்திருந்த அனைவருமே அவரின் நெருங்கிய உறவினர்கள்.யசுவந்தரின் வளர்ப்பு தாய்,அவரின் மகள்,மகன்,இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என விட்டு பிரிந்து வந்த தனது சொந்தங்களுக்கு தனிமையை தேடி வந்த பொழுதும் மறக்காது பணம் அனுப்பி அவர்களின் நினைவுகளில் நிரந்தர இடம்பிடித்துள்ள நண்பரை எண்ணி பெருமிதம் கொள்வதோடு அவர்களின் ஒவ்வொருவரின் ஆசைகளையும்,தேவைகளையும் அறிந்து உதவி செய்து திரும்பிகின்றார்.மற்றொரு சிறப்பான விஷயம் யசுவந்தர் தமது உறவுகளை குறித்து வரைந்து வைத்து சென்ற ஓவிய குறியீடுகள்.மனிதர்களை பறவைகளோடு,மிருகங்களோடு,மரம் செடிகளோடு ஒப்பிட்டு அவர்களின் இயல்பினை விளக்குவதை உள்ளன அவ்வோவியங்கள்.

மொழிபெயர்ப்பு என்கின்றன நெருடல் ஏதும் இன்றி வெகு நேர்த்தியாய் உள்ளது இந்நாவல்.

வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
மொழிபெயர்ப்பு - சித்தலிங்கையா

Wednesday, April 15, 2009

கி.ரா மற்றும் கழனியூரனின் "மறைவாய் சொன்ன கதைகள்"

இந்த வலைத்தளத்தில் அதிகமாய் உச்சரிக்கப்பட்டிருக்கும் சில பெயர்களில் முக்கியமான பெயர் கி.ராஜநாராயணன்.தவிர்க்க இயலாத பெயரும் கூட.தமிழ் இலக்கியம் என்றவுடன் சட்டென நினைவிற்கு வருவது கி.ராவின் எழுத்து.கை பிடித்தி நடத்தி செல்வது போல கரிசல் பூமியின் மக்களை,பழக்க வழக்கங்களை,தொடர்ந்து வரும் பெருமைகளை நம்பிக்கைகளை தெளிவாய் எடுத்துரைப்பவை கி.ராவின் எழுத்துக்கள். நல்ல கதை,கெட்ட கதை என எந்த பாகுபாடின்றி எல்லா வகை கதைகளும் கூறுபவரே தேர்ந்த கதைசொல்லி கி.ராவை போல.



கணையாழியின் கடைசி பக்கங்களில் தமிழில் சிறந்த போர்னோ இலக்கியம் இல்லை என்று சுஜாதா குறிப்பிட்டு இருப்பார். பின் சாருவின் "எஸ்டன்சியலிசமும் பேன்சி பனியனும்" மற்றும் கி.ரா வின் "வயது வந்தோர்க்கு மட்டும்" ஆகிய நூல்களின் அறிமுகம் தமிழில் போர்னோ வகை எழுத்துக்களுக்கு முன்னோடி எனவும் சொல்லி இருந்தது இந்நூல் படிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.கரிசல் எழுத்தாளர் கழனியூரனோடு இணைந்து நாட்டுப்புறங்களில் உலவி வரும் பாலியல் கதைகளை தொகுத்துள்ளார் கி.ரா.அவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் கெட்ட வார்த்தை கதைகள் இவை.

100 பாலியல் கதைகள் கொண்ட தொகுப்பு இது.அனைத்துமே ஒரு பக்க அல்லது இரண்டு பக்க கதைகள்.அய்யோ..சீய்!! என ஒரேடியாய் ஒதுக்கி தள்ளும் படி ஒன்றும் இல்லை.பாலியல் குறித்த ஆரோக்கிய விவாதங்கள்/அறிவுரைகள்/விழிப்புணர்வு அனேக தளங்களில் சிறப்பாய் நடந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்நூல் மிகுந்த தேவையே.கிராமங்களில் உலவும் கதைகளுக்கு பஞ்சம் இருக்காது அதிலும் பாலியல் கதைகள் மற்றும் அதை முன்வைத்த கேலியும் கிண்டலும் கரிசல் மண்ணிற்கே உரித்தான ஒன்று.

இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் எடுத்தாள்பவை கணவன் மனைவிக்குள் நிகழும் பாலியல் சிக்கல்கள்,கணவனை விடுத்து வேறு ஆணோடு பழகும் பெண்கள் நடத்தும் நாடகங்கள்,வேசியர் தந்திரங்கள் என நீள்கின்றது.மதுரை வந்திருந்த பொழுதொன்றில் கவிஞர் விக்ரமாதித்யன் தன்னிடம்"அப்பச்சி கெட்ட வார்த்தை கதை ஒன்னு சொல்லுங்க' என கேட்டதை கி.ரா ஓரிடத்தில் நினைவு கூறுகிறார்.கி.ராவிடம் நேரடியாய் கதை கேட்கும் வாய்ப்பு கிடைக்காவிடினும் அவர் நாவல்களில்,கடிதங்களில்,கட்டுரைகளில் கொட்டி கிடக்கும் கதைகளை படித்து பெரும் இன்பம் அலாதியானது.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 230 ரூபாய்

Wednesday, April 1, 2009

யுவன் சந்திரசேகரின் "ஒளி விலகல்" - சிறுகதை தொகுப்பு

சராசரி கதை சொல்லும் பாணியில் இருந்து முற்றிலுமாய் வேறுபட்டு பயணிப்பவை யுவனின் கதைகள்.கவிதை உலகில் எம்.யுவனாகவும் கதையுலகில் யுவன் சந்திரசேகராகவும் அறியப்படும் யுவனின் "குள்ளசித்தன் சரித்திரம்" நாவல் தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.இவரின் முதல் சிறுகதை தொகுப்பு இது.இத்தொகுப்பு முழுதும் கதைகள் தொடர் சங்கிலியாய் உள்ளது. கி.ராவின் கதைகளுக்கு பிறகு யுவனின் கதைகள் மிக பிடித்தமானதாய் போனது.தேர்ந்த கதை சொல்லிக்கு தெரியும் கேட்பவனை நேர்கோட்டில் பயணிக்க செய்யும் வித்தை.மிகையான நிகழ்வுகளை கதையின் ஊடே இயல்பாய் புகுத்தி தன் வசப்படுத்தும் ஜாலம் யுவனுக்கு தெரிந்திருக்கின்றது.



"நச்சு பொய்கை" சிறுகதை, கதைக்குள் கதை சொல்லும் கதையாடல்.சமூகத்தால் ஒதுக்கப்படும் திருநங்கை ஒருத்தியின் சோகத்தில் தொடங்கி அவள் சந்திக்கும் சாமியார்,அவர் சொல்லும் தமது பயண அனுபவங்கள்,அந்த அனுபவத்தின் வாயிலாய் கிட்டும் ஆண்,பெண் என இரு நண்பர்கள்,அவர்களின் நட்பு தொடங்கிய அனுபவம் என ஒரு நிகழ்வின் முடிவு மற்றொன்றின் தொடக்கமாய் கதையை வழிநடத்துகின்றது."ஒளி விலகல்" சிறுகதை,மனபிறழ்வு நோயாளியின் விசித்திர கனவுகளும் அதை அவன் மருத்துவரிடம் விவரிக்கும் சமயம் தொடரும் உரையாடலுமே இக்கதை.

சொந்த அனுபவங்களின் வாயிலாய் புனையப்பட்டுள்ள சில கதைகள் சுவாரஸ்யம் சேர்ப்பவை.டெல்லி நகரின் வீதிகளை வர்ணித்தபடி தொடங்கும் "ஊர் சுற்றி கலைஞன்" சிறுகதை அங்கிருந்து காசி பயணிக்கின்றது.தினப்படி சுமைகளை மறந்து செல்லும் நீண்ட தூர பயணங்கள்,சந்திக்கும் மனிதர்கள்,கடந்து செல்லும் கிராமங்கள்,நதிகள்,வயல் வெளிகள் இன்னும் எவ்வளவோ பயணத்திற்கு அர்த்தம் கூட்டுபவை.இந்த சிறுகதையும் அது போலவே நண்பர்களுடன் சென்ற வட இந்திய பயணத்தின் பொழுது சந்தித்த புல்லாங்குழல் கலைஞன் ஒருவனை பற்றியது.இதிலும் கதைக்குள் கதைகள் அவை போடும் புதிர்கள் என சற்று மிகைபடுத்தி ரசிக்கும் படி சொல்லபட்டுள்ளது.

நாம் குழந்தை பருவத்தில் கேட்ட கதைகள் இன்று வெவ்வேறு மாற்றம் கொண்டு புதுவிதமாய்,நவீனமாய் உலவுகின்றன எனினும் பஞ்சதந்திர கதைகள்,மாயாஜால கதைகள்,நீதி கதைகள் என நாம் கேட்டறிந்த கதைகள் எத்துணை சிறந்த இலக்கியம் படித்தாலும் மனதின் ஒரு மூலையில் குழந்தை பருவத்தை நினைவூட்டி கொண்டிருப்பவை."அப்பா சொன்ன கதை" சிறுகதை விக்ரமாதியன்,வேதாளம் புதிர்கதைகள் இருந்து புனைய பட்டது."சாதுவன் கதை ஒரு முன்விவாதம்" ஒரு நண்பரை குறித்த சிறுகதை தோன்றுவதற்கு முன்பான உரையாடல்களை,ஒரு நபர் குறித்த இருவரின் பார்வையை முன்வைத்து வருகின்றது.

இவை தவிர்த்து "1999 இன் மிக சிறந்த கதை","தாயம்மா பாட்டி சொன்ன 23 காதல் கதைகள்","மேஷ புராணம்" ஆகிய சிறுகதைகளும் குறிப்பிடதக்கவை.மாறுபட்ட கதையாடல் மட்டும் இன்றி யுவனின் கதைகளில் நம்மை ஈர்ப்பது கதையோடு இயைந்து வரும் நகைச்சுவை.வாய் விட்டு சிரிக்க செய்யும் பத்திகள் அதிகம்.வித்தியாசமான வாசிப்பனுபவம் வேண்டுபவர்களுக்கு தாராளமாய் இந்நூலை பரிந்துரைக்கலாம்.

நூல் வெளியீடு - காலச்சுவடு (முதல் பதிப்பு)
விலை - 90 ரூபாய்