Monday, December 29, 2008

கோபி கிருஷ்ணனின் "இடாகினி பேய்கள்"

கோபியின் "உள்ளே இருந்து சில குரல்கள்" படித்த பின்பு அவரின் எழுத்துக்களை தேடி படிக்கும் ஆர்வம் மிகுந்தது.மதுரை புத்தக சந்தையில் வாங்கிய "இடாகினி பேய்கள்" தந்த அனுபவம் அலாதியானது.இதை நாவல் என குறிப்பிடுவதை விட கோபியின் நாட்குறிப்புகள் என சொல்லலாம்.இத்தொகுப்பை குறித்து எழுத அதிகமாய் எதுவும் இல்லை.இருப்பினும் கோபியை குறித்து தனிப்பட்ட முறையில் வெகுவாய் அறிந்து கொள்ள முடிந்தது.வெளிநாட்டு நிறுவனங்களில் மூலம் உதவி பெற்று சமூக பணிகள் செய்து வரும் சமூக நல அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய கோபியின் அனுபவங்களின் கோர்வையே இந்நாவல்.



அலுவலக சூழல்,உடன் பணிபுரிந்த நபர்கள்,விருப்பத்திற்குரிய நட்பு,கோபங்கள்,சங்கடங்கள்,எரிச்சல்கள் என யாவற்றையும் வெளிப்படையாய் பகிர்ந்துள்ளார் கோபி.நாவலின் தலைப்பு குறிப்பிடுவது உதவி நாடி வரும் ஏழைகளுக்கு உரிய பணத்தை அளிக்காமல் அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் சில உயர் அதிகாரிகளை.இதற்க்கு முன்னர் இதுபோல எந்த ஒரு எழுத்தாளனையும் இவ்வளவு நெருக்கமாய் உணர்ததில்லை.வாசகனோடு நேரடி உரையாடலாய் அமைந்த இந்நாவல் மிக விருப்பமானவரோடு கை கோர்த்து செல்வது போன்ற பிரேமை தர கூடியது.

கோபி மற்றும் ஆதவனின் எழுத்துலகம் பொதுவாய் கொண்டிருப்பது சமூக கட்டமைப்பின் மீதான கோபம்.கோபி இந்நாவலின் ஒரு இடத்தில் ஆதவனின் கதைகள் தனக்கு பிடித்தமானவை என சொல்லி இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.மிகுந்த அன்பாளனாக,நல்ல நண்பனாக,சிறந்த ஊழியனாக,தேர்ந்த சிந்தனையாளனாக,நகைச்சுவை உணர்வு மிகுந்த சகாவாக தனது ஒவ்வொரு நிலையையும் சமரசம் ஏதுமின்றி விவரித்துள்ளார்.இந்நாவல் படித்து முடித்த பின் மனதை உறுத்திய ஒரு விஷயம்,இத்தகைய எழுத்தாளன்,வாழ்வின் கடைசி நாட்களில் வறுமையில் உழன்று,உதவ யாருமின்றி பரிதாபமாய் இறந்தது.மரணம் கோபியை இவ்வளவு சீக்கிரம் தனதாக்கிகொண்டிருக்க வேண்டாம்.

வெளியீடு - தமிழினி பதிப்பகம்
விலை - 40 ரூபாய்

Monday, December 22, 2008

அ.எக்பர்ட் சச்சிதானந்தத்தின் "நுகம்" - சிறுகதை தொகுப்பு

அ.எக்பர்ட் சச்சிதானந்தம் குறித்த எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை இவரின் படைப்புகளை படிக்கும் ஆவலை தூண்டியது. இச்சிறுகதை தொகுப்பை மதுரை புத்தக சந்தையில் தேடி வாங்கினேன்.அனேகமாக எல்லா கதைகளும் விளிம்பு நிலை கிறித்துவ மக்களை பற்றியது.கடவுள் பக்தி,பிராத்தனைகள்,நம்பிக்கை இவைதாண்டி கிறிஸ்துவ தேவாலய மடங்களில் நிலவும் அதிகாரம்,போலித்தனம்,சுயநலம்,கருணையின்மை போன்றவற்றை தம் கதைகளின் மூலம் மிகக்கடுமையாய் சாடி உள்ளார்.

பெரும்பாலான கதைகள் நாயகனின் பார்வையில் சொல்லப்பட்டவை."பார்வை" சிறுகதை பள்ளி ஒன்றின் கடைநிலை ஊழியனான நேசபாண்டியனின் மனைவி தற்கொலை செய்து கொண்ட பின்,அந்த மரணத்தை குறித்த சமூகத்தின் பார்வையை சொல்லும் கதை."பிலிப்பு" மருத்துவமனை பணியாளர் பிலிப்பு மரணத்தின் தருவாயில் இருக்கும் வேளையில் அவரது கடந்த காலத்திற்கு அழைத்து செல்கிறார் ஆசிரியர்.எல்லோருக்கும் பிரியமானவனாய்,குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவனாய்,நேர்மை தவறாது வாழ்ந்த பிலிப்பு கணவனால் கைவிட பட்ட பெண்ணொருத்தியை மணந்து
அவளின் இரு குழந்தைகளை பட்ட படிப்பு படிக்க வைக்கின்றான்.மரண படுக்கையில் கவனிப்பாரற்று இருக்கும் பிலிப்பின் மனைவி வேறொருவனுடன் சைக்கிளில் இறங்கும் காட்சியோடு கதை முடிகின்றது.




இத்தொகுப்பில் எனக்கு பிடித்த இரு சிறுகதைகள் "மரணத்தின் கூர்' மற்றும் "நுகம்"."மரணத்தின் கூர்" - கல்லறை திட்டது தொழிலாளியின் மகன் இறந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களே இச்சிறுகதை.மகன் இறந்த சோகத்தை வெளிக்காட்டாது காலை முதல் அவன் உடலை அடக்கம் செய்யும் வேலைகளில்
முனைதிருக்கும் நாயகன்,சவபெட்டிக்கு பணம் வேண்டி ஆலய நிர்வாகத்தினரிடம் செல்ல,பணம் இல்லை என கூறி அவனை வெளியேற்றி பிஷம்பின் பொன் விழா கொண்டாட்டத்திற்கு பெரும்தொகை தருவது பற்றி பேசிகொள்கின்றனர்,கடன்சொல்லி உடலை அடக்கம்செய்து விட்டு தனியே அமர்ந்து அவன் கதறி அழுவதை கதை முடிகின்றது.ஆறுதல்,நம்பிக்கை,வேண்டுதல் என யாவும் வாய் வழியே சொல்லி விட்டு நலிந்த மக்களுக்கு செயலில் எதுவும் செய்ய முன்வராத மடத்தின் நிர்வாகம் குறித்த கண்டனங்கள் இத்தொகுப்பு முழுவதும் விரவி உள்ளது.


நுகம் - தேவாலைய தோட்டத்து ஊழியன் படித்த தம் மகளை ஆசிரியை பணியில் சேர்க்க நிர்வாகத்தினருக்கு விருந்து படைத்தது,ஒவ்வொருவராய் தேடி சென்று கெஞ்சி பார்த்து தோல்வியுறும் சோகத்தை சொல்லும் கதை.தலித் எழுத்தாளர் பாமாவின் "கருக்கு" நாவல் இவ்விடத்தில் நினைவிற்கு வந்தது.பாமா மேலோட்டமாய் குறிப்பிட்டு இருந்த கிறிஸ்துவ மடங்களில் பிற்படுத்தபட்டோருக்கு நடக்கும் சில அட்டூழியங்கள் இத்தொகுப்பில் விரிவாய் சொல்லப்பட்டுள்ளது.

இக்கதைகள் தவிர்த்து "கடன்" ,"இருகடித நகல்களும் ஒரு கடிதமும்","மலம்","பேரன்"சிறுகதைகளும் வித்யாசமானவை.கடன் மற்றும் பேரன் சிறுகதைகள் வண்ணதாசனின் எழுத்து சூழலை ஒத்திருந்தது.அதிகம் அறிய படாத இந்த எழுத்தாளர் குறித்து அறிமுகம் செய்த எஸ்.ரா விற்கு நன்றிகள்.எஸ்.ரா தொடர்ந்து சிறந்த புத்தகங்கள்,உலக சினிமா,எழுத்தாளர்கள் குறித்த அனுபவ கட்டுரைகள்(இதற்கு முன்னர் வண்ணநிலவன்,கோபி கிருஷ்ணன்..) என அறிமுகம் செய்து வருவது பெரிதும் உவகை தரக்கூடியது.மேலும் வலைப்பதிவாளர் சுரேஷ் கண்ணனின் (பிச்சை பாத்திரம்) சமீபத்திய கட்டுரை ஒன்றில் சச்சிதானந்தனின் கதையுலகம் குறித்து எழுதி உள்ளார்.



எக்பர்ட் சச்சிதானந்தம் குறித்த எஸ்.ரா வின் கட்டுரை


எக்பர்ட் சச்சிதானந்தம் கதையுலகம் குறித்த சுரேஷ் கண்ணனின் பதிவு

வெளியீடு - தமிழினி பதிப்பகம்
விலை - 60 ரூபாய்

Friday, December 19, 2008

இந்திய திரைப்படம் "PAGE 3" - ஓர் நிதர்சன பதிவு!!

இந்தியில் அரிதாய் வெளிவரும் நல்ல படங்களுள் ஒன்று.2005 இல் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர்.இவரின் முந்தைய படம் தபு நடிப்பில் வெளிவந்த "சாந்தினி பார்' வெகுவாய் பாராட்ட பெற்று விருதுகள் பெற்றது.முதல் முறை இப்படம் பார்க்க ஒரே காரணம் கொங்கனா சென்.Mr & Mrs ஐயர் திரைப்படத்தில் வெளிப்பட்ட அவரின் ஆபார நடிப்பே அதற்கு காரணம்.படம் தொடங்கிய பிறகு கொங்கனாவை மறந்து காட்சிகளுக்குள் மூழ்கினேன்.திரை துறை ஜிகினா நிகழ்வுகளை இதற்கு முன் எந்த திரைப்படமும் இது போல பகடி செய்திருக்காது.



மும்பை நகருக்கு வரும் மாதவி(கொங்கனா) பத்திரிக்கை அலுவலகம் ஒன்றில் பணியில் சேர்கிறாள்.திரைத்துறை சார்ந்த செய்திகளை வெளியிடும் பிரிவில் இணைகிறாள்.அதையடுத்து சினி பிரபலங்கள் உடன் நட்பு,இரவு நேர கேளிக்கை விருந்துகள்,விளம்பர படங்களில் நடிக்கும் ஆண் நண்பன் என புது உலகினுள் அவள் நாட்கள் நகர்கின்றது.படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பாத்திரம் மாதவியின் தோழியாய் வரும் பேர்ல்,விமான பணிப்பெண்ணான இவர் நவீன,புத்திசாலி பெண்களின் குறியீடு.காதல்,நட்பு,சமூகம்,சினிமா,பெருத்து வரும் போலித்தனங்கள் குறித்த இவளின் பகடி நிறைந்த கருத்துக்கள் ஒத்துகொள்ள வேண்டிய உண்மைகள்.

மெல்ல திரைத்துறை தரும் ஆரவாரங்கள் மாதவிக்கு சலிப்பை தர தொடங்குகிறது,அதற்கு முக்கியமாய் அமைந்த இரு நிகழ்ச்சிகள்.திரைத்துறை சார்ந்த சமூகசேவகி ஒருவரின் மரணத்திற்கு வரும் யாவரும் செயற்கையாய் சோகம் கொண்டு,கூட்டம் கூட்டமாய் தமது சொந்த காரியங்களை பேசி சிரிப்பதை காண்கிறாள்.மாதவியின் மற்றொரு அறை தோழியான பெண் திரைப்பட வாய்ப்பு பெற மிகப்பெரிய நடிகன் ஒருவனால் ஏமாற்ற பெற்று தற்கொலைக்கு முயல்கிறாள்.நடிகனின் போக்கை தனது பாதிரிக்கையில் வெளியிட்ட காரணத்திற்காக மாதவி கிரிமினல் செய்திகள் சேகரிப்பு பிரிவிற்கு மாற்றபடுகிறாள்.

தீவிரவாதம்,குண்டு வெடிப்பு,பாலியல் வன்முறைகள் என நகரில் நடப்பவைகளை சக பத்திரிக்கையாளனான அதுல் குல்கர்னியுடன் சேர்ந்து நேரடியாய் காணும் பொழுது நிஜ உலகம் குறித்த புரிதல் மிகுந்து திரை துறை தந்துவந்த மாயை முற்றிலும் மாற பெறுகிறாள்.படம் முழுதும் நிறைத்து இருப்பவர் கொங்கனா சென்.சமூக அக்கறை உள்ள மாற்று திரைப்படங்கள் ஹிந்தியில் வருவது மிகக்குறைவே,கான்களின் ஆதிக்கத்தில் உழன்று கொண்டிருக்கும் அதன் நிலையை சீர் செய்ய மதூர் போன்ற இயக்குனர்களின் வரவு மிகத்தேவை.இவரின் மூன்றாவது திரைப்படமான 'ட்ராபிக் சிக்னல்" -நெருக்கடி மிகுந்த மும்பை சாலை சிக்னல்களில் சிறு வியாபாரம் செய்யும் இளைஞர்கள் பற்றியது.மும்பை நகரின் பணக்கார பிம்பம் அது தோற்றுவித்துள்ள ஆளுமை இவற்றிற்கு பின்னால் மறைந்து நிற்கும் உண்மை நிலையை தவறாது தன் படங்களில் சுட்டிகாட்டி வருகிறார் மதூர் பண்டார்கர்.

Tuesday, December 16, 2008

ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" - குறுநாவல் தொகுப்பு

ஆதவனின் படைப்புகள் ஆச்சர்யம் கூட்டுபவை.இவரின் "என் பெயர் ராமசேஷன்" மற்றும் "காகித மலர்கள்" தந்த அனுபவம் அலாதியானது,பல விஷயங்கள் குறித்த மாற்று பார்வையை தந்தவை. புதுமைபித்தனின் எழுத்துக்களை போலவே இவரின் எழுத்துகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தி வருது.1977 வெளிவந்த இத்தொகுப்பின் கதைகள் யாவும் கால இடைவெளியை நினைவுறுத்தாது இன்றைய தலைமுறைக்கென சொல்லப்பட்டது போல உள்ளது.ஆதவனின் கதை உலகம் பெரும்பாலும் நவநாகரீக இளைஞர்கள்,யுவதிகள், மேல்தட்டு வர்க்கத்தினர்,அரசு அலுவலகர்கள் - இவர்களின் அக,புற வாழ்வின் நிஜம் மற்றும் போலித்தனங்களை அலசுபவை.



"இரவுக்கு முன் வருவது மாலை" -அசல் ஆதவன் பாணி கதை.நெருக்கடி மிகுந்த மாலை வேளையில் சாலையில் முதன் முதலாய் சந்தித்து கொள்ளும் நாயகனும்,நாயகியும் தயக்கங்கள் ஏதும் இன்றி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அம்மாலை பொழுதை தில்லி வீதிகளில் பேசிக்கொண்டே கழிக்கின்றனர்.அஸ்தமிக்கும் சூரியனின் அழகை நம்மில் எத்தனை பேர் தினமும் ரசிக்கின்றோம்?வானத்தை நிமிர்ந்து பார்க்க நேரம் இன்றி ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திர வாழ்கையின் சோகம் முதற்கொண்டு இவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் சமூக அமைப்பின் மீது எழுத்தாளன் கொண்டிருக்கும் கோபத்தை எடுத்துரைப்பவை.


"சிறகுகள்",கல்லூரி படிப்பு முடிந்து திருமணம் ஆகும் வரை ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் கோர்வை.இத்தொகுப்பில் மிகுந்த ஹாசியம் நிறைந்த கதை இது. படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்லாதிருந்தால் ஏற்படும் குற்ற உணர்ச்சி,வேலை,ஆண்களின் சிநேகம் பொருட்டு சக தோழிகள் மீது ஏற்படும் பொறாமை,எதிர் காலம் குறித்து இயல்பாய் எழும் கேள்விகள் என சராசரி நிகழ்வுகள் யாவும் மிக நேர்த்தியாய் விவரிக்கப்பட்டுள்ளது.நாயகி தனது முந்தைய தலைமுறையோடு தன் காலத்து நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்த்து அதில் உள்ள பெருவாரியான முரனை எண்ணி வியப்பது நமக்கும் நேர்வதே.

"கணபதி ஒரு கீழ் மட்டத்து ஊழியன்" - தில்லி தலைமைசெயலக அலுவலகத்தில் பணிபுரியும் கணபதியின் ஒரு நாள் அலுவலக குறிப்பு.அரசு அலுவலங்களின் தினப்படி காட்சிகளை பகடி கலந்து விளாசுகிறது.அதிகாரம்,பதவி,போலித்தனம் நிறைந்த உயர்மட்டம்,சமயத்திற்கு ஏற்ப முகமூடி மாற்றும் சக ஊழியர்கள் இவர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் கணபதி,வாழ்க்கை சலித்து சொந்த கிராமம் திரும்பி சென்றிடுவோம் என்னும் இனிய நினைவோடு ஒவ்வொரு நாளையும் தொடர்கின்றான்."மலையும் நதியும்" -முற்றிலும் தி.ஜா பாணி கதையாடல்.மனைவியை இழந்த இசக்கியா பிள்ளை கணவனால் வஞ்சிக்கபட்ட தனது இளம் பருவத்து காதலியை ஆண்டுகள் பல கடந்தும் பிரிய மிகுதியால் அரவணைத்து கொள்வதை சொல்லும் கதை.

வெளியீடு - கிழக்கு பதிப்பகம்
விலை - 120 ரூபாய்

Friday, December 12, 2008

ஜே.பி.சாணக்யாவின் "கனவு புத்தகம்" - சிறுகதை தொகுப்பு

விளிம்பு நிலை மனிதர்களின் தின பொழுதை மிகை இன்றி விவரித்த சாணக்யாவின் முந்தைய சிறுகதை தொகுப்பான "என் வீட்டின் வரைபடம்" மிக பிடித்தமானதாய் போனதில் ஆச்சர்யம் இல்லை.இவரின் சமீபத்திய தொகுப்பான "கனவு புத்தகம்" சிறுகதை தொகுப்பும் கொண்டிருந்த எதிர்பார்ப்பை பொய்க்கவில்லை.

உடலை முதலீடாய் வைத்து வாழ்வை நகர்த்தும் விதவை தாயையும் ,தாயின் போக்கால் உள்ளுக்குள் மருகும் மகளையும் பற்றிய கதை "ஆண்களின் படித்துறை".இக்கதையின் சில விவரிப்புகள் நிஜத்தில் சாத்தியமா என கருதும்படி அதிர்ச்சி தருவதாய் உள்ளது.வேலையற்ற ஒருவனின் இயலாமையின் உச்சத்தை சொல்லும் கதை "கோடை வெயில்".திருமணமாகி வேலை இன்றி கஷ்டப்படும் நாயகன் வேலை நிமித்தமாய் உதவ வரும் தெரிந்த நபருடன் தன் மனைவி இருந்ததை அறிந்தும் அவனால் ஏதும் செய்ய இயலாது போகும் நிலையை சிறு வலியோடு சொல்லும் கதை.



இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகள் "கறுப்பு குதிரைகள்" மற்றும் "பதியம்". கோவில் திருவிழாக்களில் மேளம் வாசித்து விட்டு பின் வறுமையின் கொடுமையால் சாவுக்கு வாசிப்பவனாக மாறும் ஒரு கலைஞனின் கதை. இன்னயகனை போன்றவர்களை எங்கேனும் நாம் சந்தித்திருப்போம்,ஊருக்கு சேவை செய்து கொண்டு,குடும்பம் குழந்தைகளை வெறுத்து,தனக்கென தேவைகள் எதுவும் இன்றி அந்த நாளின் பொழுதை கழித்தால் போதும் என எண்ணமுடையவர்கள்.சிறுவயதில் தன் தந்தை செய்து அளித்த கறுப்பு குதிரைகளை தன் கற்பனைகளில் சுமந்தபடி நீளும் அவன் நாட்கள் நேர்த்தியாக சொல்லபட்டிருக்கின்றது. மற்றொரு சிறுகதையான 'பதியம்",ஒரு கிராமத்து பெண்ணின் மென்மையான காதலை,அதில் ஏற்படும் அதிர்வுகளை சொல்லுவது.இவை தவிர்த்து குறிப்பிட்டு சொல்லவேண்டிய சிறுகதைகள் "கடவுளின் நூலகம்",கண்ணாமூச்சி மற்றும் "கனவு புத்தகம்".

சாணக்யாவின் எழுத்துக்கள் சமூகத்தின் மீதான மாற்று பார்வையை தோற்றுவிர்ப்பவை,சில அடிப்படை நம்பிக்கைகளை தகர்ப்பவை. மேலும் இவர் கதைகளில் எடுத்தாலும் சில கசப்பான உண்மைகளை மறுப்பதற்கில்லை.நாம் காணாத மனிதர்கள்,சந்தித்திடா நிகழ்வுகள்,முரண் நிறைந்த வாழ்க்கை முறை என சாணக்யா பயணிக்கும் எழுத்துலகம் அவசியம் கவனிக்கபடவேண்டியது.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 90 ரூபாய்

Wednesday, December 10, 2008

எஸ்.ராவின் 'பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்" மற்றும் விசித்ரி

எஸ்.ராவின் சமீபத்திய சிறுகதை விசித்ரி ,ஏதோ ஒரு சம்பவத்தால் மன சிதைவு கண்ட பெண்ணை பற்றிய குறிப்புகளை அடுக்குவது.இந்த சிறுகதை சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்மெய்யில் படித்த எஸ்.ரா வின் "பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்" சிறுகதையை நினைவூட்டியது.முதல் வாசிப்பின் பொழுது பெருத்த சோகத்தையும்,கனத்த மௌனத்தையும் தந்த அச்சிறுகதையை மீண்டும் தேடி படித்தேன்.



மழை கொட்டும் ஒரு இரவில் விஜயலட்சுமி மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு கதை தொடங்குகின்றது.கரிய இருளும்,பெரு மழையும் ஒரு குறியீடே. தோற்றம் சிதைந்து,நடக்க இயலாத நிலையில் மருத்துவ பெண்மணி விஜயலட்சுமியை அழைத்து செல்ல....அவளின் நோய் கூறுகள்,வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. இக்குறிப்புகள் மூலம் திருமண வாழ்வில் கண்ட கசப்பான நிகழ்வுகளால் உளவியல் ரீதியான மாற்றங்கள் கண்டு மன சிதைவிற்கு ஆளான காரணங்கள் மறைமுகமாய் தெரிவிக்கப்படுகின்றன.

தனது மாமனார்,மாமியாரால் மருத்துவமனையில் சேர்க்க படும் விஜயலட்சுமியை தேடி வரும் வயதான அவளின் தந்தை உருக்குலைந்து இருக்கும் தன் மகளின் நிலையை காண சகியாது அவளை அவ்விடத்தை விட்டு அழைத்து செல்கிறார்..இச்சிறுகதையின் கடைசி வரிகள் இவ்வாறாக வருகின்றது,

"உங்கள் பயணங்களில் தலைமயிர் கழிந்த, வெறித்த பார்வை கொண்ட ஒரு பெண்ணையும் அப்பாவையும் நீங்கள் சந்திக்க கூடுமாயின் தயவு செய்து அவர்களை கடந்து போய்விடுங்கள். அவர்கள் யாவரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அல்லது சாவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள்"

பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்

எஸ்.ரா வின் சமீபத்திய சிறுகதையான விசித்ரியும் இதுபோலவே சிறு வயதில் மனநிலை பாதிக்க பெற்ற பெண்ணை சுற்றி நகர்கிறது.இதில் உளவியல் காரணங்களை ஒதுக்கி,சமூகமும், அப்பெண்ணின் குடும்பமும் தனது நிர்வாணத்தை மறைக்க எப்பொழுதும் 20 திற்கும் மேற்பட்ட துணிகளை சுற்றி கொண்டு திரியும் சித்ரலேகாவின் நிலைக்கு காரணம் அறிய முயன்று தோற்று போவதை மெல்லிய மர்ம முடிச்சோடு சொல்லி நகர்கிறது கதை.

விசித்ரி

மதுரை புத்தகக கண்காட்சி

பள்ளி,கல்லூரி காலங்களில் மதுரையில் புத்தகம் வாங்க வேண்டும் என்றால் செல்லும் ஒரே இடம் ரயில் நிலையம் அருகில் இருக்கும் மீனாட்சி புத்தக நிலையத்திற்கே.அங்கும் குறிப்பிட்ட எழுத்தாளர்களை தவிர்த்து வேறு நூல்கள் கிடைக்காது.ஆகா பெரும்பாலான நூல்கள் புத்தக கண்காட்சிகளில் அப்பா வாங்கியதாகவே இருக்கும்.சென்றமாதம் மதுரை சென்ற பொழுது ஒரு ஞாயிறு மாலை புத்தக கண்காட்சி(??!!) என்ற பெயரில் நகரில் நடைபெற்ற நாலைந்து இடங்களுக்கு சென்று ஏமாற்றம் அடைந்தது மறக்க முடியாது.

எனவே பெரும் எதிர்பார்ப்பு ஏதும் இன்றியே தமுக்கம் திடலில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு(நவம்பர் 27 - டிசம்பர் 08) சென்றிருந்தேன்.என் எண்ணத்திற்கு மாறாக பெரும்பாலான தமிழ் பதிப்பகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு,உயிர்மெய்,தமிழினி,மீனாட்சி,நேசனல் புக் டிரஸ்ட் அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை.வாங்க வேண்டிய புத்தகங்கள்,அதன் ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தின் பெயர்கள் என சின்னதொரு பட்டியலை தயார் செய்து எடுத்து சென்றது சுலுவாய் போனது.




ஏற்கனவே படித்திருந்த ஜே.பி.சாணக்கியாவின் "என் வீட்டின் வரைப்படம்" விளிம்பு நிலை வாழ்கை குறித்த நிதர்சன பதிவு,அய்யனார் பதிவிட்டிருந்த சாணக்கியாவின் சிறுகதை தொகுப்பான "கனவு புத்தகம்" (காலச்சுவடு) மற்றும் வேட்டி தொகுப்பில் கி.ரா ஸ்லாகித்து எழுதி இருந்த சு.ராவின் "அக்கரை சீமையிலே" (காலச்சுவடு) சிறுகதை தொகுப்பையும் வாங்கினேன்.சாருவின் சீடர் என அறியப்பட்ட வா.மு.கோ.மு வின் "கள்ளி" (உயிர்மெய்) மற்றும் ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" (கிழக்கு பதிப்பகம்) ஆகிய இரு நூல்களும் பெரும் தேடலுக்கு பின் கிடைத்தவை.

மிக சமீபத்தில் எட்வர்ட் சச்சிதானந்தத்தின் எழுத்துலகம் குறித்து எஸ்.ராவின் தளத்திலும்,சுரேஷ் கண்ணனின் பதிவிலும் படித்ததும் அவரின் எழுத்துக்களை படிக்கும் ஆர்வம் கூடியது.அவரின் "நுகம்" (தமிழினி) மற்றும் கோபி கிருஷ்ணனின் "இடாகினி பேய்களும்" (தமிழினி) தொகுப்புகள் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.கோபியின் "டேபிள் டென்னிஸ்" தொகுப்பு எங்கு கிடைக்கும் என யாரேனும் கூறினால் நலம்.

மனுஷ்யபுத்திரன்,காலச்சுவடு கண்ணன் தவிர்த்து இலக்கிய முகங்கள் எதுவும் தென்படவில்லை.காவ்யா மற்றும் அன்னம் பதிப்பகங்கள் இல்லாதிருந்தது ஏமாற்றமே.இருப்பினும் உருப்படியாய் ஒரு மாலையை செலவிட்ட திருப்தியோடு வெளியேறினேன்.என்னளவில் பெரும் நிறைவை தருவதாய் அமைந்தது மதுரை புத்தக சந்தை.

நன்றி அய்யனார் & சுரேஷ் கண்ணன்

Monday, December 1, 2008

இமயத்தின் "கோவேறு கழுதைகள்" மற்றும் பாமாவின் "கருக்கு"

சமீபத்தில் படித்த இவ்விரண்டு தலித் நாவல்களும் என்னை மிகவும் பாதித்தன.சில எழுத்துக்களின் மீது இதுவரை கொண்டிருந்த அபிமானம் நொடி பொழுதில் மறைந்தது.தமிழில் வெளிவந்த மிக சிறந்த தலித் இலக்கியமாக இவ்விரு நாவல்களும் கருதப்படுகின்றன.பொதுவாக எந்த நாவல் படித்தாலும் அதன் குறைகளை நீக்கி,பெற்று கொண்டதை எண்ணி நிறைவாய் உணர்வேன்.புனைவாய் சொல்லப்பட்ட சோக கதைகள் கூட அதிக ரணம் தந்ததில்லை.ஆனால் இந்நாவல்களை படித்த பொழுது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு குற்ற உணர்ச்சியே தோன்றியது.

இன்று எங்கள் கிராமத்தில் கூட சக்கிலியர்,பறையர்,வண்ணார் இன மக்கள் தனித்து ஒதுக்கப்பட்டு இருந்த நிலை வெகுவாய் மாறிவருகின்றது,இருப்பினும் கடந்த காலங்களில் இருந்த கட்டுபாடுகள் கொடுமையானவை.தலித் மக்களுக்கு நிகழ்ந்து வரும் கொடுமைகளை கிராமத்து சம்பவங்களோடு மட்டும் சுருக்கி விட முடியாது, நேரில் கண்ட காட்சிகளை எழுத்துக்களாய் வாசித்த பொழுது இவ்விரு நாவல்களோடு மிக நெருக்கமாய் உணர்ந்தேன். தமிழில் வெளிவந்துள்ள மிக சிறந்த தலித் இலக்கியங்களுள் இவ்விரு நூல்களுக்கும் கட்டாயம் இடம் உண்டு.

இமயத்தின் "கோவேறு கழுதைகள்"



பற வண்ணார்களான ஆரோக்கியம் - சவுரி தம்பதியினரின் வாழ்கை குறிப்பே "கோவேறு கழுதைகள்".கதையின் பிரதான பாத்திரம் ஆரோக்கியம்,அவளின் வாயிலாக வண்ணார் இன மக்களின் துன்பங்களை பகிர்ந்துள்ளார் இமயம்.காலையும் மாலையும் மூட்டை மூட்டையாய் துணிகளை வெளுப்பதொடு இவர்களின் பணி முடிவதில்லை,ஊரில் நடைபெறும் திருமணம்,சடங்கு,இழவு என எல்லா நிகழ்ச்சிகளிலும் ஓயாது வேலை - எதிர்பார்ப்புகள் அதிகம் இன்றி.தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து வரும் அடிமை வாழ்கையை ஆரோக்கியமும் சவுரியும் ஏற்று கொண்டது போல அவர்களின் குழந்தைகள் ஏற்கவில்லை.

மாறி வரும் சமூக சூழ்நிலையில் தற்பொழுதைய தலைமுறையினர் படித்து முன்னேறவோ,சுயமாக வேறு தொழில் செய்து பிழைக்கவே விருப்பம் கொள்வது பெரிதும் ஆறுதல் தரும் செய்தி.வீடு வீடாக சென்று இரவு பொழுதுகளில் ராச்சோறு வாங்க தன் மகன் பீட்டரை ஆரோக்கியம் அழைக்கும் பொழுது,அச்சிறுவனுக்கும் அவளுக்குமான உரையாடல் உருக்கமானது.எதிர்காலம் குறித்த திட்டமிடுதலும்,குழந்தைகள் மீதான பிரியமும்,கடந்த கால நினைவுகளோடும் நாட்களை கடத்தும் ஆரோக்கியத்தின் நாட்கள் அவர் நினைத்ததை போல அன்றி மாற்றம் காணாமல் சோகத்தின் நீட்டிப்பாய் தொடர்கின்றது. சமூக அவலத்தின் நிதர்சன புனைவான இந்நாவல் தமிழில் மிக முக்கியமான பதிவு.

நூல் வெளியீடு - க்ரியா பதிப்பகம்

பாமாவின் "கருக்கு"



தலித் எழுத்தாளரான பாமாவின் முதல் நாவல் இது.தலித் மீதான சமூகத்தின் பார்வையை தனது சொந்த அனுபவங்கள் பகிர்கிறார்.மாற்ற சாதியினரிடம் இருக்கும் தீண்டாமை மனோபாவம்,கிராம நிகழ்ச்சிகளிலும்,ஊர் திருவிழாக்களிலும் பங்கு கொள்ள முடியாது தனித்து விட பட்ட சோகங்கள்,அக்காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் தலித் மாணவர்கள் எதிர் நோக்கிய அவமானங்கள் என ரணங்களின் வேதனையாய் நீள்கிறது இப்பதிவு.

ஜாதியை முன்வைத்து எதிர்நோக்கிய தடைகளையும் அவமானங்களையும் தாண்டி பள்ளி மற்றும் கல்லூரியில் தேர்ச்சி பெற்று தன் சமூகத்து குழந்தைகளுக்கு சேவை செய்யும் பொருட்டு கிறிஸ்தவ மடத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை கூறும் இடங்கள் முக்கியமானவை.பிற்படுதபட்டோருக்கென செயல் படும் கிறிஸ்துவ மடங்களிலும் தீண்டாமை கொடுமை நிகழ்வதை பாமா தனது நேரடி அனுபவங்களால் விவரிக்கும் பொழுது சிற்சில நம்பிக்கைகளும் தகர்கின்றன.

தற்சமயம் சிறிய கிராமம் ஒன்றில் ஆசிரியராய் பணிபுரியும் பாமா தன்னை ஒரு எழுத்தாளராய் அங்கு அடையாளம் காட்டி கொள்ளாது வெகு எளிமையாய் உரையாடியது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் புகைப்பட கலைஞர் புதுவை.இளவேனில் கூறி இருந்தது நாவல் படிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது."கருக்கு" என்னளவில் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்திய பதிவு.

வெளியீடு - நர்மதா பதிப்பகம்