Wednesday, February 17, 2010

வேலுசரவணனின் "தங்க ராணி"

வேலுசரவணன்,குழந்தைகள் நாடக கலைஞரான இவரை குறித்த அறிமுகம் இலக்கிய இதழ் ஒன்றில் வெளிவந்திருந்த இவரின் நேர்காணல் மூலம் கிடைத்தது.இலக்கிய வெளியில் வேலுமாமா என்று அழைக்கபடுகிறார்.வேலுசரவணனின் நாடகங்கள் குறித்தான செய்திகள் எங்கு கிடைப்பினும் தேடி வாசிப்பேன்.அரிதாரம் கலைந்த இவரின் முகம் காண கிடைப்பது அரிது என்று தோன்றும் வண்ணம் எப்போதும் குழந்தைகளை குதூகலிக்க செய்யும் ஒப்பனையில் மட்டுமே இவரின் புகைப்படங்கள் காண கிடைக்கின்றன.வம்சியில் இவரின் "தங்க ராணி" புத்தகம் வெளியீட போவதான அறிவிப்பு மிகுந்த ஆவலை ஏற்படுத்தி இருந்தது.இந்த ஆண்டு புத்தக சந்தையில் விரும்பி வாங்கிய நூல்களில் இது ஒன்று.




இத்தொகுப்பில் ஐந்து சிறுவர் நாடகங்கள் உள்ளன.நமக்கு வெகு பரிட்சயமான கதைகளும் அடக்கம்.பார்வையாளர்கள்,மேடை அலங்காரம்,நாடக பாத்திரங்கள் என சிறு அறிமுகத்தோடு காட்சிகள் விரிகின்றன."ஓவியர் நரி", ஈசாப் நீதி கதைகளில் ஒன்றிது.தந்திர நரியானது அப்பாவி கழுதை ஒன்றை ஏமாற்றி சிங்கத்திற்கு உணவாக்கும் இக்கதை பெரியவர் சொல் பேச்சு கேட்க வேண்டும் என்பதை போதிப்பது.இயல்பான மொழி நடையில் வசனங்கள் உள்ளன."குதூகூல வேட்டை",சோவியத் எழுத்தாளர் நிக்கலாய் நாசாவின் கதையொன்றை தழுவிய இந்நாடகம் கோமாளிகளான இரு நண்பர்கள் வேட்டைக்கு போய் வந்ததை நகைச்சுவையாய் சொல்லுகின்றது.கிளை கதைகளும் கொண்டுள்ளது இந்நாடகம்.இது போன்ற வேடிக்கை கதைகளில் சிறுவர்களை நாடக கதாபாத்திரங்களாய் யோசித்து பார்க்கவே சுவாரஸ்யமாய் உள்ளது.

"அல்லி மல்லி",பிரபலமான நாடோடி கதைகள் பலவும் தேசத்திற்கு தேசம் சிறு சிறு மாற்றங்கள் கொண்டு உலவி வருகின்றன.இக்கதையும் அது போலவே மாறுபட்ட குணம் கொண்ட சகோதரிகள் இருவரை பற்றியது.தலையில் ஒரே ஒரு முடி கொண்டதால் கேலிக்கு ஆளாகும் தங்கை கடல் தாண்டி,மலை தாண்டி எதிர்படும் உயிரினங்களுக்கு உதவி செய்து,மந்திர கிழவியை கண்டடைந்து நீண்ட கூந்தல் பெறுகிறாள்.அதே போல பயணத்தை தொடரும் அவளின் சகோதரியோ எதிர்படும் உயிர்களை உதாசினபடுத்துவதால் பயன்பெறாமல் போகின்றாள்.இந்நாடகத்தில் மருதாணி செடியும்,பசு மாடுகளும் கூட பேசுகின்றன...கதை சொல்லும் சிறுவன்,பாடல் குழுவினர்,நடன பெண்கள் இவர்களுக்கு மத்தியில் அல்லி மல்லி சகோதரிகள் என மேடை காட்சிகள் வாசிக்க வாசிக்க கற்பனையில் விரிவடைவது அழகு.


இத்தொகுப்பின் மற்றொரு நாடகம் "தங்கராணி",உலக பிரசாத்தி பெற்ற "மைதாஸ் கோல்டன் டச்" கதையின் தழுவல்.பொன்னாசை கொண்ட ராணி,சிரிப்பு மூட்டும் அவளின் நம்பிக்கைக்கு உரிய சேவகர்கள் இவர்களோடு சேர,சோழ,பாண்டிய அரசிகள் என கதையை முற்றிலுமாய் தன நோக்கில் மாற்றி அமைத்துள்ளார் வேலுசரவணன்.சில கதைகள் திரும்ப திரும்ப படித்தாலும்/கேட்டாலும் அலுக்காது..மேலும் பல புதுமைகள் புகுத்தி இதுபோல சொன்னால் சிறுவர்களுக்கு ஆர்வம் மேலிடும் என்பதில் ஐயமில்லை."நீதி கதைகள்","வேடிக்கை கதைகள்" மட்டும் இன்றி இதிகாச சம்பவங்களையும் நாடகமாய் கொணர்ந்துள்ளார்.துரோணரின் சக்கர வியுகத்தை உடைத்து வெற்றி கண்ட சிறுவன் அபிமன்யுவின் வீரத்தை சொல்லும் இந்நாடகம் மகாபாரதத்தின் போர் காட்சிகளை கண் முன் கொண்டு வருகின்றது.சிறுவர்களுக்கு விளையாட்டு பயிற்சியின் முக்கியதுவத்தை உணர்த்துவதற்காக இந்நாடகம் எழுதப்பட்டதாக ஆசிரியர் கூறுகின்றார்.

சிறுவர் நாடகங்கள் இன்றைய சூழலில் எந்த அளவிற்கு சாத்தியமாகின்றன என தெரியவில்லை.சிறுவர்கள் சிறுவர்களாய் இல்லாமல் சினிமாத்தனம் மிகுத்து இருப்பதே அதற்கு காரணம்.பெரும் சிரத்தை எடுத்து அதை தொடர்ந்து சாத்தியபடுத்தி வரும் வேலு சரவணன் பாராட்டுதலுக்குரியவர்.

வெளியீடு - வம்சி
விலை - 80 ரூபாய்

17 comments:

குப்பன்.யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் லேகா.
இன்றைய சூழலில் மேடை நாடகங்கள் அழிந்து வருகின்றன.,

பள்ளி ஆண்டு விழா போட்டிகளின் மேடைகளை கூட ரியாலிட்டி ஷோக்கள் ஆக்கிரமித்து விட்டன.

அண்ணாமலையான் said...

நல்ல பகிர்வு.. நன்றி

கதிர் said...

உள் ஓவியங்களை ரசித்தீர்களா...

இந்த புத்தக வேலையின்போது ஓவியம் வரைந்து தருவதாக சொன்ன நண்பர் கடைசி நேரத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றுவிட்டார். பிறகு என்னுடைய நண்பர் ஒருவரை இரவோடு இரவாக கடத்தி வந்து இரண்டு நாட்களில் வரைந்து பதிப்பிற்கு அனுப்பினோம். மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். அந்த ஓவியங்கள் அனைத்துமே சாதாரண கண்டக்டர் பேனாவினால் வரைந்ததுதான். இன்னும் நேரம் கிடைத்திருக்குமானால் மிகச்சிறப்பாக வரைந்திருப்பார். கடைசி நேர பரபரப்பில் சாத்தியமில்லாமல் போய்விட்டது.

லேகா said...

நன்றி ராம்ஜி


நன்றி அண்ணாமலையான்

லேகா said...

கதிர்,

உண்மைதான் இத்தொகுப்பில் உள்ள கோட்டோவியங்கள் யாவும் அருமை:-))
"அல்லி மல்லி" மற்றும் அபிமன்யு நாடகங்களுக்கான ஓவியங்கள் வெகு அற்புதம்.குழந்தைகளுக்கான புதினங்களில் சித்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

பகிர்வுக்கு நன்றி லேகா. நீங்கள் படிக்கும் வேகம் அதை உள்வாங்கும் விதம் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்

Krishnan said...

Lekha, you amaze me with your prolific reading. Thanks a lot for sharing. Your blog is a wonderful showcase of modern Tamil literature.

மாதவராஜ் said...

நல்ல பதிவு லேகா. இருமுறை வேலுசரவணனின் நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வீதிகளில் போடப்பட்ட மேடைகளில் இவர்கள், சிறுவர்களின் உலகத்தையே சிருஷ்டித்து விடுவார்கள். பந்தலில் இருக்கும் ஒற்றை மூங்கில் கம்புகளில், சடசடவென குரங்குகள் போல அவர்கள் ஏறுவதும், உயரங்களிலிருந்து அப்படியே தாவிக் குதிப்பதும், சுற்றியிருக்கும் பிரக்ஞை தவறி நாம் குதூகலமாகிப்போவோம். குழந்தைகளாவோம். அவர்களின் உடல்மொழி அப்படி பேசும்! கார்ட்டூன் பார்த்துக் கொண்டு இருக்கும் என் பையனுக்கு ஒருநாளாவது வேலுசரவணின் நாடகத்தை காண்பிக்க வேண்டும் என்பது என் கனவு.பகிர்வுக்கு நன்றி.

jeba said...

ungal pathivugal adikadi padippen...

migavum arumai..

---jeba

லேகா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெயமார்த்தாண்டன்.


நன்றி கிருஷ்ணன் :-)

லேகா said...

நன்றி மாதவராஜ்,

வேலுசரவணனின் நாடகங்கள் பார்க்கும் ஆவல் எப்போதும் எனக்கு உண்டு.இலக்கிய இதழ்களில் படித்த கட்டுரைகள் மூலம் இவரின் நாடகங்கள் குறித்து அறிந்திருகின்றேன்.

உங்களின் அனுபவ பகிர்தலுக்கு மிக்க நன்றி.

லேகா said...

நன்றி ஜெபா :-)

விஷ்ணுபுரம் சரவணன் said...

லேகா..


அண்ணன் வேலு.சரவணன் மீதான உங்களின் கவனிப்பு என்க்கு மகிழ்ச்சியளிக்கிறது.
ஆம். அவர் என் அண்ணந்தான் என்வீட்ரு குடும்ப அட்டைய்ல் இடம்பெறாத நபர்.

எங்கள் கிராமத்தில்[விஷ்ணுபுரம்] தொடர்ந்து 5 ஆண்டுகள் மே மாத கோவில் திருவிழாவில் வேலு.சரவணனின் பயிற்சியில் எங்கள் ஊரு சிறுவர்கள் நாடக்ம் நடிக்க ஏற்பாடு செய்திருந்தேன். சில நண்பர்களின் உதவியோடு.

அங்குதான் முதன்முதலில் தங்க ராணி நாட்கத்தை அரகேற்றினார் அண்ணன். அதன் உருவாக்கத்தின் போது அருகில் இருந்து கவனித்த பார்வையாளன் என்கிற முறையில் பெருமையடைகிறேன்.

அவர் குறித்த பதிவொன்றை எழுத ஆரம்பித்து எதை எழுதி எதை விடுவது என்கிற குழப்பத்தல் அப்படியே கிடக்கிறது உங்களின் பதிவால் அதை மீண்டும் எழுத வேண்டும் என்கிற எண்ணம் தலை தூக்குகிறது.

எங்கள் ஊரில் சிறு குழந்தைக்கும் தெரியும் பெயர் மாத்திரமல்ல. வேலு சரவணனின் ஆளுமையும் தெரியும்.


விஷ்ணுபுரம் சரவணன்

லேகா said...

விஷ்ணுபுரம் சரவணன்,

உங்களின் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.
வேலுசரவணனின் நாடகங்கள் குறித்த வாசிப்பனுபவம் மட்டுமே உள்ள எனக்கு உங்களின் அனுபவ பகிர்ந்தல்
பெரும் நிறைவை தருவதோடு எங்கள் கிராமத்திலும் இவரின் நாடகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய ஆவல் மேலிடுகிறது.

விரிவாய் தனி மடல் இட உங்களின் மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்க வேண்டுகின்றேன்.

மிக்க நன்றி.

deesuresh said...

வேலு சரவணனின் நாடகமொன்றைக் காணும் வாய்ப்பு, ஓர்குட் குழுமமான, உலகத் தமிழ் மக்களரங்க ஆண்டு விழாவில் கிடைத்தது..!! ஒரு இயல்பான நகையுணர்வுடன் கூடிய, முக்கியமாய்ச் சிறுவர்களைக் கவரக்கூடியதாய் அக் குறு நாடகம் அமைந்திருந்தது..!

லேகா..!! உங்கள் பதிவு அதன் மலரும் நினைவுகளைக் கொண்டு வந்தது..!!

நன்றி

லேகா said...

சுரேஷ் பகிர்தலுக்கு மிக்க நன்றி.

ஆர்குட் தமிழ் மக்கள் அரங்கம் குழுமத்தில் நானும் உறுப்பினர் தான்..ம்ம்ம்..ஆண்டு விழா குறித்து
அறிந்திருக்கவில்லை :-((

இங்கு நண்பர்கள் பலரும் வேலுசரவணனின் நாடகத்தை நேரில் பார்த்ததை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாய் உள்ளது.

Haripandi Rengasamy said...

உங்கள் பகிவுக்கு நன்றி லேகா. வேலு மாமாவை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டதை நினைவூட்டுகிறது உங்கள் எழுத்துக்கள். குழந்தைகளுக்கான புத்தகங்களும் நாடகங்களும் குறைந்து வரும் இக்காலகட்டத்தில் வேலு மாமாவின் முயற்ச்சிகள் பாராட்டுதலுக்கு உரியவை. குழந்தைகளுக்கான திரைப் படங்களும் தற்காலங்களில் வருவதில்லை என்பது கவனிக்க வேண்டியது.