Monday, December 29, 2008

கோபி கிருஷ்ணனின் "இடாகினி பேய்கள்"

கோபியின் "உள்ளே இருந்து சில குரல்கள்" படித்த பின்பு அவரின் எழுத்துக்களை தேடி படிக்கும் ஆர்வம் மிகுந்தது.மதுரை புத்தக சந்தையில் வாங்கிய "இடாகினி பேய்கள்" தந்த அனுபவம் அலாதியானது.இதை நாவல் என குறிப்பிடுவதை விட கோபியின் நாட்குறிப்புகள் என சொல்லலாம்.இத்தொகுப்பை குறித்து எழுத அதிகமாய் எதுவும் இல்லை.இருப்பினும் கோபியை குறித்து தனிப்பட்ட முறையில் வெகுவாய் அறிந்து கொள்ள முடிந்தது.வெளிநாட்டு நிறுவனங்களில் மூலம் உதவி பெற்று சமூக பணிகள் செய்து வரும் சமூக நல அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய கோபியின் அனுபவங்களின் கோர்வையே இந்நாவல்.அலுவலக சூழல்,உடன் பணிபுரிந்த நபர்கள்,விருப்பத்திற்குரிய நட்பு,கோபங்கள்,சங்கடங்கள்,எரிச்சல்கள் என யாவற்றையும் வெளிப்படையாய் பகிர்ந்துள்ளார் கோபி.நாவலின் தலைப்பு குறிப்பிடுவது உதவி நாடி வரும் ஏழைகளுக்கு உரிய பணத்தை அளிக்காமல் அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் சில உயர் அதிகாரிகளை.இதற்க்கு முன்னர் இதுபோல எந்த ஒரு எழுத்தாளனையும் இவ்வளவு நெருக்கமாய் உணர்ததில்லை.வாசகனோடு நேரடி உரையாடலாய் அமைந்த இந்நாவல் மிக விருப்பமானவரோடு கை கோர்த்து செல்வது போன்ற பிரேமை தர கூடியது.

கோபி மற்றும் ஆதவனின் எழுத்துலகம் பொதுவாய் கொண்டிருப்பது சமூக கட்டமைப்பின் மீதான கோபம்.கோபி இந்நாவலின் ஒரு இடத்தில் ஆதவனின் கதைகள் தனக்கு பிடித்தமானவை என சொல்லி இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.மிகுந்த அன்பாளனாக,நல்ல நண்பனாக,சிறந்த ஊழியனாக,தேர்ந்த சிந்தனையாளனாக,நகைச்சுவை உணர்வு மிகுந்த சகாவாக தனது ஒவ்வொரு நிலையையும் சமரசம் ஏதுமின்றி விவரித்துள்ளார்.இந்நாவல் படித்து முடித்த பின் மனதை உறுத்திய ஒரு விஷயம்,இத்தகைய எழுத்தாளன்,வாழ்வின் கடைசி நாட்களில் வறுமையில் உழன்று,உதவ யாருமின்றி பரிதாபமாய் இறந்தது.மரணம் கோபியை இவ்வளவு சீக்கிரம் தனதாக்கிகொண்டிருக்க வேண்டாம்.

வெளியீடு - தமிழினி பதிப்பகம்
விலை - 40 ரூபாய்

18 comments:

அ.மு.செய்யது said...

//மரணம் கோபியை இவ்வளவு சீக்கிரம் தனதாக்கிகொண்டிருக்க வேண்டாம்.//


தூக்கி வாரிப் போட்ட‌து.
நல்ல பதிவு தோழரே !!!
இது போன்ற தரமான இலக்கியத்தை வாய்ப்பு கிடைத்தால் வாங்கிப் ப‌டிப்ப‌து கோபிக்கு நாம் செய்யும் சிறு ம‌ரியாதை.

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி செய்யது

வால்பையன் said...

கோபிகிருஷ்னனின் எழுத்துகள்=
யாதார்த்ததின் மனசாட்சி

அருண்மொழிவர்மன் said...

அண்மையில் தான் நானும் இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு ஒரு அதன் பாதிப்பிலேயே சில நாட்கள் இருந்தேன். அற்புதமான ஒரு படைப்பு

இது பற்றி நான் எழுதிய பதிவு
http://solvathellamunmai.blogspot.com/2008/12/blog-post.html

ச.முத்துவேல் said...

congrats for your writing and selected as top 10 bloggers by s.ramakrishnan.
great.
(general comment)not for publishing unless u wish.

Krishnan said...

சிறந்த விமரிசனம் லேகா. எஸ்ரா அவருடைய வலைமனையில் தங்கள் வலைப்பூவை சிறந்த பத்து வலைப்பக்கங்கள் வரிசையில் குறிப்பிட்டுள்ளார். வாழ்த்துக்கள் பல பல.

லேகா said...

நன்றி அருண்.இந்த நாவல் தந்த பாதிப்பால் ஒரு வாரம் வேறு வாசிப்பு ஏதும் இன்றி இருந்தேன்.கோபியை குறித்து வெகுவாய் அறிந்துகொள்ள எதுவாய் அமைந்த நூல் இது.

லேகா said...

நன்றி கிருஷ்ணன்.காலை அலுவலகம் வந்ததும் உங்கள் பின்னூட்டத்தை கண்ட பிறகே இதை அறிந்தேன்.உங்கள் தொடர் ஊக்கத்திற்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி.

லேகா said...

ரொம்ப சரியாய் சொன்னீங்க வால் பையன்

லேகா said...

Thanks a lot Muthuvel for your wishes. :-)

குப்பன்_யாஹூ said...

லேகா பதிவு அருமை எப்போதும் போல.

எஸ் ரா வின் விருது, பாராட்டுதல் கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள். அவர் பட்டியல் பார்க்க வில்லை இன்னும்.

மற்றும் ஒரு பதிவர் கூட உங்களுக்கு சிறந்த பதிவர் விருது வழங்கி உள்ளார். இணைப்பு மறந்து விட்டேன்.

சகோதரி லேகா மென்மேலும் சிறந்த பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்,

நன்றிகளுடன்

குப்பன்_யாஹூ


வழாக்கம் போல என்னுடைய புலம்பல்: நீங்கள் ஆங்கில புத்தகங்களும் நிறைய படிக்க வேண்டும், குறிப்பாக பீட்டர் ட்ரக்கர், ஜாக் வாழச், டொயோடா, மெக்கின்சே மைன்ட்.http://hbswk.hbs.edu/item/5917.html


http://www.mckinseyquarterly.com/Strategy/Innovation/Succeeding_at_open-source_innovation__An_interview_with_Mozillas_Mitchell_Baker_2098

தமிழ்நதி said...

அன்புள்ள லேகா,

நிறைய வாசிக்கிறீர்கள். ஒரு நாள் அமர்ந்து முழுவதுமாக உங்கள் பதிவுகளைப் படிக்கவேண்டும். இதுநாள் வரை உங்களைப் படிக்காமலிருந்ததையிட்டு மனவருத்தமாக இருக்கிறது.

கார்த்திக் said...

// படித்து முடித்த பின் மனதை உறுத்திய ஒரு விஷயம்,இத்தகைய எழுத்தாளன்,வாழ்வின் கடைசி நாட்களில் வறுமையில் உழன்று,உதவ யாருமின்றி பரிதாபமாய் இறந்தது.மரணம் கோபியை இவ்வளவு சீக்கிரம் தனதாக்கிகொண்டிருக்க வேண்டாம்.//

உண்மை.

அவர் வாழ்ந்த காலத்துல தான் அவர நினைக்க யாருமில்லை.
இப்போ அவருடைய புத்தகங்கள் கூட கிடைக்கமாட்டிங்கிரதுதான் வருத்தமான செய்திங்க.

இன்னைக்குத்தான் ஆடர் போட்டேன்.
இதையும்,டேபுள் டேனிசும் நகரும் மேகங்களும்.
வழக்கம் போல் நல்ல பதிவுங்க

லேகா said...

உண்மைதான் கார்த்திக்.நாம பேசி பேசி கவலை கொள்ளவேண்டியதுதான்.
டேபிள் டென்னிஸ் கிடைக்கின்றதா?? ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்..

ரௌத்ரன் said...

சென்னை புத்தக கண்காட்சியில் எனக்கு கோபியோட டேபிள் டென்னிஸ் மற்றும் இடாகினி கிடைச்சுதுங்க...டேபிள் டென்னிஸ் படிச்சுட்டு ஒரு வழி ஆயிட்டேன்...அவரே அதுல எழுதிருக்கற மாதிரி அதுல இருக்கற கோபி கிருஷ்ணன் ஒரு அமானுஷ்யன்..நான் அப்படித்தான் நினைச்சேன்...வாசிப்பின்பம்னு சொல்வாங்களே அத்தோட துன்பத்தையும் இன்னும் பிற மானுட இத்யாதிகளையும் கலந்து குடிச்ச மாதிரியான ஒரு பித்துநிலைக்கு கூட்டிட்டு போகுது....

ம்..வாழ்த்துக்கள் லேகா..எஸ்.ரா வோட டாப் 10 ல இருக்கீங்க...லேட்டா சொல்றேன்...

லேகா said...

நன்றி கார்த்திக்.

இந்தாண்டு புத்தக சந்தையில் நானுன் கோபியின் "டேபிள் டென்னிஸ்" வாங்கிவிட்டேன்.

லேகா said...

@ரௌத்ரன்

கோபியின் இடாகினி பேய்கள் மற்றும் டேபிள் டென்னிஸ் இரண்டு நூல்களும் சமீபத்தில் படித்தேன்.

இடாகினி பேய்கள் மிக பிடித்தமானதாய் இருந்தது.ஒரு எழுத்தாளன் என்பதை மீறி கோபியை மிக நெருக்கமான நண்பனாய் உணர செய்தது.

முஹம்மது ,ஹாரிஸ் said...

கோபி கிருஷ்ணன்னுடைய இடாகினிப் பேய்கள் என்ற நூலை வாசித்த உடன் கைகள் நடுங்க ஆரம்பித்து விட்டது. எப்படிப்பட்ட எழுத்தாளனை இந்தச் சமுதாயம் புறகனித்து விட்டது. ஆன்மாவின் கதறலை கேட்காமல் காதுகளை இறுக முடிகொண்டது. இது போன்று எத்துனை நல்ல குகனம் படைத்த எழுத்தாளர்கள் வறுமையால் வடிக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களை யார் அடையலப்படுத்துவது படைத்தவன் தான் மக்களை காக்கனும். இடாகினிப் பேய்கள் வாசித்த பின் என் டைரியில் எழுதிய வாசகம்.