Monday, October 13, 2008

புத்தக வாசம்- ஒரு தொடர் ஆட்டம்

வாசிப்பு - தேடல் மிகுந்த என் தனிமைகளை போக்கியது வாசிப்பு மட்டுமே!! என் மட்டிலும் வாசிப்பு என்பது சுகானுபவம்..உஷாவின் இந்த அழைப்பு பெரு மகிழ்ச்சியை தருவதாய் உள்ளது.பகிர்தல் என்றும் சுவாரசியமானதே!!

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

கி.ராஜநாராயணனின் 'பிஞ்சுகள்",குழந்தைகளுக்கான இலக்கிய நாவல்..அந்நாவலில் கி.ரா குறிபிட்டிருக்கும் அரிய பறவை இனங்களும்,வழக்கொழிந்த தமிழ் சொற்களும் முதல் வாசிப்பின் பொழுது ஏற்படுத்திய ஆச்சர்யம் இன்றும் நினைவில் உள்ளது.


2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
அம்புலிமாமா கதைகளில் இருந்து தான் வாசிப்பு தொடங்கியது.10 வயதில் என நியாபகம்.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

அ. சமூக நாவல்கள்
ஆ. சரித்திர நாவல்கள்
இ. ஹரிபாட்டர் வகையான வினோத நாவல்கள்
ஈ. ராணிமுத்து, மாலைமதி மற்றும் பாக்கெட் நாவல்கள்

சமூக நாவல்கள்
எதார்த்தம் நிறைந்த,மனித உறவுகள் முன்னிறுத்தி சொல்லப்படும் கதைகள்.
விளிம்பு நிலை மக்கள் குறித்த பதிவுகளும்.


4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு
ஆ. பத்திரிக்கைகளில் நூல் மதிப்புரைப் படித்து
இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து
ஈ. நாவலின் முன்னுரையைப் படித்துப் பார்த்து
உ. புத்தகத்தின் வடிவமைப்பையும், அட்டையையும் பார்த்து
ஊ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)


பெரும்பாலான நாவல்கள் எனக்கு அறிமுகம் செய்தது என் தந்தையே.வலையுலக அறிமுகத்திற்கு பிறகு நண்பர்கள் மூலம் அறிந்து சில நூல்கள் படிக்க நேர்ந்தது.

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

அ. பக்க அளவு
ஆ. சொல்லப்படும்ம் கதையின் கால எல்லை
இ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)

பக்க அளவு

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

அ. வாசகனின் அக நிலையிலிருந்து

ஆ.எழுத்தாளரின் முன்வைப்பிலிருந்து

இ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)

வாசகனின் அகநிலையில் இருந்து


7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

கதையின் தேவைக்கேற்ப எத்துணை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். பக்கங்களை மறந்து படிக்க ஆர்வத்தை தூண்டும் ஆற்றல் உள்ள எழுத்திற்கு புயலிலே ஒரு தோணி,கோபல்ல கிராமம் நூல்களை உதாரணமாய் சொல்லலாம்.

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

தேர்ந்தெடுத்த நூல்களை மட்டுமே வாசிப்பதால்,எத்துணை பக்கம் கொண்ட நாவலாய் இருந்தாலும் மலைப்பாய் உணர்ததில்லை.

9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

நிச்சயமாக இல்லை.

10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
பெரும்பாலும் இரவு

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

எதுவும் இல்லை

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

சுஜாதாவின் " பிரிவோம் சிந்திப்போம்" ,பாலகுமாரனின் "மெர்குரி பூக்கள்"

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
தி.ஜாவின் "மரபசு" , புதுமைப்பித்தனின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பு.

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

வண்ணநிலவனின் "கடல்புரத்தில்"
சுந்தரராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை"
எஸ்.ராவின் "உறுபசி"
கி.ராவின் "கோபல்ல கிராமம்"
தி.ஜாவின் "மோகமுள்"
வண்ணநிலவனின் " ரைநீஸ் ஐயர் தெரு"
ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்'
சாருவின் "சீரோ டிகிரீ"
கோபிகிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்"
ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி"


பட்டியல் பெரியது,மிக பிடித்தவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

அனிதா தேசாயின் "கடல்புறத்து கிராமம்"
யு.ஆர்.அனந்த மூர்த்தியின் " சம்ஸ்கார"
தகழியின் "செம்மீன்"
தகழியின் " தோட்டியின் மகன்"
வைக்கம் முகமது பஷீரின் "பாத்திமாவின் ஆடு"
பாறபுரத்துவின் "அப்பாவின் காதலி"
யு.ஆர்.அனந்த மூர்த்தியின் "அவஸ்தை"


16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

புதுமை பித்தனின் "பலிபீடம்" ,எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் "கடலும் கிழவனும்" தவிர்த்து வாசித்த ஆங்கில நூல்கள் சுவாரஸ்யம் அற்றவை.

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

கி.ராவின் "பிஞ்சுகள்","கோபல்ல கிராமம்"

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

பெரும்பாலும் தலைப்பு எவ்விதத்தில் நாவலோடு ஒத்து போகின்றது என யோசிப்பதுண்டு. "சாயா வனம்" "ரப்பர்" நாவல்களின் தலைப்பு மறைமுக அர்த்தம் போதிப்பவை.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

லட்சிய மனிதர்களாக் கொண்டதில்லை.பிடித்த கதாபாத்திரங்கள் உண்டு.
மோகமுள் "யமுனா"
பிஞ்சுகள் நாவலில் வரும் "வேதி நாயக்கர்"
புயலிலே ஒரு தோணியின் "மாணிக்கம்"
ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் நாவலின் "துரைகண்ணு"


20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?


மிதமிஞ்சிய எதார்த்தம்,துணிந்து தன் எதிர்ப்பை வெளிபடுத்தும் பாங்கு பிற மொழி நாவல்களில் மிகுந்துள்ளது.பிற மொழி என இங்கே குறிப்பிடுவது கன்னட மற்றும் மலையாள நாவல்கள்.பிராமண சட்ட திட்டங்களை தொடர்ந்து தன் நாவல்கள் (கடஸ்ரேதா,சம்ஸ்கார) மூலம் எதிர்த்து வரும் அனந்தமூர்த்தியின் துணிவு பாராட்டுதலுக்கு உரியது..


21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?


"கோபல்ல கிராமம்" ,"கடல் புறத்தில்
"


22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்"
கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்"


23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

அ.எழுத்து மொழி
ஆ.பேச்சு வழக்கு
இ.வட்டார வழக்கு

வட்டார பேச்சு வழக்கு


24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை.

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

கி.ரா வின் கோபல்ல கிராமம்,எஸ்.ரா வின் "இலைகளை வியக்கும் மரம்" - பயண கட்டுரை தொகுப்பு

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நாவலின் தன்மையை பொருத்தது.பெரும்பாலும் விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பேன்.எதுவாயினும் ஒரு வாரத்திற்குள் முடித்து விடுவேன்.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

கி.ராஜநாராயணன்,சுந்தர ராமசாமி

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

இதுவரை அத்தகைய வாசிப்பு அனுபவம் இல்லை.


29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

ஜெயகாந்தனின் "ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்"
சு.ரா வின் "ஒரு புளியமரத்தின் கதை"
வண்ணநிலவனின் "கடல் புறத்தில்" "ரைநீஸ் ஐயர் தெரு"


30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

ஜி.நாகராஜனின் "நாளை மற்றும் ஒரு நாளே"

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

இல்லை.

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?

--------------------------

அப்பா தவிர்த்து இலக்கியம் குறித்து நான் அதிகமாய் உரையாடியது இருவரிடம் மட்டுமே அய்யனார் மற்றும் வனிதா.

தமிழ் வலையுலகம் அறிமுகம் ஆனதிற்கு முன்பே வனிதாவின் நட்பு கிடைத்தது.
சென்ற ஆண்டு புத்தக கண்காட்சிக்கு சேர்த்து சென்ற பொழுது வழி நெடுக இலக்கியம் பேசி சென்றது மறக்க முடியாத அனுபவம்.

வாசிப்பு மீதான எனது ஆர்வத்தை வேறு தளத்திற்கு இட்டு சென்றது அய்யனார் பரிந்துரைத்த தமிழ் நாவல்கள்.அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்" மற்றும் ஆதவன்,நகுலன்,கி.நாகராஜன்,ப,சிங்காரம் நாவல்கள்.விளிம்பு நிலை வாழ்கை குறித்த பதிவுகளை அறிமுகம் செய்ததில் அவருக்கு மிக்க பங்குண்டு.

இத்தொடர் ஓட்டத்தில் இவர்களின் பங்களிப்பு மேலும் புதிய நூல் அனுபவங்களை தரும் என்பதில் ஐயமில்லை.


28 comments:

KARTHIK said...

// அய்யனார் பரிந்துரைத்த தமிழ் நாவல்கள்.அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்" மற்றும் ஆதவன்,நகுலன்,கி.நாகராஜன்,ப,சிங்காரம் நாவல்கள்.விளிம்பு நிலை வாழ்கை குறித்த பதிவுகளை அறிமுகம் செய்ததில் அவருக்கு மிக்க பங்குண்டு.//

எந்த நாவல் படிச்சாலும் அவ்வளவா யோசிக்க மாட்டேன் உள்ளே இருந்து சில குரல்கள் இந்த நாவல் படிச்ச தாக்கம் இருக்கே ஒரு ரெண்டு மூணுநாள் நெறைய பழைய நியபாகம்.அத எப்படின்னு சொல்லவே முடியாது.நல்ல நாவலை அறிமுகம் செய்த அய்யனாருக்கு நிச்சயம் என் நன்றிகள்.

அருமை லேகா நல்லபதிவு :-))

ramachandranusha(உஷா) said...

வாசிப்பு - தேடல் மிகுந்த என் தனிமைகளை போக்கியது வாசிப்பு மட்டுமே!! என் மட்டிலும் வாசிப்பு என்பது சுகானுபவம்//
அதே அதே :-)மீண்டும் சந்தோஷமாய் இருக்கிறது.

தி.ஜானகிராமன் எழுதிய ''நடந்தாய் வாழி காவேரி" பயண நூலில்
காவேரியின் டெல்டா பகுதியில் சாயாவனம் என்ற ஊர் இருப்பதாய் வருகிறது. ச.கந்தசாமி, மாயவரத்துக்காரர். ஒரு வேளை, சாயாவனம் அவருடைய சொந்த ஊராய் இருக்கலாம்.
கோபி கிருஷ்ணன் பெயர் முதல் முறை கேள்விபடுகிறேன். தேடுகிறேன். அய்யனார் தொடர அழைக்கிறேன்

லேகா said...

//அதே அதே :-)மீண்டும் சந்தோஷமாய் இருக்கிறது.//

:-)))

//காவேரியின் டெல்டா பகுதியில் சாயாவனம் என்ற ஊர் இருப்பதாய் வருகிறது. ச.கந்தசாமி, மாயவரத்துக்காரர். ஒரு வேளை, சாயாவனம் அவருடைய சொந்த ஊராய் இருக்கலாம்//

இதில் சந்தேகமே இல்லை.கந்தசாமி, நாவலில் விரிவாய் முன்னுரை பகுதியில் குறிபிட்டுள்ளார்.சாயாவனம் அவரின் சொந்த ஊர் தான்.திருச்சி அருகில் உள்ள கிராமம் என குஇர்பிட்டு இருப்பார்.

லேகா said...

பின்னூட்டலுக்கு நன்றி கார்த்திக்!

அய்யனார் மற்றும் உங்களின் பதிவை பார்த்த பிறகே "உள்ளே இருந்து சில குரல்கள்" நாவலை படிக்கும் ஆவல் மேலிட்டது.நேற்று தான் இந்நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்!!நாவலில் விரவி உள்ள நிலைகளின் பிடியில் இருந்து இன்னும் மீளவில்லை..

Ayyanar Viswanath said...

அழைப்பிற்கு நன்றி லேகா..விரைவில் எழுதுகிறேன்..இத்தொடரை ஆரம்பித்த உஷாவிற்கும் நன்றி..மேலதிகமாய் நான் குறிப்பிட எதையும் நீங்கள் விட்டுவைக்கவில்லை எல்லாவற்றையும் நீங்களே எழுதிவிட்டீர்களே...:)

Krishnan said...

Your answers made wonderful reading Lekha. All the best for your literary pursuits

குப்பன்.யாஹூ said...

நல்ல பதிவு, (எப்போதும் போல).

ஆனால் பல இடங்களில் என் விருப்பமும் உங்கள் விருப்பமும், உஷா அக்கா விருப்பமும் முரண்பாடாக உள்ளது. ஆனால் அதில்தான் அழகு இருக்கும். ஒரே விருப்பம் உடைய எல்லாரும் நண்பர்களாக இருந்து விட்டால் சுவாரஸ்யம் இருக்காது.

எனக்கும் என் மனைவிக்கும் கூட வாசிப்பில் நிறைய முரண்பாடுகள் உண்டு.

பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள் எனக்கு பைபிள் போல. (அதுவும் அந்த தலைப்பு வைத்த தருணத்தை பாலா விவரிக்கும் எழுத்து (பாலா, மாலன், சுப்பிரமணிய ராஜு) எப்போது படித்தாலும் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

எஸ் ராவின் அலைவோம் திரிவோம் உம் நான் 60 முறைக்கு மேல் படித்திருப்பேன்.

தமிழ்நாட்டில் உள்ள பதிவர்கள் நாம் சக பதிவர்களுக்கு படித்த புத்தங்கங்களை கொடுத்து உதவலாம். ( வாசிப்பு செலவு 500 ரூபாயை தாண்ட கூடாது per month என்று என் மனைவி சட்டம் தீட்டி உள்ளார்).

வெளிநாடு வேலை/பயணம் சென்ற உடன் நம் மக்கள் உணரும் முதல் இழப்பு வாசிக்க புத்தகங்கள் கிடைக்காமல் இருத்தல்.

நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்
குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி அய்யனார் :-))

லேகா said...

@ குப்பன்_யாஹூ

பின்னூட்டலுக்கு நன்றி!!

//பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள் எனக்கு பைபிள் போல.//

"one of the classic novels of Balakumaran" என்ற அறிமுகத்தோடு தான் அப்பா இந்த நாவலை பரிந்துரைத்தார்,ஏனோ எனக்கு சுத்தமா பிடிக்கல..

//வாசிப்பு செலவு 500 ரூபாயை தாண்ட கூடாது per month என்று என் மனைவி சட்டம் தீட்டி உள்ளார்//

500 ரூபாயே அதிகம் தான் குப்பன் சார்.ஆனா புத்தகங்களுக்கு செலவு செய்யரதிற்கு எப்பொழுதுமே யோசிக்க கூடாது,அப்பாகிட்ட இருந்து கத்துகிட்ட பாடம் இது!!

//எஸ் ராவின் அலைவோம் திரிவோம் //

படித்ததில்லை,அறிமுகத்திற்கு நன்றி.

நீங்களும் இந்த தொடர் ஓட்டத்தில் பங்கு கொள்ளலாமே..

லேகா said...

Tnx for ur wishes Krishnan!!

narsim said...

உங்கள் வாசிப்பு ஆச்சர்யப்படவைக்கிறது..
இவ்வளவு தரமான வாசிப்புகளை தொடர்வதால்தானோ சாதாரண பதிவுகள் பக்கம் தலைகாட்டுவதில்லை??(ச்சும்மா..)

தொடர்ந்து வாசியுங்கள்.. அதை அறிமுகப்படுத்துங்கள்..

நர்சிம்

லேகா said...

நன்றி நர்சிம்

//இவ்வளவு தரமான வாசிப்புகளை தொடர்வதால்தானோ சாதாரண பதிவுகள் பக்கம் தலைகாட்டுவதில்லை??(ச்சும்மா..)//

ஐயோ அப்படிலாம் இல்ல..எல்லா பதிவுகளையும் தொடர்ந்து வாசிச்சுட்டு வரேன்,பின்னூட்டம் இடுவதில்லை.

anujanya said...

@ லேகா

//எல்லா பதிவுகளையும் தொடர்ந்து வாசிச்சுட்டு வரேன்,பின்னூட்டம் இடுவதில்லை.//

அப்படியே தொடருங்கள். பின்னூட்டம் போட்டால் நாங்கள் எல்லாம் நொந்து போய் விடுவோம். பிரமாதமான வாசிப்பு தாகம் உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

லேகா said...

நன்றி அனுஜன்யா

பின்னூட்டம் இட கூடாது என்றில்லை,மொக்கை பதிவுகளை படித்து சிரிப்பதோடு சரி..பகடி செய்து எழுதுவதற்கும் தனி திறமை வேண்டும்..அரசியல் நிகழ்வுகள்,திரை விமர்சனங்கள்,உலக சினிமா,பொது நிகழ்ச்சிகள்,இலக்கியம்,புகைப்படங்கள் என முற்று புள்ளி அற்ற அறிய தொகுப்பாய் இணைய உலகம் விரிந்துள்ளது...

வால்பையன் said...

பிறக்கும் போதே புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல!
நானெல்லாம் அம்புலிமாமாவுடனே நிறுத்தி விட்டேன்

மாதவராஜ் said...

லேகா அவர்களுக்கு
வணக்கம்.
சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. நான் வைத்த புள்ளிகளைச் சுற்றி கோடுகள் வலைகளாய் தொடர்ந்து பின்னிச்செல்கின்றன. ஒவ்வொருவரிடமும் அழகான கோலம் ஒன்று இருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது. மதுமிதா அவர்களுக்கும், உஷா அவர்களுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். உங்கள் பதில்கள் உங்களுக்கு இலக்கியத்தோடு இருக்கிற பரிச்சயத்தையும், வாசிப்பின் எல்லைகளையும் உணர்த்துகின்றன. ஜி.நாகராஜின் 'நாளை மற்றொரு நாளே' நாவல் எப்படியிருந்தது.

மாதவராஜ் said...

லேகா அவர்களுக்கு
வணக்கம்.
சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. நான் வைத்த புள்ளிகளைச் சுற்றி கோடுகள் வலைகளாய் தொடர்ந்து பின்னிச்செல்கின்றன. ஒவ்வொருவரிடமும் அழகான கோலம் ஒன்று இருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது. மதுமிதா அவர்களுக்கும், உஷா அவர்களுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். உங்கள் பதில்கள் உங்களுக்கு இலக்கியத்தோடு இருக்கிற பரிச்சயத்தையும், வாசிப்பின் எல்லைகளையும் உணர்த்துகின்றன. ஜி.நாகராஜின் 'நாளை மற்றொரு நாளே' நாவல் எப்படியிருந்தது.

லேகா said...

நன்றி மாதவராஜ் :-))

என் வாசிப்பின் ஆழத்தை உணர செய்யும் வண்ணம் அமைந்திருந்தன இக்கேள்விகள்.நாளை மற்றும் ஒரு நாளே முற்றிலும் புதிய வாசிப்பு அனுபவம்!!அது குறித்த எனது பதிவை நாளை வெளியிடுகிறேன்!!

லேகா said...

அய்யோ அருண் அப்படிலாம் ஒண்ணும் இல்ல..வாசிப்பும் ஒரு வகை தொற்று வியாதி தான்.நமக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்தால் அதில் இருந்து மீள முடியாது!!

Jags said...

வெளிநாட்டில் இருப்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ் புத்தகம் வாங்குவதற்கும்,வாசிபதுற்குமான வாய்ப்பு எனக்கு இல்லாமல் போனது. ஊரில் இருந்தபோது நானும் என் நண்பனும் அடிக்கடி பேசுவது இதுதான்.."நம் பிள்ளைகள் பள்ளி கூடத்தில் படிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நூலகத்தில் படிக்க வேண்டும்." எனக்கு வாழ்க்கையை , மனிதர்களை படிக்க கற்று கொடுத்தது புத்தகங்கள்தான்...

நீங்கள், அய்யனார், உஷா போன்றோர் செய்யும் இந்த பனி போற்றுதலுக்கு உரியது. வருங்கால சமூகம் உங்களை வாழ்த்தும்...
வாழ்த்துக்கள்..

லேகா said...

நன்றி ஜெகதீஷ்!!

உண்மை தான்..தொலைக்காட்சி,கணினி,விடியோ விளையாட்டுக்கள் என குழந்தைகளின் நேரத்தை எடுத்து கொள்ள எத்தனையோ வந்த பிறகு வாசிப்பிற்கான சூழல் மிகவும் குறைந்துவிட்டது.

குப்பன்.யாஹூ said...

எஸ் ரா வின் அலைவோம் திரிவோம்.
இங்கே எஸ் ரா என்பது எஸ் ராம்க்ரிஷ்ணனை குறிக்கும் (உறுபசி, இலையை வியக்கும் தலை).

எஸ் ராவின் இருக்கன்குடி மாரியம்மன் மொட்டை சிறுகதை முடிந்தால் படயுங்கள், உயிர்மை இதழிழ் வந்தது, எந்த மாதம் என்று மறந்து விட்டேன். (எஸ் ரா /மனுஷ்யபுத்ரனிடம் கேட்டுக்கொள்ளவும்) .

தமிழாச்சி தங்கபாண்டியன் கவிதை/நூல்கள் படிக்க ஆரம்பியுங்கள் (வனப்பேச்சி, என் சோட்டு பெண்..). மதுரை, அருப்புகோட்டை, காரியாப்பட்டி, ஆரப்பாளையம், சுப்ரமணியபுரம், மேல மாசி வீதி எல்லாம் கண்ணு முன்னாலே கொண்டு வந்துருவாங்க.

வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ

Shakthee said...

"தேடல் மிகுந்த தனிமைகளை போக்கியது வாசிப்பு... " ஆஹா...
அருமை லேகா...!!!! உண்மையும் கூட...!!!
வாசிப்பு என்னும் பயணத்தில் சகபயணியாக வாய்ப்பினை அளித்த நம்
தாய் தமிழுக்கு என் வந்தனம்..!!!
புத்தக வாசம் போலே நம் நட்பும்,பகிர்தலும் மென்மேலும் தொடரும் ...
விருப்பங்களுடன்...!!!!

Shakthee said...

"தேடல் மிகுந்த தனிமைகளை போக்கியது வாசிப்பு... " ஆஹா...
அருமை லேகா...!!!! உண்மையும் கூட...!!!
வாசிப்பு என்னும் பயணத்தில் சகபயணியாக வாய்ப்பினை அளித்த நம்
தாய் தமிழுக்கு என் வந்தனம்..!!!
புத்தக வாசம் போலே நம் நட்பும்,பகிர்தலும் மென்மேலும் தொடரும் ...
விருப்பங்களுடன்...!!!!

லேகா said...

@ குப்பன்_யாகூ

எஸ்.ரா வின் சிறுகதைகள் மற்றும் தமிழச்சி தங்க பாண்டியன் நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி நிச்சயமாய் வாங்கி படிக்கின்றேன்.

லேகா said...

//புத்தக வாசம் போலே நம் நட்பும்,பகிர்தலும் மென்மேலும் தொடரும் ...
விருப்பங்களுடன்...!!!!//

நிச்சயமா வனிதா!!
உன்னோட பதிவை ஆவலோடு எதிர்பார்கிறேன்!!! :-)))

Maruthu said...

These posts and the discussion after that are really very good and healthy things happening here.It serves as a entrance to the tamil literature world for the beginers like me, who just started to read some good writing.one can get to know abt various good authors and very good books here which otherwise very difficult to get to know.

Keep going, Good luck

லேகா said...

Tnx Maruthu!! keep reading..