Tuesday, October 14, 2008

ஜி.நாகராஜன் மற்றும் ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துலகம்

விளிம்பு நிலை மக்கள் குறித்த பதிவுகளை தீவிரமாக தேடி படித்ததில்லை.ஜெயகாந்தனின் "உன்னை போலே ஒருவன்" அவ்வகையில் நல்ல பதிவு.ஜி.நாகராஜன் மற்றும் ஜே.பி.சாணக்கியாவின் நூல்கள் குறித்தான அறிமுகம் கிடைத்ததும் இருவரின் நூல்களை தேடி படித்து முடித்தேன்.சமூகம் வரையறுத்த கட்டுபாடுகளை மீறி தன் இயல்பில் நடமாடும் நிஜ மனிதர்களை குறித்து முழுதாய் விரிவாய் எடுத்துரைப்பவை இவர்களின் எழுத்துக்கள்.

ஜே.பி.சாணக்கியாவின் "என் வீட்டின் வரை படம்" சிறுகதை தொகுப்பு

"ஊருக்கு சென்று திரும்பும் பொழுதெல்லாம் மீசை தாடி பெருத்து வளர்ந்த பிள்ளையை தொட்டு பேச முடியாத துக்கத்தில் வார்த்தைகளை சோறாய் ஆக்கி போடும் என் அம்மாவிற்கு"

- சாணக்கியா


இந்நூலின் முகப்புரையில் சாணக்கியா குறிப்பிட்டுள்ள மேற்சொன்ன வார்த்தைகளை அப்பா அழுத்தி கோடிட்டு இருந்தார்,, தாயும் மகனுக்குமான பிரியத்தை அழகாய் விளக்கும் இவ்விரு வரிகள் என்னையும் ஈர்த்ததில் வியப்பில்லை!!

இத்தொகுப்பின் முதல் சிறுகதை 'ப்ளாக் டிக்கட்' ,சென்னை நகரின் ஒரு காலை நேர பிளாட்பார காட்சிகளோடு தொடங்குகின்றது...குப்பை மேடுகளும்,மூத்திர நெடியும் மிகுந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் திரையரங்கு ஒன்றில் ப்ளாக் டிக்கட் விற்று பிழைப்பு நடத்துகின்றனர்..விற்பனை மந்தம் ஆகும் வேளைகளில் வேசியராய் திரையரங்கை சுற்றி வருகின்றனர்...மற்றொரு சிறுகதையான 'என் வீட்டின் வரை படம்' கனத்த மௌனத்தோடு நகருகின்றது.வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதின் குறியீடாய் குப்பையில் எரிய படும் குடும்ப புகைப்படத்தின் நினைவுகளோடு அவ்வீட்டு சிறுவனின் பார்வையில் கதை விரிகிறது.இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை "வெகு மழை",ஒரு பெரு மழை நாளில் தன் வீட்டின் அருகே முன்பு குடி இருந்த வேணி அக்காவை அவள் ஊரில் வழியறியாது தேடி திரியும் நாயகன் அக்கணங்களில் அவளோடான தனது கடந்த கால நிகழ்வுகளை பகிர்கிறான்.திருமணத்திற்கு பிறகு கணவனை விட்டு வேறு ஆடவர்களோடு பிரியம் கொண்டு,பின்பு மன நோய்க்கு ஆளான வேணி பற்றிய குறிப்புகள் மழையின் கனத்தோடு நம்மை தாக்குகின்றது.

இக்கதைகள் தவிர்த்து "ரிஷப வீதி","தனிமையின் புகைப்படம்","உருவங்களின் ரகசியங்கள்" ஆகிய சிறுகதைகளும் குறிப்பிட தக்கவையே..சாணக்கியா கையாளும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வேசியர்,தடம் மாறும் குடும்ப பெண்கள்,பிளாட்பார மனிதர்கள்,பிச்சைக்காரர்கள்..இம்மனிதர்களின் வாழ்க்கை சூழலும்,உரையாடல்களும்,முக பூச்சு இல்லாத மனித வாழ்வின் அவல நிலையை எடுத்துரைப்பவை.

வெளியீடு :காலச்சுவடு
விலை : 75 ரூபாய்

ஜி.நாகராஜனின் 'நாளை மற்றும் ஒரு நாளே"

மதுரை நகரில் வாழும் நாயகன் கந்தனின் ஒரு நாள் குறிப்புகளை முழு நாவலை தொகுத்திருக்கின்றார் நாகராஜன்.பெண் தரகு,கட்ட பஞ்சாயத்து என கழியும் கந்தனின் நாட்களில் ஒரு நாள் அவனோடு பயணித்த அனுபவம்.நாம் எப்போதும் அறிய விரும்பாத அசிங்கம் என ஒதுக்கி தள்ளும் வாழ்கை முறையை முழு மனதாய் ஏற்று நடத்தும் எத்தனையோ மனிதர்களுள் கந்தனும் ஒருவன்.படித்த இளைஞன் ஒருவனோடான கந்தனின் சமூக மாற்றம் குறித்தான உரையாடல்,அவனின் அறியாமையை விளக்குவதாய் இருப்பினும் எந்த ஒரு சமூக மாற்றமும் அவனின் வாழ்க்கை தரத்தை மாற்ற போவதில்லை என்பதை உணர்த்துவதாய் உள்ளது.

எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை ஒன்றில் "ஜி.நாகராஜன் போல மதுரை நகரை யாரும் வருணிக்க முடியாது" என குறிப்பிட்டு இருந்தார்.இந்நாவலிலும் 'வடம் போக்கி தெரு','ஷெனாய் நகர்','மசூதி தெரு' போன்ற மதுரையின் சில பகுதிகளை குறிபிட்டுள்ளார்,விரிவான வருணிப்புகள் எதுவும் இல்லை.அவரின் மற்றும் ஒரு நாவலான 'குறத்தி முடுக்கு" இல் மதுரை நகரின் விவரிப்புகள் இருக்கலாம் என கருதுகிறேன்!!

நன்றி அய்யனார்

வெளியீடு - காலச்சுவடு
விலை - 90 ரூபாய்

12 comments:

குப்பன்_யாஹூ said...

அறிமுகத்திற்கு நன்றி. எனக்கும் மதுரை பற்றி வாசிக்க மிகவும் ஆசை.

ஆனால் பெரியார் பேருந்து நிலையத்தை மாடுதாவனிக்கு மாற்றியதில் இருந்து மதுரையும் தன் அழஅகை இழஅந்து விட்டது போல எனக்கு ஒரு உணர்வு.

கமலஹாசன் சண்டியர் (விருமாண்டி) பட துவக்க விழாவிழ் மதுரை பற்றி மிக அழகாக பேசினார்.

எஸ் ராமகிருஷ்ணன் padiungal, அவர் பிசைக்ராரர், பேருந்து நிலைய ஊமை பாடகன், கிளி ஜோசிய காரர், சினிமா போஸ்டர் ஓட்டுபவன் எல்லார் பற்றயும் எழுதி இருப்பார்.

என் பார்வைக்கு ஆங்கிலத்தில் எழுதும் அஆர் கே நாராயணன் போன்று ஊரு, தெருவை வர்ணித்து எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் மிக குறைவு. ஆர் கே நாராயணன் க்கும் இவர்களுக்கும் ஊர் பற்றி எழுதும் இடைவெளி மிக குறைவு. சுஜாதா சீரங்கத்தை ஓரளவு எழுதிஇருப்பார்.

சுப்ரமணி (பாரதி) கூட எட்டயபுரத்தை அந்த அளவு உயர்த்தி எழுத வில்லை என்ற ஏக்கம் எப்போதும் உண்டு எனக்கு.

நன்றிகளுடன்
குப்பன்_யாஹூ

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

குறத்தி முடுக்கு குறுநாவல் அளவில்தான் இருக்கும்!

குப்பன்_யாஹூ said...

எஸ் ராமகிருஷ்ணனின் - கதா விலாசம் , தேசாந்திரி , அலைவோம் திரிவோம் வாசியுங்கள். (விகடன் பிரசுரம்- 3ம் )

கதா விலாசம்- தமிழ் எழுத்தாளர்கள் வரலாறு, அவர்களுடன் எஸ் ரா பழ்கிய நாட்கள் உண்டு. அதில் சுஜாதாவை இப்படி அறிமுகம் செய்வார். 70 வயது ஆகும் இந்த இளைஞர்க்கு சங்க இலக்கியமும் சரி ஜாவா languageum சரி, யாப்பு இலக்கணமும் சரி யாஹூ சாட் அரசியலும் சரி, எல்லாமே அத்துப்படி.

தேசாந்திரி- ஒரு ஊர் சுற்றியின் அனுபவக் கதைகள், இதில் கங்கை, யமுனை, காசி, பட்டுகோட்டை,, நாகர்கோயில் எல்லாம் உண்டு.

உங்க வலைபதிவில்யே எஸ் ரா லிங்க் கிளிக் செய்து அதில் இருந்து
இதை எழுதுகிறேன்.


குப்பன்_யாஹூ

லேகா said...

@kuppan_yahoo

//அஆர் கே நாராயணன் போன்று ஊரு, தெருவை வர்ணித்து எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் மிக குறைவு.//

அதுவும் சரி தான்.வண்ண தாசன்/வண்ணநிலவன் கதைகளில் பெரும்பாலும் திருநெல்வேலி குறித்து விரிவாய் வரும்.ரைநீஸ் ஐயர் தெரு,சுலோச்சனா முதலியார் பாலம்,தாமிரபரணி,தாமரை குளம்,கோவில் வீதி,குற்றாலம் என நெல்லை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை அவர்கள் விவரிக்கும் அழகே அவ்விடங்களை காணும் ஆவலை தூண்டுபவை.

தி.ஜா வின் சிறுகதைகளிலும்,ஒரு நாவலிலும் தில்லி நகரம் குறித்து வருணித்து இருப்பார்.எஸ்.ரா வின் சமீபத்திய கட்டுரை ஒன்றில் ஜி.நாகராஜன் மதுரை நகரை அழகாய் வருணித்து இருப்பார் என குறிப்பிட்டு இருந்தார்.மேலும் புயலிலே ஒரு தொனியில் "பினாங்கு தெருக்களை" சிங்காரம் விவரித்து இருப்பதும் அருமை.

லேகா said...

//குறத்தி முடுக்கு குறுநாவல் அளவில்தான் இருக்கும்!//

தகவலுக்கு நன்றி சுந்தர்!!

லேகா said...

//எஸ் ராமகிருஷ்ணனின் - கதா விலாசம் , தேசாந்திரி , அலைவோம் திரிவோம் வாசியுங்கள்//

நிச்சயமாக..அறிமுகத்திற்கு நன்றி..

அனுஜன்யா said...

லேகா,

அய்யனார் ஜெ.பி.சாணக்கியா பற்றி எழுதியதும் அவரைப் படிக்க அவா இருந்தும், புத்தகம் இல்லாததால் பின்னூட்டம் கூட போடவில்லை. 'கோடை வெய்யில்' என்ற கதை பற்றி அய்ஸ் எழுதியது மன உளைச்சலைத் தந்தது. 'சோரம்' என்பது எவ்வளவு வாசிப்பும், விசால மனதும் இருந்தாலும் சராசரி மனிதர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாது. அய்ஸ் சொன்னது வேறு தொகுப்பு என்று நினைக்கிறேன்.

அதுபோலவே ஜி.நாகராஜனைப் பற்றி நிறைய கேள்விப்பட்டாலும் புத்தகம் ஒன்றும் படிக்கவில்லை. (இன்று கூட திரு.ராஜநாயஹம் பதிவில் அவரைப்பற்றி படித்தேன்). இவர்கள் மின்னூல் ஏதாவது கிடைக்குமா? உங்கள் வாசிப்பை நிதமும் வியக்க மட்டும் செய்யும்....

அனுஜன்யா

லேகா said...

Anujanya,

Ayyanar's post is regarding J.B.Chankya's "Yen Kanavu Puthagam".After seeing his review i searched n got this short story collection from my Dad's collection.Both the books are published by kalachuvadu.

I got G.Nagarajan's "Naalai Matrum Oru Naale" from Any Indian Book shop,T.Nagar.They also have their own online book selling site.chk out the below link

http://www.anyindian.com/

Jags said...

//இத்தொகுப்பின் முதல் சிறுகதை 'ப்ளாக் டிக்கட்' ,சென்னை ....... வசிக்கும் பெண்கள் திரையரங்கு ஒன்றில் ப்ளாக் டிக்கட் விற்று பிழைப்பு நடத்துகின்றனர்..விற்பனை மந்தம் ஆகும் வேளைகளில் வேசியராய் திரையரங்கை சுற்றி வருகின்றனர்//

பலரின் வாழ்க்கை நிலைமை மாறி இருந்தாலும், இன்றும் இது போன்ற காட்சிகள் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விசயம்தான்.....

நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்....

லேகா said...

நன்றி ஜக்ஸ்!!
இதுவரை நான் கண்டிறாத,கேட்டிறாத மனித வாழ்கை குறித்த சாணக்கியாவின் பதிவுகள் புதிய வாசிப்பு அனுபவாமை இருந்தது!!

மாதவராஜ் said...

லேகா!

நேற்று நான் கேட்டதற்கு, சொன்னது போல இன்று எழுதியும் விட்டீர்கள். தங்கள் ஈடுபாட்டிற்கும், ஆர்வத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன். ஜீ.நாகராஜனின் நாவல் குறித்து இன்னும் நான் உங்களிடம் எதிர்பாத்த்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். விளிம்புநிலை மனிதர்கள் என்னும் வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் இப்போது தென்படுவன. அதற்கெல்லாம் வெகுகாலம் முந்தியே, நாகராஜன் எழுதியிருக்கிறார். தமிழில் அதற்கு முன்பு, இவ்வளவு நெருக்கமாக அந்த மனிதர்கள் குறித்து எழுதப்பட்டதில்லையென சொல்லப்படுகிறது. நாகராஜனும் அந்த மனிதர்களுடேனே வாழ்ந்து, இரண்டறக் கலந்து, மீளமுடியாமல் அப்படியே கரைந்து போனவராய் இருக்கிறார். இந்த நாவலின் தலைப்பு குறித்து பெரும் விவாதங்களும், சர்ச்சைகளும் எழுந்ததுண்டு. நாளை என்பது இப்படியே மாறாமல் இருக்குமா என்று ஆதங்கப்பட்டவர்கள் உண்டு. நாகராஜனை "சர்ரியலிஸ்ட்' என முத்திரை குத்தியதும் உண்டு. இவை எல்லாவற்றுக்கும் அப்பால், இன்னும் அந்த நாவல் தமிழ் இலக்கியத்தின், வாழ்வின் முக்கியப் பதிவாய் இருக்கத்தான் செய்கிறது.

நானும் , நான் கேட்ட கேள்விகளுக்கு எனது blogல் பதில் சொல்லி விட்டேன். இல்லையென்றால் மதுமிதா கோபப்படலாம்.

லேகா said...

நன்றி மாதவராஜ்!

ஜி.நாகராஜனின் "நாளை மற்றும் ஒரு நாளே" குறித்த உங்களின் இப்பின்னூட்டம் மறைந்த அந்த எழுத்தாளரை குறித்து அறிய தகவல்களை சொல்லுவதை உள்ளது.
பகிர்தலுக்கு மிக்க நன்றி.