
ராகுல் - நந்திதா,அமித் - ப்ரீதா என நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு உறவுகளின் மேன்மையை வெகு சிறப்பாய் படைத்துள்ளார் இயக்குனர்.லண்டனில் வசிக்கும் ராகுல்(ராகுல் போஸ்),நந்திதா (ரிதுபர்னா )தம்பதியினர் குறித்த ஆரம்ப காட்சிகள்,அங்கே அவர்களுக்கு அறிமுகமாகும் அமீத் (ராஜத் கபூர்),கொஞ்சம் லண்டன் நகரம் என முதல் பாதி அழுத்தம் குறைவாய் தொடங்கினாலும்...வசனத்தின் வழியே இயக்குனர் நிறையவே சொல்லி செல்கின்றார்.அலுவலக தோழியோடு ராகுல் தனது சொந்த நகரமான கொல்கத்தா குறித்து சிலாகிக்கும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு.உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் குறித்தான ஏக்கமும்,பிரியமும் மாறாது என்பதை விளக்கும் காட்சி அது.
வேலை மாற்றல் வாங்கி கொல்கத்தா திரும்புகின்றனர் ராகுல் தம்பதியினர்..இனி வரும் காட்சிகள் ஒவ்வொன்றுமே கவித்துவமானவை!!தனது தாயின் கடிதத்தை ராகுல் நந்திதாவோடு சேர்ந்து வாசிக்கும் காட்சி கடிதங்களின் காலம் முடிந்து போக வேண்டிய ஒன்றில்லை என தோன்ற செய்தது.குழந்தையின்மை குறித்த இருவரின் வருத்தங்களும் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ச்சியாய் மழலையர் பள்ளியில் ஆசிரியையாய் சேரும் நந்திதா குழந்தைகளின் உற்சாகத்தில் புதிய உலகை காண்கிறாள்.நந்திதாவாக நடித்துள்ள ரிதுபர்னா எந்த இடத்திலும் அதீத உணர்ச்சியை காட்டாமல் வெகு எதார்த்தமாய் நடித்துள்ளார்.
ராகுல் தம்பதியினருக்கு அமீதின் மனைவி ப்ரீத்த அறிமுகமாவது ஒரு பார்ட்டியில். ராகுலிற்கும் ப்ரீதாவிற்குமான ஒத்த சிந்தனை அலைவரிசை அவர்களை நண்பர்களாக்குகின்றது.இயற்கை குறித்தும்,இலக்கியம் குறித்துமான இவர்களின் உரையாடல்கள் முக்கியமானவை.ப்ரீதா கதாபாத்திரத்தில் மெல்லிய புன்னகையோடு,அளவான உணர்ச்சி வெளிபாட்டோடு வெகு சிறப்பாய் நடித்துள்ளார் ரெய்மா சென்.எப்பொதும் பறவையின் சிறகை வேண்டும் ப்ரீதாவிற்கும்,பணத்தின் மீதே ஆவல் கொண்டிருக்கும் அமீதிற்குமான தோய்ந்த மணவாழ்க்கை
வெகு சில காட்சிகள் கொண்டு விளக்கபடுகின்றது.

இத்திரைப்படத்தின் மற்றொரு கதாபாத்திரம் கஞ்சன்ஜங்கா மலைதொடர்ச்சி.பணி நிமித்தமாய் கொல்கத்தாவில் இருந்து அங்கு செல்லும் ராகுல்,அம்மலை தொடர்ச்சியின் அழகில் மூழ்கி புத்த பித்து சிறுவன் ஒருவனோடு,அம்மலையின் அமைதியை ரசிக்கும் காட்சி இயற்கையின் பிரம்மாண்டங்கள் மீதான ஆச்சர்யத்தை அதிகரிக்க செய்வது.நிலவொளியில் கஞ்சன்ஜங்கா மலையின் பேரழகை ராகுல் காண்பது மற்றொரு உன்னத காட்சி.ராகுலை காண கஞ்சன்ஜங்கா செல்லும் ப்ரீத்தாவின் பார்வையில் இந்த காட்சிகள் யாவும் மீண்டும் விரிகின்றன..அந்த இரவு அவர்கள் இயற்கையின் பேரழகை ரசிக்கும் மௌனத்திலேயே கழிகின்றது.ராகுலின் எதிர்பாரா மரணம்,சொந்தங்களால் துரத்தி அடிக்கபடும் ப்ரீதா,ராகுல்-ப்ரீத்தாவின் உறவு குறித்த குழப்ப மனநிலையில் நந்திதா என அதற்கு பின்னான காட்சிகள் அதிர்ச்சி தருபவை.நந்திதா,ராகுல் மேல் கொண்டிருந்த தீரா காதலும்,முழுமையான புரிதலும் மட்டுமே ப்ரீதாவை மீட்டெடுக்கின்றது.
இயக்குனர் அனிருத்தாவிற்கு முதல் படமான இது 2008 ஆம் ஆண்டு தேசிய விருதை பெற்றுள்ளது.முதிர்ச்சியான காட்சியமைப்பு..சிறப்பான நடிகர்கள் தேர்வு..முக்கியமாய் ராகுல் மற்றும் ரெய்மாவின் அலட்டி கொள்ளாத நடிப்பு,கூர்மையான வசனங்கள்,எழில் கொஞ்சும் கஞ்சன்ஜங்கா என சொல்லி கொண்டே போகலாம் ரசித்தவற்றை.சுலபத்தில் இக்கதை மாந்தர்கள் மனதை விட்டு அகல மாட்டார்கள்.மனித உறவுகள் அழகானவை,தொடர்ந்து இயங்க அதன் அற்புத கணங்கள் எப்போதும் நம்முள்ளே இருப்பது அவசியம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றது இத்திரைப்படம்.