Friday, July 26, 2013

குட்டி இளவரசன் (Le Petit Prince)

பேசி பேசித் தீராத நினைவுகள் சிறுவயது புத்தகங்கள் குறித்தவை..சிறுவர் மலரில் தொடங்கி..அம்புலி மாமா,டிங்கிள், இரும்புக்கை மாயாவி,தெனாலி ராமன் கதைகள், சிந்துபாத்தின் சாகசங்கள்,அக்பர் - பீர்பால்,ஈசாப் நீதி கதைகள் என நீளும் பட்டியல் அது.அன்றைய பொழுதுகளின் உற்சாகமும், சுவாரஸ்யமும் சிறிதும் குறையவில்லை மீண்டும் சிறுவர் புத்தகங்களை தேடி வாசிக்கையில்.

சிறுவர் இலக்கியம் விரும்புவோர் தவற விடக் கூடாத நாவல் குட்டி இளவரசன்.


1943 ஆம் ஆண்டு பிரஞ்சு மொழியில் வெளியான இந்நாவல்(Le Petit Prince ) 200 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கதை நாயகனாக சிறுவன் ஒருவன் அறிமுகமாகி தன் ஓவியங்களை குறித்து நம்மிடம் சொல்லி கொண்டே தான் சந்தித்த குட்டி இளவரசனை அறிமுகம் செய்கின்றான்.கதை நாயகன் இனி நமது குட்டி இளவரசன்.எங்கள் உலகம் கேள்விகளால் மட்டுமே நிறைந்தது என்பதை நிறுவும் வண்ணம் அற்புதமான பாத்திரப்படைப்பு.பெரியவர்கள் குறித்த அவனுடைய கருத்துகள் "அவர்கள் விசித்திரமானவர்கள்..", "அவர்கள் அசாதாரணமானவர்கள்......." ,"எண்ணிகையில் நம்பிக்கை கொண்டவர்கள்.." மறுப்பதற்கில்லை!

குட்டி இளவரசனின் பிரியத்திற்குரிய மலர் குறித்த வர்ணனைகள் சிரிப்பை வரவைப்பவை..அன்பை பொழியும் குட்டி இளவரசனிடம் எதற்கெடுத்தாலும் இருமி தன் இருப்பை காட்டி கொள்ளும் அந்த சிறு மலரை,பெண்களின் குறியீடாக கொள்ளலாம்.


பல்வேறு கிரங்களுக்கு பயணம் செய்யும் குட்டி இளவரசன் சந்திக்கும் மனிதர்கள் அவன் கூற்றுபடியே விசித்திரமானவர்கள்.கட்டளை பிறப்பிப்பதையே தன் அடையாளமாக கொண்டிருக்கும் அரசன்,தற்பெருமைக்காரன், குடிகாரன்,நட்சத்திரங்களை எண்ணி வைத்து சொந்தமெனக் கொள்ளும் வியாபாரி,ஓய்வின்றி தெருவிளக்கு ஏற்றுவதை கடமையாக கொண்டவன் என ஒவ்வொருவரையும் தன் கேள்விகளால் சந்தித்து முடித்து பூமிக்கு வருகிறான்.

பாம்பும்,நரியும் நண்பர்கள் ஆகின்றனர்.பூந்தோட்டம் அவனுக்கு ஆச்சர்யம் தருகின்றது.இங்கும் மனிதர்களே அவன் முன் விசித்திர தோற்றம் கொள்கின்றனர்.

"மனிதர்கள் நீர்ப் பிரவாகத்தில் சிக்கிக் கொள்வார்கள்.ஆனால் எதை தேடுகிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது.அவர்கள் அதற்காக அலை பாய்ந்து சுற்றிச் சுற்றி வருவார்கள்...."


கதை சொல்லி சிறுவனும்,குட்டி இளவரசனும் பரிமாறிக் கொள்ளும் ஓவியங்கள் குறித்து கட்டாயம் சொல்லியாக வேண்டும்.யானை விழுங்கிய மலைப்பாம்பின் வரைபடத்தை கொண்டே கதை சொல்லி சிறுவன் அறிமுகமாகின்றான்..பின்பு குட்டி இளவரசன் கேட்பதற்கு இணங்க இவன் பிவோபாப் மரம்,ஆட்டுக்குட்டி என படங்கள் வரைவதும்,அவன் அதை பரிகசிப்பதும் என தொடர்கின்றது அவர்களின் விளையாட்டு.

குட்டி இளவரசனின் எதார்த்த கேள்விகளுக்கு பதிலளிக்க நிதானம் அற்று பெரியவர்கள் தங்கள் வேலையில் மூழ்கி கிடக்க..அவர்களை வியந்தபடி தன் பயணத்தை தொடர்கின்றான்.

தமிழில் குழந்தைகளுக்கான படைப்புகள் அதிகம் கவனம் பெறாமல் இருப்பது வருத்தமளிக்கும் விஷயம். குழந்தைகளுக்கு கதை சொல்லியாக இருப்பது எத்தனை சௌகர்யமான விஷயம்.நாம் கேட்ட,வாசித்த கதைகளை கற்பனையுடன் சேர்த்து சொல்லிடலாம். கேட்கப்படவிருக்கும் கேள்விகள் நம்மை ஆச்சர்யபடுத்தலாம்..சில சமயம் சிரிப்பில் ஆழ்த்தலாம்.அது வேறு உலகம், அவர்களுக்கேயானது.. கேள்விகளும்,கற்பனைகளும் நிறைந்தது.அதை அழகானதாகவும்,அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிட கதைகளால் மட்டுமே சாத்தியம்!

வெளியீடு - கிரியா பதிப்பகம்

Friday, March 1, 2013

The Children Are Watching Us (1944)

சின்னஞ்சிறு சிறுவனின் உலகம் தாயின் போக்கினால் சிதைவுறுவதை சொல்லும் திரைப்படம் The Children Are Watching Us (1944).கதைகளாலும் கற்பனைகளாலும்,கற்று தரும் நல்லொழுக்கங்கள் ஆரம்ப நிலைய தொட்டுத் தொடங்குவதாகவும் இருக்க வேண்டிய அப்பருவம் சிறுவன் பிரிகோவிற்கோ வேறு மாதிரி அமைந்து விடுகின்றது.Bicycle Thieves திரைப்படத்தில் தகப்பனிற்கும் மகனிற்குமான நெருக்கத்தை நெகிழ்ச்சியுடன் முன்னிறுத்திய விட்டோரியோ டி சிகாவின் இக்காவியம் தாயும்/தந்தையும் பிள்ளைக்கு அமைத்து தர வேண்டிய உலகம் குறித்து பேசுகிறது.அவ்வுலகம் ஆடம்பர பொருட்களாலும் பொம்மைகளாலும் அமைய வேண்டிய ஒன்று இல்லை என்பது இங்கு கவனிக்க பட வேண்டியது .....!


ப்ரிகோவின் தாய் நீனா ராபர்டோ உடன் கொண்டிருக்கும் உறவு முதல் காட்சியிலேயே தெரிவிக்கப்படுகின்றது.பூங்காவில்,அவர்கள் இருவரின் உரையாடலை அமைதியாய் பார்கிறான் ப்ரிகோ..அன்றிரவே நீனா ராபர்டோ உடன் சென்று விட,இருளாய் விடிகிறது ப்ரிகோவின் அன்றைய தினம்.காலை தொடங்கி இரவு உறங்க போகும் வரை உடன் இருந்து கவனித்து கொண்ட தாயின் இடத்தை அவன் சித்தியோ,பாட்டியோ ஈடு செய்யவில்லை.மாறாக அவர்கள் இருப்பும் அவர்கள் சார்ந்த உலகமும் அவனிற்கு அச்சம் தருபவை. சித்தியின் அலங்கார உடைகள் தயாராகும் கடையில் அவன் செலவிடும் பொழுதுகள் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை.அங்குள்ள பெண்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள் அவன் உலகிற்கு அப்பாற்பட்டவை..அகவுலகின் குழந்தை நிலை,குழப்பம் அடைய தொடங்கும் இடம் அது.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!





கடும் காய்ச்சலில் அவதிபடும் ப்ரிகோவை குறித்து கேள்விபட்டு நீனா சில தினங்களில் திரும்பி வருகிறாள்.நீனாவை ஏற்க மறுக்கும் ப்ரிகோவின் தந்தை அவளை விடாது,தேம்பி அழுகும் ப்ரிகோவிற்காய் அவளை அனுமதிக்கின்றார்.சின்ன சின்ன நிகழ்வுகளின் இனிமையால் மெல்ல அவர்களின் குடும்பம் பழைய சந்தோஷத்தை அடைகின்றது.இதன் இடையே ராபர்டோ மீண்டும் நீனாவை தேடி வீடு வருகின்றான்.அவர்களுக்கு இடையே நிகழும் வாக்குவாதம் ப்ரிகோவின் முன்னே நிகழ்கின்றது.இம்முறை நீனா அவனை கடுமையாக பேசி வெளியேற செய்கிறாள்.ராபர்டோவின் வருகையையும்,நீனாவோடு அவனுடைய வாக்குவாதத்தையும் ப்ரிகோ அவன் தந்தையிடம் சொல்லுவதில்லை.அத்தகைய சூழ்நிலைகளுக்கு அவனை பழக்கப்படுத்தி கொள்கின்றான்.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!

ப்ரிகோவின் தந்தை குறித்து எந்த எதிர்மறை கருத்துகளும் இல்லை. மனைவி மீதும் மகன் மீதும் பேரன்பு வைத்திருக்கும் சராசரி குடும்ப தலைவனாகவே இருக்கின்றார்.இனி குறை ஒன்றும் இல்லை என அவர்கள் குடும்பத்தோடு கடற்கரை நகரம் ஒன்றிற்கு சுற்றுலா செல்லுகின்றனர்.தாயுடனும் தந்தையுடனும் ப்ரிகோவின் பொழுதுகள் இனிதாய் கழிகின்றது.வேலை நிமித்தம் ப்ரிகோவின் தந்தை அவர்கள் இருவரையும் அங்கு விட்டுவிட்டு கிளம்புகிறார்.மீண்டும் அங்கு வரும் ராபர்டோவை நீனா இம்முறை எதிர்க்கவில்லை மாறாக அவனுடன் நெருக்கம் கொள்கிறாள்.இதை காணும் ப்ரிகோ பைத்திய நிலைக்கு செல்கிறான்.அவ்விடம் விட்டு தந்தையை அடைய அலைந்து திரியும் ப்ரிகோவை போலீசார் மீட்டு தந்தையிடம் கொண்டு சேர்கின்றனர்.நீனா மீண்டும் ராபர்டோவுடன் சென்று விடுகிறாள்...தந்தையிடம் நீனாவை குறித்து இப்பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசிட அக்குழந்தை துணியவில்லை அவரின் பெருங்கருணை உள்ளம் தாங்கி கொள்ளாது என எண்ணி இருக்கலாம்.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!

அதன் பின் நிகழ்வது யாவும் துயரம்...!அவமானம் தாளாத தந்தையின் தற்கொலை,அநாதை விடுதி வாசம் என ப்ரிகோவின் வாழ்க்கை தடம் புரள்கிறது.சிதைக்கபட்ட அவன் அகவுலகை நெஞ்சை உருக்கும் அந்த கடைசி காட்சியின் வழியே உணரலாம்.இத்திரைப்படத்தில் ஒரு காட்சி கூட தேவை அற்றது என ஒதுக்கி விட முடியாது.காட்சிகளில் அத்தனை நுணுக்கம்.நம் பேச்சும்,செயல்பாடுகளும்,பழக்க வழக்கங்களும் எல்லா விதங்களிலும் அவர்களில் பாதிப்பை உண்டாக்குகின்றது.அவர்களை சுற்றி உலவும் மனிதர்களில் இருந்தே அவர்கள் கற்றுகொள்கின்றார்கள்.ப்ரிகோவாக நடித்துள்ள சிறுவனின் நடிப்பு இங்கு சொல்லி ஆக வேண்டியது,ஐந்து வயது சிறுவனிடம் இத்தனை அபாரமான உணர்ச்சி வெளிப்பாடா என்றிருக்கிறது.படம் பார்த்து பல மணிநேரம் ப்ரிகோவின் முகம் நினைவில வருவதை தவிர்க்க இயலாது.அவர்கள் நம்மை கவனிக்கின்றார்கள் என்ற உணர்வு நம்மில் எப்பொழுதும் இருந்தாலே குழந்தைகள் குழந்தைகளாக தொடர்வார்கள்...1944 இல் வெளிவந்துள்ள படம் இது..இன்றைக்குமான நிதர்சனத்தின் பதிவு என்றே சொல்ல வேண்டும்.!

Thursday, December 6, 2012

கண்மணி குணசேகரனின் "நெடுஞ்சாலை"


"இந்த மண்ணை,மக்களை,மொழியை,முந்திரிகளை விட்டு விட்டு எங்கேயோ ஒரு நகர காட்டுக்குள் அடைபட்டு,உயிரற்றவர்களை எழுத நேர்த்திடாதவாறு ஓர் எதிர்காலம் எனக்கு வாய்க்குமானால்,அது போதும் எனக்கு."

-- கண்மணி குணசேகரன் 

இம்முறை முந்திரிக் காடுகளை விடுத்து வேறு உலகினிற்கு நம்மை கடத்திச்  செல்கிறது கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை.அரசு போக்குவரத்து துறை ஒன்றின் பகுதி நேர பணியாளர்களாய் சேரும் மூன்று இளைஞர்கள்களை சுற்றி சுழலும் கதை.நாடு,வீடு என இரண்டு பகுதிகளாய் உள்ளது.அரசாங்க உத்தியோகம்  என வெளியில் சொல்லிக்கொண்டாலும் பணி  நிச்சயமற்ற சி.எல் பதவியின் சங்கடங்களை, அவ்வூழியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை,சகித்து கொள்ள வேண்டிய அவமானங்களை அய்யனார்,தமிழ்,ஏழை முத்து என மூவரின் கதை கொண்டு சொல்ல
ப்படுகின்றது.

கடன் பட்டவனும் அங்கு இருக்கின்றான், பணம் உள்ளவனும் இருக்கின்றான்.அரசு வேலை படுத்தும்பாடு.நாவலின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நம்மிடம் பகிர 
பிரத்யேக   அனுபவங்கள் உண்டு.நாவலே ஆசிரியரின் அரசு போக்குவரத்து பணி  அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதே.பேருந்து காட்சிகள் ஆகட்டும்,போக்குவரத்து  நிலைய டிப்போ நிகழ்வுகள் ஆகட்டும் கதை என்பதை மறந்து நிதர்சனத்தின் வெகு அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு.அது வேறு உலகம்.சக ஊழியர்களோடு பணியின் ஊடே அய்யனார்  கொள்ளும் உரையாடல்கள் சிறு உதாரணம்.


தேர்வெழுதி,பயத்தின் ஊடே நேர்முக தேர்வை நிறைவு செய்தும்/தெரிந்தவர்கள் மூலமும் பணியில் சேர மூவரும் கொள்ளும் பிரயத்தனங்கள் விவரிக்கப்படுவது நிதர்சனம்.மூன்று இளைஞர்களின் வாழ்க்கை/குடும்ப பின்னணிகள் மெலிதாக தெரிவிக்கபடுகின்றன  நிறைந்த அழுத்தத்துடன்.பகுதி நேர பணியில் நிரந்தரம் அடைய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருப்பதின் அவசியத்தை சொல்லுபவை அவை.கதையின் ஊடே காதலும் உண்டு.சி.எல்  நடத்துனரான தமிழ் கொள்வது சிறுபிள்ளை காதல் எனில்,(சி.எல்  மெக்கானிக்)  அய்யனார் ஆண்டுகள் பல கடந்தது  காணும் சந்திராவிடம் கொள்ளும் பிரியம் முதிர்ச்சியானது.அவர்கள் இருவருக்குமான உரையாடல்கள் வாழ்வில் எல்லா  துயரங்களையும் கண்டு தீர்த்தவர்களின்  அசல் மொழி.

வட்டார மொழிவழக்கில் இலக்கியம் படைப்பவர்களில்,கண்மணி குணசேகரனுக்கு எப்பொழுதும் முக்கிய இடம் உண்டு. அம்மொழிவாதம் நாவலோடான  நம் நெருக்கத்தை அதிகரிக்க செய்பவை. "அண்ண...." என அன்பொழுக இம்மூவரும்,பிறரை அழைக்கும் ஒற்றை சொல் போதும் இதை விளக்க. இதன் கூட அசல் பகடியும்,நையாண்டியும் கைகூடி வருது இன்னும் சிறப்பு.நாவல் முதல் பகுதியான "வீடு" இவர்கள் பணியில் சேர்வதையும்,அதன் பொருட்டு எதிர்கொண்ட அனுபவங்களை அலுவலகம்,குடும்பம்,காதல் எல்லாமும் சேர்த்து  சொல்லி செல்கின்றது.நாவல் முழு வடிவம் பெறுவது இரண்டாம் பகுதியான "நாடு" 
வில்  தான்.

பணி  நீக்கத்தில் இருக்கும் தமிழும்,ஏழையும்  தேவாலைய திருவிழா நாளொன்றில்,ஆள் இல்லாத நிர்பந்தத்தினால் உதவாத பேருந்தொன்றை  எடுத்துக்கொண்டு பயணிகள் உடன் பெரு நகரம் சென்று திரும்புவது மட்டுமே இரண்டாம் பகுதி.இருவருக்கும் அந்த பயணம் தொடக்கத்தில் உவப்பானதாய் இல்லை.பழுதான வண்டியில் பெருங்கூட்டத்தை  ஏற்றி கொண்டு இது வரை கண்டிடாத பெரு  நகருக்கு பயணம் மேற்கொள்வது உண்டாக்கும் இயல்பான அச்சத்தோடு தொடங்கும் அவ்விரு இளைஞர்களின் பயணம்...மெல்ல மெல்ல வேகம் எடுத்து நம்மை தன்வசமாக்கி கொள்கின்றது.அவர்கள் சோர்வுறும் பொழுது நாமும் சோர்வடைந்து அவர்கள் உவகை கொள்ளும் பொழுது நாமும் மகிழ்ச்சி கொள்வது என..நாவலின் பிற்பகுதி முழுமை.எதிர்பாராத சங்கடங்களும, அழுத்தங்களும் முட்டி மோதி அவற்றை  வென்றிட துடிக்கும் மனமும்,எடுத்துக் கொண்ட செயலை நிறைவேற்றிட கொள்ளும் மனவுறுதியும் அவர்களின் பயணத்தில் பிரதிபலிப்பது, நம்  தினசரி வாழ்வோடு பொருத்திப் பார்க்க வேண்டியவை.இனி அவர்கள் இனிதாய் வாழ்ந்தார்கள்  என முடிவுரைக்காமல்,தொடரும் அவலம் அது, தினம் உதிக்கும் சிறு நம்பிக்கையே தொடர்ந்து கொண்டு செலுத்த தேவை என்பதை நிறுவுகின்றது நாவலின் முடிவு.


நடுத்தர வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்று  பேருந்து பயணம்.நாம் தினம் எதிர்கொள்ளும் மனிதர்கள் நடத்துனரும் ஓட்டுனரும்,அவர்களின் உலகினிற்குள் சென்று வருவது வேறு அனுபவமாய் உள்ளது.அரசு துறை அலுவலங்கள் குறித்த பதிவுகள் தமிழில் இதுவரை உண்டா என தெரியவில்லை.போக்குவரத்து துறை ஊழியர்களின் அன்றாடங்களை நேர்த்தியாகவும் ,நேர்மையாகவும்  பதிவு செய்துள்ள விதத்தில் தமிழில் நெடுஞ்சாலை மிக முக்கிய பதிவு.

வெளியீடு - தமிழினி 

Thursday, July 26, 2012

காதலும் மரணமும்.....



Pedro Almodovar's "Talk To Her"

சுயநினைவை இழந்த காதலியுடன் தீரா காதல் கொண்டிருக்கும் பெனிங்கோ என்னும் அற்புத காதலனின் கதை. பேசி பேசி தீராத காதல் கணங்கள் இவனுக்கும் உண்டு! மீண்டு வருவது நிச்சயமற்ற போதும், அயர்ச்சி அற்று அவளோடு அவன் செலவிடும் மருத்துவமனை நாட்கள்...காதல் இனிது!இவர்கள் நீண்ட நாள் காதலர்கள் இல்லை,பேசி சிரித்து மகிழ்ந்தவர்கள் இல்லை,எதிர்காலம் குறித்து திட்டமிட்டவர்கள் இல்லை... அவன் காதலை சொல்லும் முன்னர் அவள் விபத்தில் சுயநினைவை இழக்கின்றாள்.பெனிங்கோவிற்கோ அது ஒரு தடை இல்லை,அன்பு செய்ய எப்பொழுதும் தயாராய் இருக்கும் பெருங்காதலன் அவன்.




விடாது அவளோடு உரையாடி தீர்க்கும் பெனிங்கோ,அவளுக்கு சொல்லும் தான் கண்ட திரைப்பட காதல் கதை ஒன்று நெகிழ்ச்சியானது.தவறான மருத்துவ ஆராய்ச்சியினால் உடல் சிறுத்து சிறுத்து விரல் அளவு ஆகிவிடும் அத்திரைப்படத்தின் நாயகன், கொண்ட காதலின் பிடியில் இருந்து தப்பிக்க காதலியின் யோனிக்குள் சென்று உயிரை மாய்கின்றான்...புனிதம்!பெனிங்கோவின் காதலும் அது போலவே சோக முடிவை அடைகின்றது. இத்திரைப்படம் இரண்டு காதல் ஜோடிகளை குறித்து பேசுகின்றது.ஏனோ பெனிங்கோவின் காதல் மட்டுமே அதிக கனத்தை கூட்டுகின்றது.அல்மொடோவரின் "ALL I KNOW ABOUT MY MOTHER" திரைப்படம் தாய்மை குறித்து பேசும்..இதுவோ தாயாகி போன காதலனின் கதை!

பெனிங்கோவின் கதாபாத்திரம் எனக்கு கதேயின்,காதல் நாயகன் "வெர்தர்" யை அதிகம் நினைவூட்டியது.17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலைய செய்த காதல் காவியம் ,கதேயின் "The sorrows of young werther".தமிழில் இந்நாவல் "காதலின் துயரம்" என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வெர்தர்,பேரழகன்,இசை கலைஞன்,பயணங்களை விரும்புபவன்,விசித்திர நாடோடி,குழந்தைகளை நேசிப்பவன்,இயற்கையின் காதலன்......வெர்தர் காதல் கொள்ளும் யுவதியோ ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவள்.இரக்கமற்ற காதலின் தீவிரத்தால் தன்னுயிரை மாய்த்து கொள்கிறான் வெர்தர்.கேட்டு சலித்த காதல் கதை போல தோன்றினாலும்,கதேயின் விவரிப்புகளால் இது பெருங்காவியம் ஆகின்றது.

காதல் பெருந்துயரம்!!


Departures : மரணத்தின் ஊடான பயணம்...

மரணம் தோற்றுவிக்கும் பயத்தில் இருந்து தப்பியவர் எவருமில்லை. தவிர்க்க விரும்பும்,நினைவில் நிறுத்த மறுக்கும் செய்திகள் மரணம் குறித்தானவை .ஜப்பானிய திரைப்படமான "Departure " முழுக்க முழுக்க மரணம் குறித்து பேசுகிறது,அமுங்கிய குரலில்.எந்த வித பதற்றமோ,ஆர்ப்பாட்டமோ இல்லாத காட்சிகளினால்/எதார்த்த வாழ்வின் நிதர்சனங்களை காட்டி மரணம் ஒரு தவம் என எடுத்துரைக்கிறது.

ஏழ்மையின் காரணமாய் இசைக் கலைஞனான நாயகன் ,இறந்தவர்களின் உடலை சுத்தம் செய்து,கடைசி நேர சடங்குகள் செய்து தரும் நிறுவனம் ஒன்றில் தவறுதலாய் பணியில் சேர்கிறான்.தொடக்கத்தில் தன் பணியை வெறுக்கும் அவனுக்கு ஒவ்வொரு இறந்த வீட்டிலும் ஒரு அனுபவம் கிடைகிறது.அதீத அன்பின் மொழி, உச்ச குரலில் ஒலிக்கும் இடங்கள் அவை .மெல்ல மெல்ல தன் பணியை நேசிக்க தொடங்குகிறான்.மரணத்தை மிக அருகில் இருந்து பார்க்கும் அந்த தொழில்,வருமானத்தை மீறி கற்று தரும் பாடங்கள் பல .. இறந்தவரை வெறுப்பவர் எவரும் இலர்.காட்சிகளுக்கு உயிரூட்டும் பின்னணி இசை இத்திரைப்படத்திற்கு பெரும் பலம்.




குறிப்பிட்டு சொல்ல வேண்டிய காட்சிகள் பல.குறிப்பாக அந்நிறுவனத்தில் அவன் உடன் பணி புரியும் பெண் ,விலைக்கு தகுந்தாற்போல,வேலைபாடுகள் கொண்ட வித விதமான சவ பெட்டிகளை அவனுக்கு காட்டி சொல்லுவது.."மரணத்திற்கு பிறகு உனக்கான தேர்வுகள் உனதில்லை......"! என்பது.

கதையில் உலவும் மனிதர்கள் யாவரும் அன்பை பற்றிக்கொண்டவர்கள்.அவன் நிறுவனத்தின் தலைவர்,உடன் பணிபுரியும் பெண்,அவன் பால்ய கால சிநேகிதன்,கட்டண குளியல் அறை நடத்தும் நண்பனின் தாயார்,அங்கு வரும் முதியவர் என அவன் சந்திக்கும் மனிதர்கள் யாவருக்கும் அவனிடத்து பகிர காரியங்கள் உண்டு."மரணம் முடிவு அல்ல,அடுத்த நிலைக்கு செல்வதற்கான வாசல் வழி...." என வரும் முதியவரின் கூற்று உணர்த்துவது ஏராளம்.சிறு வயதில் தன்னையும்,தாயையும் விட்டு சென்ற தந்தையை குறித்து அவன் நினைவில் இருந்து மீட்டெடுக்கும் காட்சிகள்..கவிதை!

"ஆதியில் மொழி தோன்றுவதற்கு முன்னர், மனிதர்கள் தம் உணர்வுகளை கூழாங்கற்களை பரிமாறி பகிர்ந்து கொண்டனராம்.அன்பை சொல்ல மென்மையான கற்களையும்,துயரத்தை பகிர முரடான கற்களையும் பரிமாறி கொள்வார்கள்.." என அவன் தந்தை அவனுக்கு சொல்லி சென்ற கதை ஒன்று திரைப்படத்தின் சாரத்தை உணர்த்துவது.மரணத்திற்கு முன்பான நம்முடைய தேர்வுகள் யாவும் நம்முடையதே..அதன் பொருட்டு அன்பை பரிமாறும் கற்களை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் கொள்ள அவசியம் இல்லை!


Monday, February 14, 2011

யுவனின் "மணற்கேணி"

"யுவன் சந்திரசேகரையும் கதைசொல்லி என்றே சொல்ல வேண்டும். கதைசொல்லிகள் எப்போதுமே சொல்லும் உற்சாகத்தில் ஆழ்ந்து போகிறவர்கள். நுண்ணிய அகத்தைவிட அழகிய புறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். செறிவை விட சரளத்தை சாதிப்பவர்கள். எத்தனை தூரம் இயல்பாக அவர்களின் எழுத்து நிகழ்கிறதோ அத்தனை தூரம் அவை சிறந்த கலைப்படைப்பாக ஆகின்றன. யுவன் சந்திரசேகரையும் அவ்வகையில் தயக்கமில்லாமல் சேர்க்கலாம்."

- ஜெமோ



யுவனின் எழுத்துக்களில் விரியும் மாய வெளியை வாசித்து உணர்ந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல.புனைவின் உச்சம் என நான் கருதும் குள்ள சித்தன் சரித்திரத்தில் கிடைத்தது யுவனின் முதல் அறிமுகம்.ஒளி விலகல்,ஏற்கனவே,பகடையாட்டம் என தொடர்ந்து வாசித்த யுவனின் படைப்புகள் தந்து சென்ற அனுபவத்தை வார்த்தைகளில் சொல்ல தெரியவில்லை...ம்ம்....மாயவெளிப் பயணம் என கொள்ளலாம்.மணற்கேணி இவற்றிற்கு மாறான தொகுப்பு.கதையா, கட்டுரையா,சுயசரிதையா என்ற கேள்விகளுக்குள் அடங்காது எல்லாமுமாய் உள்ளது.

"ஒரு மாபெரும் மரத்தையும் அதன் அடித்திண்டாக அமைந்த சிமென்ட்டுத் திண்ணையையும் ,நன்கு விளைந்த ஐந்து மனித உருவங்களையும் ஒரு சின்னஞ்சிறு நெஞ்சுக்குள் சுமப்பது எளிதா என்ன?இவற்றின் மொத்த எடையை விட,ஒரே ஒரு கோணல் வகிட்டின் எடை இன்னும் அதிகம்.."

வாசிக்கும் புத்தகத்தில் பிடித்த வரிகளை கோடிட்டு வைப்பது வழக்கம்.மாறாய் இத்தொகுப்பில் பிடித்த வரிகள் வரும் பக்கத்தின் நுனியை மடித்து வைத்து கொண்டே வந்ததில்...அனேகமாய் எல்லா பக்கங்களும் மடிப்பில் இருந்து தப்பவில்லை என வாசித்து முடித்ததும் அறிந்தேன். வாழ்வனுபவங்களை சுவாரஸ்யம் கூட்டி,எளிமையான வார்த்தைகள் கொண்டு விவரிக்கும் 100 குறுங்கதைகளின் தொகுப்பு மணற்கேணி.

"மனநிலை பிறழ்வு என்றெல்லாம் எதுவும் கிடையாது.மரபணு வழியாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் ஒவ்வொரு தனிமனமும் ஒரு ஸ்திதிக்கு வந்து சேர்க்கிறது.அதை சரி என்றும் தவறு என்றும் நிர்ணயிப்பதற்கு பிறருக்கு அதிகாரம் கிடையாது.உடல் ஊனமுற்றவர்களுடன் சகஜமாக கோ-எக்சிஸ்ட் பண்ண கற்று கொண்டுவிட்ட சமூகத்துக்கு மாற்று மனநிலையாளர்களுடன் வசிப்பது எப்படி என்று இன்னும் தெரியவில்லை............."

யுவனின் பிரதியாய் கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரத்தின் வழியே,கடந்து வந்த மனிதர்களை குறித்த கூர்மையான அவதானிப்பை முன்வைத்து சொல்லப்படும் கதைகள்.சொல் வித்தைகள் எதுவும் இன்றி எளிமையான சம்பவங்களின் மூலம் அம்மனிதர்களின் ஊடே நாமும் நடமாட முடிகின்றது. இஸ்மாயில், ரவி, அனுராதா, விசாலாட்சி,தபால்காரர் சுப்பிரமணியம்,தாயம்மா பாட்டி, வேங்கோபராவ், பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் சந்திக்க நேரிடும் போலீஸ்காரர், எதிரியாகி போன ஜப்பானிய நண்பன் ஒருவன்,மலாவி தேசத்து மாணவன்,பெயர் குறிப்பிடப்படாத காதலி என உயிர் பெற்று உலவும் மனிதர்கள் அநேகம்.

குறிப்பாய் வங்காள விவசாய கிராமத்தில், இரவொன்றில் சந்திக்க நேரிடும் அக்கிழவர் ..வார்த்தைகள் அற்று அவரோடு நிகழ்ந்த உரையாடல் என நீளும் அக்கதை யுவன் பாணியிலான புனைவாக இருக்க கூடும் முடிவு செய்து கொண்டேன்.இத்தொகுப்பில் வரும் கீழ் உள்ள வரிகள் என் போன்றவர்களுக்கு தான் போல....

"கடந்த சில வருடங்களில் எனக்கென்று உருவாகி இருக்கும் வாசகர்களில் பலரும்,நான் சொல்லும் நிஜமான செய்திகளில் கூட புனைவின் நெடியை நுகரும் வல்லமை கொண்டவர்கள்"




அப்பாவை ஆதர்ச நாயகனாய் கொள்ளாதோர் யாரிங்கே? தந்தையை குறித்தான யுவனின் தொடர்ச்சியான குறிப்புகள் அளப்பரிய பிரியத்தை சொல்லுபவை.இத்தொகுப்பில் பல கதைகள் தந்தையோடு கரட்டுப்பட்டியில் கழித்த நாட்களை பற்றி பேசுபவை.நடுத்தர வாழ்வின் சிக்கல்கள் உறவுகளை முன்வைத்து தொடரும் சங்கடங்கள்... சமநிலையை பாதிக்கும் எல்லா சம்பவங்களுமே எல்லாருக்கும் பொதுவானவையே.முடிந்த வரை இவை யாவும் கழிவிரக்க மனநிலையில் இருந்து விலகி பகடி கூட்டியே முன்வைக்கப்படுகின்றன.யுவனிற்கு கைகூடும் பகடி இங்கு அரிதாய் காணக்கிடைப்பது..ஒரு கதை இவ்வாறாக தொடங்குகின்றது.

"மகாவாக்கியங்களை இன்ன சந்தர்ப்பத்தில் இன்னார் உதிர்ப்பார் என்று யூகிக்க இயலாது.முந்தைய வாக்கியத்தில் ஒரு சிறு மிரட்டல் இருக்கிறதல்லவா?ஒன்றுமில்லை,இந்த பத்தியை ஒரு கனமான வாக்கியத்துடன் தொடங்க ஆசையாய் இருந்தது.தொடங்கி விட்டேன்.அதற்கு மேல ஒன்றுமில்லை."


சோழவந்தான்,கரட்டுப்பட்டி தொடங்கி.. தல்லாகுளம், கோரிப்பாளையம்,சிம்மக்கல்,ஜெய்கிந்தபுரம்,குரு தியேட்டர்,காலேஜ் ஹவுஸ் என மதுரை நகரின் ஊடே பயணித்து சென்னையில் முடிவற்று தொடர்ந்து கொண்டிருக்கும் பயணம்... முன்னும் பின்னுமாய் கலைத்து போடப்பட்டுள்ள சம்பவங்கள்..முரணான குணாதிசியங்கள் கொண்ட மனிதர்கள்... கொண்ட இத்தொகுப்பு கலைவையான மனநிலையை தந்தது. கால ஓட்டத்தில்,முற்றிலுமாய் தொடர்பு துண்டிக்கப்பட்ட சில முகங்களை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்ய தூண்டுவதே இத்தொகுப்பின் வெற்றி.

வெளியீடு - உயிர்மை

Wednesday, February 2, 2011

Yesterday (2004 ) - THE MOTHER


நாயகியின் பெயரே yesterday.தந்தை தனக்கு yesterday என பெயரிட்டதை குறித்தான அவளின் சிறு விளக்கம், தன் மகளுக்கு அவள் Beauty என பெயரிட்டுள்ளதை நியாயபடுத்த போதுமானது.தூரத்து நகரமொன்றில் வேலை செய்யும் கணவனின் வரவை எதிர் நோக்கி,ஏழு வயது மகளுடன் அமைதியாய் கழியும் நாட்கள் அவளுக்கானவை.தாயும் மகளும் பேசிக்கொள்ளும் காட்சிகள் கொள்ளை அழகு.."நமக்கு ஏன் சிறகுகள் இல்லை...பறவையை போல..வேகமாய் உயரமாய் சென்றிட..","ஓடை நீரானது நிலத்தில் இருந்து மலைக்கு செல்லாதது ஏன்.......?" என சிறுபிள்ளையின் வியப்பும்,கேள்விகளும் நிறைந்த உலகினுக்குள் மலர்ந்த சிரிப்புடன் இவளும் பயணிக்கும் தருணங்கள்...உன்னதம்.

அழகும்,அமைதியும் நிறைந்த கிராமம்,அவ்வூரின் பள்ளிக்கு புதிதாய் வரும் ஆசிரியை..தாய் மற்றும் மகளின் பேரன்பிற்குரிய தோழியாய் மாறிப்போவது,குழாய் அடியில் சந்திக்கும் பெண்களின் வம்பு பேச்சுக்கள்,Yesterday க்கு நிகழும் எதிர்பாரா நிலையை அக்கிராமத்தினர் எடுத்துக்கொள்ளும் விதம்,கிராமங்களுக்கு அரசாங்கம் மறுத்தலிக்கும் மோசமான மருத்துவ வசதிகள் என யாவும் வெகு இயல்பாக படமாக்கப்பட்டுள்ளன.

ஏதோ ஒரு நோயின் அறிகுறிகளை கொண்டு,Yesterday அவதிப்படுவது சலனமில்லாமல் முதல் காட்சியில் இருந்தே தெரிவிக்கப்படுகின்றது.மெல்ல மெல்ல வீரியத்தை உணரும் பொழுது..நிலை குலைந்து போகாமல், எதிர்காலம் குறித்து திடமான முடிவு செய்யும் பக்குவபட்ட பெண்ணாக Yesterday இருக்கிறாள்."Your body is strong enough to resist the virus" என கூறும் மருத்துவரிடம்.."No,my mind is strong" என்கிறாள்.

எய்ட்ஸ் நோயின்மோசமான விளைவுகளை இத்தனை மென்மையாக சொல்ல இயலுமா என்றிருந்தது. கணவனின் போக்கால் அழகான குடும்பம் சிதைந்து போவதாக காட்டி இருந்தால் இத்திரைப்படம் முழு மதிப்பை பெற்றிருக்காது.மாறாக நோயாளிக்கு தேவையான மன உறுதியை yesterdayயின் மூலம் அழுத்தமாகவே பதிவு செய்கின்றது ஆர்ப்பாட்டம் இல்லாத காட்சிகளின் வழியே.

நோயால் பீடிக்கப்பட்டு ஊர் திரும்பும் கணவனை கவனித்து கொள்ள அவள் எடுத்து கொள்ளும் பிரயத்தனங்கள் கடுமையானவை.முகம் சுளிக்கும் கிராமத்தினரிடம் இருந்து அவனை பாதுகாத்து,கிராமத்திற்கு வெளியே தனியொரு வீட்டை உருவாக்கி கவனித்து கொள்ளும் yesterday ராட்சச பலம் பொருந்திய பெண்ணாக தோற்றம் கொள்வதில் வியப்பில்லை.

கொண்ட உறுதியுடன் மகளை முதல் நாள் பள்ளியில் சேர்க்கும் வரை நோயின் தீவிரத்தை நெருங்க விடாமல் மனவலிமை மிக்க பெண்ணாக Yesterday.வெள்ளந்தி சிரிப்பும் ,உணர்ச்சிபூர்வமான நடிப்புமாய் Yesterdayவாக வரும் லிலிடீயின் நடிப்பு அபாரம்.அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக புகுத்தப்பட்ட காட்சிகளோ..பிரச்சார நெடியோ சிறிதும் இல்லாத கதையமைப்பு.படிப்பறிவில்லாத,மனவலிமை பொருந்திய ஒரு தாயின் உணர்வு பூர்வமான பயணம்.எளிதில் மனதைவிட்டு அகல கூடியவள் அல்ல Yesterday .

Wednesday, January 12, 2011

ஹீப்ரு மொழிச் சிறுகதைகள்

ஹீப்ரு மொழிச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான "Not Just Milk and Honey " யின் தமிழாக்கம் "பூந்தென்றலோ வாழ்க்கை" என்னும் இத்தொகுப்பு. மொழிபெயர்ப்பு கதைகள் தரும் வினோத மனநிலையை சற்று அதிகமாகவே இச்சிறுகதைகளில் பெற முடிந்தது.அறிமுகமற்ற தேசமும்,அதன் மக்களும் கற்பனையில் இயல்பாய் விரிவது மொழிப் பெயர்ப்பின் வெற்றி.இதில் அது சிக்கலின்றி சாத்தியப்பட்டுள்ளது..புலம் பெயர் வாழ்வின் துயரங்களும்,தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களால் அலைகழிக்கப்படும் யூதர்களின் சோக நிலையும் இக்கதைகளின் ஊடே முன்வைக்கபடுகின்றன.பெரும்பாலான கதைகள் பிரிவின் வாதையோடும், யுத்த காலத்தின் பதற்றத்தோடும் பிரியமானவர்களுக்காய் காத்திருக்கும் சபிக்கப்பட்ட காதலிகளை குறித்தவை.

"....இனப்படுகொலைகள்,போர்,பெரும் அரசியல் மாற்றங்கள் என்று அல்லல்பட்டு வாழ்ந்த காலங்களில் மாற்றமும் அமைதியும் வேண்டி துடித்த துடிப்புகளையும்,ஏற்பட்டு வந்த மாற்றங்களை பிரதிபலித்து,அவற்றை தன்னுள்ளே ஒரே அங்கமாகக் கொண்டு ஹீப்ரு படைப்பிலக்கியம் உருவாகிற்று....."

- முன்னுரையில்


இத்தொகுப்பில் என்னை கவர்ந்த சில கதைகள்..........

"கிளாரா ஷியாதோவின் அழகிய வாழ்க்கை" - யோராம் கனியுக்

ஒரு பெண்ணின் சிறு வயது தொடங்கி மரணம் வரையிலான சம்பவங்களின் அழகிய கோர்வை இக்கதை.இழப்புகளை மட்டுமே கொண்டு நகரும் கிளாராவின் வாழ்க்கை போர் கால பயங்கரத்தின் ஊடே சொல்லப்படுகின்றது.பிரியத்திற்குரிய தந்தையின் மரணம்..கிறிஸ்துவ பாதரியாய் தூர தேசம் போன மகன்..காதலனின் எதிர்பாரா மரணம் ..என தொடர்ச்சியான வருத்தங்களுக்கிடையே அவளை உயிர்ப்பித்து கொண்டிருப்பது சிறுவயதில் அவள் கண்டிருந்த அந்த பசிய பொன் நிற கண்கள்.அந்த கண்களுக்கு உரிமையானவன் சாமுவேல் அபுமென்..சுழற்றி அடித்த வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை தன் பால்ய சிநேகிதன் அபுமேனோடு கழித்திட தான் கிளாரா அத்தனை துன்பங்களையும் கடந்து வந்திருக்கிறாளோ என்னும் படியான முடிவு.தேர்ந்த நாவலின் குறு வடிவமாகவே இக்கதை தோன்றியது.




"பன்றியை உடைத்தல்" - எட்கர் கீரத்

பொம்மையின் மீது பேரன்பு கொண்ட சிறுவனின் அகவுலகை நேர்த்தியாய் சொல்லும் கதை.வேண்டும் பொம்மைகள் அனைத்தும் எல்லா சிறுவர்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை.கிடைக்கும் பொம்மைகளிடம் அவர்கள் கொள்ளும் பிரியம்,அவற்றோடு வரிந்து கொள்ளும் அவர்களுக்கே உரித்தான ப்ரேத்யேக உலகம் நாம் உணர்ந்து உட் புக முடியாதது.சிம்சன் பொம்மை வேண்டி,அது கிடைக்காது மாற்றாய் பெற்ற பன்றி உண்டியல் பொம்மையோடு சந்தோஷப்பட்டு கொள்ளும் சிறுவன்,அதன் வருகையையும் விலகலையும் நேரடியாய் நம்முடன் பகிர்கின்றான்.சேமித்து வைத்திருக்கும் பணத்திற்காய் உடை பட போகும் பொம்மையை,தந்தையிடம் இருந்து காக்கும் பொருட்டு அதை யாரும் அறியாமல் வயல் வெளியில் விட்டு வீடு திரும்பும் அச்சிறுவனின் மீது இனம் புரியா பற்றுதல் வருவதென்னவோ உண்மை.

"வெள்ளை" - லீஹ் எய்னி

குற்ற உணர்ச்சியில் உழலும் சராசரி மனிதனின் உணர்வுகளை வெகு அருகில் கண்டடைந்த உணர்வை தரும் இக்கதை இத்தொகுப்பில் குறிப்பிட தகுந்த ஒன்று.சோம்பல் நிறைந்த பகல் பொழுதொன்றில், மன சோர்வில் இருந்து முழுதுமாய் விடுபட முயன்று தோற்கும் தனிமையில் சந்திக்க நேரும் சிறுவனுக்காய் உடைகள் தைக்க ஒத்து கொள்ளும் தையல்காரன் - அச்சிறுவனோடு வரும் பெண்ணிடம் பெரும் உபகாரம் - வெகு நாட்களாய் அவ்வுடையை வாங்க வராத அவர்களுக்காய் காத்திருக்கும் தருணங்கள் - சிறுவனின் மரணம் - வெள்ளை நிறம் ஏற்படுத்தும் மரண பீதி என இக்கதை குறியீடுகளை கொண்டு கலவரமானதொரு மனநிலைக்கு இட்டு செல்கின்றது.

"ஒரு நல்ல இடம்" - ரூத் அல்மோக்

இக்கதை இவ்வாறாக தொடங்குகின்றது..

"ஸிலா கஸ்தான் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய வாழ்க்கையில் இரண்டே விருப்பங்கள் தான் உண்டு.ஒன்று அவளது மகன் அரிலாஹ் மற்றது அவளுடைய பாலாலைகா.........."

இவ்விரு வரிகளில் இக்கதை முழுதுமாய் அடங்கி விடும்.தன் பிரியத்திற்குரிய இசைக்கருவியை இசைப்பதில் மகனும் வல்லவன் ஆக வேண்டும் என விரும்பும் தாய்.அவ்விருப்பத்தை தனக்குள்ளே வைத்து அவன் போக்கில் விடுகிறாள்.போரில் சில காலம்,தந்தையின் தோல் தொழிற்சாலையில் சில காலம்,இறுதியாய் நிரந்தரமாய் பிரிந்து தூர தேசம் செல்லும் அரிலாஹ், இசைப்பதை அவள் ஒருபோதும் கேட்டாலில்லை.மகனை நினைத்து மலை மேடுகளில் - வெளிச்சமற்ற வீட்டு முற்றத்தில் - நாடோடி பாடல்களை தன் இசைக்கருவியில் இசைத்து கொண்டே இருந்த ஸிலாவின் பாடல்கள் குறித்தான விவரணைகள் - கவிதை.ஸிலாவின் பிராத்தனைகள் ஏற்று கொள்ளப்படுகின்றன இறுதியாய் - திடீரென தொலைந்து போகும் அரிலாஹ்,பல வருட தேடலுக்கு பிறகு நாடோடி இசைக் கலைஞனாய் கடற்கரையோரம் சுற்றி அலைந்ததாய் அறியப்படுகிறான்.அதனினும் நெகிழ்ச்சியான செய்தி ஒன்றும் இக்கதையில் உண்டு.

"தெருவின் குறுக்கே மோர்கானா" - யெகுடித் ஹென்டெல்


" கதவின் இடைவெளிகளில் நுழைந்து வந்த ஒளி கசங்கிக் கிடந்த படுக்கை விரிப்பிலும் தலையணை மீதும் வெளிறிய கோடுகளை வரைந்தது.படுக்கையில் உட்காரவும் அஞ்சினால்.அவள் முகம் குளிர்ந்து போய் இருந்தது.கன்னத்தில் கவனத்தோடு லேசாக தட்டிக் கொண்டால்.யாருடைய கரங்களில் யார் சுருண்டு கிடந்தது என்பதை நினைத்து பார்க்க முயன்றால்.ஒளி வண்ணத்து பூச்சிகள் படுக்கையில் நடனமாடின.அவள் கைகளிலும்,தோளிலும் தங்க வண்ண ஒளிக்குமிழ்கள் மிளிர்ந்தன..........."

இத்தொகுதியில் எனக்கு மிகப்பிடித்த கதை.எப்போதுக்குமான தேவதை கதைகளை ஒத்திருந்தது காரணமாய் இருக்கலாம்.சில நாட்கள் தன்னோடு இருந்து,பின் சொல்லாமல் விட்டு சென்ற காதலனை(?), எதிர் நோக்கி காத்திருக்கும் யுவதியை குறித்த கதை.காத்திருத்தலின் வலிக்கு நினைவுகளே ஒத்தடம்.அவன் பரிசளித்து சென்ற வெள்ளை நிற,பூ வேலைபாடுகள் கொண்ட குடையுடன் வீதியில் தோன்றும் மோர்கானா - அவன் சார்ந்த நினைவுகளை அசை போட்டபடி - பருவ கால மாற்றங்களில் கூட அக்கறை இன்றி, தான் மேகங்களின் மீது நடப்பதாய் சொல்லி திரிகிறாள். அவனோடிருந்த ஒவ்வொரு நாளும் அவளின் நினைவுகள் வழியே வாசகனுக்கு விவரிக்கபடுகின்றது.நினைவுகளில் மட்டுமே மூழ்கி திளைக்கும் அவளுக்கேயான காதல் கணங்கள்...அற்புதமான கதை.

உலகின் மிகத் தொன்மையான மொழி ஒன்றின் இலக்கியம் எவ்வாறிருக்கும் என்னும் ஆவல் மேலிட வாசிக்க தொடங்கினேன். கொஞ்சமும் ஏமாற்றம் அளிக்காத கதைகள்.யூதர்களின் வாழ்க்கைமுறை,பிரதான தொழில்கள்,யுத்த காலத்தில் சாதாரணர்களின் நிலை,இசை மீது அவர்களுக்கிருந்த அதீத பிரியம் குறித்தான செய்திகள் சுவாரஸ்யமானவை. எல்லா கதைகளின் பின்னணியிலும் ஒரு குரல்,மென் சோக பாடல் ஒன்றை தொடர்ந்து இசைத்தபடி வருவதான மாயை.... ஸிலா கஸ்தானின் பாடலைப் போல,மோர்கானாவின் காதலைப் போல!

தொகுப்பாசிரியர் - ஹயா ஹோப்மேன்
தமிழாக்கம் - த.சித்தார்த்தன்
வெளியீடு - நேசனல் புக் ட்ரஸ்ட்
விலை - 60 ரூபாய்