Monday, August 9, 2010

வண்ணதாசனின் "கடைசியாய் தெரிந்தவர்" - சிறுகதை

"அவரது படைப்புலகம் கருணையும் சௌந்தர்யமும் கலந்தது"

- வண்ணநிலவன்

அன்பென்னும் ஒற்றை புள்ளியை சுற்றி கட்டமைக்கபட்டதாகவே இருக்கின்றது வண்ணதாசனின் கதையுலகம்.தொடர்ந்து அவ்வெழுத்தின் மீதான பிரியம் அதிகரித்து வரவும் அது ஒன்றே காரணம்."கடைசியாய் தெரிந்தவர்",மருத்துவமனையில் நண்பனின் குழந்தைக்காக உடன் இருக்கும் நாயகனின் பார்வையில்,அந்நாட்கள் பகிரப்படுவதான கதை.மருத்துவமனையில் இரவு தங்கலும்,அந்த அசாதாரண சூழ்நிலை தரும் தயக்கங்களும், அச்சமும்,நோயாளி சமநிலை வரும்வரை கொள்ளும் மன உளைச்சலும் வார்த்தைகளில் அடக்கிட முடியாதவை.பிரியத்திற்குரிய உறவுகளுக்காக மருத்துவமனையில் செலவிட்ட நாட்கள்,நினைவேட்டில் நிரந்தரமாய் மறைத்து வைக்க வேண்டியவை.அதிலும் முக்கியமாய் மருத்துவமனை இரவு தங்கள்,அமானுஷ்ய உணர்வை தந்து இம்சிக்கும் அனுபவம் அது.ஏதோ ஒரு நம்பிக்கை அந்த கணங்களை கடக்க அவசியம் ஆகின்றது.

"இந்த தைரியம் தான் மறுபடி மறுபடி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆஸ்பத்திரியை நோக்கி யாருடனாவது என்னை செலுத்தி கொண்டிருக்கின்றது"





குறுகலான அந்த பாலி கிளினிக்கின் காட்சிகளை விவரிப்பதோடு தொடங்கும் சிறுகதை.மெல்ல மெல்ல மருத்துவமனையின் அன்றாட காட்சிகளை விரிவாய் பகிர்கின்றது.நோயுற்று இருப்பவரின் உடன் இருப்பவர்கள் நோயாளி தேறியவுடன் கொள்ளும் மனநிலையை கீழ் உள்ள வரிகள் சிறப்பாய் விவரிக்கின்றன,

"பக்கத்துக்கு அரைப் படுக்கைகாரரிடம் வழிய போய் பேசுவார்கள்.அனுதாபம் கொள்வார்கள்.."டூட்டி முடிந்து விட்டதா சிஸ்டர்?" என நர்சிடம் விசாபார்கள்"............"நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கவனித்திருந்த நோயாளியின் உடல்நலம் தேறிவிட்டது என்று"

நண்பனின் குழந்தைக்காய் இரவும் பகலும் அத்தம்பதியினருடன் உடனிருக்கும் நாயகன்,குழந்தையின் உடல் நிலை தேறியதும் நண்பனின் மனைவி கொள்ளும் மாற்றத்தை உணர்ந்து கொள்ளும் தருணம் நெகிழ்ச்சியானது.நண்பன் மற்றும் அவனது மனைவியின் அசாதாரண சூழலுக்குள் தன்னையும் பொருத்தி கொண்டு மருத்துவமனையில் உலாவரும் நாயகனின் பார்வையில் விரியும் இச்சிறுகதை ஒழுங்கற்ற அந்நாட்களை நுட்பமாய் பகிர்கின்றது.

இச்சிறுகதையின் கடைசி பகுதி இன்னும் அழுத்தமானது.முன்பின் அறிமுகம் அற்ற நபர்களிடம் வேறு ஒரு பெயர் கொண்டு நிற்பது சுவாரஸ்யத்தை மீறிய ஒரு சங்கடம்.பக்கத்துக்கு அறையில் இருக்கும் கபீர் என்னும் நோயாளி தன்னை வேறொரு சங்கரலிங்கம் என கருதி நலம் விசாரித்து யாரோ ஒரு பெண்ணை குறித்து "வசந்தா இப்போ எங்கே இருக்கா?" என ஆர்வமாய் கேட்கின்றான்,அந்த கேள்வியின் துரத்தலின் பொருட்டே அவன் தன்னை அணுகி இருக்கின்றான் என அறிந்து "ஜபல்பூரிலே.." சொல்லி வெளியேறுகிறான் நாயகன்.

"எனக்கு ஜபல்பூர் தெரியாது.வாய்க்காலடி வீட்டுச் சங்கரலிங்கம் தெரியாது.......சில மனுஷர்களோடு இப்போது கடைசியாய் இந்த கபீரையும் தெரியும்" என முடிகின்றது இச்சிறுகதை.

திடிரென யாவும் கலைந்து போனதாய் மாறிவிடும் சூழலில்,அன்றாடங்களை ஒதுக்கி விட்டு மொத்தமாய் நோயாளியின் மீது கவனத்தை குவித்து..இரவும் பகலும் அலுக்காமல் உடன் இருந்து கவனிக்க செய்வது எது?அன்பு ஆச்சர்யங்கள் நிறைந்தது,இயல்புலகம் மாறி போகும் தருணத்தில் அது அதிகமாய் உணரப்படுகின்றது.மனித உறவுகள் அற்புதமானவை என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் எழுத்து வண்ணதாசனுடையது.

இவ்வேளையில் எஸ்.ராவின் "பி.விஜயலக்ஷ்மியின் சிகிச்சை குறிப்புகள்" சிறுகதையை குறிப்பிட வேண்டும்.வண்ணதாசனின் சிறுகதை எத்தனை மென்மையாய் மருத்துவமனை நாட்களை பகிர்கின்றதோ அதற்கு நேரெதிராய் எஸ்.ரா தன சிறுகதையில் உறவுகளால் கைவிட பட்ட ஒரு பெண்ணின் மோசமான மருத்துவமனை நாட்கள் குறித்து பகிர்கின்றார்.மனநடுக்கம் கொள்ள செய்யும் விஜயலக்ஷ்மியின் கடந்த கால குறிப்புக்கள் தரும் அதிர்ச்சியில் இருந்து எளிதில் மீள முடியாது.இவ்விரு கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் என்னை வெகுவாய் பாதித்தவை,பிரியமானவர்களுக்காய் மருத்துவமனை நாட்களை கடந்து வந்த எவர்க்கும்.

வண்ணதாசன் கதைகள்
வெளியீடு - புதுமைப்பித்தன் பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

21 comments:

ரா.கிரிதரன் said...

/நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கவனித்திருந்த நோயாளியின் உடல்நலம் தேறிவிட்டது என்று/

தீவிரமான உணர்வுகளை சில வார்த்தைகளில் சொல்லிச் சென்றிருக்கிறார்.இந்த இடத்தில் படிப்பதைச் சற்றே நிறுத்தி நம் அனுபவங்களை யோசிக்காமல் இருக்க முடியாது.

நன்றி.

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றிங்க.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//அன்பென்னும் ஒற்றை புள்ளியை சுற்றி கட்டமைக்கபட்டதாகவே இருக்கின்றது வண்ணதாசனின் கதையுலகம்.தொடர்ந்து அவ்வெழுத்தின் மீதான பிரியம் அதிகரித்து வரவும் அது ஒன்றே காரணம்.//

உண்மைதான்!

-ப்ரியமுடன்
சேரல்

அன்பேசிவம் said...

leka, peythalum oythalum padichittu iruken.... :)

லேகா said...

நன்றி கிரிதரன்.

//தீவிரமான உணர்வுகளை சில வார்த்தைகளில் சொல்லிச் சென்றிருக்கிறார்//

எத்தனை மோசமான நிலையையும் அழகியல் கொண்டு அழுத்தமாக சொல்லிட வண்ணதாசனால் மட்டுமே முடியும்.

லேகா said...

நன்றி நர்சிம் :-)

நன்றி சேரல்

லேகா said...

முரளி,

வண்ணதாசனின் "பெய்தலும் ஓய்தலும்" நான் வாசித்ததில்லை. சமீபத்திய தொகுப்பா?

கார்த்திகைப் பாண்டியன் said...

வெகு சமீபத்தில்தான் தனுமை படிச்சேன்.. மொத்தத் தொகுப்பை சீக்கிரம் வாங்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி தோழி.:-)

a said...

Thanks for sharing....

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றிங்க.

உங்களது வாசிப்பு அனுபவத்தை மிக அழகாக, சௌந்தர்யமாக பகிர்ந்து உள்ளீர்கள். நாங்களும் சேர்ந்து வாசித்த ஒரு அனுபவம் கிடைக்கிறது.

லேகா said...

@கார்த்திகை பாண்டியன்,

நன்றி.

தனுமை, வண்ணதாசனின் கிளாசிக் சிறுகதை.மழை நனைத்த சாலையில் தனுவின் வருகையை எதிர் நோக்கும் நாயகன் "தனியாகி..தனுவாகி..." உருகும் தருணம் .......பெரு மழையின் சமயம் டெய்சி வாதிச்சியிடம் சங்கடம் கொள்ளும் தருணம் என மழையின் பின்னணி கொண்டு மனித மனங்களை முன்னிறுத்தி இருக்கும் விதம் அழகு!!எனக்கு மிகப்பிடித்த சிறுகதை அது..

லேகா said...

நன்றி யோகேஷ்

நன்றி ராம்ஜி

கார்த்திகைப் பாண்டியன் said...

“NCBH" வெளியிட்டு பிரபஞ்சன் தொகுத்த சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒண்ணை சமீபத்துல வாசிச்சேன் தோழி.. அதுலதான் தனுமை இருந்தது.. அதுபோக “ஒரு வருடம் கழிந்தது”, “எஸ்தர்” எல்லாம் இருந்தது.. முடிஞ்சா வாங்கிப் படிங்க..

அன்பேசிவம் said...

ஆமாங்க லேகா இதுதான் வண்ணதாசன் எழுதியதில் கடைசியாய் வெளிவந்த தொகுப்பு. இப்போதான் ஆரம்பித்திருக்கிறேன். முதல் கதையிலிருந்தே வெளிவர முடியவில்லை. சிதம்பரம் சில ரகசியங்கள்.
லேகா, எல்லோருக்கும் அன்புடன் கடித தொகுப்பு என்ன பதிப்பகம்? நான் நிறைய தேடிவிட்டேன், கொஞ்சம் உதவ முடியுமா?

அன்பேசிவம் said...

அநேகமாய் இந்த ஒரு புத்தகம் வாங்கிவிட்டால் வண்ணதாசனை முழுமையாக சொந்தமாக்கிக்கொண்ட ஒரு திருப்தி கிடைக்கும். :-)

லேகா said...

@கார்த்திகை பாண்டியன்,

பிரபஞ்சனின் தொகுப்பு குறித்த அறிமுகத்திற்கு நன்றிங்க.இதே போல பாவண்ணனின் எனக்கு பிடித்த சிறுகதைகள் தொகுப்பும் வாசிக்க வேண்டிய ஒன்று.

http://yalisai.blogspot.com/2008/10/blog-post_31.html

லேகா said...

முரளி,

//இந்த ஒரு புத்தகம் வாங்கிவிட்டால் வண்ணதாசனை முழுமையாக சொந்தமாக்கிக்கொண்ட ஒரு திருப்தி கிடைக்கும். :-)//

எனக்கு "பெய்தலும் ஓய்தலும்" தொகுப்பு அவ்விதமே :-)

"எல்லாருக்கும் அன்புடன்" தொகுப்பில் அப்பாவின் கடிதமும் இருந்ததால் அது இலவச பிரதியாய் அனுப்பி வைக்கபட்டுள்ளது.புத்தக வெளியீட்டாளர் விவரங்கள் பார்த்து சொல்கின்றேன்.

லேகா said...

முரளி,

"எல்லாருக்கும் அன்புடன்" வைகறை பதிப்பகத்தால் 1995 ஆம் ஆண்டு வெளியிடபட்டுள்ளது.தற்சமயம் கிடைக்கும் இடம் குறித்து எனக்கு தெரியவில்லை :-(

இனியாள் said...

வண்ணதாசனின் மற்றும் ஒரு சிறுகதையை பற்றி சொல்கிறீர்கள், நாம் மிகவும் ரசித்து படித்தவைகளை பற்றி எழுதும் போது நடனமாடிக்கொண்டே எழுதி செல்கிறது பேனா..
வண்ணதாசன் வண்ணநிலவன் பற்றி நீங்கள் வரைந்த சித்திரங்கள் வழியே என் பார்வை சுழல்கிறது.

லேகா said...

நன்றி இனியாள் :-)

தமிழ்நதி said...

வண்ணதாசனின் எழுத்துக்கள் வாசிப்பவருள் பிரியத்தைக் கடத்துபவை. நீண்டநாட்களின் பின் நான் இட்ட பதிவு 'வண்ணதாசன் கடிதங்கள்'பற்றியதாக இருக்கிறது. நீங்களும் அவரைப் பற்றி எழுதியிருப்பது ஒருவகை உடனிகழ்வாக இருக்கிறது. எஸ்.ரா.வின் பி.விஜயலஷ்மியின் சிகிச்சைக் குறிப்புகள்'வாசித்திருக்கிறேன். ஒரு பெண்ணின் நிராதரவான நிலை அந்தக் கதையில் அழுத்தமாகப் பதியப்பட்டிருந்தது. நிறைய வாசிக்கிறீர்கள் போல... பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி லேகா.