Sunday, August 1, 2010
மஜித் மஜிதியின் "பெடார்"
துரோகங்கள் தான் எத்தனை வகை..ஒரு சிறுவனின் உலகினுக்குள் அது நிகழும் பொழுது எழும் சொல்லவியலா மனப் போராட்டத்தை நேர்த்தியாய் வடித்திருக்கும் படம் "பெடார்"(Father).சாலை விபத்தொன்றில் தந்தையை இழக்கும் சிறுவன் மெஹருல்லா தன் தாயையும்,தங்கைகளையும் காப்பாற்ற கிராமத்தை விட்டு பெருநகர் ஒன்றிற்கு பணிக்கு செல்கின்றான்.திரும்பி வரும் ஒரு நாளில்,நண்பன் லத்தீப்பின் மூலம் தனது தாய் மறுமணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்கின்றான்.பணத்தின் பொருட்டே தாய் அவ்வாறு செய்திருக்க கூடும் என எண்ணி அவள் மீதும்,அவள் மணம் புரிந்துள்ள போலீஸ் அதிகாரியான புதிய தகப்பனின் மீதும் கோவமும்..வன்மமும் கொள்ளும் மெஹருல்லா நண்பன் லத்தீப்பின் துணை கொண்டு சிறுபிள்ளைதனத்தோடு தனது எதிர்ப்பினை காட்டுகின்றான்.
மெஹருல்லா மற்றும் லத்தீப்பாக நடித்துள்ள சிறுவர்களின் நடிப்பு அபாரம்.முக்கியமாய் மெஹருல்லாவாக நடித்துள்ள ஹசன் சதேகி,இறுக்கமான முகத்தோடு..துரோகத்தின் வலியை வெளிக்காட்டாது,பிடிவாதாமான மனநிலையை ஒரு காட்சியிலும் தவறவிடாது நடித்துள்ளது வெகுநேர்த்தி.இச்சிறுவனின் நடிப்பிற்காகவே படத்தை மறுமுறை பார்க்கலாம். லத்தீப்பாக "பாரான்" திரைப்படத்தின் நாயகன்.அதே வெகுளி சிரிப்போடு ஒரு கிராமத்து சிறுவனை கண் முன் நிறுத்துகின்றான்.நண்பனுக்காய் ஓடி ஓடி உதவுவதாகட்டும்,பின்பு பயந்து பதறுவதாகட்டும் மறக்கவியலா நடிப்பு.சில முகங்கள் காரணம் அற்று பிடித்து போய்விடுவதுண்டு இவனது போல.
தாயோடு சேராது,தனது பூர்வீக வீட்டை லத்தீப்பின் உதவி கொண்டு புதுப்பித்து அதில் தங்கைகளை கடத்தி வந்து வைத்து கொள்ளும் மெஹருல்லா,அவர்களை தேடி வரும் தந்தையிடம் பேசாது தன் கோபத்தை மௌனத்தால் வெளிக்காட்டுவது,மறுமணம் செய்து கொண்டது,பணத்திற்காக தானே எனக்கூறி தாயிடம் பணத்தை வீசி எறிந்து வாதிட்டு அடிவாங்குவது,தங்கைகளை மடியில் அமர்த்தி கொஞ்சுவது,பெருமழைநாளில் அவர்கள் வீட்டில் கல்லெறிந்து,தோட்டத்தை நாசம் செய்வது என முன்பாதி காட்சிகள் யாவும் மெஹருல்லா அவன் குடும்பத்தின் மீதி கொண்டிருக்கும் அளவற்ற பிரியத்தை,இறந்த தன் தந்தையின் இடத்தை வேறொருவர் இட்டு நிரப்ப இயலும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாத மனநிலையை உணர்ந்திட போதுமானாதாய் இருக்கின்றன.
மெஹருல்லா தனது புது தந்தையிடம் கொண்டிருக்கும் கோவமும்,வன்மமும் அர்த்தமற்றது என்பது அவரை அறிமுகம் செய்யும் (லத்தீப்பின் தங்கைகளை மடியில் அமர்த்தி உணவு உண்ணும் காட்சி) முதல் காட்சியிலேயே உணர்த்தபடுகின்றது.அந்த முரட்டு சிறுவனின் கோவத்திற்கு ஈடு கொடுக்க இயலாது மன உளைச்சல் கொள்ளும் தருணங்களை,உணர்ச்சி குவியலாய் வெகு நேர்த்தியாய் வெளிக்கொணர்ந்திருக்கின்றார் தந்தையாய் நடித்துள்ள முஹமத் கசெப்.மேஹருல்லாவின் தாயை அவர் மணம் முடித்து,அவளின் குழந்தைகள் குறித்தும்,அவர்களின் எதிர்காலம் குறித்தும் மகிழ்ச்சியோடு அவர் உரையாடும் ப்ளாஷ் பேக் காட்சி நெகிழ்ச்சியானது.போலீஸ் அதிகாரியான இவரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து கொண்டு மீண்டும் நகரத்திற்கு ஓடிவிடும் மெஹருல்லாவை தேடி இவர் மேற்கொள்ளும் பயணத்துக்கு பிறகான காட்சிகள் முக்கியமானவை.
மோட்டார் சைக்கிளிலே நகரத்திற்கு சென்று அங்கு மெஹருல்லாவை தேடி பிடித்து,விலங்கிட்டு தம்மோடு கிராமத்திற்கு அழைத்து வருகின்றார்..சுட்டெரிக்கும் வெயிலில்,நேர் எதிர் மனநிலைகொண்ட இருவர் முகம் பார்த்து பேச விருப்பமின்றி மேற்கொள்ளும் பயணம்.....எதிர்பாரா விதமாய் மோட்டார் சைக்கிள் கோளாறினால் ஆள் இல்லா பாலைவனத்தில் இருவரையும் தனிமைபடுத்தி அவர்களுக்குள்ளான இறுக்கத்தை மெல்ல மெல்ல விடுவிக்கின்றது.சேருமிடம் தெரியாது பாலைவனம் எங்கும் இருவரும் அலைந்து திரியும் சமயம் அதீத உடல் சோர்வினால் மெஹருல்லாவை தன்னை விட்டுவிட்டு போகும்படி நிற்பந்திக்கும் தந்தையை விட்டு விலகாது நீர்நிலை கண்டடைந்து அவரை இழுத்து சென்று நீர் அருந்த செய்யும் மெஹருல்லா,அவர் மீதான நேசத்தை உணரும் அற்புத கணத்தோடு முடிகின்றது திரைப்படம்!!
தாய்,தந்தை இருவருக்குமான பிரியங்கள் எவரோடும் பகிர்ந்து கொள்ள கூடியதில்லை.......அவர்களுக்கு மட்டுமேயானது ..!!அவ்வகை பிரியத்தை வேறொருவரோடு பகிரும்படியான சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகும் ஒரு சிறுவன் கொள்ளும் உணர்ச்சி போராட்டத்தை நுட்பமாய் பகிர்கின்றது இத்திரைப்படம்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
உங்கள் எழுத்து நடையில், முழு படமும் பார்த்த உணர்வு.
தாய்,தந்தை இருவருக்குமான பிரியங்கள் எவரோடும் பகிர்ந்து கொள்ள கூடியதில்லை.......அவர்களுக்கு மட்டுமேயானது ..!!அவ்வகை பிரியத்தை வேறொருவரோடு பகிரும்படியான சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகும் ஒரு சிறுவன் கொள்ளும் உணர்ச்சி போராட்டத்தை
இந்த வரிகள் அருமை.
நல்ல பதிவு.
அது ஃபாதர் இல்லை?
நல்ல விமர்சனம்
படம் பார்க்கவேண்டும்
ஏன் ”பெடார்” எனக்குறிப்பிடுகிறீர்கள் ”ஃபாதர்” அல்லவா
நன்றி ராம்ஜி
நன்றி ஜெகதீஷ்குமார்
நன்றி கதிர்
தலைப்பு குறித்து -
மஜிதியின் பெடார் இரானிய திரைப்படம்.பெடார் என்பது பெர்சிய மொழியில் தந்தை என பொருள்படும்.
நல்ல பகிர்வு லேகா !
நல்ல வரிகள் லேகா, மஜிதியின் படங்கள் குறித்து தொடர்ந்து நீங்கள் எழுதி வருவது நிச்சயம் பார்த்து விட வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்துகிறது.
பகிர்விற்கு நன்றி.
நன்றி குட்டி
நன்றி இனியாள். நான் இப்போது தான் மஜிதியின் படங்கள் பார்க்க துவங்கி உள்ளேன். இவரின் "சில்ட்ரன் ஆப் ஹெவன்" எனது விருப்ப பட்டியலில் உள்ளது.
நன்றி நர்சிம் :-)
Post a Comment