Saturday, April 17, 2010

மஜித் மஜிதியின் "பாரான்"...........மண் சேரா மழைத்துளி!!

"பாரான்".......மென்மையான என்பதிற்கு மேலாக ஏதேனும் வார்த்தை இருந்தால் அத்தகைய காதல் கதை.கட்டி பிடித்தும்,கை கோர்த்து திரிந்தும்,கண்களால் ஜாடை பேசி திரியாத மென் காதல்!!கட்டிட கட்டுமான பணி நடைபெறும் இடத்தில பணி செய்யும் லத்தீப்பின் உற்சாகமான காலை பொழுதோடு விரிகின்றன காட்சிகள்.இரானில் குடியேறியுள்ள ஆப்கன் அகதிகள் முகாமில் இருந்து வெகு தூரம் பயணித்து குறைந்த கூலிக்கு அக்கட்டிடத்தில் பணி செய்கின்றனர்.அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அரசு அதிகாரிகளுக்கு பயந்து வேலை செய்யும் சூழ்நிலை.கட்டிட பணி நடக்கும் இடம் குறித்தான காட்சிகள் வெகு நேர்த்தி.




பணியிடத்தில் சாப்பாடு மற்றும் டீ தயார் செய்து கொண்டு நாட்களை மகிழ்ச்சியாய் கழிக்கும் துடுக்கான நாயகன் கதாபாத்திரம் படம் முழுக்க உற்சாகம் குறைவின்றி சித்தரிக்கபட்டுள்ளது.அங்குள்ளவர்களிடம் வம்பிழுத்து கொண்டு,தன சம்பாத்திய பணத்தை வெகு கவனமாய் சேர்ந்து வைத்து தினமும் எண்ணி பார்த்து கொள்ளும் லத்தீப் கட்டிட மேலாளர் மேமாருடன் கொள்ளும் உரையாடல்கள் அவனை குறித்து சுலபமாய் அறிந்து கொள்ள போதுமானவை.கட்டிட பணியின் பொழுது கீழே விழுந்து காயமுறும் நஜாப் என்னும் தொழிலாளி தனக்கு பதில் வேலை செய்ய தன மகன் ரஹ்மத்தை அனுப்புகின்றார். பலகீனமான ரஹ்மத்தால் கடுமையான கட்டிட பணிகளை செய்ய முடியாத காரணத்தினால் லத்தீப்பின் பணி அவனுக்கு தரப்படுகின்றது.தனது சுதந்திரம் மொத்தமாய் பறிபோனதினால் ரஹ்மத்தை வெறுக்க தொடங்கும் லத்தீப்பின் மனநிலை மாற்றம் காண்பது ரஹ்மத் ஒரு பெண் என்று அறியும் பொழுது.

அவனையும் அறியாது அப்பெண்ணின் மீது ஏற்படும் பிரிய கனங்கள் கவிதைகள்!!திரை சீலையில் அவளின் கூந்தல் விரித்த உருவத்தை பார்த்து பெண்ணென கண்டு கொள்ளும் காட்சி...சக தொழிலாளர்களிடம் இருந்து அவளை பாதுகாக்க எண்ணி தடுமாறும் பொழுதுகள் ஆகட்டும்...அவளின் பொருட்டு தலை சீவி,பளிச்சென ஆடை உடுத்தி உற்சாகமாய் வலம் வருவதாகட்டும்..அடையாள அட்டை குறித்து அதிகாரிகள் சோதனையிட வரும் சமயம் அவளை தப்பிக்க வைக்க பெரும் முயற்சி எடுத்து வெல்வதாகட்டும்...முழுக்க முழுக்க நாயகனின் ஆக்கிரமிப்பு தான்!!



அதிகாரிகளுக்கு பயந்து தப்பி செல்லும் நாயகியின் பிரிவை அவன் கடக்கும் நாட்கள் இன்னும் அழுத்தமாய் காதலை பதிவு செய்கின்றன.இதுநாள் வரையில் அவன் வெறுக்கும் புறாக்கள் காதலின்/காதலியின் நிமித்தம் அவனுக்கு நெருக்கமாய் ஆகின்றன.பெயர் தெரியா காதலியை தேடி லத்தீப் தொடங்கும் பயணம் இன்னும் சுவாரஸ்யமானது.தேடலின் நிமித்தம் காதல் என்னும் பொழுது சுவாரஸ்யத்தை மீறிய அழகொன்று சேர்ந்து கொள்கின்றது. எங்கெங்கோ தேடியலைந்து அவளின் இருப்பிடத்தை அடையும் அவன் ஏழ்மையின் பொருட்டு அவளின் கஷ்ட ஜீவனை பார்த்து வெறுமையோடு திரும்புகின்றான்..இது நாள் வரையில் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் மேமாரிடம் பொய் சொல்லி பெற்று கொண்டு நண்பர் ஒருவரின் மூலம் அவளின் தந்தையிடம் கொடுக்க சொல்கின்றான்.பரிதாபமாக அந்த முதியவரோ அப்பணத்தை கொண்டு ஆப்கான் சென்றுவிடுகிறார்.

அந்த அதிர்வை வெகு இயல்பாய் ஏற்று கொள்ளும் லத்தீப்..அவளுக்கு உதவும் பொருட்டு தனது அடையாள அட்டையை அடகு வைத்து பணம் மீட்டுகிறான்.இம்முறை பணத்தை தான் நேரில் சென்று கொடுக்கின்றான்.அச்சமயமே அவளின் பெயர் பாரான் என அறிகிறான்.மேலும் ஆப்கான் செல்ல அவளின் தந்தை செய்து வரும் ஏற்பாடுகள் குறித்த செய்தியை தாங்கி திரும்புகின்றான்.இறுதி காட்சியில் அவர்கள் பயணத்திற்கு சாமன்களை வண்டியில் வைக்க உதவும் பொழுது சிதறிய பொருட்களை இருவரும் எடுக்கும் இறுக்கமான சூழ்நிலையில் காதல் வெளிப்படுகின்றது ஒற்றை பார்வையில்.தனக்கான ஒரே அடையாளத்தையும்,சம்பாதித்த மொத்த பணத்தையும் காதலுக்காய் இழந்து..தனித்து நிற்கும் லதீப்பிற்கு துணையாய் மழை வருவதோடு முடிகின்றது..பாரான் என்பதிற்கு பொருள் மழை என்னும் வகையில் இக்காட்சி உணர்ந்துவது ஏராளம்.


பார்வையாளனை எந்தவித அதிர்விற்கும் உட்படுத்தாமல், மிக மென்மையான காதலை ஆப்கன் அகதிகளின் அவல வாழ்க்கையோடு பகிர்கின்றது இத்திரைப்படம்.மெல்லிய புன்னகையோடு கடந்த காட்சிகள் பல..மழை கிளறிவிடும் மண்வாசனைக்கு ஒப்பான அனுபவம்!!

23 comments:

KARTHIK said...

// மனநிலை மாற்றம் காண்பது ரஹ்மத் ஒரு பெண் என்று அறியும் பொழுது.//

வழக்கம்போல சஸ்பென்ஸ் ஒடச்சிட்டீங்களே :-))

அந்த கடசி ஸீன் தாங்க எனக்கு ரொம்ப புடிச்சது.அவள் அவன பாத்து ஒரு வார்த்த பேசீரமாட்டாளான்னு ஏங்க வெச்சுடுவார் மனுசன் :-((

செம படம் மஜித்தவரோட படங்கள்லையே எனக்கு ரொம்ப புடிச்ச படங்க :-))

கார்க்கிபவா said...

பார்க்க தூண்டுகிறது.. ம்ம்

Jegadeesh Kumar said...

நல்ல பதிவு

அன்பேசிவம் said...

நேத்துதான் இந்த படமும் வில்லா ட்ரீயும் பார்த்தேன், எழுதலாம்ன்னு இருந்தேன். நீங்க முந்திகிட்டிங்க. :-)

நல்லா எழுதியிருக்கிங்க...

butterfly Surya said...

மஜித் என்றுமே என் மனம் கவர்ந்த இயக்குநர். நேற்று முன் தினம் மஜிதியின் பிறந்த நாள்.

ஸ்கீரின் சர்வதேச விருதுடன் 13 உலக விருதுகளை வென்றது இத்திரைப்படம்.

நன்றி லேகா.

ராம்ஜி_யாஹூ said...

நன்றி லேகா. உங்களின் எழுத்து அந்த படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது.

லேகா said...

கார்த்திக்,

நன்றி.

சஸ்பென்ஸ் உடைக்காம இப்படம் குறித்து சொல்ல முடியுமா என்ன? :-))

//அந்த கடசி ஸீன் தாங்க எனக்கு ரொம்ப புடிச்சது.அவள் அவன பாத்து ஒரு வார்த்த பேசீரமாட்டாளான்னு ஏங்க வெச்சுடுவார் மனுசன்//

அதே..அதே

லேகா said...

நன்றி கார்க்கி

நன்றி ஜெகதீஸ்

நன்றி முரளி :-)

லேகா said...

நன்றி சூர்யா :-)

இத்திரைப்படம் பெற்ற விருதுகள் குறித்து இணையத்தில் தேடினேன்,தகவலுக்கு நன்றி.

லேகா said...

நன்றி ராம்ஜி

Prasanna said...

படத்தை பற்றி சொன்ன விதம் அற்புதம்.. உடனே பார்க்க வேண்டும் என்று தூண்டுகிறது.

லேகா said...

நன்றி பிரசன்னா

Haripandi Rengasamy said...

அருமையான கதை .. அருமையான விவரிப்பு ...வாழ்த்துக்கள் ...

லேகா said...

நன்றி ஹரி :-)

AkashSankar said...

படம் நான் பார்க்கவில்லை... படம் நான் பார்த்தேன்... உங்கள் பதிவில்... அருமையான நடை...

sen said...

பகிர்ந்த விதம் அழகு :)

Abdul Baais said...

i watch this b4 two years,,these days,, i watch films after i read the criticisms,, but ur article is supersb,,,

லேகா said...

நன்றி இராசராச சோழன்

நன்றி தமிழ்

நன்றி Uzaam

Unknown said...

நான் இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். நான் உணர்ந்த வகையில் உங்களின் விமர்சனம் இருக்கிறது..படத்தின் தொழில்நுட்ப பயன்பாட்டையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அருமையான, முழுமையான படம்.

லேகா said...

Tnx Vijay :-)

sujatha sivaramkumar said...

Hi Lekha,
Thanks for the lovely post.Where and how do you get these movies?
sujatha

லேகா said...

Hi Sujatha,

Thanks :-)

World classic movie series are availble in a DVD shop @ Parsonmannor complex near Annasalai.

hariprasad said...

Hi Lekha,

Nice one! Sorry No, its Nice two!
One the Movie, Two the Blog!

Awesome :)

Hari!