Sunday, March 7, 2010

இந்தியச் சிறுகதைகள் - "பாறைகள்"

நம் தேசத்தின் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள சிறுகதைகளின் இத்தொகுப்பு சமகால இந்திய இலக்கியம் குறித்த தெளிவான பார்வை பெற உதவாவிடினும் இந்திய மொழிகளின் சில காத்திரமான படைப்புகளை தெரிந்து கொள்ள உதவுகின்றது.மேலும் தமிழ் இலக்கியம் குறித்த ஒருவித திருப்தியும்,மகிழ்ச்சியும் உண்டாகின்றது.எதன் பொருட்டும் நமது படைப்புகள் குறைந்தவை அல்ல என்பதும் தெளிவாய் புலப்படுகின்றது.இத்தொகுதியின் பெரும்பால கதைகள் விளிம்பு நிலையின் அவலங்களை சொல்லுபவை.தேசம் முழுதும் பொதுவாய் பரவி கிடக்கும் ஏழ்மை இக்கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க போதுமானதாய் இருப்பது வருத்தமே.இத்தொகுதியில் உள்ள பிறமொழி எழுத்தாளர்கள் குறித்த சிறு குறிப்புகள் அவர்கள் குறித்து அறிய எளிதாய் உதவுகின்றது.


மொகள்ளி கணேஷின் "காளி" (கன்னடம்)- தமிழில் பாவண்ணன்

கன்னட இலக்கியத்தில் குறிப்பிடதக்க தலித் எழுத்தாளர் மொகள்ளி கணேஷ்.தலித் சேரி ஒன்றில் வாழ்ந்து மறைந்த காளி என்னும் பெண்ணொருத்தியின் நினைவுகளை நாயகன் மீட்டெடுக்கும் இக்கதை,தலித் சிறுவர்கள் ஒரு வேலை உணவிற்காக எடுத்துகொள்ளும் பிரயத்தனங்களை,நல்ல உணவின் பொருட்டும்,உடையின் பொருட்டும் கொண்டிருக்கும் கனவுகள்,அது நிறைவேற பண்ணை கூலிகளாய் தொடர்ந்திட கூட தயங்காத மனநிலைக்கு தள்ளபட்டிருப்பதையும் விவரிக்கும் வரிகளில் பதற்றம் கொள்ள செய்கின்றன.பெருமாள் முருகனின் "கூள மாதாரி" மற்றும் இமயத்தின் "கோவேறு கழுதைகள்" நாவல்கள் விரிவாய் சொல்லியதை சிறுகதை வடிவில் படிப்பதாய் இருந்தது.

குஷ்வந்த் சிங்கின் "ஒரு பெண்மணியின் சித்திரம்" (பஞ்சாபி) - தமிழில் முத்துமோகன்

வெகு அழகானதொரு கதை.தனது பாட்டி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் இக்கதையில் கால சுழற்சியில் சிறுவர்கள் படிப்பு,வேலை என திசை மாறி கொஞ்ச கொஞ்சமாய் பாட்டி,தாத்தாவிடம் இருந்து அந்நியபட்டு போவதை தனக்கேயான பகடி கலந்து கூறி உள்ளார்.

பிரிஜ் மோகனின் "வால்" (சிந்தி)- தமிழில் சுந்தர்ஜி

விசுவாசத்தின் பெயரில் எதையும் செய்ய தயங்காத இன்றைய அலுவலக சூழலை பகடி செய்யும் இக்கதை,அதீத நன்றி உணர்ச்சியின் காரணமாய் நாயகனுக்கு வால் முளைப்பதும்,அதன் தொடர்ச்சியாய் அவன் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளும் என நகைச்சுவையாய் நீள்கின்றது.ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் நன்றி மிக்கவர்களாகி..கண்ணுக்கு புலப்படா வால் கொண்டு திரிவதாய் மாயையை தோற்றுவிக்கின்றது இக்கதை.



ஆர்.எஸ்.சுதர்சனத்தின் "சாம்பலின் சுமை" (தெலுங்கு)- தமிழில் சா.தேவதாஸ்

புகை பிடித்தலை முன்வைத்து நாயகன் தனக்குள் எழுப்பி கொள்ளும் கேள்விகளும் அது குறித்தான கடந்த கால நினைவுகளுமான இக்கதை,சிகரட் பழக்கம் குறித்தான ஒருவனின் பார்வையை விரிவாய் முன்வைக்கின்றது.தனிமையின் குறியீடாய் அதை கொள்ளும் நாயகனின் நினைவில் நீங்காது இருக்கும் நிகழ்ச்சி ஒன்றே அதற்கு காரணம் என விளக்குகின்றது இக்கதை.

அமிதாப்பின் "சபிக்கபட்ட வாழ்க்கை" (மராத்தி) - தமிழில் சா.தேவதாஸ்

வறுமையின் குரூரத்தை இது போல எவரும் விளக்கி இருக்க முடியாது..அடித்து வீழ்த்தப்படும் பசுவின் இறைச்சிக்கு ஒரு சேரியின் மக்கள் அடித்து கொள்வதும் அவர்களுக்கு மத்தியில் சிறுவன் ஒருவன் தனக்கான இறைச்சியை பெற தடுமாறுவதும்..கடைசியாய் பெற்றதை கழுகளின் பிடியில் இருந்து பாதுகாத்து வீடு சேர்ப்பதும் என மேலோட்டமாய் கதை சொல்லி சென்றாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தங்கள் மனதை பிசைபவை.இத்தொகுதியின் மிகச்சிறந்த கதை இதுவென்பேன்.

பகவதி சரணின் "வெகுமதி" (ஒரியா) - தமிழில் தேவகி குருநாத்

இந்திய சட்டத்தின் ஓட்டைகளை சாடும் இக்கதை,குற்றங்களின் கிடங்காய் திரியும் பணக்காரனை கொலை செய்யும் அப்பாவி வேடுவனான கினுவாவை பற்றியது.மிருகங்களை வேட்டையாடுவதை போலவே இதுவும் என்று எண்ணி தன் காரியத்திற்காக பரிசை எதிர் நோக்கும் கினுவாவின் பாத்திரபடைப்பு படிப்பறிவில்லாத பாமரனின் வெகுளி மனநிலையின் குறியீடு.

கிரேசியின் "பாறைகள்" (மலையாளம்) - தமிழில் ரவி இளங்கோவன்

ஏழ்மையின் பொருட்டு தொடர்ந்து வரும் குடும்ப சிக்கல்களும் தவிர்க்க முடியா அலுவலக சங்கடங்களும்,குழப்பங்களும் ஒரு பெண்ணின் மனதை பாறையென இறுக செய்வதை தெளிவான காட்சி கோர்வைகளால் உணர்த்துகின்றது இக்கதை.வறுமையினால் கன்னியாஸ்திரி ஆக கட்டாயபடுத்தபடும் சூழலின் அபாயத்தையும் இக்கதை தெளிவுபடுத்துகின்றது.மலையாள இலக்கிய உலகிற்கு புதியவரான கிரேசியின் இக்கதை முக்கியமான சிறுகதைகள் வரிசையில் இடம் பெற்று இருப்பதில் ஆச்சர்யமில்லை.

ந.முத்துசாமியின் "செம்பனார் கோவில் போவது எப்படி?" (தமிழ்)

ந.முத்துசாமியின் கதைகள் இதற்கு முன் அறிமுகம் இல்லை.திரைப்படம் பார்க்க செம்பனார் கோவிலுக்கு மாட்டு வண்டி கட்டி புறப்பட யத்தனிக்கும் பெரிய வீட்டு இளைஞன் ஒருவனின் முழு சோம்பேறித்தனத்தை சொல்லும் இக்கதை ஏனோ புழுக்கம் நிறைந்த வேனிற்கால பகல் பொழுதுகளை நினைவூட்டியது!!

வெளியீடு - சந்தியா பதிப்பகம்
தொகுப்பாசிரியர் - தளவாய் சுந்தரம்

13 comments:

அண்ணாமலையான் said...

உங்களின் தொடர்ந்த சேவைக்கு வாழ்த்துக்கள்.

ராம்ஜி_யாஹூ said...

தேசம் முழுதும் பொதுவாய் பரவி கிடக்கும் ஏழ்மை, இக்கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க போதுமானதாய் இருப்பது வருத்தமே

இந்த வரிகள் தான் எத்தனை உண்மை, படிக்கவே வருத்தமாய் இருக்கிறது, ஆனால் மாறிக் கொண்டு வருகிறது, அதை பார்க்கையில் மகிழ்ச்சி.

தேசம் பூராவும் மக்களின் மனோபாவமும் ஒன்றாகவே உள்ளதா.

செம்பனார் கோயில்- கதை படிக்கவும் ஆசையாக உள்ளது, ஊர் போகவும் ஆசையாக உள்ளது.

அண்ணாமலையான் சொல்வது போல உங்களின் சேவைக்கு நன்றிகள்.

மகளிர் தின வாழ்த்துக்கள்.

.

விஷ்ணுபுரம் சரவணன் said...

தேசம் முழுதும் பொதுவாய் பரவி கிடக்கும் ஏழ்மை இக்கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க போதுமானதாய் இருப்பது வருத்தமே//


தோழமை லேகா..

ஏழ்மையின் இருப்பின் மீது வருத்தமா..

கதைகளை இணைக்க அது மாத்திரமே இருப்பது வருத்தமா?

விஷ்ணுபுரம் சரவண்

லேகா said...

நன்றி ராம்ஜி

நன்றி அண்ணாமலையான்

லேகா said...

சரவணன்,

இத்தொகுதியின் பெரும்பாலான கதைகள் விளிம்பு நிலையின் அவலங்களை விவரிப்பவை.தேசம் முழுதும் பரவி கிடக்கும் ஏழ்மையும்,அடக்கு முறைகளும் வருத்தம் தரும் ஒன்று.ஏழ்மையின் இருப்பின் மீதே வருத்தம்.

கதைகளை இணைக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கலாம்...ஆனால் இவையோ அனுபவம் சார்ந்த கதைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல அறிமுகம்.. பகிர்வுக்கு நன்றி..:-)))

AniShan said...

Fantastic write up Lekha.I've been reading your blog for a week,and I bet it grows on people.Thanks for sharing.

Unknown said...

இந்திய மொழிகளில் உள்ள நல்ல சிறுகதைகளை அறிமுக படுத்தியதற்கு நன்றி ..
தேவராஜ் விட்டலன்
http://vittalankavithaigal.blogspot.com/

லேகா said...

நன்றி கார்த்திகை பாண்டியன்

நன்றி தேவராஜ்

லேகா said...

Tnx a lot Anishan :-)

முஹம்மது ,ஹாரிஸ் said...

நல்ல பகிர்வு.
குஷ்வந்த் சிங்கின் டைரி படித்து இருக்கேன். கண்ணதாசன் பதிப்பகம் வெளியட்டுள்ளது. அவர் இளமை காலம் முதல் தற்காலம்வரை நிகழ்ந்த
அரசியல் மாற்றங்களை தன் வாழ்கையோடு இணைத்து எழுதி இருப்பார். அவருக்கு பல அரசிய தலைவர்களுடன் நடப்பு இருந்தது, அதுமட்டும் அல்ல அவரின் நடுத்தர வயது காலகட்டம் இந்திய அரசியலில் மிக முக்கியமானதும் கூட. நமது நாட்டின் வெளியுறவு துறை சார்பாக லண்டன் கனடா பிரான்ஸ்
போன்ற நாடுகளில் பனி ஆற்றி இருக்கிறார். அங்கு பனி புரியும் நமது நாட்டு அலுவலர்கள் எவ்வாறு நடத்து கொள்ளுகிறார்கள் என்பதை பற்றி அங்கதம்
கலந்த மொழிநடையுடன் மிக அரும்மையாக விவரித்து இருப்பார்.

லேகா said...

ஹாரிஸ்,

குஷ்வந்த் சிங் குறித்த நூல் அறிமுகத்திற்கு நன்றி.

வாசித்ததில்லை..நிச்சயம் சுவாரஸ்யமாய் இருக்கும் என்பதில் ஐய்யமில்லை.

Haripandi Rengasamy said...

உங்கள் வாசிப்பின் ஆழமும் அகலமும் மிக பரந்து விரிந்துள்ளன. உங்கள் பதிவுகளைப் பார்க்கும்போது எஸ்.ரா வின் எழுத்துக்களைப் பார்பதுபோல் உள்ளது. உங்கள் பதிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.