Thursday, February 4, 2010

அசோகமித்திரன் பார்வையில் சென்னை நகரம்!!

எழுத்தாளர் அசோகமித்திரன் சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் குறித்து தமது நினைவில் இருந்து மீட்டெடுத்து தொகுத்துள்ள கட்டுரைகள் அடங்கியது இந்நூல். எந்திரத்தனம் மிகுந்து தோன்றும் இன்றைய சென்னையின் கடந்த கால குறிப்புக்கள் ஆச்சர்யம் கூட்டுவதோடு தெரியா பல பெருமைகளை கொண்டுள்ளதாய் உள்ளது.தமது 50 வருட கால சென்னை வாழ்கையில் தான் பார்த்த நகரத்தின் தோற்றம் அன்றும் இன்றும் கண்டிருக்கும் மாற்றங்களை வெகு நேர்த்தியாய் வர்ணித்துள்ளார்.இம்மாநகரம் குறித்த பலசெய்திகளை கொண்டுள்ள இந்நூல் சிறந்தோர் ஆவணமாகும்.




பரிட்சயம் உள்ள பகுதிகள் குறித்த கடந்த கால குறிப்புகளை படிப்பதற்கு ஏற்படும் ஆர்வம் எனக்குமிருந்தது.இத்தொகுதியில் முதலில் புரட்டியது திருவல்லிக்கேணி,மயிலை குறித்த கட்டுரைகளை.சென்னை வந்த புதிதில் தங்கியிருந்த ஹோட்டலில் பழங்கால சென்னை நகரின் காட்சிகள் கோட்டோவியங்களாய் வைக்கபட்டிருந்தன.ஆள் அரவம் அற்ற அண்ணாசாலை,மரங்கள் அடர்ந்த பைகராப்ட்ஸ் ரோடு,ஜட்கா வண்டிகள் செல்லும் மயிலாப்பூர் சாலை,படகு சவாரி பரபரப்பில் கூவம் நதி என்பதான அவ்வோவியங்கள் உயிர் பெற்றது போல இருந்தது அசோகமித்ரனின் வார்த்தைகளில் விரியும் சென்னையின் புராதானத்தை படித்தபொழுது.


திருவல்லிகேணியில் உள்ள அமீர்மஹால் பிரமாண்ட தோற்றம் கொண்டு இருக்கும்.அது குறித்து அறியும் ஆவலில் ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்ட பொழுது முஸ்லிம்களின் கல்யாண சத்திரம் என்றார்.திருப்திகரமான பதிலாய் இல்லை அது.இந்த நூலில் அதற்கு தெளிவான பதில் உள்ளது.ஆற்காட்டு நவாப் மாளிகையாம் அது!!அந்தந்த பகுதிகளில் வசித்த பிரபலங்கள் குறித்த குறிப்புகளும் உள்ளது.திநகர் மற்றும் திருவான்மியூர் குறித்த குறிப்புக்கள் அப்பகுதிகளின் தற்பொழுதைய பிரமாண்டத்தை எண்ணி மலைக்க வைக்கின்றன.இடுகாடும்,குட்டைகளும் சூழ்ந்த தியாகராய நகர்,வயல் வரப்பிற்கூடான திருவான்மீயூரும் இன்று கண்டுள்ள மாற்றங்கள் எல்லா பெருநகரங்களுக்கும் பொருந்தும்..


வேளச்சேரி,மந்தவெளி,சைதாபேட்டை,சென்ட்ரல் ரயில் நிலையம் என சென்னையின் எல்லா முக்கிய பகுதிகள் குறித்தும் தனது அனுபவங்களை நகைச்சுவை கலந்து பகிர்ந்துள்ளார்.ஆங்கிலேயர் காலத்து தேவாலயங்களும்,பழமையான கோவில்களும்,தர்காக்கள் குறித்த செய்திகள் புதியவை.சென்னையில் உள்ள ஆர்மேனிய தேவாலயம் குறித்த தகவல்கள் இல்லாது போனது சிறிது ஏமாற்றம்.சென்னை நகரின் பாலங்கள்,அருங்காட்சியகங்கள்,மின்சார ரயில் போக்குவரத்து,கல்வி நிறுவனங்கள்,திரையரங்குகள்,மருத்துவமனைகள் ஆகியவை கடந்த 50 வருடங்களில் கண்டுள்ள மாற்றங்கள் எளிமையாய் சொல்லப்பட்டுள்ளது.சென்னை நகரின் கடந்த கால வரலாற்றினை அறிந்து கொள்ள இந்நூல் சிறப்பாக வழிகாட்டுகின்றது.நிலவொளியில் வாணிபம் நடந்த பக்கின்ஹாம் கால்வாயும்,ட்ராம் வண்டிகள் ஓடிய சென்னை நகர சாலைகளும் இனி எப்போதும் காண கிடைக்காத காட்சிகள்...............நினைவில் இருந்து இவற்றை மீட்டெடுத்து பகிர்ந்துள்ள அசோகமித்ரனுக்கு நன்றிகள்.ஒரு பெருநகரத்தின் கடந்த கால நினைவுகளில் பயணித்து வந்த திருப்தி.


வெளியீடு - கவிதா பப்ளிகேஷன்
விலை - 60 ரூபாய்

18 comments:

அன்பேசிவம் said...

வணக்கம் லேகா,
உங்க பயணம் வியக்க வைக்கிறது.
அசட்டுதனமாக இருந்தாலும் உங்களுக்கான கேள்வி இதுதான், எப்படி உங்களுக்கெல்லாம் இவ்வளவு நேரம் கிடைக்கிறது?

வெகு சமீபத்திலேதான் உங்கள் பதிவு எனக்கு அறிமுகம், இன்னும் படித்துகொண்டிருக்கிறேன், முழுவதும் படித்துவிட்டு வருகிறேன். :-)

தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம்.

திரு.அசோகமித்திரன் அவர்களின் நாவல்கள் மட்டுமே படித்திருக்கிறேன். கட்டுரைகள் இதுவர இல்லை. நல்ல அறிமுகம். நன்றி.

தேவன் மாயம் said...

அவரின் தண்ணீர் கதையும் நன்றாக இருக்கும்!!

கிருஷ்ண மூர்த்தி S said...

ஹிந்து நாளிதழில் அவ்வப்போது, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களைக் குறித்து, பழைய நினைவுகள், படங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் கட்டுரைகளைப் பல்வேறு படைப்பாளிகள் வார்த்தைகளில் படித்திருக்கிறேன்.

அப்படிப் பகிர்ந்து கொண்ட எழுத்தில் சிலநேரங்களில் பெருமிதம், பல தருணங்களில் ஏக்கமும் ஆற்றமாட்டாமையும் வெளிப்படுவதையுமே கவனித்திருக்கிறேன்.

உங்களுடைய சிறு விமரிசனக் குறிப்பு, வாசித்துப் பார்க்கலாமே என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

குப்பன்.யாஹூ said...

பகிர்ந்தமைக்கு nandrikal pala leka.
இடுகாடும்,குட்டைகளும் சூழ்ந்த தியாகராய நகர்,வயல் வரப்பிற்கூடான திருவான்மீயூரும் இன்று கண்டுள்ள மாற்றங்கள் எல்லா பெருநகரங்களுக்கும் பொருந்தும்.

சரியாக சொல்லி உள்ளீர்கள் , மதுரை மாநகருக்கும் இது பொருந்தும் , என் தந்தை சொல்லி கேட்டு இருக்கிறேன் . முப்பது வருடங்கள் முன்பு வாழை தோப்பாக இருந்த எஸ் எஸ் காலனி இன்று கண்டுள்ள மாற்றம் வியக்க வைக்கிறது , அதே போல தான் விளாங்குடி , பாத்திமா கல்லூரி பக்கம் கூட.

அதிக அளவு மாறாத நகரங்கள் என்று சொன்னால் அவை தஞ்சை, நெல்லை, நாகர்கோவில் போன்றவை தான்.

your post created the desire to read this book soon

Krishnan said...

"உங்களுக்கான கேள்வி இதுதான், எப்படி உங்களுக்கெல்லாம் இவ்வளவு நேரம் கிடைக்கிறது?"
தொலைக்காட்சி (தொல்லைகாட்சி) முன்பு நிச்சயமா அதிக நேரம் செலவழிக்க மாட்டார், சரிதானே லேகா ?

முஹம்மது ,ஹாரிஸ் said...

நான் அவருடைய 18 வது அட்சக கோடு,ஆகாயத் தாமரை மற்றும் ஒற்றன் படித்து இருக்கிறேன். 18 வது அட்சக கோடு விடுதலைக்கு முன்னாள் ஹைதராபாத் நிசம் ஆட்சியில் நடந்த நிகழ்ச்சி பற்றியது அதை கண்டிப்பாக படியுங்கள். ஒற்றன் அவருடைய அமெரிக்க பயணம் பற்றியது அதுவும் மிகவும் விறுவிறுப்பான வருணனை கொண்டது.

லேகா said...

நன்றி அண்ணாமலையான் :-)

லேகா said...

நன்றி முரளி.

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வாசிப்பேன்!!அவ்வளவே!! :-))

லேகா said...

நன்றி கிருஷ்ணமூர்த்தி.

அசோகமித்ரனின் இந்த கட்டுரைகள் கூட ஒரு இதழில் தொடராய் வந்தவையே!!

லேகா said...

@கிருஷ்ணன்,

:-))) உண்மைதான்.


@ராம்ஜி,

நீங்கள் மதுரையை சேர்ந்தவரா??!!:-)
பகிர்தலுக்கு நன்றி.

லேகா said...

மிக்க நன்றி ஹாரிஸ்.

அசோகமித்ரனின் நூல்கள் எதுவும் படித்ததில்லை..அறிமுகத்திற்கு நன்றி.

லேகா said...

நன்றி தேவன்மாயம் :-)

Bee'morgan said...

"சென்னையைப் பற்றி அசோகமித்திரனின் வார்த்தைகளில்" நினைக்கும் போதே ஆர்வம் துளிர்க்கிறது..

அலங்காரங்களற்று ரொம்ப சாதாரணமாக கடந்து செல்லும் வரிகளினூடாக அசாதாரணங்களை நிகழ்த்துபவை அவரது எழுத்துகள்.. சென்னையும் கூட இதற்கு விதிவிலக்காயிருக்காதென்று நினைக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி.. :)

Rettaival's Blog said...

சென்னை ஒரு மாயா லோகம். பரபரப்பான சென்னையின் ஆத்மார்த்தமான கடந்த காலத்தை உணர நீங்கள் செய்த அறிமுகம் அற்புதம். பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

Rettaival's Blog said...

சென்னை ஒரு மாயா லோகம். பரபரப்பான சென்னையின் ஆத்மார்த்தமான கடந்த காலத்தை உணர நீங்கள் செய்த அறிமுகம் அற்புதம். பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

லேகா said...

நன்றி Bee'Morgan :-)

லேகா said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரெட்டைவால்ஸ்.

லேகா said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ரெட்டைவால்ஸ்.