Tuesday, November 10, 2009

உயிர்மை

தமிழில் இலக்கிய இதழ்கள் வெகுஜன பத்திரிக்கைகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாய் வந்து கொண்டுதான் இருக்கின்றன.எப்போதும் அப்பாவின் கேஸ் கட்டுக்களின் ஊடாக இருக்கும் இலக்கிய இதழ்கள் பள்ளி காலங்களில் ஏதோ படிக்கவே முடியாத தமிழில் உள்ள நூல்கள் என உணர்வை தரும்.கணையாழி,சுபமங்களா,புதிய பார்வை என தொடங்கி..கொஞ்ச கொஞ்சமாய் இலக்கிய புத்தகங்கள் அறிமுகம் ஆயின. தி.ஜா வின் "மோகமுள்" தொடராய் வந்த பழைய கணையாழி இதழ்களை கிராமத்து வீட்டில் வாசித்த அனுபவம் அலாதியானது."தீபம்" 80களில் குறிப்பிட தக்க இலக்கிய இதழ் என அப்பா சொல்லி அறிந்துள்ளேன்.

தீராநதி,உயிர்மை,காலச்சுவடு,தீம்தரிகிட,வார்த்தை ஆகிய இலக்கிய இதழ்களை தொடர்ந்து வாசித்து வந்தாலும் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து மட்டுமே படிக்கும் பழக்கம் என்னிடம்.இதற்கு முற்றிலும் மாறாய் உயிர்மையின் 75 ஆவது இதழ்..தேர்ந்தெடுத்த கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள் என முழுதாய் வசப்படுத்தி கொண்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வண்ணதாசனின் சிறுகதை படிக்க கிடைத்தது.வண்ணதாசனின் கதை தலைப்புகளே கவிதை போல தான்.."அவனுடைய நதி அவளுடைய ஓடை" ,"பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக","ஒரு வாதாம் இல்லை ஒரு நீலச்சிறகு" என் அவரின் கதை தலைப்புகள் நான் வெகுவாய் ரசித்தவை.உயிர்மையின் 75 வது இதழில் வெளி வந்துள்ள வண்ணதாசனின் கதை "சுலோச்சனா அத்தை,ஜெகதா மற்றும் ஒரு சுடுமந் காமதேனு".மனித உறவுகளுக்கிடையேயான சிடுக்குகளை வெகு இயல்பாய் எடுத்தாள்வதில் வண்ணதாசனுக்கு நிகர் அவர் தான்.இவர் விவரிக்கும் எதார்த்த உலகின் மனிதர்கள் சௌந்தர்யம் மிக்கவர்கள்.

சாருவின் " தமிழ் சினிமா பாடல்கள் - ஒரு பண்பாட்டு வீழ்ச்சியின் அடையாளம்" கட்டுரை தமிழ் சினிமாவின் பாடல் வரிகளின் ஆளுமை குறித்து அலசுகிறது..தற்பொழுதைய பாடல் வரிகள் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை..சாரு பாணி விளாசல் கட்டுரை."துறவிகளின் தனிமைக்குரல்" - எஸ்.ரா வின் இந்த கட்டுரை உலக சினிமாவில் பௌத்தம் குறித்து அலசுகின்றது."தமிழ் சினிமாவின் புதிய அலை" என்னும் அம்ஷன் குமாரின் கட்டுரை நம்பிக்கை தரும் தமிழின் புதிய திரை முயற்சிகளின் குறித்தது.




ஞானகூத்தன் மற்றும் மனுஷ்யபுத்ரனின் கவிதைகள் மழை நாளின் பின்னிரவில் வாசித்து மகிழ வேண்டியவை. "சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்" என்னும் மனுஷ்ய புத்ரனின் கவிதை இவ்வாறாக வருகின்றது..

"புனிதர்களோ கடவுள்களோ சட்டென மண்டியிடும்படி நம்மை கட்டாயபடுதுவதில்லை......

...."சக்கர நாற்காலிகள் பூமியின் எந்த மையத்தோடும் பிணைக்கபடுவதே இல்லை"..

இவை தவிர்த்து..அ.முத்துலிங்கத்தின் "இருளில்" கட்டுரை பார்வையற்றவர்கள் குறித்தது.அவர்களின் உலகம் நமக்கு விசித்திரம் நிறைந்ததாய் தோன்றினாலும்..வெகு இயல்பாய் அதை வழி நடத்தி செல்லும் தமது நண்பர் ஒருவர் குறித்து இக்கட்டுரையில் சொல்லுகின்றார்.எஸ்.வி.ராமகிருஷ்ணனின் "என் அக்காவின் காது குத்து கல்யாணம்" கட்டுரை சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் இந்து சடங்கு ஒன்றினை பற்றியது.முன்னவர்கள் குறித்து அடிக்கடி நினைவு கொள்வேன் நான்..கால சுழற்சியில் எத்தைனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்..அவர்கள் தூக்கி எறிந்த மிச்சத்தை கொஞ்சமேனும் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றோம் ஏதோ ஒரு செயலில்.

அழகிய மழை நாளில் நல்ல இலக்கியம் வாசித்த திருப்தி..மனுஷ்யபுத்ரனுக்கு நன்றி.

11 comments:

தேவன் மாயம் said...

வெகுவாக ரசித்து எழுதியிருக்குறீர்கள்!!!

லேகா said...

உண்மை தான்.

நன்றி :-)

குப்பன்.யாஹூ said...

அருமை லேகா, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

மனுஷ்யபுத்திரன் சிறப்பான சேவை தமிழ் உலகிற்கு செய்து வருகிறார், தொடரட்டும் அவர் நற்பணி.

அதுவும் உயிர்மை வாங்கி கொண்டு சென்னை மின்சார ரயிலில் சனி அல்லது ஞாயிறு அதிகாலை எழும்பூர் டு செங்கலப்ட்டு போனால், அதுதான் சொர்க்கம் எனலாம்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

கண்டிப்பாக படிக்கிறேன்..பகிர்வுக்கு நன்றி...

லேகா said...

ராம்ஜி,

என்னவோ இந்த இதழ் மிக பிடிதமானாதாய் இருந்தது.வண்ணதாசனின் கதையால் கூட இருக்கலாம் :-)

மின்சார ரயில் பயணத்தின் போது புத்தகம் இதுவரை படித்ததில்லை....கரணம் தப்பினால் மரணம் என பயணம் இருக்கும்..ஹா ஹா..

லேகா said...

நன்றி பழனிசாமி :-)

குப்பன்.யாஹூ said...

லேகா நான் சொல்லும் மின்சார ரயில் பயணம் , அதிகாலை (5 am முதல் 7am) அதுவும் சனி அல்லது ஞாயிறு , குறிப்பாக பரங்கிமலை தொடங்கி செங்கல்பட்டு வரை அமிதியாக தொந்தரவு இல்லாமல் இருக்கும்.

செ.சரவணக்குமார் said...

அருமையான அலசல். உயிர்மையில் வெளிவரும் கட்டுரைகள் மிக முக்கியமானவை. பகிர்வுக்கு நன்றி

சிவக்குமரன் said...

இரண்டு மூன்று பதிவுகளை படித்தேன். ம்.. கொஞ்சம் சுவாரசியம் இருக்கும்போலத்தான் இருக்கிறது. முழுவதும் படித்துவிட்டு வருகிறேன்.

லேகா said...

நன்றி சிவராமன்.

லேகா said...

நன்றி சரவணகுமார்.

இன்றைய சூழலில் தரமான இலக்கிய இதழ்களில் உயிர்மைக்கு முக்கிய இடம் உண்டு.