Tuesday, March 10, 2009

பாவண்ணனின் "நூறு சுற்றுக்கோட்டை" - கன்னட மொழிபெயர்ப்பு

மொழி,இனம்,பிரதேசங்கள் கடந்து உலவும் கதைகள் தலைமுறை தலைமுறையாய் மாற்றங்கள் பல கண்டும் இன்றும் நிலைத்திருப்பது பகிர்தலின் பொருட்டே.கதைகளின் பகிர்தல் குறித்து நீண்டதொரு முன்னுரையோடு பாவண்ணன் மொழிபெயர்த்திருக்கும் கன்னட கதைகளின் தொகுப்பிது.கன்னட இலக்கிய உலகில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளின் மொழியாக்கம்,மறைந்த பிரபல கன்னட எழுத்தாளர்களை குறித்தும்,மிக சிறந்த நாவல்களின் சிறு பகுதியும் வெகு நேர்த்தியாய் தொகுக்கப்பட்டுள்ளன.

கன்னட எழுத்தாளர்களில் யு.ஆர்.அனந்தமூர்த்தி மட்டுமே எனக்கு நன்கு பரிட்சயம்.இவரின் சம்ஸ்காரா,அவஸ்தை,கடஷ்ரதா நாவல்கள் முன்வைக்கும் முற்போக்கு சிந்தனைகள் முக்கியமானவை. இவரின் "சூரியனின் குதிரை" சிறுகதை இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.பால்ய கால நண்பனை சற்றும் எதிர்பாரா நிலையில் சந்திக்க நேர்ந்த தனது அனுபவங்களை காட்சிகளாய் விவரித்துள்ளார்.ஏழ்மையை பொருட்படுத்தாது,வெகுளியாய் தினப்படி பொழுதை கதைகளோடும்,கற்பனைகளோடும் கடக்கும் நண்பனின் கதாபாத்திரம் அரிதாய் காணமுடிவது.யஷ்வந்த் சித்தாளின் "பயணம்" நவீன பாணி கதையாடல்.விற்பனை பிரதிநிதி ஒருவனின் மரணத்திற்கு முந்தைய பொழுதின் காட்சிகள் நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை மொகள்ளி கணேஷின் "காளி",தலித் இலக்கிய வகை சார்ந்த இக்கதை எனக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்று,இந்தியாவின் எல்லா பகுதியிலும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையும்,அவர்களின் வாழ்க்கை முறையும்,தலித் குழந்தைகளுக்கான நிறைவேற கனவுகளும் ஒன்றே என்று.இந்த ஒரு சிறுகதை மொழிபெயர்ப்பு என்பதை முற்றிலுமாய் மறக்கடிக்க செய்தது.இவை தவிர்த்து சிந்தாமணி கொட்லகெரே வின் "வசிட்டர் குகை" மற்றும் வெங்கடேஷின் 'சின்ன சிறு விஷயம்" சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.

அணையாத சுடர்கள் என்னும் தலைப்பின் கீழ் வாழ்ந்து மறைந்த கன்னட எழுத்தாளர்கள் மூவரை குறித்து விவரித்துள்ளார் ஆசிரியர்.கொள்கைகளின் பொருட்டு விருதுகளை திருப்பி அனுப்பிய சிவராம கரந்த் கன்னட எழுத்துலகில் கொண்டிருந்த மதிப்பு படிப்பதற்கே பிரம்மிப்பாய் உள்ளது. இலக்கியம்,சினிமா,நாடகம்,பத்திரிகை,அரசியல் ஆய்வாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய லங்கேஷ் மற்றும் தி.ஆர்.நாகராஜ் பற்றிய குறிப்புகளும் சுவாரஸ்யம் கூட்டுபவை.ஆறுகளின் தடம் என்னும் தலைப்பின் கீழ் சிவராம கரந்த் மற்றும் லங்கேஷின் நாவல்களில் இருந்து சிறு பகுதிகளை மொழிபெயர்த்தும் தொகுத்துள்ளார்.

வெளியீடு - அன்னம்
விலை - 110 ரூபாய்

9 comments:

யாத்ரா said...

ஒரு நாள் உங்கள் பதிவிற்கு ஏதேச்சையாக வர நேர்ந்ததில் மகிழ்ச்சி, உங்கள் இலக்கிய வாசிப்பு அனுபவங்கள், அறிமுகங்கள் மகிழ்ச்சியளிக்கிறது. ஆயுள் முழுக்கவும் வாசித்தாலும் அப்பொழுதும் தீராமலிருக்கும் போல வாசிக்க வேண்டியவை

லேகா said...

நன்றி யாத்ரா

குப்பன்.யாஹூ said...

மற்றும் ஒரு பயனுள்ள சுவையுள்ள பதிவு லேகா. ஒரு நல்ல புத்தகத்தை, வாசிப்பை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

யாத்ரா வின் பின்னூட்டம் மிக சரியானதே. நன்றிகள் யாத்ரா.

குப்பன்_யாஹூ

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்லா இருக்குங்க... கலக்குங்க...

narsim said...

வழக்கம் போல், நல்ல நடையில் அருமையான அறிமுகம். நன்றி..

லேகா said...

நன்றி நர்சிம்..:-))

லேகா said...

நன்றி விக்னேஸ்வரன்

பாண்டியன் புதல்வி said...

லேகா,
உங்கள் வாசிபனுபவம் ஆச்சரியமாக உள்ளது. உங்கள் பரிந்துரையில் உள்ள சிலப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். நன்றி.

லேகா said...

நன்றி பாண்டியன் புதல்வி.
உங்க பெயர் நல்லா இருக்கு:-)