Tuesday, August 5, 2008

சுஜாதாவின் சரித்திர நாவல் "ரத்தம் ஒரே நிறம்"

சமீபத்தில் விகடனில் படித்தது : சுஜாதாவிடம் ஏன் சரித்திர நாவல்கள் எழுதுவதில்லை என்று கேட்டதற்கு பள்ளியில் சரித்திர பாடத்தில் குறைந்த மதிப்பெண்களே எடுப்பேன் அதனால் தான் என நகைச்சுவையாக குறிப்பிட்டு உள்ளார்.

சுஜாதாவின் ஒரே சரித்திர நாவல் (நான் அறிந்த வரையிலும்) "ரத்தம் ஒரே நிறம்".சுதந்திர போராட்ட காலத்தில் நிகழும் கதையை காதல்,வீரம்,துரோகம்,ஏமாற்றம்,வெற்றி,தோல்வி,நம்பிக்கை தாங்கி உலவும் கதை மாந்தர்கள் சகிதம் சிறிது புனைவு செய்து கூறி உள்ளார்.இந்நாவல் முதலில் படித்தது ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்.சமீபத்தில் இணையதள விவாதம் ஒன்றில் இந்நாவல் தழுவியே பாரதி ராஜாவின் "நாடோடி தென்றல்" திரைப்படம் வெளிவந்ததாய் பேச்சு வர,நிச்சயமாய் இல்லை என்பதை உறுதி செய்ய மீண்டும் படித்தேன்..நாவலின் ஒரே ஒரு காட்சி நாயகன் வெள்ளைகார துறையுடன் சிலம்பு சண்டை இடுவதை தவிர அத்திரைபடதிற்கும் நாவலுக்கும் தொடர்பில்லை.



சுஜாதாவின் மாற்ற நாவல்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டது.கதை நிகழும் காலம் 1900 முன்னர்,இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பதாய் கதைகளம் அமையபெற்றுள்ளது.மெக்கின்சி என்னும் ஆங்கிலேய அதிகாரியால் தன் தந்தையை இழந்த நாயகன் முத்து குமரன்,அந்த அதிகாரியை பழி வாங்க அவனை தேடிசெல்லுவதே கதை.அதற்கு அவனுக்கு உறுதுணையாய் இருப்பது தற்காப்பு கலைகளில் சிறந்த பைராகியும்,புத்திசாலியான நாயகி பூஞ்சோலையும்.உண்மை சம்பவங்கள் மிகுந்த இந்த கதையில் தமது அழகிய கற்பனையை கலந்து ஒரு வீரனின் போராட்டத்தை இந்திய சுதந்திர போராட்ட சம்பவங்களோடு கூறியுள்ளார் சுஜாதா .கதையில் முக்கிய பங்கு வகிப்பது கான்பூர் போராட்டமே.கதை பெரும் பகுதி வட இந்தியாவில் தொடங்கிய சிப்பாய் கலகத்தை மையமாய் கொண்டுள்ளது.மங்கள் பாண்டே பற்றிய குறிப்பை தனக்கே உரிய பாணியில் எளிமையாய் விளக்கி உள்ளார் சுஜாதா.சுஜாதாவின் வழக்கமான நக்கல்,இழையோடும் நகைச்சுவை இதிலும் உண்டு நாயகி பூஞ்சோலை மற்றும் பைராகி பாத்திரங்களின் வழியாக.



கான்பூர் கலகத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளை லட்சங்களுக்கும் மேலே..சுதந்திரம் பெற நடைபெற்ற இப்போராட்டங்களை எண்ணும் பொழுது பெரும் வியப்பும்,வருத்தமும் உண்டாகிறது. இறுதியில் நாயகன் அந்த ஆங்கில அதிகாரியை கொன்று தானும் அப்போராட்டத்தில் உயிர் இழக்கிறான்.ஒரு அழகிய வீரம் மிகுந்த மண்ணின் சரித்திர நாவலை படித்த நிறைவு இந்நாவலில் உண்டு. மாறுபட்ட எழுத்தாளரான சுஜாதாவிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட நாவல் - ரத்தம் ஒரே நிறம்.

22 comments:

புருனோ Bruno said...

//சுஜாதாவின் ஒரே சரித்திர நாவல் (நான் அறிந்த வரையிலும்) "ரத்தம் ஒரே நிறம்".//

காந்தளூர் வசந்தகுமாரன் கதையை விட்டு விட்டீர்கள்

லேகா said...

நன்றி ப்ருனோ :-0)
அந்நூல் குறித்து கேள்விபட்டுள்ளேன்..தகவலுக்கு நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இப்போதைய வாசகர்களில் பலருக்கு ரத்தம் ஒரே நிறம் நாவல் பரிச்சயமே இருந்திருக்காது.
சரித்திர நாவலகளுக்கேயுண்டான சவலை நடையை விட்டொழித்து,இக்கதையிலும் சுஜாதாவின் ஜெட் வேக நடை பிரமிப்பூட்டுவது.
இது தவிர காந்தளூர் வசந்தகுமாரன் கதை என்ற புதினமும் எழுதினார்,அதிலும் கணேஷ்,வசந்த் வருவார்கள்,கணேச பட்டர் மற்றும் வசந்த குமாரனாக !
அதன் இரண்டாம் பாகத்திற்கான தகவல்களை சேர்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார் ஒருமுறை,அது எழுதப்படமாலேயே போயிற்று.

நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்றால்,ஒரு எழுத்துப் பிழை இருக்கிறது,திருத்தி விடுங்கள்- சிப்பாய்க் கலகம்-கழகம்-அல்ல !

லேகா said...

//இப்போதைய வாசகர்களில் பலருக்கு ரத்தம் ஒரே நிறம் நாவல் பரிச்சயமே இருந்திருக்காது.சரித்திர நாவலகளுக்கேயுண்டான சவலை நடையை விட்டொழித்து,இக்கதையிலும் சுஜாதாவின் ஜெட் வேக நடை பிரமிப்பூட்டுவது.//

அறிவன்,உங்கள் விமர்சனம் பார்த்த கணமே புரிகிறது சுஜாதாவின் தீவிர வாசகர் என்று.காந்தளூர் வசந்தகுமாரன் நாவல் குறித்த தகவல் ஆர்வமூட்டுவதாய் உள்ளது.படிக்க ஆர்வமாய் உள்ளேன்.

பிழைகளை சுட்டி காட்டுவதை வரவேற்கிறேன்.அதிலும் தமிழ் பிழை!!
பிழை திருத்தபட்டுவிட்டது.நன்றி :-)

வால்பையன் said...

நானும் இந்த புத்தகத்தை படித்திருக்கிறேன்.
பைராகி பல சித்து வேலைகள் தெரிந்தவனாக காட்டப்படுவது, உண்மை சம்பவத்தில் தன் கற்பனை புனைவை புகுத்தியது காட்டுகிறது.

இந்த கதை தொடராக வந்த பொது பல இன்னல்களை சந்தித்ததை பற்றி முன்னுரையில் எழுதியிருப்பார் கவனித்தீர்களா.

வால்பையன்

லேகா said...

வணக்கம் வால்பையன்..
நான் படித்து குமுதத்தில் தொடர்கதையாய் வந்ததின் பைண்டிங் தொகுப்பு...எனவே முன்னுரை பற்றி அறிந்திருக்கவில்லை.வீட்டில் யாவருக்கும் சுஜாதா எழுத்துக்கள் மேல் அலாதி பிரியம்,நான் படித்த அவரின் கொலை யுதிர் காலம்,பத்து செகண்ட் முத்தம் ஆகிய நூல்கள் கூட வார இதழ்களில் இருந்து எடுத்து பைண்டிங் செய்யப்பட்டவையே...

உங்கள் பதிவிற்கு நன்றி :-)

Sridhar V said...

//ஆஷ்லே என்னும் ஆங்கிலேய அதிகாரியால் தன் தந்தையை இழந்த நாயகன் முத்து குமரன்,அந்த அதிகாரியை பழி வாங்க அவனை தேடிசெல்லுவதே கதை.//

முத்துகுமரன் தேடிச் செல்வது 'மெக்கின்ஸியை'. ஆஷ்லி மெக்கின்ஸியின் மனைவி எமிலையை ஒரு தலைபட்சமாக காதலிப்பவனாக வருவான்.

// சிப்பாய் கழகத்தை//

இந்தக் கதையின் பின்புலக் கான்பூர் கலவரம். சிப்பாய் கலகத்தில் ஒரு தமிழ் வீரனின் பங்களிப்பாக இயற்றப்பட்ட புனைவு இது.

இந்தக் கதை முதலில் 'கறுப்பு, வெள்ளை, சிவப்பு' என்றுதான் வெளிவரத் தொடங்கியது. அது பெரும் காண்டிரவர்ஸியாக போனதால் சற்று நிறுத்திவிட்டு... மீண்டும் ரத்தம் ஒரே நிறம் என்ற தலைப்பில் வெளியிட்டாரக்ள்.

லேகா said...

//இந்தக் கதை முதலில் 'கறுப்பு, வெள்ளை, சிவப்பு' என்றுதான் வெளிவரத் தொடங்கியது. அது பெரும் காண்டிரவர்ஸியாக போனதால் சற்று நிறுத்திவிட்டு... மீண்டும் ரத்தம் ஒரே நிறம் என்ற தலைப்பில் வெளியிட்டாரக்ள்//

சுவாரசியமான தகவல்; நன்றி நாராயணன் :-)

butterfly Surya said...

நல்ல பதிவு..

வாழ்த்துக்கள்

சூர்யா
சென்னை..
butterflysurya@gmail.com

Tech Shankar said...



ரீமிக்ஸ் சிறுகதை முயற்சி.

I killed One of Sujatha's Story.

Paavam Sujatha.

Anonymous said...

சுஜாதாவினுடைய பல நாவல்களை கல்கி வார இதழிலிருந்து பைண்டு பண்ணித்தான் வைத்து படித்திருக்கிறேன். வேறு பத்தகங்கள் இலங்கை கடைகளில் பெற்றுக்கொள்வது சிரம்மாயுள்ளது. இருந்தாலும் யாராவது முன்னாடியே வாங்கிடுவாங்க. இணைய கடைகளில் சுஜாதாவை காண கிடைக்கவில்லை. வேறு எங்கு பெறலாம்?

Anonymous said...

///இப்போதைய வாசகர்களில் பலருக்கு ரத்தம் ஒரே நிறம் நாவல் பரிச்சயமே இருந்திருக்காது.////

நான் கடந்த 10வருடங்களாக நாவல் வாசிப்பதில் ஆர்வதுடன் உள்ளேன். சுஜாதாவின் இந்த கதை பற்றி இப்போதுதான் தெரிகிறது.
அதிகமாக சாண்டில்யனுடையதும் ராஜேஷ்குமாரினுடையதும் கதைககளை படிப்பேன்.
பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது. தமிழ் நாவல்கள் வாங்குமிடங்களை தயவுசெய்து பகிர்ந்துகொண்டால் உதவியாக இருக்கும்

லேகா said...

உங்கள் பதிவிற்கு நன்றி சுபாஷ்.

//இணைய கடைகளில் சுஜாதாவை காண கிடைக்கவில்லை. வேறு எங்கு பெறலாம்?//
கீழ்க்கண்ட இணையத்தில் முயற்சித்து பாருங்கள்

http://www.udumalai.com/

லேகா said...

//அதிகமாக சாண்டில்யனுடையதும் ராஜேஷ்குமாரினுடையதும் கதைககளை படிப்பேன்.
பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது. தமிழ் நாவல்கள் வாங்குமிடங்களை தயவுசெய்து பகிர்ந்துகொண்டால் உதவியாக இருக்கும்//

சாண்டில்யனும் கல்கியும் நான் வாசித்தது இல்லை.கி.ரா,சாரு,ஜெயகாந்தன்,வண்ணதாசன்,ஜானகிராமன் என தொடங்கியது என் வாசிப்பு.

சென்னையில் நான் புத்தகங்கள் வாங்கும் இடம் "Land Mark",அனேகமாக எல்லா பெரிய நகரங்களிலும் இக்கடை உண்டு.இலங்கையில் விசாரித்து பாருங்கள்.

லேகா said...

நன்றி சூர்யா :-0)

லேகா said...

தமிழ் நெஞ்சம் உங்கள் ரீமிக்ஸ் சிறுகதை படித்தேன்..நல்ல முயற்சி!!தொடர்ந்து எழுதுங்கள் :-)

கோவை விஜய் said...

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் எனப் பாரட்டப்படும் சிப்பாய் கலகம்

அதில் உயிர் நீத்த உத்தமர்களுக்கு

கண்ணிர் அஞ்சலி

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

லேகா said...

உண்மை தான் விஜய்!!நாவல் படிக்கும் பொழுது நிச்சயமாய் யாராக இருப்பினும் சுந்தந்திரம் பெற போராடிய வீரர்களின் தியாகத்தை எண்ணாமல் இருக்க இயலாது!!

KARTHIK said...

//ஸ்ரீதர் நாராயணன் said...

முத்துகுமரன் தேடிச் செல்வது 'மெக்கின்ஸியை'. ஆஷ்லி மெக்கின்ஸியின் மனைவி எமிலையை ஒரு தலைபட்சமாக காதலிப்பவனாக வருவான்.//

பதிவுல நீங்க இன்னும் அதை மாத்தலைங்க மாத்திடுங்க.

இந்த நாவல்ல நம்மாளுங்க பண்ணுன கொடுமையும் சொல்லிருப்பாரு.
கதைல வர்ற முத்துக்குமரன் பூஞ்சோலை ஞானபாகம ஆஷ்லி எமிலிய லண்டன்ல போயி கல்யாணம் பண்ணுன பின்னாடி அவங்க குழந்தைக்கு முத்தூட் பூஞ்ச்னும் பேர்வெப்பாங்க.
இன்னைக்கும் அந்த கலகம் நடந்த பகுதிகல்ல முத்துக்குமரன்,பூஞ்சோலைங்கற பேர வெக்குராங்கலாம்.

// சுபாஷ் said...
இணைய கடைகளில் சுஜாதாவை காண கிடைக்கவில்லை. வேறு எங்கு பெறலாம்? //

சுபாஷ் இங்க கிடைக்கும் நான் இந்த தளத்துல இருமுறை புத்தகம் வாங்கிருக்கேன் பத்தரமா வந்துசேரும்.தைரியமா வாங்குங்க சுபாஷ்.

லேகா said...

வாங்க கார்த்திக்!!
பிழை திருத்தப்பட்டு விட்டது...சரிதிரம்னாலே சிக்கல் தான்,இந்த பதிவிலும் பல (திருத்தப்பட்ட) பிழைகள்..மன்னிக்கணும்.

இலங்கை நண்பர் சுபாஷுக்கு முகவரி கொடுத்து உதவியதற்கு நன்றி.பயனுள்ள தளம்.மிக்க நன்றி.
.

Anonymous said...

Hi ,why don't you post a new sujatha sir's topic... waiting from you ....

லேகா said...

//Hi ,why don't you post a new sujatha sir's topic... waiting from you ....//

Sure will do!!Will write about his "Ethaiyum Oru Murai" - Ganesh Vasanth thriller!!